டெல்லி கலவர வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக வழக்காடிய வழக்கறிஞர் மெஹ்மூத் ப்ரச்சாவின் அலுவலகத்தில் தேடுதல் வேட்டையை நடத்தி அவரது மடிக்கணிணியையும் பிற மின்னணு சாதனங்களயும் கைப்பற்றிச் சென்றிருக்கிறது டெல்லி போலீசு.

டெல்லியில் நடந்துவந்த சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டங்களை சீர்குலைக்க இந்துத்துவக் கும்பல்களால் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட டெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக வழக்கறிஞர் மெஹ்மூத் ப்ரச்சா வழக்காடி வருகிறார்.

பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக நின்று பேசிவரும் மெஹ்மூத் ப்ரச்சாவை மிரட்டி முடக்க, கடந்த ஆகஸ்ட் மாதமே இந்த வழக்குகளில் போலி ஆவணங்களைத் தயாரித்ததாகவும், பாதிக்கப்பட்டவர்களை தவறான வாக்குமூலங்கள் கொடுக்க பயிற்றுவித்ததாகவும் கூறி அவர் மீது வழக்கு தொடர்ந்தது டெல்லி போலீசு.

படிக்க :
♦ ஐ.ஐ.டி.-களில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய துடிக்கும் மோடி அரசு !
♦ அச்சுறுத்தும் உபா சட்டம் ! மதுரை வழக்கறிஞர்கள் – பேராசிரியர்கள் – எழுத்தாளர்கள் கண்டனம் !

இந்நிலையில், கடந்த டிசம்பர் 24 அன்று அவரது அலுவலகத்தில் தேடுதல் வேட்டையை நடத்தியிருக்கிறது டெல்லி போலீசு. அவரது மடிக்கணிணி மற்றும் பிற மின்னணு சாதனங்கள் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கிறது போலீசு.

போலீசின் இந்த தேடுதல் வேட்டை சட்டரீதியாகவே ஒரு வழக்கறிஞருக்கும் வழக்குதாரருக்கும் இருக்கும் உரிமைகளையும் கேள்விக்குட்படுத்துவதாகும் என  பலவேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

ஒரு வழக்கறிஞரின் அலுவலகத்தில் தேடுதல் வேட்டை நடத்தி, வழக்கு தொடர்பான பல முக்கியமான தகவல்களையும், குற்றம்சாட்டப்பட்டவர்களுடனான வழக்கறிஞரின் தகவல் பரிமாற்றம் மற்றும் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அவரது மடிக்கணிணி மற்றும் பிற மின்னணுவியல் சாதனங்களை போலீசு கைப்பற்றுவது என்பது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை, தம்மையே குற்றவாளியாக்கிக் கொள்ளும் நிலைக்குத் தள்ளுவதாகும். இது அரசியல்சாசன சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட நடவடிக்கையாகும்.

இதற்கு முன்னரே பல வழக்குகளில், குற்றம்சாட்டப்பட்டவர்களோடு வழக்குரைஞர்கள் கொண்டுள்ள தகவல் தொடர்பைக் காரணம் காட்டி அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சாசன சட்டத்தின்  பிரிவு 20(3) தன்னைத் தானே குற்றவாளியாக்கப்படுவதில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்பு அளிக்கிறது. இந்தப் பிரிவு, “எந்த ஒரு குற்றத்திற்காகவும் குற்றம்சாட்டப்பட்ட நபர், தனக்கு எதிராக தானே சாட்சியாக நிர்பந்திக்கப்படக் கூடாது” என்று குறிப்பிடுகிறது.

இந்த வகையில் ஏற்கெனவே பல வழக்குகளில் வழக்கறிஞர்களுக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இடையிலான தகவல் பறிமாற்றங்களை வழக்கறிஞர்களுக்கோ, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கோ எதிரான சாட்சியமாக பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருக்கின்றன.

உதாரணமாக, தமிழகத்தில் 1990-ம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பின் பத்மநாபன் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாந்தனுக்கு அவரது வழக்கறிஞர் வீரசேகரன் தலைமறைவாக இருக்கும் படி எழுதிய கடிதத்தை முன் வைத்து அவர் மீது தடா வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்ததோடு மட்டுமல்லால் பிணை தரவும் மறுத்தன போலீசும் கீழ் நீதிமன்றமும்.

இந்த வழக்கில் தலையிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வீரசேகரன் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதங்களை சாட்சியமாக எடுக்க முடியாது என்றும் அதை வைத்து அவரைக் கைது செய்திருப்பது தவறானது என்றும் கூறி அவருக்கு உடனடியாக பிணை வழங்கியது. அன்று வீரசேகரன் கைது செய்யப்பட்ட போது சென்னை பார் கவுன்சில் அதனை கடுமையாகக் கண்டித்தது. தமிழகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடைபெற்றது.

படிக்க :
♦ டெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் !!
♦ டெல்லி வன்முறையில் அமித் ஷாவின் பங்கு : உண்மை அறியும் குழு அறிக்கை !

தற்போது வழக்கறிஞர் மெஹ்மூத் ப்ரச்சாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணிணியில் இருந்து பெறப்படும் ஆவணங்கள் அல்லது குற்றம்சாட்டப்பட்டவர்களோடு நடந்த தகவல் பறிமாற்றங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து குற்றம்சாட்டப்பட்டவர்களையும் குற்றவாளியாக்க முடியாது. வழக்கறிஞரையும் குற்றவாளியாக்க முடியாது. இது நன்றாகத் தெரிந்திருந்தும் தேடுதல் வேட்டை நடத்தி அவரது மடிக் கணிணியையும் பிற மின்னணு சாதனங்களையும் எடுத்துச் சென்றுள்ளது போலீசு.

இதேபோல, தமிழகத்திலும் கூட மாவோயிஸ்ட்டுகளுக்காக வழக்காடி வந்த வழக்கறிஞர் முருகனை,  மாவோயிஸ்ட்டுகளோடு தொடர்பு வைத்திருந்தார் எனக் குற்றம்சாட்டி ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது போலீசு.

சட்டப்படியே செல்லுபடியாகாது என்று தெரிந்தாலும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக வழக்காடுபவர்களை மிரட்டுவது மற்றும் முடக்குவதன் மூலம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான உரிமையை மறுப்பதையும், அரசு தரப்புக்குச் சாதகமான வகையில் வழக்கை கொண்டுசெல்வதையும் உறுதிப்படுத்தவே, இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது அரசு.


கர்ணன்
நன்றி :
Scroll

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க