போலீசு என்றாலே அது அரசின் வன்முறைக் கருவி என்பது செய்தித்தாள் வாசித்து சிந்திக்கும் பழக்கம் கொண்ட அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த அடக்குமுறைக் கருவியும் கூட சமூகத்தில் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள குறைந்தபட்ச அரிதாரமாவது பூசிக் கொள்ளும். ஆனால் பாசிஸ்ட்டுகளின் கீழ் இருக்கும் போலீசு தனது சுயரூபத்தை அப்படியே காண்பிக்கும் என்பதற்கு டெல்லி போலீசே சாட்சி.
டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சி புரிந்தாலும், நாடாளுமன்றம் அங்கு இருக்கும் ‘பாவத்திற்காக’ அம்மாநகரத்தின் போலீசு கட்டுப்பாடு முழுவதும் ஒன்றிய அரசின் கைகளில் இருக்கிறது.
கடந்த வாரத்தில் உத்தரப் பிரதேசத்தில் போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது ஒன்றிய இணை உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா காரை ஏற்றி படுகொலை செய்தான். இதில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
படிக்க :
குற்றத் தலைநகரம் டெல்லி : அமித்ஷாவின் டெல்லி போலீசு இலட்சணம் !
டெல்லி வன்முறை : பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஜரான வழக்கறிஞரை மிரட்டும் டெல்லி போலீசு !
இதனைக் கண்டித்து படுகொலை செய்த கிரிமினலைக் கைது செய்யக் கோரி கடந்த அக்டோபர் 10-ம் தேதி டெல்லியில் உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீட்டிற்கு முன்னாள் அனைத்திந்திய மாணவர் சங்கத்தைச் (AISA) சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தியாவில் இயங்கும் கட்சிகளில் கிரிமினல்களின் கூடாரமாக இருக்கும் கட்சி என்று பெயர்பெற்ற கட்சி பாஜக தான். அப்படி கிரிமினல்களின் கூடாரமாகவும், மதவாத கிரிமினல்தனத்தையே சித்தாந்தமாகக் கொண்ட அந்தக் கட்சியின் தலைவரும் இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவின் வீட்டு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினால் சும்மா விடுமா, டெல்லி போலீசு ?
போராடிய மாணவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது தடுப்புக் காவலில் வைத்தது. அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு பெண் மாணவர்களை போலீசு வாகனத்தில் ஏற்றி கடுமையான முறையில் தாக்கியிருக்கிறது டெல்லி போலீசு.
அது குறித்து மறுநாள் அந்த இரு பெண் மாணவர்களும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வக்கிரம் பிடித்த டெல்லி போலீசின் வெட்கங்கெட்ட முகத்தை அம்பலப்படுத்தியுள்ளனர் அந்த மாணவிகள்.
“15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைகளில் கண்டன பதாகைகளை ஏந்தி மதியம் 1 மணியளவில் போராட்டத்தில் பங்கேற்றுக் கொண்டிருந்தனர். துவக்கத்தில் பெண் போலீசார் யாரும் இல்லாடஹ் நிலையில், ஆண் மாணவர்களை போலீசு கடுமையாகத் தாக்கி பேருந்தில் ஏற்றியது. AISA மாணவர் அமைப்பின் நிர்வாகி இந்த நிகழ்வுகளை தமது கைபேசியில் படம் பிடித்துக் கொண்டிருக்கையில் அந்த கைபேசியை போலீசு பறித்தது.” என்று நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் பதிவிட்டிருக்கிறார்.
மேலும், தாங்கள் இருவரும் கைப்பற்றப்பட்ட கைபேசியை போலீசிடமிருந்து திரும்பப் பெற போராடியதாகவும், அப்படிப் போராடுகையில் தங்களை சாலையின் மறு முனை வரை தரதரவென இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
வாகனத்தில் ஏற்றிய பின்னர், அங்கு வந்த பெண் போலீசு கும்பல், இந்த இரண்டு மாணவிகளையும் கடுமையாகத் தாக்கியுள்ளது. வாகனத்தில் ஏற்றும் போது அந்த இரு பெண்களும் அணிந்துள்ள குர்தாவை அகற்றி அசிங்கப்படுத்த முயற்சித்திருக்கிறது அந்த கிரிமினல் போலீசு கும்பல். சுற்றி இருந்த ஆண் போலீசு அதே வக்கிரத்துடன் இந்த நிகழ்வுகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றுள்ளது.
பெண்ணின் உடலை வைத்து அப்பெண்ணையோ, அவர் சார்ந்தவர்களையோ அவமானப்படச் செய்வது என்பதையே இந்திய ஆளும் வர்க்கங்கள் காலங்காலமாகச் செய்து வருகின்றன. சாதிய ஒடுக்குமுறை முதல், வர்க்க ஒடுக்குமுறை வரை அனைத்திலும் இது நடந்தேறுகிறது. இந்திய போலீசும், இராணுவமும் இதனையே தங்களது ஆயுதமாக பயன்படுத்திவருகின்றன.
இதற்கு காஷ்மீரும், வடகிழக்கு மாநிலங்களுமே சாட்சி.
பேருந்திற்குள் ஏற்றப்பட்ட இரு பெண்களின் அந்தரங்கப் பகுதிகளை குறிவைத்து மிதித்துள்ளனர், அந்த காக்கிச்சட்டை அணிந்த பெண் போலீசு மிருகங்கள். சுமார் 20 நிமிடம் இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்துள்ளன. இரு பெண்களின் கால்களும் பிறப்புறுப்பும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதில் கடும் வலியின் காரணமாக அப்பெண்கள் இருவரும் அழுதுள்ளனர். தங்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுள்ளனர். அதனை மறுத்து, இது தொடர்பாக வெளியே பேசினாலோ, புகார் அளித்தாலோ கடும் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என மிரட்டியுள்ளன அந்த போலீசு மிருகங்கள்.
இதனைத் தொடர்ந்து தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அந்த பெண் மாணவர்கள் இருவரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரும் போலீசின் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்தியப் பெண்களின் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலர் அன்னி ராஜா, அனைத்திந்திய முற்போக்குப் பெண்கள் சங்கத்தின் தலைவர் கவிதா கிருஷ்ணன் மற்றும் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் அடங்கிய குழுவினர், டெல்லி போலீசு அலுவலகத்தில் இத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவும், இத்தாக்குதலுக்கு உத்தரவிட்ட ப்ரக்யா ஆனந்த்ஐ இடைநீக்கம் செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
படிக்க :
ராபியா சைஃபி பாலியல் வன்கொலை : பார்ப்பனிய ஆணாதிக்க அதிகார வர்க்கத்தின் வெறியாட்டம் !
காஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை
தாக்குதலுக்கு உத்தரவிட்ட போலீசு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசு இணை கமிசனர் தீபக் யாதவிடம் கூறியபோது, “நீங்கள் சில போலீசால் மட்டுமே தாக்கப்பட்டிருக்கிறீர்கள். எல்லாரும் மோசமானவர்கள் அல்ல. வெகு சிலரே பிரச்சினைக்குரியவர்கள்” என்று கூறியிருக்கிறார்.
மாணவர்கள் மீது ஏவப்பட்டுள்ள இந்த வன்முறை என்பது மாணவர்களை, குறிப்பாக பெண் மாணவர்களை பொதுப் பிரச்சினைகளில் தலையிடுவதை தடுக்கும் நோக்கத்தோடு அரசால் கட்டவிழ்த்துவிடப்பட்டது எனும் பட்சத்தில் தாக்கிய போலீசு மட்டும்தான் பிரச்சினை என்று கூறுவது பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்ய போலீசு செய்யும் வழக்கமான உத்தி.
இந்தத் தாக்குதல் பற்றி, ‘தி வயர்’ இணையதளத்திடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண் மாணவர் கூறுகையில், “எங்களது பாலின அடையாளத்தை ஆயுதமாக வைத்து எங்கள் மீது இந்த தாக்குதலைத் தொடுத்துள்ளது. எங்களது உடலை வன்முறைக் களமாக மாற்றியிருக்கிறது, போலீசு” என்று கூறியிருக்கிறார்.
ஆளும் வர்க்கங்களின் அடியாட்படையாக வேலைபார்க்கும் பாசிச ஆட்சியாளர்களின் ஏவல் நாய்களிடம் தங்களது எஜமானர்களின் பண்புதானே நீடிக்கும். பெண்களை பாலியல் பண்டமாகப் பார்த்து, எதிர்க் கருத்துள்ள பெண்களை பொதுத் தளங்களில் இழிவுபடுத்தி, கொலை மிரட்டல், பாலியல் பலாத்கார மிரட்டல் விடுக்கும் பாஜகவிடம் ஏவல்நாயாக வேலை பார்க்கும் டெல்லி போலீசிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் ?
கர்ணன்
செய்தி ஆதாரம் : தி வயர்

1 மறுமொழி

  1. ஆங்கிலத்தில் students என்பது gender neutral ஆகையால் female students என்று எழுதுவார்கள். தமிழில் பெண் மாணவர்கள் என்று கூறுவதற்கு பதில் மாணவிகள் என்று கூறலாமே.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க