மோடியின் ‘புதிய’ இந்தியாவில் இரண்டாம்தர குடிமக்களாக்கப்படும் இஸ்லாமிய மக்கள்

ஹரியானாவின் நூஹ் மாவட்டக் கலவரம், 2019 டெல்லி கலவரம் மற்றும் ஜார்க்கண்ட்டின் மூன்று மாவட்ட இராமநவமி கலவரங்கள் என இசுலாமிய மக்களுக்கு எதிராக வன்முறைகள் நடத்தப்பட்ட பகுதிகளில், இக்கலவரங்களுக்குப் பிறகு இசுலாமியர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும். நாடாளுமன்றத்தில் அண்மை கால சம்பவங்கள் நாட்டின் மாண்புமிக்க இடத்திலேயே இசுலாமியர்கள் இரண்டாந்தர குடிமக்களாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும் நமக்கு உணர்த்துகின்றன.

டந்த ஒன்பது ஆண்டுகால மோடியின் ஆட்சியில் இஸ்லாமியர்கள் மீதான  ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிச கும்பலின் தாக்குதல்களும் வன்முறைகளும் எண்ணற்றவை; அம்மக்களின் துயரங்களோ சொல்லில் அடங்காதவை. “இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும், இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும்” என காவி பயங்கரவாதிகள் வெளிப்படையாக மதவெறியைக் கக்கி வருகின்றனர். 2014 ஆம் ஆண்டில் மோடியின்  ‘புதிய’ இந்தியாவில் தொடங்கிய இந்த இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம் தற்போதைய ‘பாரத்’தில் புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது.

இசுலாமியர்கள் மீதான சங்கப் பரிவாரக் கும்பலின் வன்முறைகளும், வெறுப்புப் பிரச்சாரங்களும் அந்த சமயத்துடன் மட்டும் முடிவடைந்துவிடுவதில்லை. மாறாக, அவை மக்களின் உணர்வு நிலையிலும் இந்துக்கள், இசுலாமியர்களுக்கு இடையிலான உறவு நிலையிலும் நிரந்தப் பிளவை ஏற்படுத்துகின்றன. அந்தவகையில், சங்கப் பரிவாரக் கும்பலும் கலவரங்களுக்குப் பின்னர், இசுலாமியர்களை மனிதர்களாகவே நடத்தக் கூடாது என்று வெறுப்பைத் தொடர்ந்து உமிழ்ந்துவருகின்றன. திட்டமிட்டு அவர்களை ஒடுக்கி வருகின்றன.

இந்தக் கட்டுரை, ஹரியானாவின் நூஹ் மாவட்டக் கலவரம், 2019 டெல்லி கலவரம் மற்றும் ஜார்க்கண்ட்டின் மூன்று மாவட்ட இராமநவமி கலவரங்கள் என இசுலாமிய மக்களுக்கு எதிராக வன்முறைகள் நடத்தப்பட்ட பகுதிகளில், இக்கலவரங்களுக்குப் பிறகு இசுலாமியர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும். நாடாளுமன்றத்தில் அண்மை கால சம்பவங்கள் நாட்டின் மாண்புமிக்க இடத்திலேயே இசுலாமியர்கள் இரண்டாந்தர குடிமக்களாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.

யோகியின் பயங்கரவாத ஆட்சி நடக்கும் உத்தரப் பிரதேசம், பா.ஜ.க.வின் கொடுங்கோல் ஆட்சி நடக்கும் அசாம், திரிபுரா, குஜராத் போன்ற மாநிலங்களில் இசுலாமியர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை இந்த மூன்று மாநில நிலைமைகளே நமக்கு உணர்த்திவிடும்.

இசுலாமியர்களை வெளியேற்றும் புதிய நாடாளுமன்றம்!

அண்மையில், புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் ஒரு விவாதத்தின் போது,  டெல்லியின் தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.பி.யான ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான டேனிஷ் அலி என்பவரை நாக்கூசும் வார்த்தைகளால் சரமாரியாகத் தாக்கினார். டேனிஷ் ஒரு இஸ்லாமியர் என்பதற்காக, அவரை  புரோக்கர், தீவிரவாதி, சுன்னத் செய்தவன், பயங்கரவாதி என அவமானப்படுத்தியிருக்கிறார்(ன்) அந்த பா.ஜ.க எம்.பி பிதுரி.  இது நடந்தது பொதுவெளியிலோ, காவி கும்பலின் மாநாட்டிலோ அல்ல, ஜனநாயகத்தின் கோயில் என பீற்றிக் கொள்ளப்படும் நாடாளுமன்றத்தில் நடந்திருக்கிறது.

இவ்வாறு ஒரு மக்கள் பிரதிநிதியை இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக தகாத வார்த்தைகளால் நாடாளுமன்றத்தில் பேசியதற்காக  ஒருவரைத் தண்டிக்க முடியாது என்பதுதான் இந்த ஜனநாயகத்தின் யோக்கியதை. தான் இவ்வாறு பேசியதற்காக பிதுரி வருத்தப்படவில்லை, இவ்வாறு அவர் பேசுவது முதன்முறையுமல்ல. பிற பா.ஜ.க எம்.பி.க்களும் மேசையைத் தட்டி வரவேற்றனர். அந்த அளவிற்கு இஸ்லாமிய வெறுப்பில் ஊறிப் போயுள்ளது இந்த பாசிசக் கும்பல்.


படிக்க: ஹரியானா: புல்டோசரைக் கொண்டு முஸ்லீம்கள் மீது அரசு நடத்தும் மதவெறி தாக்குதல்


இத்தனைக்கும் பகுஜன் சமாஜ் கட்சி, பா.ஜ.க.வின் மறைமுகப் பங்காளியாகத்தான் இருந்து வருகிறது. ஆனால், இசுலாமியர் என்றால் அவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் இழிவுபடுத்தப்படுவார்கள் என்பதுதான் பாசிஸ்டுகள் உருவாக்கியிருக்கும் புதிய இயல்புநிலை. மானத்திற்கு அஞ்சுகின்ற எந்த ஒரு இஸ்லாமியரும் நாடாளுமன்றத்திற்கோ சட்டமன்றங்களுக்கோ செல்வதற்குத் துணியக் கூடாது என்பதுதான் பாசிஸ்டுகள் கட்டியமைக்கும் உளவியல்.

இனிமேல் இவ்வாறு பேசினால், பிதுரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் ‘எச்சரித்ததைத்’ தாண்டி வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், இதே பாசிச கும்பல்தான், இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் அதானி குறித்து திருமாவளவன் பேசும் போது மைக்கை ஆப் செய்தது; விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்கக் கோரிய எதிர்க்கட்சிகளைச் சார்ந்த 19 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்தது. மோடியோ இந்த நிகழ்வு குறித்து  இதுவரை வாய்திறக்கவில்லை. மோடி அரசையோ, மோடியையோ விமர்சிக்கக் கூடாது என்பதற்காகவே சர்வாதிகாரி, குண்டர்களின் அரசு, ஜூம்லா,  இரட்டை வேடதாரி, நாடகம், சகுனி உள்ளிட்ட வார்த்தைகள் நாடாளுமன்றத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன.

இந்த வார்த்தைகளைவிட மோசமான, இழிவான வார்த்தைகள்தான் பிதுரி பேசியவை. இந்த இழிச்செயலைப் பாராட்டும் விதமாக, 29.5 சதவீத முஸ்லீம் மக்கள் நிறைந்த ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்திற்கு பிதுரியை தேர்தல் பொறுப்பாளராக அறிவித்திருக்கிறது பா.ஜ.க.

காவிகளின் ஆட்சியில் இஸ்லாமிய மக்களின் அவலநிலை:

2014-க்குப் பிறகு லவ் ஜிகாத், நில ஜிகாத், மதமாற்றம், அந்நிய ஊடுருவல் போன்றவற்றைத் தடுப்பது, பசுப்பாதுகாப்பு என பலபெயர்களில் பொய்களைப் பரப்பி இஸ்லாமியர்கள் மீது அறிவிக்கப்படாத இனப்படுகொலையை நடத்திக் கொண்டிருக்கிறது காவி பாசிசக் கும்பல். விநாயகர் சதுர்த்தி மட்டுமின்றி, அனைத்து இந்துப் பண்டிகைகளும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலுக்கான முகாந்திரங்களாகப் பயன்படுத்தப் படுகின்றன. ராமநவமியைக் காரணமாகக் கொண்டு குஜராத், மேற்கு வங்கம், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கலவரங்களை நடத்தி வருகிறது காவி கும்பல்.

ஹரியானா: அண்மையில்,  ஹரியானாவில் நூஹ் மாவட்டத்தில் கோவில் திருவிழாவை முகாந்திரமாகக் கொண்டு இஸ்லாமியர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது, விஸ்வ இந்து பரிசத் என்ற காவி குண்டர்படை. இந்த வன்முறையில் மசூதிகள் சூறையாடப்பட்டன; சாலையில் நின்ற வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன; இமாம் உட்பட அப்பாவி முஸ்லீம்கள் பலர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமுற்றனர். மேலும், கலவரக்காரர்களுக்கு சொந்தமான வீடுகளை இடிப்பது என்ற பெயரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் குடியிருப்புகளை இடித்துத் தள்ளி, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கி இஸ்லாமியர்கள் மீது அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது ஹரியானா மாநில பா.ஜ.க அரசு.

கடைகள், வீடுகள் என இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானவற்றை இடித்துத்தள்ளி அவர்களது வாழ்வாதாரத்தைப் பறித்து சொந்த நாட்டிலேயே இஸ்லாமிய மக்களை அகதிகளாக்கியிருக்கிறது. காவி பயங்கரவாதிகள் ஆளும் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, அசாம் போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இத்தகைய புல்டோசர் தாக்குதல்கள் தினந்தோறும் நடந்து வருகின்றன.

நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு கலவரங்களால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களின் வலிகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. குடிநீர் கூட உவர்நீராக உள்ள நூஹ் மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர், “வகுப்புவாத அரசியலாலும், வெறுப்பாலும் எங்கள் கிராமம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. எங்களுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை; எங்களது சமூக நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் எரிக்கின்ற இந்த வகுப்புவாதத் தீயை அணைப்பதற்காகவாவது தண்ணீர் ஊற்றுங்கள்” என்கிறார்.

டெல்லி: கடந்த 2020 ஆம் ஆண்டில், இஸ்லாமியர்களை சட்டப்பூர்வமாக இரண்டாந்தர குடிமக்களாக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் ஷாகீன்பாக்கில் போராடியவர்கள் மீது பெரும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது, காவி கும்பல். இவ்வன்முறையில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், இஸ்லாமிய மக்களின் உடைமைகள் சூறையாடப்பட்டன, பலர் படுகாயமுற்றனர். ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் அவர்களுக்கான நீதி கிடைக்கவில்லை என்பதே பெருந்துயரம்.

டெல்லி கலவரத்தால் தனது எலெக்ட்ரிக்கல் கடையையும் சான்றிதழ்களையும் பறிகொடுத்த அஸ்ஹர் சைதி, “நான் பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ செல்லாதது போலாகிவிட்டது” என்று வேதனையை வெளிப்படுத்துகிறார். கலவரத்தில் எரிக்கப்பட்ட தமது கடைக்காக ஆறு லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டதில், வெறும் 5,000 ரூபாய்தான் கிடைத்திருக்கிறது என்கிறார்.

“இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் நிலையும் இதுதான். நீதிமன்றத்தை அணுகினால், டெல்லி அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட நிவாரணக் கமிசனை அணுகச் சொல்கிறார்கள். அங்கோ 2,500 வழக்குகள் வந்திருப்பதாகவும், அவற்றில் 1,500 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன என்றும் கூறுகின்றனர். இதில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கைத் தேடிக் கண்டுப்பிடிப்பதே நீண்ட செயல்முறையாக இருக்கிறது. இந்த செயல்முறையானது நீதிமன்றத்திற்கும் கமிசனுக்குமிடையிலான நடைமுறை முடிச்சுகளில் சிக்குண்டுள்ளது. இது, பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தை மேலும் அதிகரிப்பதாக இருக்கிறது” என்கிறார் வழக்கறிஞரும், மனித உரிமை செயல்பாட்டாளருமான மிஷிகா சிங்.

ஜார்க்கண்ட்: கடந்த ஏப்ரல் மாதத்தில், நடைபெற்ற ராம நவமி கொண்டாட்டத்தின் போது, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசிராபாத் உள்ள மூன்று மாவட்டங்களில் கலவரம் நடைபெற்றது. “ஹசிராபாத்தில் கலவரம் நடைபெற்றது துரதிஷ்டவசமானது. பல வருடங்களாக, பல்வேறு மதத்தைச் சேர்ந்த மக்களும் ராமநவமிக் கொண்டாட்டத்தில் பங்கேற்றிருக்கின்றனர். 1925 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் ராம நவமி கொண்டாடும் பழக்கம் தொடங்கியது” என்கிறார் எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான சஞ்சய் கிருஷ்ணா.

“ஜாம்ஷெட்பூரில்  பத்து நாட்களுக்குள்  இருமுறை வன்முறை அரங்கேறியிருக்கிறது. இதற்கு முன்பு சில சம்பவங்கள் நடைபெற்றிருந்தாலும் ஏப்ரல் 8-ஆம் தேதி நடத்தப்பட்ட கலவரம் இரு சமுதாய மக்களிடம் பிளவை இன்னும் அகலப்படுத்தியிருக்கிறது. மக்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்வது அல்லது  மற்றவர் கடைகளில் பொருள் வாங்குவதையும் தவிர்க்கின்றனர். இயல்புநிலை திரும்பினாலும்,  இந்த மக்களிடைய ஏற்பட்ட பிளவை சரிசெய்வது கஷ்டம்தான்” என்கிறார், சஞ்சய் கிருஷ்ணா.


படிக்க: முசாஃபர்நகர் முஸ்லீம் மாணவர் மீதான தாக்குதல்: பாசிசம் வேரூன்றியிருப்பதன் சமிக்ஞை


மேலும், இக்கலவரத்தில் அம்மாநிலத்தின் ராஞ்சியில் உள்ள இந்திரபுரியில் உள்ள மசூதி தாக்கப்பட்டது. “ஏப்ரல் முதல் நாள் காலை 5 மணிக்கு மசூதியில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, வாயிற்கதவு உடைக்கப்பட்டது, மசூதியில் இருந்த கண்ணாடிகள் உடைக்கப்பட்டன, கற்கள் வீசியெறியப்பட்டன, முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இவை அனைத்தும் போலீசு கண் முன்னே நடந்தது. மேலும், மசூதி தாக்கப்பட்டது இதுவே முதல் முறை. மசூதிக்கு நேர் எதிராக கோவில் இருந்தபோதும் இதற்கு முன்புவரை எந்த பதற்றமும் ஏற்பட்டதில்லை” என்கிறார், சாதிக்.

“கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பங்களாதேஷ் முஸ்லீம்கள் சட்டவிரோதமாக ஜார்கண்ட்டில் குடியேறுகிறார்கள்; பழங்குடியினப் பெண்களை திருமணம் செய்து கொண்டு நிலத்தை எடுத்துக் கொள்கிறார்கள்; இதனால் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பெருகுகிறது; பழங்குடி மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது என்பதெல்லாம் பொய்” என்கிறார் அலி.

“ஜார்க்கண்டின் கிராமப்புற இஸ்லாமியர்களும், பழங்குடிகளும் பல ஆண்டுகளாக ஒற்றுமையாகத்தான் வாழ்ந்தனர் மற்றும் ஒரே பண்பாட்டைத்தான் கடைபிடித்து வந்தனர். 1855-56-களில் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற சந்தால் பழங்குடியினர் எழுச்சியில்  இஸ்லாமியர்களும் தலித்துகளும்தான் ஒன்று சேர்ந்து போராடினர். 1980 மற்றும் 1995-களில் நடைபெற்ற சிபுசோரன் இயக்கத்திலும் பழங்குடியினர்களான மாஞ்சிகளும், இஸ்லாமியர்களான மோமிகளும்தான் பங்கேற்றனர். அத்தகைய மக்களின் ஒற்றுமையை அரசியல்வாதிகள் சிதைக்க முயற்சிக்கின்றனர். அதற்கு ஒரு சான்றுதான் லவ் ஜிகாத்” என்கிறார் ஜார்கண்டைச் சார்ந்த  பத்திரிக்கையாளரான பைசல் அனுராக்.

எச்சரிக்கை, இன்று இசுலாமிய மக்கள்;
நாளை, அனைத்து உழைக்கும் மக்களும்

இசுலாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரங்கள், வதந்திகளை பரப்புவதன் மூலம்  சகோதரத்துவத்துடன் பழகிக் கொண்டிருந்த மக்களிடம் மதவெறி நஞ்சை விதைத்திருக்கிறது சங்கப் பரிவார கும்பல். அடுத்தக் கட்டமாக, ஒரு திட்டமிட்ட தாக்குதலை அரங்கேற்றி இரு தரப்பு மக்களையும் இருப்பிட ரீதியாக (Physical) பிரிக்கிறது. இசுலாமியர்கள் தங்களது சொந்த இடத்தில் வீடுகளில் வாழ்வதற்கும், தெருக்களில் நடமாடுவதற்கும் பாதுகாப்பற்ற மனநிலையை உருவாக்குகிறது. அதன் பின்னர், இசுலாமியர்கள் இயல்பாக இந்து பெரும்பான்மை மக்களிடமிருந்து உணர்வு ரீதியாகவே பிரிக்கப்படுகின்றனர்; அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

சங்கப் பரிவார கும்பல் ஆதிக்கத்தில் இருக்கும் இடங்களில் இந்த நிலைமையை அடுத்தடுத்து வளர்த்துக் கொண்டே செல்கிறது. இசுலாமியர்களை என்னவேண்டுமானாலும் செய்யலாம், யாரும் கேட்கமுடியாது என்ற, கொடுங்கோன்மையை உருவாக்குகிறது.

வரவிருக்கின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, வெறிகொண்டு இஸ்லாமியர்களின் மீதான கலவரங்களைத் திட்டமிட்டு அரங்கேற்றி வரும் காவி பாசிஸ்ட்டுகள், ஆட்சியைக் கைப்பற்றினால், மேற்கண்ட நிலைமையை நாடுமுழுவதுமே உருவாக்கிவிடுவார்கள்.

இஸ்லாமியர்கள் மீது மட்டுமின்றி, இதர சிறுபான்மையினர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட பெரும்பான்மை உழைக்கும் மக்களையும் இரண்டாந்தரக் குடிமக்களாக மாற்றுவதுதான் இந்துராஷ்டிரம். அந்த வகையில், இன, மொழி, சாதிய வேறுபாடுகளும் கலவரங்களுக்கான முகாந்திரங்களாக காவி பாசிஸ்டுகளால் பயன்படுத்தப்படும்.

மணிப்பூரும், கர்நாடகத்தின் காவிரிப் பிரச்சினையும்,  தமிழ்நாட்டில் நடைபெறும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களும் இதற்கான முன்னோட்டங்களே.


அப்பு



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க