குற்றத் தலைநகரம் டெல்லி : அமித்ஷாவின் டெல்லி போலீசு இலட்சணம் !
சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, என்.பி.ஆர் சட்ட எதிர்ப்புப் போராட்டத்திலும், சங்க பரிவாரக் கும்பலால் நிகழ்த்தப்பட்ட டெல்லி வன்முறையிலுமே டெல்லி போலீசின் முழு யோக்கியதையும் தெரிந்துவிட்டது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநகரமாக டெல்லி இருக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டு டெல்லியில் மட்டும் பதிவு செய்யப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 10,093. இது மும்பை, புனே, காசியாபாத், பெங்களூரு, இந்தூர் உள்ளிட்ட நகரங்களில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கையைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை டெல்லியில் குறைந்து வரும் நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. டெல்லியில் மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள மிகப்பெரும் மாநகரங்கள் அனைத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம்.
கடந்த 2019-க்கும் 2020-க்கும் இடையிலான காலகட்டத்தில் டெல்லியில் மட்டும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 18% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, நாளொன்றுக்கு சராசரியாக 650 வழக்குகள் டெல்லி போலீசால் பதியப்பட்டிருக்கின்றன. ஒரு ஆண்டில் மட்டும் 2.4 இலட்சம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பெங்களூருவில் ஆண்டொன்றுக்கு 19,964 வழக்குகளும், மும்பையில் ஒரு ஆண்டுக்கு 50,000 வழக்குகளும் பதியப்பட்டிருக்கின்றன.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தகவலின்படி, 2019-ம் ஆண்டைவிட 2020-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட கடத்தல் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன. 2019-ம் ஆண்டில் 5900- ஆக இருந்த கடத்தல் எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் 4062-ஆகக் குறைந்துள்ளது. இதில், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் – சுமார் 3000 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 12 முதல் 18 வயதுடைய சிறுவர் / சிறுமிகளே ஆவர்.
டெல்லியில் மொத்தமாக குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்திருந்தாலும், ஆட்கடத்தலில் மும்பையை விடவும், லக்னோவை விடவும் முன்னிலையில் இருக்கிறது. மும்பையில் 1,173 ஆட்கடத்தல் வழக்குகளும், லக்னோவில் 735 ஆட்கடத்தல் வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.
‘காதல்’ விவகாரம் தொடர்பான கொலை வழக்குகளும் அதிகரித்துள்ளன. இந்தியா முழுவதும் ஒராண்டில் காதல் விவகாரம் தொடர்பாகவும் சொத்து விவகாரம் தொடர்பாகவும் பதியப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 472.
கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் டெல்லியில் பதியப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 13,640. 2019-ம் ஆண்டில் அது 13,340-ஆகக் குறைந்தது. 997 பாலியல் வன்புணர்வு வழக்குகள், 110 வரதட்சணை மரண வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும், மானபங்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தாக்குதல் தொடுக்கப்பட்டதன் மீதான வழக்குகளின் எண்ணிக்கை 1840 மற்றும் 326 துன்புறுத்தல்கள் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்ட பெண்களின் வயது 30-ம் கீழ் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான வழக்குகளில் குற்றமிழைத்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கு பழக்கமானவர்களே (குடும்ப உறுப்பினர்கள், அண்டை வீட்டார் அல்லது இணையர்)
இணையத் திருட்டு, மோசடி மற்றும் பாலியல் துன்புறுத்த உள்ளிட்ட இணையக் குற்றங்களும் கடந்த ஆண்டு அதிகரித்துள்ளன. டெல்லியில் மட்டும் 168 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 50-60 எண்ணிக்கை அதிகம். ஒவ்வொரு வழக்கிலும் சராசரியாக 5 முதல் 10 நபர்கள் வரை கைது செய்யப்படுவதாக போலீசு கூறுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் முக்கியமாக, பாலியல் ரீதியிலான விசயங்களை வெளியிடுவது மற்றும் பரப்புவது, இணையத்தில் பின் தொடர்ந்து தொல்லை கொடுப்பது, மோசடி, மிரட்டிப் பணம் பறிப்பது ஆகியவற்றில் ஈடுபட்டவர்களே.
இப்படி குற்றக் கும்பல்களின் கூடாரமாக டெல்லி அமைந்திருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, என்.பி.ஆர் சட்ட எதிர்ப்புப் போராட்டத்திலும், சங்க பரிவாரக் கும்பலால் நிகழ்த்தப்பட்ட டெல்லி வன்முறையிலுமே டெல்லி போலீசின் யோக்கியதை தெரிந்துவிட்டது.
இந்துத்துவக் குற்றக் கும்பலுக்கு நெருக்கமாக டெல்லி போலீசு இருப்பதை நீதிமன்றமே சுட்டிக்காட்டி கடிந்திருக்கிறது. இந்நிலையில், தற்போது தேசிய குற்ற ஆவண மையத்திலிருந்து கிடைத்திருக்கும் இந்தத் தரவுகள் அதை நிரூபிக்கின்றன.