ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அன்றிருந்து இன்று வரை தாலிபான்களின் ஆப்கானில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மேலும் தீவிரமடைந்து கொண்டே வருகின்றன.
ஆகஸ்ட் 2021-இல் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து, தாலிபான்கள் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல தடை விதித்தனர். பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்லவும் தடை விதித்தனர். அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரிய பெண்களுக்குத் தடை விதித்தனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியவும் பெண்களுக்கு தடை விதித்தனர். ஆயிரக்கணக்கான பெண்கள் அரசாங்க வேலைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தில் பணிபுரியும் பெண்களுக்கும் கட்டுப்பாடுகள் விதித்தனர்.
பொது வெளியில் பெண்களை நடமாடவிடாமல் செய்து, பொருளாதார ரீதியாகவும் கல்வி அறிவு ரீதியாகவும் எவ்வித அறிவும் கிடைக்காமல் அவர்களை அடிமைப்படுத்துவதற்கே இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் தாலிபான்கள். தற்போது அழகு நிலையம் வைத்திருக்கும் பெண்கள் மீதும் ஒடுக்குமுறையை ஏவியிருக்கிறார்கள்.
2023 ஜூலை 4-ஆம் தேதியன்று, நாடு முழுவதும் உள்ள அழகு நிலையங்களை ஒரு மாதத்திற்குள் மூட வேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இது பெண்களை பொது வாழ்க்கையிலிருந்து வெளியேற்றுவதற்கான சமீபத்திய நடவடிக்கையாகும்.
படிக்க: தலிபான்களை எதிர்த்து ஆப்கான் பெண்கள் போராட்டம்!
இந்த உத்தரவு பெண்களால் நடத்தப்படும் ஆயிரக்கணக்கான வணிகங்களை நிறுத்துவதற்கு கட்டாயப்படுத்தும். இதுதான் பெரும்பாலும் குடும்பங்களுக்கு ஒரே வருமான ஆதாரம். அவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கான சில வாய்ப்புகளில் ஒன்றை சட்டவிரோதமாக்கும்.
“இந்தச் சமூகத்தில் பெண்கள் இல்லாமலே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று காபூலில் இருந்த ஒரு அழகு நிலையத்தின் மேலாளர் கூறினார். “நாங்கள் ஆப்கானிஸ்தானில் பிறக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருப்போம் என்று எண்ணுகிறேன்” என்றார் அவர்.
காபூலில் வசிக்கும் சஹர், சில வாரங்களுக்கு ஒருமுறை தனது தலைமுடி மற்றும் நகங்களை வெட்டிக்கொள்வதற்காக ஒரு அழகு நிலையத்திற்குச் செல்வார். பொது வெளிக்குச் செல்லும் இறுதி வழியும் இப்போது துண்டிக்கப்பட்டதாக உணர்ந்ததாக அவர் கூறினார்.
“பெண்கள் பூங்காக்களில் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே நாங்கள் எங்கள் நண்பர்களைச் சந்திக்க ஒரு நல்ல இடமாக அழகு நிலையம் இருந்தது… ஒருவரையொருவர் பார்க்கவும், மற்ற பெண்களைச் சந்திக்கவும், மற்ற பெண்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவும், இதுதான் எங்களுக்கு கிடைத்த ஒரே இடம்” என்று அவர் கூறினார்.
“இப்போது அவர்களை எப்படி சந்திப்பது, அவர்களை எப்படிப் பார்ப்பது, ஒருவருக்கொருவர் எப்படிப் பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. இது எங்களுக்கும் ஆப்கானிஸ்தானைச் சுற்றியுள்ள பெண்களுக்கும் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.
புருவங்களை வடிவமைத்தல், ஒரு பெண்ணின் இயற்கையான கூந்தலை அதிகரிக்க மற்றவர்களின் தலைமுடியைப் பயன்படுத்துதல் மற்றும் மேக்-அப் பயன்படுத்துதல் ஆகியவற்றை இஸ்லாமுக்கு எதிரான நடைமுறைகள் என்று தாலிபான்கள் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்க: ‘ஒழுங்குநெறி போலீசு’ படை கலைப்பு: ஈரான் மக்களின் போர்க்குணமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
இந்தத் தடை குறைந்தது 60,000 பெண்களைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல பெண்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும். “இந்த நாட்டில் எங்களுக்கு நம்பிக்கையே இல்லை” என்று ஒரு அழகு நிலைய உரிமையாளர் கூறினார்.
தாலிபான்களின் இதுபோன்ற நடவடிக்கைகள் ஆப்கானிஸ்தான் பெண்களின் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதில் ஆச்சரியமில்லை.
ஆப்கான் பெண்கள் பொதுவெளிக்கு செல்ல பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. பதின்ம வயதுப் பெண்களிடையே மனச்சோர்வு விகிதம் அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் 80% தற்கொலை முயற்சிகள் பெண்களால் மேற்கொள்ளப்படுகின்றன. ஆப்கானிஸ்தான் பெண்கள் மிக அதிக அளவிலான உளவியல் துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மனநல ஆலோசகர்கள் பெண்களை இன்னும் தடை செய்யப்படாத சில செயல்பாடுகளைத் தொடர ஊக்குவித்து வருகின்றனர். ஆனால் தடைகளின் வட்டம் பெரிதாகி வருவதால் பரிந்துரைகள் செய்யமுடியாத நிலையே தற்போது நிலவுகிறது.
ஒரு பயங்கரவாத மத அடிப்படைவாத அமைப்பு ஒருநாட்டைக் கைப்பற்றியிருப்பது என்பது ஒரு கொடூரமான நிகழ்வு. அந்த பங்கரவாத தாலிபான்களின் இரண்டாண்டுகால ஆட்சியில் பசி-பட்டினி-வறுமை ஆகியவற்றில் சிக்கித் தவிக்கிறார்கள் ஆப்கான் உழைக்கும் மக்கள். பெண்களை சமூகப் புறக்கணிப்பு செய்யும் பல்வேறு திட்டங்களை அரங்கேற்றி அவர்களை மனநல பாதிப்பிற்கும் தற்கொலைக்கும் தூண்டிவருகிறது ஆகக்கொடுரமான தாலிபான் அரசு. ஆப்கான் பெண்கள் தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழும் நாள் வெகுதொலைவில் இல்லை.
காளி