ரு நாட்டையோ அல்லது மக்கள் கூட்டத்தையோ புரிந்து கொள்ள வேண்டுமானால் அவர்களின் உற்பத்தி முறையை அதாவது அவர்களின் பொருளாதார வாழ்வை ஆய்வு செய்ய வேண்டும் என்பதே மார்க்சியத்தின் அரிச்சுவடி ஆகும்.
அதை விடுத்து ஒரு மக்கள் கூட்டத்தை மதவெறியர்களாகவும் காட்டுமிராண்டிகளாகவும் சித்தரிப்பது அறிவியல் கண்ணோட்டம் ஆகாது.
ஆப்கானிஸ்தான் ஒரு நீண்ட நெடுங்கால வரலாறை கொண்டிருந்தபோதும் அது வளர்ச்சியடையாத பழங்குடி மக்களை பிரதானமாக கொண்ட நாடு.
ஆப்கனில் விவசாய நிலம் ஏறத்தாழ எட்டு லட்சம் மில்லியன் கெக்டேராகும். ஆனால், மேய்ச்சல் நிலம் 30 மில்லியன் கெக்டேராகும்.
பெரும்பான்மை மக்கள் நிலவுடமை உற்பத்தி முறைக்கே மாறாத சமுதாயம் அது. எனவே அங்கு மதம் தான் அம்மக்களை வழி நடத்தும் அமைப்பாக இருக்கும்.
பழங்குடிகள் அல்லது நிலவுடமை சமூகங்களை வழிநடத்தும் அமைப்பாக எப்போதும் மதங்கள் இருக்கும். கடந்தகால ஐரோப்பாவை போல் மதங்களே ஆட்சி செய்யும் அல்லது இந்தியாவின் நிலவுடமை காலத்தின் நிலவுடமை அரசனின் அக்கம் பக்கமாக மதம் இருக்கும்.
படிக்க :
ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன ?
தாலிபான்களிடம் ஆப்கானை தாரைவார்த்த அமெரிக்கா !
எனவே, ஒரு சமுதாயப் பொருளாதார வாழ்வை புரிந்து கொள்ளாமல் மதத்தை தனித்து புரிந்து கொள்வது என்பது அம்பேத்கரிய பெரியாரிய கருத்தாகும். அது மார்க்சியம் ஆகாது.
வளர்ந்த ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் கிறிஸ்துவத்தையும் வளர்ச்சியடையாத நாடுகளான இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கும் மதங்களையும் ஒப்பிட்டு நோக்குவது அறியாமை ஆகும். இந்த அறியாமை கிறித்துவத்தை முற்போக்கானதாகவும் மற்ற மதங்களை பிற்போக்கானதாகவும் கருதுகிறது.
ஐரோப்பாவில் நிலவுடமை முறை இருந்த காலத்தில் கிபி 1500-களுக்கு முன்பு கிறிஸ்தவம் எப்படி இருந்தது என பார்க்க வேண்டும். அப்போது புரியும் அது எவ்வளவு கொடூரமான பிற்போக்கான கொலைகளையும் கொள்ளைகளையும் உலகின் பெரும் நிலப்பரப்புக்களில் நிகழ்த்தியதை அறியலாம்.
அது பெண்களையும் முற்போக்காளர்களையும் தீயிட்டு கொளுத்தி ‘முற்போக்கு’ பாத்திரம் ஆற்றியதை புரிந்து கொள்ள முடியும்.
எனவே, இஸ்லாமோ கிறித்தவமோ இந்து மதமோ. இவற்றை தனித்தனியாக பார்க்காமல் சமுதாய வளர்ச்சியோடு இணைத்து பார்த்தல் வேண்டும்.
பொதுவாக மேய்ச்சல் குடி சமுதாயங்கள் ஆண்களை சார்ந்ததாக இருப்பதால் இயல்பாகவே அது ஆணாதிக்க சமுதாயமாக இருக்கும். அங்கு பெண்களே ஒரு அடிமை பொருள்தான். எனவேதான் ஆப்கனிலும் இந்நிலை.
அதுபோல் மேய்ச்சல் தொழிலுக்கும், வேளாண்மை தொழிலுக்கும் நவீன முறையிலான கல்வி தேவை அற்றது. முதலாளிய உற்பத்தி முறை எங்கு தனது உற்பத்தியை தொடங்குகிறதோ அங்கிருந்துதான் நவீன கல்வியின் தேவை உருவாகிறது.
எனவே ஏகாதிபத்தியங்கள் ஆப்கனில் நுழைந்த பின்புதான் நவீன கல்விக்கான தேவையும் அது சார்ந்த கல்விக் கூடங்களும் உதயமாகின்றன.
ஆனால், பல நூற்றாண்டுகள் ஏகாதிபத்தியங்கள் ஆப்கனை ஆண்டபோதும் குறிப்பிட்டு கூறும்படி, அங்கு எந்த வளர்ச்சியையும் காண முடியவில்லை. மதவாத அமைப்புகளை உருவாக்கி அவற்றுக்கு வெறியேற்றி அவர்களை ஆயுத பாணியாக்கியதுதான் ஏகாதிபத்தியங்களின் சாதனை ஆகும்.
ஆப்கனின் யுத்த பிரபுக்களும் பழங்குடிகளின் தலைவர்களும் பழைய பிற்போக்கான உற்பத்தி முறை சார்ந்தவர்களாக இருப்பதால் இயல்பாகவே ஆணாதிக்க வெறியர்களாக கல்வி குறித்த அடிப்படை அறிவற்றவர்களாக இருக்கிறார்கள்.
ஏகாதிபத்தியங்கள் தங்கள் பழங்குடி அல்லது நிலவுடமை முறையின் தந்தை ஆதிக்க சமுதாய ஏற்றதாழ்வுகளை உடைப்பதை அவர்கள் விரும்பாத காரணத்தால் ஏகாதிபத்தியங்களை எதிர்க்கிறார்கள்.
இன்னொரு புறம் ஆப்கனின் யுத்தப்பிரபுக்களும் பழங்குடி தலைவர்களில் பெரும்பான்மையினரும் நீண்ட காலமாக ஏகாதிபத்தியங்களுடன் நெருங்கி பழகி ஏகாதிபத்தியங்களால் நஞ்சூட்டப்பட்டுள்ளனர்.
இப்போது இவர்களுக்கு ஏகாதிபத்தியங்களின் பணம் தேவையாக இருக்கிறது அதேவேளை ஏகாதிபத்தியங்களால் தமது சமுக கட்டுமானம் சிதைவதையும் அவர்களால் அங்கீகரிக்க முடியவில்லை.
எனவே, ஆப்கன் யுத்த பிரபுக்கள், ஏகாதிபத்திய மூலதனத்துக்கும், தங்களின் பழங்குடி மரபிலான வாழ்வுக்கும் இடையில் ஊசலாடுகிறார்கள். ஆனால், வெல்லப்போவது என்னவோ ஏகாதிபத்தியங்களின் மூலதனமே.
அங்கு இப்போது ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உருவாகும் சமுதாய சூழல் இல்லை. அப்படி உருவானாலும் அதுவும் நிலவுடமை சார்ந்த ஒரு அடக்குமுறை அமைப்பாகவேதான் இருக்கும்.
அங்கு இருக்கும் எம்.எல் அமைப்புகளும் ரசியாவால் உருவாக்கப்பட்ட இன்னொரு முஜாகிதின் அமைப்புதான்.
இப்போது நாம் சொல்லக் கூடிய ஒரே தீர்வு அந்த பின்தங்கிய சமுதாயத்தை அங்கீகரித்து அதன் சொந்த முயற்சியால் போராடி வளர்ந்து வர அனுமதிப்பது மட்டுமே.
ஏகாதிபத்தியங்களான சீனமோ, அமெரிக்காவோ ரசியாவோ அம்மக்களுக்கு எதையும் கொடுக்காது; இருப்பதையும் பறித்துக் கொள்ளும்.
எனவே, ஆப்கனின் தலைவிதியை ஆப்கன் மக்கள் பார்த்துக் கொள்ளட்டும். அவர்கள் ஆயிரம் வழிகளில் பின்தங்கியவர்களாக பிற்போக்காளர்களாக இருந்தாலும் அவர்களின் சொந்த முயற்சியால்தான் அவர்கள் முன்னேறி வரமுடியும். அதுதான் தீர்வும் கூட.
ஆப்கன் மக்களுக்காக எந்த ஏகாதிபத்திய ஓநாய்களும் நீலிக்கண்ணீர் வடிக்காமல் ஆப்கனை விட்டு வெளியேறுங்கள் அல்லது உங்களுக்கு ஆப்கன் மக்கள் இன்னொரு புதை குழியை தோண்டுவார்கள்.
படிக்க :
“போ.. போய் உன் பர்காவை போடு” – ஆப்கான் அவலம் !
தாலிபான்களின் கையில் ஆப்கானின் எதிர்காலம் ?
ஏகாதிபத்தியங்களே நீங்கள் பல நூற்றாண்டுக்கும் மேல் ஆப்கனை ஆண்டு அதை சீரழித்ததும் மதவெறியர்களை ஊட்டி வளர்த்து அவர்கள் கையில் ஆப்கன் மக்களை ஒப்படைத்ததுமே உங்களின் சாதனை என்பதை உலகம் புரிந்து கொண்டுதான் இருக்கிறது. உலகின் மிகவும் வெறுக்கத்தக்க பிற்போக்காளர்கள் நீங்கள் மட்டுமே.
நாம் எவ்வளவுதான் நல்லவர்களாக அறிவாளிகளாக இருந்தாலும் நமது எண்ணங்களை ஒரு மக்கள் கூட்டத்தின் மீது திணிக்க முயல்வது மிகவும் ஈனத்தனமான வெறுக்கத்தக்க செயலாகும். அது சர்வாதிகாரமே ஆகும்.
முகநூலில் : R Chandrasekaran
disclaimer

5 மறுமொழிகள்

    • இது கருத்தாடல் எனும் பிரிவின் கீழ் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை – இதில் கூறப்பட்டிருக்கும் அனைத்தும் வினவு தளத்திற்கு ஏற்புடையதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பல்வகைப்பட்ட கருத்துக்களின் மீதான விவாதத்திற்கான பகுதியாக மட்டுமே இந்தப் பகுதியில் கட்டுரைகளை பிரசுரிக்கிறோம். ஆப்கான் பிரச்சினையை அந்த நாட்டு மக்களின் சமூகப் பொருளாதார நிலைமைகளில் இருந்து பார்க்க வேண்டியது குறித்து கட்டுரையாளரின் கருத்து வினவுக்கு முழு உடன்பாடு உண்டு. மற்றபடி அவர் அங்கு கம்யூனிஸ்ட் கட்சி எழுவதற்கான சாத்தியம் இல்லை என்பதோ, அப்படி வந்தாலும் அதுவும் நிலவுடைமை சார்ந்த ஒரு அடக்குமுறை அமைப்பாகத் தான் இருக்கும் என்பதோ ஏற்புடையதில்லை.

      மேலும் சீனா ஒரு ஏகாதிபத்தியம் என்று குறிப்பிடுவதும் வினவுக்கு ஏற்புடைய கருத்து இல்லை. நன்றி !!

  1. இஸ்லாமியர்களில் நிறைய பேர் அதிதீவிர பயங்கரவாதிகளாக, மதவெறியர்கள் ஆக இருப்பதற்கு அடிப்படை காரணம் அவர்களின் மத நூல்களில் இருக்கிறது.. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தங்கள் அரசியல் நலனுக்காக அதனை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இஸ்லாம் மதத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அழிக்கும் பாரம்பரியம் உண்டு.. தஞ்சை பெரிய கோயில் 800 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வயதை கொண்டது. திமுக ஆட்சி நடந்தபோது அங்கே விழா நடத்தப்பட்டது.. அதுமாதிரி பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்து மத வழிபாட்டு தலங்கள் தென்னிந்தியாவில் உண்டு. ஆனால் வட இந்தியாவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு இந்துக் கோயிலை பார்ப்பதே கடினம். பல நூற்றாண்டு கால இஸ்லாமிய ஆட்சி, கொடூரமான இந்திய பாகிஸ்தான் பிரிவினை, சுற்றியிருக்கும் இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் கடுமையாக ஒடுக்கப்படும் மத சிறுபான்மையினர் இந்தியாவுக்குள் அகதிகளாக தஞ்சம் புகுவது, வடகிழக்கு மாநிலங்களில் எல்லைப் பகுதிகளில் அதிகரித்திருக்கும் பங்களாதேஷிகளின் குடியேற்றம் மற்றும் அதனால் உருவாகியிருக்கும் தீவிரவாத அமைப்புகள் ஆகியன தான் வட இந்தியாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பையும் அதன் செயல்பாடுகளையும் வளர்த்துள்ளன. ஆர்எஸ்எஸ் அமைப்பை தோற்றுவித்த கோல்வால்கர் மதநம்பிக்கை அற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி நிகழ்வுகளால் தென்னிந்தியா அதிகம் பாதிக்கப்படவில்லை அதனால் தான் பெரியார் மாதிரியான தலைவர்களும் திராவிட இயக்கம் முதலிய சமூக இயக்கங்களும் இங்கே உருவாகி வளர முடிந்தது. அறிவு நேர்மை என்பது சிறிதும் இல்லாதவர்கள்தான் இம்மாதிரியான பிரயோஜனமில்லாத ஜோடனை கட்டுரைகளை எழுதி வெளியிடுவார்கள்.

    • இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாகவே தெரிகிறது.

      இதை பிரயோஜனமில்லாத ஜோடனை கட்டுரை என நிறுவுவதற்கு முன்னுரையாக திரு பெரியசாமி இஸ்லாத்தின் தீவிரவாத இயல்பை (மட்டும்) எடுத்துக் கூறியுள்ளார். இங்கு எனக்கு என்ன குழப்பம் என்றால் கட்டுரையாளர் கூட இஸ்லாத்தின் தீவிரவாத இயல்பை எந்த இடத்திலும் மறுக்கவில்லை. இஸ்லாத்தையோ முஸ்லிம் அடிப்படைவாதிகளையோ பாராட்டவும் இல்லை. நிலவுடமை உற்பத்தி முறையில் மதம் தான் வழி நடத்தும் அமைப்பாக இருக்கும் எனக் கூறுகிறார். அதோடுகூட முற்போக்கு முகமூடி அணிந்திருக்கும் ஏகாதிபத்தியங்களின் பிற்போக்கு (சுரண்டல்) குணம் பற்றித்தான் பேசுகிறார். சுரண்டப்படும் மக்களின் கையில்தான் தீர்வு இருக்கிறது என்று கூறுகிறார்.

      இதில் திரு பெரியசாமிக்கும் கட்டுரையாளருக்கும் என்ன முரண்பாடு இருக்கிறது…
      திரு பெரியசாமியின் வருத்தம் என்ன?

      எனக்குப் புரிவது என்னவென்றால் கட்டுரையாளர் இஸ்லாத்தை மட்டுமல்லாது எல்லா மதங்களையும் ஒட்டுமொத்தமாகக் குறைகூறுகிறார். அவற்றின் தீவிரவாத இயல்பை எடுத்துக் கூறுகிறார். அதில்தான் திரு பெரியசாமி குறை காண்கிறாரா?
      ஆர்எஸ்எஸ் அமைப்பையும் அதன் செயல்பாடுகளையும் நியாயப்படுத்த முயல்வது போன்ற திரு பெரியசாமியின் வாதங்கள் அதைத்தான் கூறுகின்றன.

  2. ஒரு சமுதாயப் பொருளாதார வாழ்வை புரிந்து கொள்ளாமல் மதத்தை தனித்து புரிந்து கொள்வது என்பது அம்பேத்கரிய பெரியாரிய கருத்தாகும். அது மார்க்சியம் ஆகாது.

    ஆம்! தலித் போராளிகள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

    உற்பத்தி முறைகளை, உற்பத்தி உறவுகளை (பொதுவுடைமைக்கு) மாற்றாமல் மதம் அழியாது.

    (உண்மைதான். சாதியமைப்பு என்பது உலகிலேயே கொடூரமான தனித்துவம் வாய்ந்த அமைப்புதான். அதன் தனித்துவம்: மார்க்சீய சமுதாய விளக்கத்தில் உள்ள மேல்கட்டுமானம், அடிக்கட்டுமானம் இரண்டிலும் சாதீயம் செயல்படுகிறது. இரண்டு கட்டுமானத்திலும் சாதீயத்திற்கெதிரான போருக்கு வெவ்வேறு யுக்திகள் தேவைப்படுகிறது. முக்கியமாக அடிக்கட்டுமானத்தை மாற்றாமல் போர் நிறைவடையப் போவதில்லை.)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க