டந்த பிப்ரவரியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கிளர்ந்த போராட்டங்களை ஒடுக்கும் வகையில் டெல்லியில் திட்டமிட்டு வன்முறை ஏவப்பட்டது.  இந்த வன்முறையை தூண்டியதில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பங்கு முதன்மையாக இருந்தது என சமீபத்தில் வெளியான உண்மை அறியும் குழுவின் அறிக்கை ஒன்று கூறுகிறது. டெல்லி வன்முறை குறித்த விசாரணையிலும் அமித் ஷா பாரபட்சம் காட்டியதாகவும் அறிக்கை கூறுகிறது.

இந்த அறிக்கை, சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் மாநில செயலாளர் கே.எம்.திவாரி ஆகியோரின் தலைமையில் கட்சியின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஒற்றுமைக் குழுவால் நேர்காணல் செய்யப்பட்ட 400 பேரின் பதில்களில் இருந்து தயாரிக்கப்பட்டது.

“வடகிழக்கு டெல்லியில் வகுப்புவாத வன்முறை – 2020” என தலைப்பிடப்பட்ட அறிக்கையில், “அமித் ஷாவின் கீழ் இயங்கும் உள்துறை அமைச்சகம், வன்முறையை அதிகரிப்பதற்கு அதிக அளவில் பங்காற்றியுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

படிக்க :
♦ டெல்லி கலவரம் : உமர் காலித் கைது ! குறிவைக்கப்படும் அறிவுத்துறையினர் !
♦ ஹிந்தியைத் திணிக்கும் மோடி ! மீண்டும் தொடங்குவோம் டெல்லிக்கட்டு !!

மேலும் இந்த அறிக்கையில் “வகுப்புவாத வன்முறையை டெல்லி கலவரம் என்று அழைப்பது தவறானது. இரு தரப்பினரும் சமமாக பங்கேற்கும் சூழ்நிலையைத்தான் ‘கலவரம்’ என்ற சொல் விவரிக்கிறது. ஆனால், இந்தத் தாக்குதல் இந்துத்துவ கும்பல்களிடமிருந்து வந்தது, மறுபுறத்தில் இருந்தவர்கள் இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து தங்களைக் காப்பாற்ற தீவிரமாக முயன்றனர். ஏறக்குறைய எல்லா பகுதிகளிலும், இந்துத்துவ கும்பல்களுக்கு போலீசார் பக்கபலமாக இருந்ததற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன” எனக் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் நடத்தப்பட்ட இந்த வன்முறை வெறியாட்டத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். அதில் 40 பேர் முஸ்லீம்கள்; 13 பேர் இந்துக்கள். கடந்த மார்ச் 11-ம் நாளன்று, நிலைமையை கண்காணிக்கும் விதமாக டெல்லி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் அமித் ஷா கூறியதை சுட்டிக்காட்டும் அறிக்கை, வன்முறை அதிகரித்த பிப்ரவரி 24 முதல் ஊரடங்கு உத்தரவு ஏன் விதிக்கப்படவில்லை? இராணுவம் ஏன் பயன்படுத்தப்படவில்லை? எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லி போலீஸ் மற்றும் ஆர்.ஏ.எஃப்.பி படையினர் கூடுதலாக அனுப்பியதுகூட போதுமானதாக இல்லை எனவும் அதுவும்கூட மிகவும் தாமதமாகவே அனுப்பப்பட்டது எனவும் அறிக்கை கூறுகிறது. தொடர்ச்சியாக போலீசுதுறை கூறிவந்த குற்றச்சாட்டுக்களை முற்றிலுமாக மறுக்கும் வகையில், இந்த அறிக்கையில் பல தகவல்கள் ஆதாரத்துடன் முன்வைக்கப்பட்டுள்ளன.

போலீசின் ஒரே மாதிரியாக எழுதப்பட்ட பல முதல் தகவல் அறிக்கைகளையும், சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்டதற்கான பாதிக்கப்பட்டவர்களின் புகார்களையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

புதிய குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்களால் கலவரத்தைத் தூண்டியதாக பல மாணவர்கள் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை மேற்கோள் காட்டி – பிப்ரவரி 23 முதல் 27 வரை கலவரத்தின்போது 1,393 முதல் 4,756 பேர் வரை படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என அறிக்கை கூறுகிறது.

“துரோகிகளை சுட வேண்டும்” என்றும் “சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை செய்ய இந்துக்களின் வீடுகளுக்குள் படையெடுப்பார்கள்” என்றும் பல அவதூறுகளைப் பேசிய பாஜக தலைவர்களின் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட உரைகளை  அமித் ஷா நிராகரித்தார்” எனவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேசுகையில், உண்மையான வெறுப்பு உரைகள் என தான் நினைத்ததையெல்லாம் விவரித்தார். காங்கிரஸ் தலைவர்கள் 2019 டிசம்பர் 14 அன்று ஒரு பேரணியில் நிகழ்த்திய ‘வெறுப்பு உரையை’, அதாவது “இது செய் அல்லது செத்து மடி என்பதற்கான போர், எனவே வீதிக்கு வாருங்கள்” எனப் பேசியதை என அமித் ஷா குறிப்பிட்டார். இதன் மூலம், வன்முறையைத் தூண்டியது உண்மையில் எதிர்க்கட்சிதான் என்பதை பதிவு செய்ய அவர் முயன்றது மட்டுமல்லாமல், வன்முறைக்கு சிறுபான்மை சமூகத்தைக் குற்றம் சாட்டினார். ”

மார்ச் 11 அன்று மக்களவையில் பேசிகையில் அமித் ஷா இந்த வன்முறையை “நன்கு திட்டமிடப்பட்ட சதி” என்று அழைத்தார். மேலும் 36 மணி நேரத்திற்குள் வன்முறையை கட்டுப்படுத்தியதற்காக காவல்துறையை பாராட்டினார். அவரது உரையின் போது காங்கிரசு மற்றும் சி.பி.எம். உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

கடந்த ஜனவரி 28 அன்று “காஷ்மீரில் காஷ்மீர் பண்டிதர்களுக்கு நிகழ்ந்தது டெல்லியிலும் நிகழலாம். லட்சக்கணக்கான மக்கள் ஷாஹீன் பாகில் கூடுகிறார்கள், அவர்கள் வீடுகளுக்குள் நுழைந்து, உங்கள் சகோதரிகளையும் மகள்களையும் வல்லுறவு செய்து கொலை செய்யலாம். மக்கள் இப்போதே முடிவு செய்ய வேண்டும்” என்று  மேற்கு டெல்லி பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா பேசியதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

படிக்க :
♦ சாதியப் படிநிலையை ஏற்றுக்கொள் : பிரக்யா சிங் முதல் சிறைச்சாலை வரை !
♦ குஜராத் மாடல் : விவசாயிகளின் டெல்லி சலோவில் குஜராத் பங்கேற்காத பின்னணி ?

பர்வேஷ் வர்மா, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா ஆகியோர் பேசிய தீங்கு விளைவிக்கும் மற்றும் வகுப்புவாத கருத்துக்களுக்கான தண்டனையாக அவர்கள் டெல்லி தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வதை பல நாட்களுக்குத் தடை செய்தது இந்திய தேர்தல் ஆணையம்.

ஓய்வுபெற்ற போலீசு அதிகாரி ஜூலியோ ரிபேரோ இந்த மூவருக்கும் எதிரான காவல்துறையின் செயலற்ற தன்மையை ‘அமைதியாக போராடுபவர்களை தூண்டுவதற்கும், கோபப்படுத்தவும், அச்சுறுத்தவும் வழங்கப்பட்ட உரிமம்’ எனக் கூறியிருந்தார்.

பிப்ரவரி 23-ம் தேதி மிஸ்ராவின் உரையைத் தவிர, பிப்ரவரி 21 அன்று சிவராத்திரி ஊர்வலங்களில் ஆத்திரமூட்டும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.  மத்திய அரசின் நேரடி வழிகாட்டுதலில் வன்முறைகள் நிகழ்த்தப்பட்ட நிலையில், டெல்லி அரசாங்கம் தாமதமாக செயல்பட்டதையும் வன்முறையில் இழப்புகளை சந்தித்தவர்களுக்கு பகுதி அளவே இழப்பீடு வழங்கப்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறது. டெல்லி வன்முறைகள் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணையைக் கோரியிருக்கிறது உண்மை அறியும் குழு அறிக்கை.

டெல்லி, நாட்டின் தலைநகர் என்பதாலும் சமூக ஊடகங்களின் தாக்கத்தாலும் குஜராத் போன்ற பெரும் கலவரத்தை மனித குல அழிப்பை நடத்தும் இந்துத்துவ கும்பலின் திட்டம் முழுமை பெறவில்லை. ஆனாலும் எதிர்வரும் காலங்களில் போராடுபவர்கள் மீது படுகொலை திட்டங்கள் கட்டவிழ்க்கப்பட அனைத்து முகாந்திரங்களும் உள்ளன.


அனிதா
நன்றி:
டெலிகிராப் இந்தியா

1 மறுமொழி

  1. டெல்லி முதல்வர் kejrival அரசின் உள்துறை நடவடிக்கை அறிக்கை ஏன் எடுத்து காட் ட படவில்லை,பாசிசதிர்கு தூணாக ஊடகங்களின் பார்வையில் இருந்து கொண்டு தானே மனிதன் என்ற கட்சியை தோற்றுவித்து சக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது ,மீறுகிறது,மேலும் மீற முயல்கிறது…இவர்களின் இரட்டை நாக்கு அரசியல் ஆட்சி, மாணவர்கள் தொழிலாளர்கள்,விவசாயிகள்.முற்போக்காளர்கல் உள்ளடங்கிய பொதுநல மக்களை ஒடுக்க துணை நிற்கின்றது…கூடுதலான முழக்கங்கள் தேவை உள்ளது”டெல்லி செல்லோ க்கெஜ்றிவால்கோ பைலே நிக்காலோ”…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க