என்னை போன்ற முஸ்லிம்களுக்கு ராமன் கோவில் சொல்லும் செய்தி! | ஸியாவுஸ் சலாம்

சமீப காலமாக, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, மத்தியப் பிரதேசம் ஆகிய வட மற்றும் மத்திய இந்திய மாநிலங்களில் முஸ்லிம்களிடையே புதிய பயம் தொற்றியுள்ளது. எங்கும் காவியில் அலையும் ராம பத்கர்களின் முகங்களில் ஆவேசமும் காணக்கிடக்கிறது.

“தி இந்து” பத்திரிகையில் இணை ஆசிரியராக உள்ள ஸியாவுஸ் சலாம் (ZIYA US SALAM), “இந்து இந்தியாவில் முஸ்லிமாக இருப்பது” (Being Muslim in Hindu India) என்ற நூலை எழுதியுள்ளார். பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் ஆட்சிக்கு வந்தது முதல் இந்தியாவில் முஸ்லிம் மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக்கப்பட்டுவருவது குறித்தும், ராமன் கோவில் திறப்பு விழாவிற்கு முன்பு இந்துத்துவ வெறியர்களால் முஸ்லிம் மக்கள் எந்தளவிற்கு அச்சுறுத்தல்களுக்குள்ளாகிறார்கள் என்பது குறித்தும் ஸியாவுஸ் சலாம் பகிர்ந்த அனுபவத்தின் மொழியாக்கம்.

ந்துமதவெறியர்களை கொண்ட இந்தியாவில் ஒரு முஸ்லிமாக இருப்பது அந்நியமாகவும் மனசோர்வாகவும் இருக்கிறது. முஸ்லிம்கள் 20 கோடி பேர் இருக்கலாம். ஆனால், இன்றைய இந்தியாவில் முஸ்லிம்கள் காணாமலாக்கப்பட்டிருக்கிறார்கள். வட இந்தியாவின் சில பகுதிகளில் ஒரு முஸ்லிமாக இருப்பது பாதுகாப்பானது அல்ல.

1527 முதல் 1992 வரை இருந்த பாபர் மசூதி, இந்துத்துவ கரசேவகர்களால் சுக்குநூறாக்கப்பட்ட இடத்தில், இன்று (ஜன. 22) அயோத்தியில், ராமன் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீப நாட்களில் கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுதான் பேசுபொருளாக இருக்கிறது.

பாபர் மசூதி இடித்து நொறுக்கும் வரை போலீசும் அரசும் ஒதுங்கியே நின்று வேடிக்கைப் பார்த்தது. இதற்கு அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு இடங்களில் இந்துமதவெறியர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இக்கலவரத்தில் 2,000-க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 2019-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது “சட்டத்தின் ஆட்சியின் அதிர்ச்சிக்குரிய மீறல்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும், நிலத்தை இந்து தரப்பினரிடம் ஒப்படைத்தது.

இன்று இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் மீது ராமனுக்கு பிரம்மாண்டமான கோவில் கட்டியெழுப்பப்படுகிறது. பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமன் பிறந்தார் என்றும் 16 முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் பெரும்பகுதியை முகலாயர்கள் ஆண்டபோது, இந்து கோவில்களை இடித்துவிட்டனர் என்றும் இந்துத்துவவாதிகள் நியாயவாதம் கற்பிக்கின்றனர்.

முஸ்லிம்களுக்காக பேச இந்திய அரசில் யாரும் இல்லை. 1947-ஆம் ஆண்டு ‘சுதந்திரத்திற்கு’ பின்னர், முதல்முறையாக முஸ்லிம் அமைச்சரவை அமைச்சரோ அல்லது ஒரு பாராளுமன்ற உறுப்பினரோ கூட ஆளும் கட்சியில் இல்லை. இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒரு முஸ்லிம் முதல்வர்கூட இல்லை. அயோத்தி அமைந்துள்ள உ.பி-யில் காவி உடை அணிந்து இந்து சாமியார் ஆட்சி செய்கிறார். தனது சமூக ஊடகத்தில் முஸ்லிம் பண்டிகைகளுக்கு வாழ்த்துகள்கூட தெரிவிக்காதவர் அவர்.


படிக்க: ராமன் கோவில் திறப்பு: பாபர் மசூதி இடிப்பை நினைவுகூரும் முஸ்லீம்கள்!


சமீப காலமாக, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, மத்தியப் பிரதேசம் ஆகிய வட மற்றும் மத்திய இந்திய மாநிலங்களில் முஸ்லிம்களிடையே புதிய பயம் தொற்றியுள்ளது. எங்கும் காவியில் அலையும் ராம பத்கர்களின் முகங்களில் ஆவேசமும் காணக்கிடக்கிறது.

டெல்லியில் வரலாற்று சிறப்புமிக்க ஜமா மசூதியில் இருந்து சில அடி தூரத்தில், கட்டா மசூதியின் வழியாக காவி உடை அணிந்து, ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டவாறு, மோட்டார் பைக், டிரக்குகள், ஜீப்களில் பேரணி செல்கின்றனர். வெற்றிக் களிப்புடன் கூடிய இக்கூச்சலில் மதிய தொழுகை சீர்குலைகிறது.

கான் சந்தையில் நான் சென்றுகொண்டிருந்தபோது, காவி பந்தலில் ராம பக்தி பாடல் ஒலித்து கொண்டிருந்தது. இதனால், இதற்கு அருகாமையிலுள்ள பண்டாரா சாலையில் இருக்கும் மசூதிக்கு முஸ்லிம்கள் வருவது குறைந்துவிட்டது, வீடுகளில் இருந்தே தொழுகை நடத்தி வருகிறார்கள்.

இது போன்றுதான் மற்ற இடங்களிலும், குறிப்பாக இந்துத்துவவாதிகள் அதிகமுள்ள வட இந்தியாவிலுள்ள நகரங்கள், கிராமங்களில் முஸ்லிம்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். உத்தரகாண்டின் டேராடூனில், பழைய கடிகார கோபுரத்தின் மேலிருந்து கீழாக ராமன் படம் தொங்கவிடப்பட்டுள்ளது. அதே உத்தரகாண்டில், புரோலா எனும் பகுதியில் முஸ்லிம் கடைகளுக்கு வெளியே முஸ்லிம் கடைகள் என அடையாளங்காணும் விதமாக “X” என்ற குறியீடு இந்துத்துவவாதிகளால் வரையப்பட்டிருக்கிறது. இதனால் அச்சமடைந்த முஸ்லிம் மக்கள் பலர் அவ்விடங்களை விட்டு வெளியேறினர்.


படிக்க: பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா? | மீள்பதிவு


மேற்கு உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில், ஜனவரி மாத தொடக்கத்தில் சிறு வணிகர்கள் உள்ளிட்ட பலர் தங்களது ரயில் முன்பதிவுகளை ரத்து செய்து, பயணத்தை நிறுத்திவிட்டனர். திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒத்திவைத்தனர்.

குருகிராம், நொய்டா உள்ளிட்ட உயர்தர நகரங்களில் இந்து பண்டிக்கை கொண்டாட்டம் உள்ளிட்ட இந்துத்துவவாதிகளின் நடவடிக்கைகளால் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி போயுள்ளனர். இந்நகரங்களில் அதிகாலையில் காலை வணக்கம் என்ற சொல்லாடலுக்கு பதிலாக ஜெய் ஸ்ரீராம் என்பது வழக்கமாகிவிட்டது.

இதற்கிடையில், முஸ்லிம்கள் மாட்டிறைச்சி உண்ணுகிறார்கள் என்றும் முஸ்லிம் பாகிஸ்தானியரின் அடையாளத்தில் இருப்பதாகவும் முஸ்லிம் மாணவர்கள் கேலிக்குள்ளாக்கப்படுகின்றனர். “ஒரு இந்திய முஸ்லிம் இந்தியனே அல்ல” என்பதுதான் மோடியின் இந்தியாவில் உள்ள இளம்பிஞ்சுகளின் மனதில் விதைக்கப்பட்டிருக்கிறது.

கோவில் கும்பாபிஷேகத்தைப் பற்றிய செய்தியை சேகரிக்க அயோத்திக்கு சென்ற முஸ்லிம் பெண் பத்திர்கையாளர் ஒருவர், இந்துக்கள் போல பொட்டு வைத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாகவும், கோவில் திறப்பு விழாவிற்கு முன்பு அங்கிருந்து தான் திரும்பிவிட நினைப்பதாகவும் கூறினார். அந்நிய உணர்வு, பயம் என்பது ஒரு முஸ்லிமுடன் நிரந்தரமாக பின்னிபிணைந்திருக்கிறது. முஸ்லிம் தனிமையில் இருப்பதை உணர்கிறான்.

2014 இல் மோடியும் இந்துத்துவவாதிகளும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்திய முஸ்லிம்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றனர். இன்று ராமன் கோவில் திறப்பு விழாவிற்கு பிறகு இந்த நிலை மேலும் மோசமாகிவிடுமோ என்ற அச்சம் அதிகமாக உள்ளது.


மொழிபெயர்ப்பு: ஆதினி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க