ஹிந்தியைத் திணிக்கும் மோடி ! மீண்டும் தொடங்குவோம் டெல்லிக்கட்டு !!

6
23

ந்திய அரசின் அலுவலக மொழியாக இந்தியை கொண்டு வருவதற்கான 117 பரிந்துரைகளைக் கொண்ட ”அலுவலக மொழிக்கான பாராளுமன்றக் கமிட்டி”யின் அறிக்கையை, சிறு  திருத்தங்களோடு சட்டமாக்குவதற்கு  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அறிக்கை மற்ற அமைச்சகங்களுக்கும், மாநிலங்களுக்கும் பிரதமர் அலுவலகத்துக்கும் ஒப்புதல் பெற அனுப்பப் பட்டுள்ளது . ஒப்புதல் பெறப்பட்டவுடன் இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தும் மோடி அரசால் சட்டமாக்கப்பட்டு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஓய்வு பெறுவதற்கு முன்னர் இந்தித் திணிப்பிற்கு ஒப்புதல் கொடுக்கிறார்.

இவ்வறிக்கையின் படி, இனி அமைச்சர்கள், குடியரசுத் தலைவர் மற்றும் அனைத்து முக்கிய அரசு பிரமுகர்களும், அவர்களுக்கு ஹிந்தி தெரிந்திருக்கும் பட்சத்தில் ஹிந்தியில் மட்டுமே உரையாற்ற வேண்டும். ’ஏர்-இந்தியா’  நிறுவனத்தில் இனி டிக்கெட்டுகள், பத்திரிக்கைகள் மற்றும் செய்தித்தாள்கள் அனைத்தும் கணிசமான அளவில் ஹிந்தியில் மட்டுமே இருக்க வேண்டும். அதோடு தனியார் வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் இதனை வலியுறுத்த வேண்டும்.

மற்றும் மத்திய அரசின் பள்ளிக் கல்வி நிறுவனங்களான, சி.பி.எஸ்.ஈ. மற்றும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில்  10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் திட்டத்திற்கு கொள்கையளவிலான ஒப்புதலை குடியரசுத் தலைவர் அளித்திருக்கிறார். இதனை அடிப்படையாக வைத்து மோடி அரசு மாநில அரசுகளிடம் பேசி அதனடிப்படையில் மொழிக் கொள்கையை வகுக்கும்.

ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்கள், தேர்விலும், நேர்காணலிலும் மாணவர்கள் ஹிந்தி மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது இந்த அறிக்கை. அதே போல அரசு, தகவல் பரிமாற்றத்திற்கு உபயோகித்துக் கொள்ள ஹிங்கிலிஸ் (ஹிந்தியை ஆங்கிலத்தில் எழுதுவது) வார்த்தைகளை உள்ளடக்கிய அகராதி ஒன்றை உருவாக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறது.

இந்தப் பரிந்துரைகளில் சில பிரணாப் முகர்ஜிக்கே மிகவும் ‘ஓவராக’த் தெரிந்ததாலோ என்னவோ, அவரால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் அனைத்து உற்பத்திப் பொருள்களிலும் அச்சிடப்படும் தகவல்களும் ஹிந்தியிலும், பொருட்களின் பெயர் தேவநாகரியிலும் அச்சிடப்பட வேண்டும் என்ற பரிந்துரையைத் தமது கார்ப்பரேட் எஜமானர்களின் நலன் கருதி நிராகரித்துள்ளார் பிரனாப் முகர்ஜி. எனினும் அனைத்து அரசு, அரசு சார் நிறுவனங்களின் பொருட்களின் பெயரும் கண்டிப்பாக ஹிந்தியில் இருக்க வேண்டும் என்பது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதோடு அரசு வேலைவாய்ப்புகளுக்கு கண்டிப்பாக குறைந்த பட்ச அளவில் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற பரிந்துரையையும், நடைமுறை சிக்கல் கருதி நிராகரித்திருக்கிறார்  குடியரசுத் தலைவர்.

இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயம் ஹிந்தி சொல்லித் தர உத்தரவிட வேண்டும் எனக் கடந்த ஏப்ரல் 14 அன்று பாஜகவின் பேச்சாளரும் வழக்கறிஞருமான அஸ்வினிகுமார் உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் முன் வைத்துள்ள வாதங்களின் படி இந்தியாவில் 1968-ம் ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்த மும்மொழிக் கொள்கையை பல மாநில அரசுகள் பின்பற்றுவதில்லை – குறிப்பாக ஹிந்தி மொழி பேசாத மாநிலங்கள் பின்பற்றுவதில்லை. எனவே அத்தகைய நிலையைப் போக்கி ‘தேசிய மொழியான’ ஹிந்தியை அனைத்து மாநிலங்களிலும் கட்டாய மொழியாக்க உத்தரவிட வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்து வழக்கு தொடுத்துள்ளார்.

பள்ளிகளில்  மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்படும் ஹிந்தி

குறிப்பாக ”ஹிந்துஸ்தான் என்ற பெயரே, ஹிந்தி மொழியை அதிகமாகப் பேசும் மக்கள் இருப்பதால் தான் வந்தது” என்ற புதிய கண்டுபிடிப்பையும் இவ்வழக்கின் முக்கியமான வாதமாக முன் வைத்திருக்கிறார்கள் என்றால் இவ்வழக்கின் ”ஹிந்து – ஹிந்தி – இந்தியா” தன்மையைப் புரிந்து கொள்ளுங்களேன்.

இதற்கு முன்னரே, இரகசிய சுற்றறிக்கைகள் மூலம் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளில் சமஸ்கிருதத் திணிப்பு, உயர்கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருத்த் திணிப்பு என சேட்டையைக் காட்டி வந்த பாஜக, சமீபத்தில் நெடுஞ்சாலைத் துறை, வங்கிகள் ஆகியவற்றின் மூலமும் கொல்லைப் புற வழியாக தமிழகத்திற்குள் ஹிந்தியைத் திணித்து வருகிறது.

குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மைல் கற்களிலும் ஆங்கிலத்தை நீக்கி விட்டு ஹிந்தியில் ஊர்களின் பெயரை எழுதியது.  அதனைத் தொடர்ந்து பல இடங்களில், கருப்பு மை பூசி ஹிந்தியை அழித்தனர் தமிழக இளைஞர்கள். அடுத்த படியாக கடந்த 2 மாதங்களில் பல வங்கிகளின் ஏடிஎம்களிலும் தமிழ் மொழித் தேர்வு செய்வதற்கு இருந்த வாய்ப்பு நீக்கப்பட்டுள்ளது. ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்று மட்டுமே தகவல் பரிமாற்ற மொழியாகத் தேர்ந்தெடுக்க முடியும். இப்படி நேரடியாகவும், பின்வாசல் வழியாகவும் தமிழகத்திற்குள் ஹிந்தியைத் திணிக்க எத்தனித்து வருகிறது பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

தற்போது ஒப்புதலைப் பெற்றுள்ள அலுவலக மொழிக்கான பாராளுமன்றக் குழுவின் இந்தப் பரிந்துரைகள் கடந்த காங்கிரசு ஆட்சிக் காலத்திலேயே முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தலைமையில் 2011-ம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்டவையே. கடந்த 6 ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்த இவ்வறிக்கை, தற்போது மோடி அரசின் கீழ், பிரணாப் முகர்ஜியின் ஆட்சிக்காலம் முடியும் தருவாயில் அவசர அவசரமாக சட்டமாக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மைல் கற்களிலும் ஆங்கிலத்தை நீக்கி விட்டு ஹிந்தியில் ஊர்களின் பெயரை எழுதியது மோடி அரசு

சுதந்திரம் அடைந்த பிறகு அலுவலக மொழியாக இந்தியைக் கொண்டு வர இந்தக் கமிட்டியால் இதுவரை 9 முறை அறிக்கைகள் சமர்ப்பிக்கப் பட்டன.   எனினும் ஹிந்தி பேசாத மாநிலங்களின் எதிர்ப்புக் காரணமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இத்தகைய பரிந்துரைகள், தற்போது தனிப் பெரும்பான்மையுடனும், பாசிசத் தன்மையுடனும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள பாஜக கும்பலால் நடைமுறைப்படுத்தபட உள்ளன.

1938-ம் ஆண்டு தொடங்கி எழுச்சியுறு இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி தனது சுயமரியாதையை தமிழகம் நிலைநாட்டியுள்ளது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்ற போராளிகள், தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோர் சிறையிலேயே தியாகிகளாகினர். 1965-ம் ஆண்டு ஹிந்தியை ஆட்சி மொழியாக மத்திய காங்கிரசு அரசு அறிவித்த போது, தமிழகம் முழுவதும் தீப்பிழம்பாக பற்றியெரிந்தது. சனவரி 25 அன்று சென்னையில் தொடங்கிய போராட்டம், நெல்லை, கோவை, மதுரை, சிதம்பரம், திருச்சி எனப் பற்றிப் படர்ந்தது . மாணவர்களை ஒடுக்க அப்போதைய பக்தவத்சலம் அரசு இராணுவத்தைக் கொண்டு வந்து இறக்கியது. இராணுவம் எங்கள் மயிருக்குச் சமானம், என ஒட்டு மொத்தத் தமிழகமும்  வெகுண்டெழுந்து போராடியது. 55 நாட்கள் நீடித்த மாணவர்களின் போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றது.

நமது பண்பாட்டின் மீதான தாக்குதலுக்கு எதிராக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமையும் போர்க்குணமும் அதிகார வர்க்கத்தையும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலையும் அடிபணிய வைத்தது. அப்போது ஒட்டு மொத்த தமிழகத்திடமும் செருப்பால் அடிவாங்கிய மத்திய பாஜக அரசு மீண்டும் ஒருமுறை தன்னுடன் மோதிப் பார்க்க அறைகூவல் விடுக்கிறது. நாமும் பாஜக – ஆர்.எஸ்.எஸ். நச்சுப் பாம்பை எதிர்கொள்ள மீண்டும் ஒரு டெல்லிக் கட்டைத் தொடங்குவோம்.

– நந்தன்

மேலும் படிக்க:
President Pranab Mukherjee okays call for all speeches to be in Hindi
PIL in Supreme Court to make Hindi compulsory in class I-VIII in country
Tamil Nadu may see revival of anti-Hindi protests as Centre replaces English signages on highways
Hindi could be compulsory till Class 10 in all CBSE schools

சந்தா