ஆப்கானிஸ்தானில் தற்போது ‘அறநெறி’ விதிகள் என்று கூறி சில அடக்குமுறையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மத அடிப்படைவாத தாலிபான் அரசு. பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும், ஆண்கள் தாடியை வளர்க்க வேண்டும் என்பது முதல் வாகனம் ஓட்டுநர்கள் பாடல் ஒலிக்கக் கூடாது என்பது போன்ற கடுமையான விதிகளை விதித்துள்ளது. இஸ்லாமிய ஷரியா சட்டத்திற்கு இணங்கும் அறநெறி விதிகள் கடந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு, தனது இருபது ஆண்டுக்கால ஆக்கிரமிப்புப்போரை நிதி நெருக்கடியால் முடிவுக்குக் கொண்டு வந்தது அமெரிக்கா. அதன் பிறகு மத அடிப்படைவாத குழுவான தாலிபான் பயங்கரவாத குழு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. இது ஓர் பேரழிவின் எச்சரிக்கை. ஆப்கானின் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டில் தனது உடைமைகளையும் சொத்துக்களையும் அப்படியே விட்டுவிட்டு, தாலிபான்களைக் கண்டு அச்சம் கொண்டு வெளியேற முயன்றனர். அதில், பலர் இறந்துபோனார்கள். பலர் கொல்லப்பட்டார்கள். பலர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். பலர் விமானங்களில் ஏறித் தப்பிக்க முயன்று கீழே விழுந்து இறந்துபோனார்கள். அந்த காட்சிகள் உலகையே நிலைகுலையச் செய்தது.
படிக்க : ஆப்கான்: பெண்களை பொதுவாழ்க்கையில் இருந்து அகற்றும் தாலிபான்கள்!
ஆட்சி அமைத்தது முதல் தற்போது வரை பல்வேறு அடக்குமுறை சட்டங்களையும் பெண்களுக்கு எதிரான சட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது பயங்கரவாத தாலிபான் அரசு. உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குப் பெண்கள் செல்லத்தடை; பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்லவும் தடை; அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரியப் பெண்களுக்குத் தடை; தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியப் பெண்களுக்குத் தடை; ஆயிரக்கணக்கான பெண்கள் அரசாங்க வேலைகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தில் பணிபுரியும் பெண்களுக்கும் கட்டுப்பாடுகள் விதித்தனர். 2023 ஜூலை 4-ஆம் தேதியன்று, நாடு முழுவதும் உள்ள அழகு நிலையங்களை ஒரு மாதத்திற்குள் மூடப்பட வேண்டும் என்று தாலிபான் அரசு உத்தரவிட்டது. இவ்வாறு அடக்குமுறைகள் நீண்டு கொண்டே செல்கின்றன.
“இந்தச் சமூகத்தில் பெண்கள் இல்லாமலே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று காபூலில் ஒரு பெண் கூறினார். “நாங்கள் ஆப்கானிஸ்தானில் பிறக்காமலிருந்திருந்தால் நன்றாக இருந்திருப்போம் என்று எண்ணுகிறேன்” என்றார் அவர்.
ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள 37 வயதான பெண் ஒருவர் கூறுகையில், “நாளுக்கு நாள் அவர்கள் பெண்களை பொதுச் சமூகத்திலிருந்து அகற்ற முயல்கின்றனர். தாலிபான்களின் இந்த நடவடிக்கைகள் குறித்து சர்வதேச சமூகம் மௌனம் காக்கும் வரை அவர்கள் ஒவ்வொரு நாளும் புதிய சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள்” என்றார்.
தற்போது புதியதாக விதிகள் – கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தாலிபான் அரசு. அதாவது, பெண்கள் தங்களது உடலையும் முகத்தையும் முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும் என்றும், ஆண்கள் தாடியை எடுப்பதற்கும், பிரார்த்தனை மற்றும் மத விரதங்களைத் தவிர்ப்பதற்கும் தடை என்றும் கட்டுப்பாடுகளை தாலிபான் அரசு விதித்துள்ளது.
படிக்க : தலிபான்களை எதிர்த்து ஆப்கான் பெண்கள் போராட்டம்!
இந்த விதி மீறல்களுக்கான தண்டனைகளாக, “ஆலோசனை வழங்குதல், எச்சரிக்கை விடுதல், வாய்மொழி அச்சுறுத்தல் விடுதல், சொத்துகளைப் பறிமுதல் செய்தல், பொதுச் சிறைகளில் ஒரு மணிநேரம் முதல் மூன்று நாட்கள் வரை காவலில் வைத்தல் மற்றும் வேறு ஏதேனும் தண்டனைகள் பொருத்தமானதாக வழங்கப்படும்” என்று நீதி அமைச்சகம் கூறியுள்ளது.
ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்ட போது ஆப்கான் பெண்கள் ஓர் தீரமிகு போராட்டத்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், ஆப்கான் பெண்களுக்கு இழைக்கப்படும் அடக்குமுறைகள்-ஒடுக்குமுறைகளை எதிர்த்து உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் குரலெழுப்ப வேண்டியது அவசியமாகும்.
கல்பனா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube