ந்து மதவெறியர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு ஆண்டுகள் பல ஓடிவிட்டன. இருந்தும் அன்று முஸ்லிம் மக்கள் மத்தியில் தோற்றுவிக்கப்பட்ட பயபீதி இன்று முன்பைக் காட்டிலும் மேலோங்கியுள்ளது. ஜனவரி 22 ஆம் தேதி, ராமன் கோவில் திறப்பு விழாவின் போது, “பயணத்தை தவிர்த்து வீட்டிற்குள்ளேயே இருப்பது” என்ற மனநிலைக்கு அயோத்தியைச் சுற்றியுள்ள பகுதியில் வாழும் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் வந்திருக்கின்றனர். ஆனால், முஸ்லிம்கள் மீதான வெறுப்பு என்பது அந்த ஒருநாளில் கரைந்து போகக்கூடிய விஷயம் அல்ல. ராமன் கோவில் திறப்பு விழாவிற்கு பிறகு, இன்னும் மூர்க்கமாகவும் கொடூரமாகவும் முஸ்லிம் மக்கள்மீது மதவெறி தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்படும். இதுகுறித்து அயோத்தியில் தற்போது வசித்துவரும் முஸ்லிம் மக்களின் மனநிலை என்ன என்பதை அவர்களின் அனுபவங்கள் வாயிலாகக் காண்போம்.

தற்போது ராமன் கோவில் திறப்பு விழா குறித்தும் 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்தும் நினைவு கூர்கிறார் இரண்டு குழந்தைகளின் தாயான சபா காலித்.

“டிசம்பர் 6, 1992 அன்று லக்னோவில் உள்ள எங்களது வீட்டிற்கு 100 கி.மீ. தொலைவில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட செய்தியை மரண பீதியுடன் கேட்டோம். அன்று எனக்கு வயது 10.

இந்து குடும்பங்கள் சூழ்ந்திருக்க நாங்கள் மட்டும்தான் முஸ்லிம். ஆனால், இதற்கு முன்பு இதுபோல் ஒருபோதும் யோசித்து பார்த்ததில்லை. ’யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்’ என தாத்தா கூறினார். நாங்கள் எலிகளை போல அமைதியாக பல நாட்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தோம்.

கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது, ரயில்கள் தீவைத்து எரிக்கப்படுவது என அடுத்தடுத்து வந்த செய்திகளால் நாங்கள் பீதியுற்றோம். இதை இப்போது நினைவு கூரும்போதே என் உடல் நடுங்குகிறது. இதற்கு முன்பு நாங்கள் எங்கள் உயிருக்கு ஒருபோதும் பயந்ததில்லை. அந்த உணர்வை விவரிக்க முடியாது. நல்வாய்ப்பாக, நாங்கள் வசித்து வந்த பகுதியில் இந்துமத வெறி ஊட்டப்பட்டவர்கள் யாரும் இல்லை. இருந்தும் நாங்கள் அந்நியப்படுத்தப்பட்டோம்” என்கிறார் சபா காலித்.

30 வருடங்களுக்கு பிறகு தற்போதும் முஸ்லிம் இந்துக்கள் சேர்ந்து வாழும் பகுதியில்தான் சபா காலித் வசித்து வருகிறார். சபா காலித்தின் வீட்டின் கதவில் குரான் வசனம் எழுதப்பட்டிருப்பதை பார்த்தும், ராமன் பாடலை பாடியபடியே, அயோத்தியில் ராமன் கோவில் கட்ட காவிக்கொடியுடன் கதவை தட்டி நன்கொடை கேட்டுள்ளனர்.

“எனது இரண்டு குழந்தைகளும் சிறுவர்களாக இருப்பதால், பயபீதியை ஏற்படுத்தக்கூடாது என பாபர் மசூதி இடிப்பு பற்றி அவர்களுக்கு சொல்லவில்லை. ஆனாலும் வெளி உலகம் அவர்களுக்கு கற்பித்துவிடுகிறது. அவர்கள் பள்ளிக்கூடத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இந்துமதம் சார்ந்ததாகவே இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது 12 வயது மகனின் வகுப்பு மாணவன் ஒருவன், தன் பெற்றோர் இந்துக்களுடன் மட்டுமே நட்பு கொள்ள சொன்னதாக கூறினான். அதேபோல, என் 8 வயது மகன் வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவர், ’நான் இந்து நீ முஸ்லீம். இரண்டு பேரும் எதிரிகள்’ என்று அவனிடம் கூறியிருக்கிறாள்.

“எனது குழந்தைகள் இந்த நாட்டில் வெறுப்பை எதிர்கொள்வதை நான் விரும்பவில்லை. அவர்கள் எங்களைப் போலவே குழந்தை பருவத்தை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒருவர் வலியில் துடித்துக்கொண்டிருக்கும்போது மற்றொருவர் கொண்டாடுவது என்ன மனநிலை. நாங்கள் இந்த நாட்டில் நம்பிக்கையற்றவர்களாகவும் ஏமாற்றப்பட்டவர்களாகவும் உணர்கிறோம். இரண்டாம் தர குடிமக்களை போலக்கூட நாங்கள் நடத்தப்படவில்லை” என்கிறார் சபா காலித்.

***

வெளிநாட்டில் கல்வியாளராக இருக்கும் ஒருவர், இந்தியாவில் இருக்கும் தனது பெற்றோரை சந்திக்க ஜனவரி வரவிருந்தார். ஆனால், “கோவில் திறப்பு விழாவில் என்ன நிகழுமோ” என்ற அச்சத்தில் பயணத்தை பிப்ரவரிக்கு தள்ளிவைத்துவிட்டார்.

பெயர் சொல்ல விரும்பாத இவருக்கு பாபர் மசூதி இடித்தபோது வயது 9. பாபர் மசூதி இடிப்பு குறித்து பெரிதும் கவலைப்படாத இவர், பள்ளிக்கூடத்தில் முஸ்லிம்கள் ஏன் மசூதியை விட்டுக்கொடுக்கவில்லை அவர்கள் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் என பல தொந்தரவுக்குள்ளாகியிருக்கிறார்.

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் மதவெறி கலவரம் குறித்து செய்தி கேட்டுகொண்டிருந்த போது, “முஸ்லிம்களை கொல்ல வேண்டும்” என்று ஆவேசத்தில் கத்தியிருக்கிறான். “நான் அங்கு இருந்ததை அந்த மாணவன் கவனிக்கவில்லை” என்கிறார் அவர்.

”போலிசாலும் நீதிமன்றத்தால் முஸ்லிம்கள் குறிப்பாக ஏழை முஸ்லிம்கள் மோசமான முறையில் நடத்தப்படுகிறார்கள். என் மகள் வளரும் போது இந்திய முஸ்லிம் குறித்து நான் என்ன சொல்வது” என கவலையடைகிறார்.

***

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது வழக்கறிஞர் அஷ்மா இஸ்ஸாத் என்பவருக்கு ஒன்பது வயது. “அன்று நடந்த நிகழ்வு இன்றும் நினைவில் இருக்கிறது. அன்று மக்கள் கடுமையான தலைவரை பற்றி பேசிவந்தனர். அவர்தான் அத்வானி” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் ஆஷ்மா.

டிசம்பர் 6, 1992 அன்று நடந்தது குறித்து மட்டுமல்ல, ராமன் கோவில் கட்டப்படுவதும் திறப்பு விழா கொண்டாடப்படுவதைக் கண்டும் அச்ச உணர்வை வெளிப்படுத்துகிறார், ஆஷ்மா. உ.பி. உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை வழக்கறிஞராக இருந்தாலும் அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. இதர முஸ்லிம் குடும்பத்தை போலத்தான் பயத்தில் உறைந்துள்ளார்.

“வெளிநாட்டில் வேலை கிடைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம் என தினமும் எண்ணுகிறேன். இப்படி சொல்ல வேதனையாகத்தான் இருக்கிறது. ஆனால் இதுதான் உண்மை” என்கிறார் கணத்த இதயத்துடன்.


ஆதினி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க