ஆப்கான் பேரழிவு: அமெரிக்க அரசே முதன்மைக் குற்றவாளி

இனி வருங்காலங்களில் ஆப்கானிஸ்தானில் திடீர்வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் அதிகரிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் ஆப்கான் மக்களின் வாழ்க்கையானது கேள்விக்குறியாகியுள்ளது.

ந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தான், ஓர் பின்தங்கிய வறிய தேசமாகும். 20 ஆண்டுக்கால அமெரிக்காவின் கொடிய ஆக்கிரமிப்பு போரினால் சிதைக்கப்பட்ட ஆப்கான் மக்களின் வாழ்வாதாரமானது தாலிபான்களின் பிற்போக்குத்தனமான ஆட்சியில் அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியால் மேலும் மோசமாகி வருகிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதீத மழைப்பொழிவு, திடீர்வெள்ளம் (Flash Flood), நிலநடுக்கம் போன்ற பேரிடர்களும் அந்நிலைமையை தீவிரமாக்குகின்றன.

கடந்த மே மாதம் 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் அதீத மழைப்பொழிவு மற்றும் பெரு வெள்ளத்தினால் ஆப்கானிஸ்தானின் படகஷான், கோர், பாக்லான் மற்றும் ஹெராத் மாகாணங்கள் பேரழிவுக்கு உள்ளாகின. அதன் விளைவாக, 350-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாக்லான் மாகாணத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உலக உணவுத் திட்டம் (world food programme) என்ற அமைப்பானது தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த பேரிடரினால் ஆப்கான் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாகியுள்ளனர். தாங்கள் வாழ்ந்த பகுதிகளை விட்டு வெளியேறி அகதிகளாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர்வெள்ளம் காரணமாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் தரைமட்டமாகியுள்ளன; ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் நாசமாகியுள்ளன; நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன. வெள்ளத்தினால் இடிந்த கட்டிட இடிபாடுகளின் மேலே அமர்ந்துகொண்டு அடுத்து எங்கே செல்வது என்று தெரியாமல் கையறுநிலையில் உள்ள மக்களின் அவலமானது காணொளிகளாக சமுக வலைத்தளங்களில் வெளியாகி காண்போரின் நெஞ்சை உலுக்குகின்றன.

பாக்ஸான் மாகாண தலைநகரமான புல்-இ-கும்ரியில் வசிக்கும் ஜான் முகமது டின் முகமது “எனது வீடும் எனது முழு வாழ்க்கையும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது; எனது குடும்பம் உயரமான நிலத்திற்கு தப்பி ஓட முடிந்தது, ஆனால் வானிலை தெளிவடைந்து நாங்கள் வீடு திரும்பியதும், எதுவும் இல்லை, எனது உடைமைகள் மற்றும் எனது வீடு அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன; என் குடும்பத்தை எங்கு அழைத்துச் செல்வது என்று எனக்குத் தெரியவில்லை; என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறுகிறார்.


படிக்க: கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் | மத்திய ஆப்கானிஸ்தான்


வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு, மருந்து, போர்வை போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.  “இலட்சக்கணக்கான மக்கள் அத்தியாவசிய சேவைகளை அணுக முடியாமல் தனிமைப்பட்டுள்ளனர்” என்று சர்வதேச மீட்புக் குழு (IRC) அறிவித்துள்ளது. “எங்களுக்கு உணவு இல்லை, குடிநீர் இல்லை, தங்குமிடம் இல்லை, போர்வைகள் எதுவும் இல்லை, வெள்ளம் அனைத்தையும் அழித்துவிட்டது” என்று தனது குடும்பத்தில் 13 உறுப்பினர்களை இழந்துள்ள முஹம்மது யாகூப் கூறுகிறார்.

இவ்வாறு கடந்த மூன்று ஆண்டுகாலமாக வறட்சியின் கோரப்பிடியிலும் ஊட்டச்சத்து குறைபாட்டிலும் சிக்கித் தவித்த ஆப்கான் மக்களை இந்த பேரிடரினாது மேலும் மோசமாகப் பாதித்துள்ளது. இனி வருங்காலங்களில் ஆப்கானிஸ்தானில் திடீர்வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் அதிகரிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் ஆப்கான் மக்களின் வாழ்க்கையானது கேள்விக்குறியாகியுள்ளது.

தீவிரமாகும் சூழலியல் நெருக்கடி

ஆப்கானிஸ்தானில் மே மாதத்தில் மட்டுமின்றி, ஏப்ரல் மாதத்திலும் அதீத மழைப்பொழிவு மற்றும் திடீர்வெள்ளம் காரணமாக பேரழிவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி ஜிந்தாஜன் மாவட்டத்தில் உள்ள ஹெராட் நகரிலிருந்து 25 மைல் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு ஆப்கானில் தொடர்நிகழ்வாகி வரும் பேரிடர்களுக்கு காலநிலை மாற்றம் தான் காரணம் என்று முதலாளித்துவ பத்திரிகைகளிலேயே கூறப்படுகிறது.

அண்மையில் சில மாதங்களாக ஆப்கான் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் காலநிலை மாற்றத்தின் விளைவாக பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கென்யா, பிரேசில் போன்ற நாடுகளில் அதீத மழைப்பொழிவு பதிவாகி இருப்பது; தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்க நாடுகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டிச் சென்றது. சான்றாக ஏப்ரல் மாதத்தில் ஆப்பிரிக்காவின் மாலியில் வெப்பநிலை 48.5 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது.

காலநிலை மாற்றத்திற்கு பூமியின் சராசரி வெப்பநிலை உயர்வது காரணமாக கூறப்படுகிறது. பூமியின் சராசரி வெப்பநிலை உயர்வதற்கு ஆளும் வர்க்க ஊடகங்கள் கூறுவதைப் போல தனிநபர்களின் முறையற்ற செயல்பாடுகள் காரணமல்ல. மாறாக, தங்களுடைய இலாப நோக்கத்திற்காக காடுகளை அழிப்பது, கனிமவளங்களை சூறையாடுவது, அதிகளவில் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுவது போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபவெறியே காரணமாகும்.


படிக்க: ஊட்டச்சத்து குறைபாட்டால் பரிதவிக்கும் ஆப்கான் குழந்தைகள்


கடந்த 2015 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட பாரீஸ் ஒப்பந்தத்தில் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பூமியின் சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமாக உயர்வதைத் தடுக்க முயற்சிப்பதாக 194 நாடுகள் (193 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்) ஏற்றுக்கொண்ட போதிலும் நடைமுறையில் அதை மீறி வருகின்றன.

அதன் விளைவாக, பூமியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை தாண்டி சென்றுவிட்டது. பிப்ரவரி 2023 முதல் ஜனவரி 2024 வரையிலான காலகட்டத்தில் பூமியின் சராசரி வெப்பநிலை 1.52 டிகிரி செல்சியஸ் அளவை எட்டிவிட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை (Copernious Climate Change Service) தெரிவித்துள்ளது. உலகின் பல பகுதிகளில் கடந்த ஆண்டுகளை விட அதீத மழைப்பொழிவு பதிவாகி வருவதும், வெப்ப அலை வீசுவதும் அதன் வெளிப்பாடே ஆகும்.

ஆப்கானை சிதைத்த அமெரிக்காவின் மேலாதிக்கவெறி

ஆப்கானிஸ்தானில் அதீத மழைப்பொழிவினால் திடீர் வெள்ளம் ஏற்பட்டதற்கு காலநிலை மாற்றம் தான் காரணம் என்ற போதிலும், 350-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியானதற்கு யார் காரணம் என்பதைப் பற்றி எந்த பத்திரிகைகளும் பேசுவதில்லை. அப்படி பேசினால் அமெரிக்காவின் மேலாதிக்க நோக்கத்திற்காக ஆப்கான் சிதைக்கப்பட்டதைப் பற்றி பேச வேண்டுமெல்லவா? அதனால் அதை திட்டமிட்டு மறைக்கிறார்கள்.

அமெரிக்க அரசானது 1980 களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்காக இஸ்லாமிய அடிப்படைவாதக் கும்பலான முஜாகிதின்களை திட்டமிட்டு வளர்த்தது; 2001 அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஆப்கான் மீது போரை தொடுத்து தன் நோக்கத்திற்கு செயல்பட மறுத்த தாலிபான்களை எதிர்த்து தன்னுடைய கைப்பாவை அரசுகளை அமைத்து இலட்சக்கணக்கில் மக்களை கொன்றொழித்து ஒரு காட்டாச்சியை நடத்தியது.

மேலும், 2021-இல் ஆப்கானை விட்டு வெளியேறிய பிறகும், சீனாவின் கட்டுப்பாட்டின்கீழ் ஆப்கான் சென்றுவிடக்கூடாது என்பதற்காக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்கள் மூலமாக வழங்கப்படும் நிதி ஆதாரங்களை துண்டித்து ஆப்கான் மக்களை பட்டினியிட்டு படுகொலை செய்து அதன்மூலம் ஆப்கான் அரசுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தி அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் ஆப்கான் நாடானது சிதைந்து சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.

ஆகவே, ஆப்கான் மக்களின் தற்போதைய அவலநிலைக்கு அமெரிக்க அரசின் மேலாதிக்க நோக்கமே முதன்மையான காரணமாகும்.


கதிர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க