சாம் மாநிலத்தில்  நடைமுறையில் இருந்து வந்த முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம் 1935 ஆனது பா.ஜ.க அரசால் கடந்த 23-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அசாம் பா.ஜ.க  அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

”மணமகனுக்கு 21, மணமகளுக்கு 18 என்ற சட்டப்பூர்வ வயது ஆகாவிட்டாலும்கூட திருமணத்தை பதிவு செய்ய அனுமதிக்கும் விதிகள் முஸ்லீம் சட்டத்தில் இடம்பெற்றிருந்தன. எனவே சட்டத்தை ரத்து செய்யும் நடவடிக்கையானது, அசாமில் குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான மற்றொரு முக்கியமான படியாகும்” என்று ஆளும் அசாம் பா.ஜ.க அரசால் கூறப்படுகிறது.

அம்மாநிலத்தில், முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம் 1935 -இன் அடிப்படையில் 94 முஸ்லீம் பதிவாளர்கள் (அரசு காஜிகள்) முஸ்லீம் திருமணங்களை பதிவு செய்து வந்தனர். அசாம் அரசின் நடவடிக்கையால் அது தற்போது   நிறுத்தப்பட்டுள்ளது.

”அசாமில் இதுவரை நடந்துள்ள முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்தை அரசு பதிவு செய்து வைத்துள்ளது. அப்படி திருமணத்தை பதிவு செய்யும் போது வயது, பிறப்பு சான்றிதழ் தொடர்பான எல்லா ஆவணங்களையும் சரிபார்த்து தான் அரசு காஜி திருமணத்தை செய்து வைக்கிறார். பிறகு எப்படி அவரால் குழந்தை திருமணத்தை செய்து வைக்க முடியும். இந்தச் சட்டத்தையும் மீறி குழந்தைத் திருமணம் நடந்திருந்தால், அரசு காஜி மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவரது உரிமத்தை ரத்து செய்திருக்க வேண்டும். இந்த சட்டத்தின் கீழ் குழந்தைத் திருமணம் நடந்ததாக அரசிடம் தரவு இருந்தால் அது வெளியிடப்பட வேண்டும். இப்படி செய்யாமல் பா.ஜ.க அரசு திட்டமிட்டே முஸ்லீம் மக்களை குறிவைக்கிறது” என்று குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான ஹபீஸ் ரஷீத் அகமது செளத்ரி கூறியுள்ளார்.


படிக்க: அசாம் பலதார மணம் தடை மசோதா: பொது சிவில் சட்டத்தின் ஒரு பகுதியே!


பொது சிவில் சட்டம் என்பது சங்க பரிவார கும்பலால் ஒரு வாக்குறுதியாக தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. முஸ்லீம்கள் மீது சட்ட ரீதியாக தாக்குதல் தொடுப்பதற்கான முக்கிய ஆயுதமாக அது அவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

அதன் அடிப்படையில் தான், சமீபத்தில் – பிப்ரவரி 7 அன்று – உத்தராகண்ட் மாநில பா.ஜ.க அரசால் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வருகின்ற மே மாதம், நாடாளுமன்ற தேர்தல் முடிவிற்குப் பிறகு, பொது சிவில் சட்டத்தை அசாம் மாநிலத்தில் நிறைவேற்றப் போவதாக அசாம் பா.ஜ.க அரசு கூறியுள்ளது. அசாமில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் வேளையில் தான் முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அசாமின் மக்கள் தொகையில் 34 சதவிகிதம் பேர் முஸ்லீம்கள். அதாவது அசாமில் உள்ள மொத்த மக்கள் தொகையான 3.12 கோடியில் 1.06 கோடி பேர் முஸ்லீம்கள். எனவே, முஸ்லீம்களை வதைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத் தான் அசாம் மாநிலம் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் லான்செட் குளோபல் ஹெல்த் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, 5 சிறுமிகளில் ஒருவரும், 6 சிறுவர்களில் ஒருவரும், 18 வயதுக்கு முன்பே கட்டாயத் திருமணத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மத வேறுபாடின்றி நாடு முழுவதும் இத்தகைய அவலநிலை இருக்கும்போது, முஸ்லீம்களைக் குறிவைத்துத் தாக்க வேண்டும் என்பதற்காகவே அசாம் அரசு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. சமீபத்தில் குழந்தை திருமணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து  ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்தது அசாம் அரசு. இதிலும் முஸ்லீம்கள் திட்டமிட்டே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாசிச கும்பலை எதிர்த்து, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாகப் போராட வேண்டியது நம் அனைவரின் கடமை.


ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க