டெல்லியில் நங்கல் என்ற இடத்தில் கடந்த ஆகஸ்ட் 1 அன்று சுடுகாட்டிற்கு தண்ணீர் எடுக்க சென்ற 9 வயது தலித் சிறுமியை ஒரு புரோகிதன் உள்ளிட்ட நான்கு பேர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி படுகொலை செய்து, அச்சிறுமியின் உடலையும் எரித்துள்ளனர்.

தண்ணீர் எடுக்கச் சென்ற தனது மகள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த தாய், சிறுமியை தேடிச் சென்றுள்ளார். இரவு 7.30 மணிக்கு, சுடுகாட்டிற்குச் சென்று தேடியபோது, அங்கிருந்த பூசாரி ராதே ஸ்யாம் (45) மற்றும் தகன மேடை ஊழியர்களான லட்சுமி நாராயணன், சலீம், குல்தீப் ஆகியோர், “உங்கள் மகள் தண்ணீர் தொட்டியில் இருந்த மின் வயரை தொட்டதால் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டாள்” என்று கூறியிருக்கின்றனர்.

ஆனால், சிறுமியின் உதட்டில் காயம் மற்றும் உதடு நீல நிறமாக மாறியிருப்பது, உடலில் காயங்கள் இருப்பது ஆகியவை தாய்க்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக அது குறித்து தனது கணவரிடமும் பிறரிடமும் சொல்ல முயற்சித்த அந்தத் தாயை அமைதியாக இருக்கச் சொல்லி, குழந்தை மின்சாரம் மரணமடைந்தது வெளியே தெரிந்தால், போலீசு குழந்தையின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும். அங்கு குழந்தையின் உடல் உறுப்புகளை திருடி விடுவார்கள். ஆகையால் அப்போதே குழந்தை எரித்து விடலாம் என்று கூறியிருக்கின்றனர்.

படிக்க :
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !
♦ உ.பி-யில் தொடரும் அவலம் : 19 வயது தலித் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை !

குழந்தையை இழந்த தாய் கதறியபோதும், அவரது அனுமதி கேட்காமல் குழந்தையின் உடலை எரிப்பதற்கு ஏற்பாடு செய்து அச்சிறுமியின் உடலை எரிக்கத் துவங்கினர். வெளியே அழுகாமல் செல்லுமாறும், இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் மிரட்டியிருக்கின்றனர்.

சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு நாடகம் ஆடுகிறார்கள் என்று உடனடியாக அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார், அந்தத் தாய். அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து 90 விழுக்காடு எரிந்த நிலையில் சிறுமியின் உடலை மீட்டு உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் உடனடியாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் போக்குக் காட்டி வந்தது டெல்லி போலீசு. இந்நிலையில் இவ்விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரவத் துவங்கி சமூக அழுத்தம் அதிகமான நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுத்து அந்தக் கிரிமினல் கும்பலைக் கைது செய்திருக்கிறது போலீசு.

ராகில், மானசா

அதே வாரத்தில், கேரள மாநிலம், கண்ணூரைச் சேர்ந்த பி.வி.மானசா எனும் பயிற்சி மருத்துவர், அவரது முன்னாள் காதலன் ராகில் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சம்பவத்தன்று ராகில் மானசாவின் வீட்டிற்குச் சென்றுள்ளான். மானசாவிடம் பேச வேண்டுமெனக் கூறி தனி அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளான். பேசிக் கொண்டிருக்கையில் மானசாவை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளான். அறையிலிருந்து அடுத்தடுத்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு மானசாவுடன் இருந்த மற்ற மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்து அந்த அறையின் கதவை உடைத்துச் சென்று உள்ளே பார்த்தபோது இருவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர்.

ராகிலின் நடத்தை பிடிக்காததால் மானசா அவருடனான காதலை முறித்துக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராகில் அடிக்கடி மானசாவிடம் தகராறு செய்து வந்துள்ளான். இந்நிலையில்தான் ராகில், மானசாவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண்கள் மீது நடக்கும் வன்முறைகள் தொடர்பான மேற்கண்ட இரண்டு செய்திகளும் ஒரே நாளில் வெளிவந்த செய்திகள்.

தன்னை காதலித்த பெண் தன்னுடனான காதலை முறித்துக் கொள்ளும்போது அந்தப் பெண்ணை கொலை செய்ய ராகிலைத் தூண்டியது எது? ஒரு பொருள் தனக்குக் கிடைக்கவில்லை எனில் அந்தப் பொருளை இல்லாமல் செய்வது என்பதே ஒரு பெரும் வக்கிரம். ஆனால், ஒரு உயிருள்ள – உணர்வுள்ள சக ஜீவியான ஒரு பெண் தன்னை விரும்ப மறுக்கிறாள் என்பதற்காக அவரைக் கொலை செய்யும் சிந்தனை எங்கிருந்து வருகிறது?

பெண் என்பவள் ஆணின் விருப்பு வெறுப்புகளுக்கு கட்டுப்பட வேண்டிய ஒரு பிறவி என்ற எண்ணம் இந்தச் சமூகத்தில் புரையோடிப் போயிருப்பதன் வெளிப்பாடுதான் இது. அது தகப்பனாக இருந்தாலும், சகோதரனாக இருந்தாலும், காதலனாக இருந்தாலும், கணவனாக இருந்தாலும், மகனாக இருந்தாலும் பெண் என்பவள் இவர்களின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டும்.

இதைத்தான் சனாதன தர்மம் வலியுறுத்துகிறது. ஒரு பெண் என்பவள் சிறுவயதில் தந்தைக்குக் கட்டுப்பட்டவளாகவும், திருமணத்திற்குப் பின்னர் தனது கணவனுக்குக் கட்டுப்பட்டவளாகவும், முதியவளான பின்னர் தனது மகனுக்குக் கட்டுப்பட்டவளாகவும் இருக்க வேண்டும் என்கிறது மனு சாஸ்திரம்.

இங்கு ஒரு ஆண், அந்தப் பெண்ணைத் தான் காதலித்ததற்காக – தனது காதலை அப்பெண் ஒரு கட்டத்தில் ஏற்றுக் கொண்டதற்காகவே, அந்தப் பெண்ணை தனக்கு சொந்தமானவளாகக் கருதும் ஆணாதிக்க பார்ப்பனிய சிந்தனையின் விளைவுதான் இந்தப் படுகொலை.

டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள இடுகாடு முன்பாக சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுமியின் குடியிருப்புப் பகுதி பெண்கள்

ஒரு 9 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வல்லுறவுச் செய்து கொலை செய்யவும், அந்தச் சிறுமியின் தாயாரை மிரட்டி உடலை எரிக்கவும் அந்த சுடுகாட்டுப் புரோகிதனுக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் எது தைரியம் கொடுத்தது?

ஒரு ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சிறுமியிடமும் அவளது பெற்றோரிடமும் அந்தப் புரோகிதனாலும் அவனது கூட்டாளிகளாலும் கண்டிப்பாக இவ்வளவு தைரியமாக இத்தகைய கொடுங்குற்றத்தை செய்திருக்க முடியாது. ஆனால், ஒரு தலித் சிறுமியிடமும், அவளது குடும்பத்திடமும் இவ்வளவு வக்கிரமாக நடந்து கொள்ள அந்தக் கிரிமினல் கும்பலுக்கு எது தைரியம் கொடுத்தது?

தலித் மக்களின் குரலை அதிகார வர்க்கமே ஒடுக்குவது சமூக எதார்த்தமாக நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கையில், “தலித் சிறுமிதானே.. கேட்க நாதியா இருக்கப்போகிறது? கேட்டாலும் போலீசை வைத்து மிரட்டி, ஒடுக்கிவிடலாம் என்ற சாதிய மேட்டுக்குடித் திமிரும், சனாதன (அ)தர்மமே ஆட்சி செய்யும் இந்தச் சமூகக் கட்டமைப்பும்தான் இந்தக் கிரிமினல் கும்பலுக்கு தைரியத்தைக் கொடுத்திருக்கிறது.

படிக்க :
♦ அசாமில் 12வயது சிறுமி பாலியல் வன்கொலை
♦ விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை ! காவல் துறையின் தோல்வியே காரணம் !

பெண்களின் மீதான வன்முறை ஒரு சமூகப் பிரச்சனை. பார்ப்பனிய – ஆணாதிக்க சமூக கட்டமைப்பு, பாகுபாடான சமூகப் படிநிலை, பெண்களை போகப்பொருளாக முன்நிறுத்தும் நுகர்வு கலாச்சாரம் – ஆகிய சமூகக் காரணிகள்தான் இன்று பெண்கள் நடமாடத் தகுதியற்ற நாடாக இந்தியாவை மாற்றியுள்ளன.

ஆனால், இந்தக் கொடுமைகளுக்குத் தீர்வாக சட்டத்தை கடுமைப்படுத்த வேண்டியது குறித்தும், பெண்கள் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டியது குறித்தும்தான், பெரும்பாலான நடுத்தரவர்க்கத்தினர் முதல் நீதிபதிகள் வரை அனைவரும் முத்துக்களை உதிர்க்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கும் வித்தைதான் பார்ப்பனியம் இவ்வளவு நாளாக கடைபிடித்து வரும் தந்திரம். அதுதான் தற்போது நடைமுறையில்ம் இருக்கிறது.

சமூகத்தில் புரையோடிப்போயுள்ள பார்ப்பனிய சாதிய ஒடுக்குமுறைகளையும் – பார்ப்பனிய ஆணாதிக்க மனநிலையையும் ஒழித்துக்கட்டாமல் சட்டங்கள் மூலமாகவோ, பாதிக்கப்படும் பெண்களுக்கான அறிவுரைகள் மூலமாகவோ இதற்குத் தீர்வு காண முடியாது.


மதி

1 மறுமொழி

  1. தொடர்ந்து நடக்கும் இது போன்ற பாலியல். கொடுமைகள் மனதளவில் பெரும் வலியைக் தருகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க