ஞாயிறன்று காலையில், ஒரு வகுப்பிற்காக பல்கலைக்கழகம் நோக்கி நான் சென்று கொண்டிருந்தேன். பெண்கள் தங்கும் விடுதியில் இருந்து பெண்கள் கூட்டம் ஒன்று வெளியேறி ஓடிவந்தது. என்ன ஆயிற்று என நான் கேட்டேன். அதில் ஒரு பெண், தாலிபான்கள் காபுல் நகருக்கு வந்து விட்டதாகவும் புர்கா அணியாத பெண்களை அவர்கள் அடிப்பார்கள் என்றும் கூறி போலீசு அவர்கள் அனைவரையும் தங்கும் விடுதியில் இருந்து வெளியேற்றியதாகக் கூறினார்.
நாங்கள் அனைவரும் வீட்டிற்குச் செல்ல விரும்பினோம். ஆனால் நாங்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த இயலாது. ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களில் எங்களை ஏற்றிக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் ஒரு பெண்ணை வாகனத்தில் ஏற்றிச் செல்வதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. தங்கும் விடுதியில் இருந்து வந்த பெண்களுக்கு இது இன்னும் மோசமான நிலைமை. அவர்கள் அனைவரும் காபுல் நகருக்கு வெளியில் இருந்து வந்து அங்கு தங்கியிருப்பவர்கள். எங்கே செல்வது என்ற அச்சத்திலும் குழப்பத்திலும் அவர்கள் ஆழ்ந்திருந்தனர்.
இதற்கிடையே, சுற்றி நின்று கொண்டிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளை கிண்டல் செய்து கொண்டு, எங்களது மோசமான நிலைமையை எள்ளி நகையாடினர். ஒருவன், “ போ.. போய் உன் பர்காவை போடு” என்றான். மற்றொருவனோ, “வீதிகளில் சுற்றித் திரிவதற்கு உங்களுக்கான கடைசி நாள் இது” என்றான். மற்றொருவனோ, “ஒருநாள் உங்களில் நால்வரை நான் திருமணம் செய்து கொள்வேன்” என்றான்.
படிக்க :
♦ தாலிபான்களிடம் ஆப்கானை தாரைவார்த்த அமெரிக்கா !
♦ ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன ?
அரசாங்க அலுவலகங்கள் மூடிய நிலையில், எனது சகோதரி வீட்டை அடைய நகரங்களைத் தாண்டி பல கிலோமீட்டர் ஓடினாள். “எனது மக்களுக்கும் சமூகத்துக்கும் நான்காண்டுகள் சேவை புரிய உதவிய கணிணியை பெரும் துயரத்தோடு முடக்கினேன். கண்ணீரோடு எனது பணி மேஜையை விட்டு வெளியேறி எனது உடன் பணிபுரிவோரிடமிருந்து விடை பெற்றேன். எனது வேலையின் கடைசி நாள் இது என்பது எனக்குத் தெரியும்” என்று என் சகோதரி கூறினாள்.
ஆப்கானிஸ்தானில் உள்ள சிறந்த இரண்டு பல்கலைக்கழகங்களில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை கிட்டத்தட்ட முடித்திருந்தேன். இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆப்கானிஸ்தானின் அமெரிக்கப் பல்கலைக்கழகம் மற்றும் காபுல் பல்கலைக் கழகத்தில் இருந்து நான் பட்டம் பெற்றிருக்க வேண்டியது; ஆனால் அனைத்தும் என் கண் முன்னேயே இன்று காலையில் மறைந்தது.
இன்று நான் இத்தகைய மனுஷியாக இருப்பதற்காக பல இரவுகளும் பகல்களும் உழைத்திருக்கிறேன். இன்று காலை வீட்டிற்கு வந்தடைந்ததும் நானும் எனது சகோதரியும் செய்த முதல் காரியம், எங்களது அடையாள அட்டைகள், பட்டயங்கள், சான்றிதழ்கள் அனைத்தையும் மறைத்து வைத்ததுதான். இது பெருமளவில் பாதித்தது. நாங்கள் பெருமைப்படத்தக்க விசயங்களை நாங்கள் ஏன் மறைக்க வேண்டும்? தற்போதைய ஆப்கானிஸ்தானில், நாங்கள் மக்களாக அறியப்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டோம்.
ஒரு பெண்ணாக, ஆண்களால் துவக்கி வைக்கப்பட்ட இந்த அரசியல் போரில் பாதிக்கப்பட்டவளாக நான் உணர்கிறேன். நான் இனி சத்தமாக சிரிக்க முடியாது. எனக்கு விருப்பமான பாடல்களை இனி கேட்க முடியாது. எனது நண்பர்களை எனது விருப்பமான தேநீர்க் கடைகளில் சந்திக்க முடியாது. நான் எனது விருப்பமான மஞ்சள் நிற உடையையும் பின்க் நிற உதட்டுச் சாயத்தையும் அணிய முடியாது. எனது வேலைக்கு இனி நான் போகவோ, பல ஆண்டுகள் உழைப்பைச் செலுத்தி சாதிக்க எண்ணிய எனது பல்கலைக்கழக பட்டப் படிப்பையோ நான் முடிக்க முடியாது.
எனது நகங்களை சீர்படுத்த நான் மிகவும் விருப்பப்படுவேன். வீட்டிற்கு நான் செல்லும் வழியில், நகத்தைச் சீர்படுத்த நான் வழக்கமாகச் செல்லும் அழகு நிலையத்தைப் பார்த்தேன். அழகான பெண்களின் படங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தக் கடையின் முன் பக்கம், ஒரே இரவில் வெள்ளையடிக்கப்பட்டிருந்தது.
பெண்களின் பயம் நிறைந்த முகத்தையும், பெண்கள் படிப்பது, பணிக்குச் செல்வது, சுதந்திரமாக இருப்பதை விரும்பாத பெண்களை வெறுக்கின்ற ஆண்களின் முகத்தையும் தான் என்னைச் சுற்றி பார்க்க முடிந்தது. பெண்களை கிண்டல் செய்து கொண்டு சந்தோசமாக இருப்பவர்கள் தான் என்னை மிகவும் அதிகமாக பாதித்தனர். எங்களோடு துணை நிற்பதற்குப் பதிலாக அவர்கள் தாலிபான்களின் பக்கம் நின்றனர். தாலிபான்களுக்கு மேலதிக அதிகாரத்தையும் வழங்கினர்.
தற்போது பெற்றுள்ள குறைந்த சுதந்திரத்திற்காக, ஆஃப்கான் பெண்கள் பல தியாகத்தைச் செய்திருக்கின்றனர். ஒரு அனாதையாக நான், கல்வியைப் பெறுவதற்கு கார்பெட்டுகள் நெய்தேன். பொருளாதாரரீதியாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டேன். ஆனாலும் எனது எதிர்காலத்திற்கு நிறைய திட்டங்களை வைத்திருந்தேன். அனைத்தும் இவ்வாறு வந்து முடியும் என நான் எதிர்பார்க்கவில்லை.
எனது 24 ஆண்டுகால வாழ்க்கையில் நான் சாதித்த அனைத்தையும் நான் எரிக்க வேண்டும்போலத் தெரிகிறது. அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் அடையாள அட்டையையோ, அல்லது விருதுகளையோ வைத்திருப்பது இப்போது ஆபத்தானது. இதை நாங்கள் வைத்துக் கொண்டாலும், அதனை எங்களால் பயன்படுத்த முடியாது. எங்களுக்கு இனி ஆப்கானிஸ்தானில் வேலை கிடையாது.
ஒன்றன் பின் ஒன்றாக மாநிலங்கள் வீழத் துவங்கியதும் எனது அழகான கணவுகள் குறித்து எண்ணிக் கொண்டிருந்தேன். தாலிபானின் முந்தைய ஆட்சிக் காலகட்டத்தையும் அவர்கள் பெண்களை நடத்திய விதத்தையும் குறித்து எனது தாயார் முன்பு கூறியதை எண்ணிப் பார்த்து, நானும் எனது சகோதரிகளும் அனைத்து இரவும் தூங்க முடியவில்லை.
எங்களது அனைத்து அடிப்படை உரிமைகளையும் மீண்டும் இழந்து, இருபது ஆண்டுகளுக்கு முந்தைய நிலைக்குச் செல்வோம் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எங்களது உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான இருபதாண்டு போராட்டத்திற்குப் பிறகு, நாங்கள் பர்காக்களைத் தேடிக் கொண்டு எங்களது அடையாளங்களை மறைத்துக் கொள்ள வேண்டும்.
படிக்க :
♦ பெண்கள் நடமாடத் தகுதியற்ற நாடா இந்தியா?
♦ பெண்கள் மீது தொடரும் சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டல் !
கடந்த மாதங்களில், தாலிபான்கள் பல்வேறு மாநிலங்களை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொண்ட போது நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி தங்களது மனைவிகளையும் பெண்களையும் காப்பாற்ற காபுலை நோக்கி வந்தார்கள். அவர்கள் பூங்காக்களிலோ திறந்த வெளிகளிலோ தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கான பண நன்கொடைகள், உணவு மற்றும் பிற தேவைகளை பெற்று அவர்களுக்கு உதவுவதற்கான அமெரிக்க பல்கலை மாணவர்களின் குழுக்களில் நானும் ஒருத்தியாக செயல்பட்டு, அம்மக்களுக்கு தேவையானவற்றை விநியோகித்தேன்.
சில குடும்பங்களின் கதைகளை நான் கேட்கையில், என்னால் எனது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு குடும்பம் தனது மகனை போரில் இழந்துவிட்டது. அங்கிருந்து காபுலுக்குச் செல்ல டாக்சிக்கான பணம் இல்லை. ஆகையால் போக்குவரத்து கட்டணத்துக்கு ஈடாக தனது மருமகளை கொடுத்துவிட்டு வந்திருக்கின்றனர். ஒரு பயணத்துக்கான செலவிற்கு எப்படி ஒரு பெண்ணின் மதிப்பு ஈடாக முடியும் ?
இன்று, தாலிபான்கள் காபுல் நகரை அடைந்துவிட்டதாக நான் கேட்டபொழுது, நான் அடிமையாக்கப்படுவேன் என உணர்ந்தேன். அவர்களால் எனது வாழ்க்கையில் அவர்களது இஸ்டத்திற்கு விளையாட முடியும்.
நான் ஒரு ஆங்கில மொழிக் கல்வி மையத்தில் ஆசிரியையாக பணிபுரிந்தேன். மாணவர்கள், ஏ,பி,சி-யை படிக்கச் சொல்லித்தர வகுப்பிற்கு முன்னால் நிற்க முடியாது என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எனது அழகான சின்னஞ்சிறிய மாணவிகள் தங்களது படிப்பை நிறுத்திவிட்டு அவர்களது வீட்டில்தான் இருப்பார்கள் என்று ஒவ்வொரு முறை நினைத்துப் பார்க்கையிலும், என் கண்ணீர் வழிகிறது
– ஒரு காபுல்வாசி
தமிழாக்கம் : கர்ணன்
நன்றி : கார்டியன்
பேரவலம்.படிக்கமுடியவில்லை.
இனி எப்படி அவர்கள் உயிர்வாழ்வார்கள்?
மதவெறி நாய்களுக்கு மட்டும்ஏகாதிபத்தியங்களின் அதிநவீன ஆயுதங்கள் பாதுகாப்பு!
மக்களுக்கோ புர்கா! பதுங்கு குழி!
அதுபோல்இங்கு மோடியின் விஸ்டா அரண்மனையும்இந்துராஷ்டிரமாக இந்திய தலைநகரை சுற்றிவளைக்கிறது.நம்மை நோக்கி காவி தாலிபான்கள் காத்திருக்கிறார்கள்.
காபூல் குரூரம். நமக்கான எச்சரிக்கை.