ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில், ஜூலை 31 அன்று விஷ்வ இந்து பரிஷத் மற்றும் அதன் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் ஆகிய இந்து மதவெறி அமைப்புகள் கலவரத்தைத் தூண்டும் நோக்கோடு ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன. தங்களின் திட்டத்திற்கேற்ப அந்நாளில் கலவரத்தையும் அரங்கேற்றின.
ஹரியானா மாநிலத்திலேயே முஸ்லீம்கள் பெரும்பான்மை வகிக்கும் ஒரே மாவட்டம் நூஹ் தான். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நூஹ் மாவட்டத்தில் வசிக்கும் 2,80,000 பேரில் கிட்டத்தட்ட 77 சதவீதம் மக்கள் முஸ்லீம்கள். இந்தியா – பாகிஸ்தான் வகுப்புவாத பிரிவினையின் போது கூட மதக்கலவரங்கள் நடக்காத பகுதியாக நூஹ் விளங்கியது.
இந்துக்களும் முஸ்லீம்களும் நல்லிணக்கமாக வசித்துவந்த பகுதியான நூஹ்-இல் தான் தற்போது இந்த இந்துத்துவ கும்பல்கள் கலவரத்தை நடத்தியுள்ளன.
மத சிறுபான்மையினரான முஸ்லீம்களையும் கிறிஸ்தவர்களையும் தொடர்ந்து தாக்கிவரும் இத்தகைய காவி பாசிச கும்பல்கள் கலவரங்களை நடத்துவதும் அதற்கு அரசு உறுதுணையாக இருப்பதும் பாசிச பா.ஜ.க ஆட்சியில் சாதாரண நிகழ்வுகள் ஆகிவிட்டன.
இந்துத்துவ கும்பல்கள் நடத்திய தாக்குதலின் பதட்டம் தணிவதற்குள் அரசு அதன் பங்கிற்கு தாக்குதலைத் தொடங்கிவிட்டது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை இணையதள சேவை முடக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதனையடுத்து 150-க்கும் மேற்பட்ட முஸ்லீம்களை போலீசு கைது செய்தது. இதனால் அச்சமடைந்த பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர்.
படிக்க: மணிப்பூர், ஹரியானா என தொடரும் கலவரங்கள்!
அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் முஸ்லீம்களுக்குச் சொந்தமான 400-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், உணவகங்களை ஹரியானா பா.ஜ.க அரசு இடித்துள்ளது. இது குறித்துப் பேசிய பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ராமன் மாலிக் பொது நிலங்களில் இருந்த ’சட்டவிரோத ஆக்கிரமிப்புகள்’ அகற்றப்பட்டு வருவதாகவும், கலவரத்திற்கும் தங்கள் நடவடிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திமிராகப் பேசியுள்ளார்.
தகரம் மற்றும் இரும்புக் கம்பிகளால் ஆன சிறிய கடைகளை இடிக்க புல்டோசர் ஓட்டுநர் தயங்கியபோது, அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் அவரிடம், “இவையெல்லாம் அந்த யாத்திரையின்போது கற்களை வீசி வன்முறையைத் தூண்டியவர்களின் கடைகள். யாருக்கும் கருணை காட்டவேண்டாம். அவற்றை முழுவதுமாக அழித்துவிடு,” என்று கூறியுள்ளார். அரசு எந்திரம் பாசிச மயமாகி வருவதற்கு இது தக்க சான்று.
மேலும், வி.எச்.பி – பஜ்ரங் தள் காவி குண்டர்கள் விட்டுச்சென்ற இடத்திலிருந்து கலவரத்தை அரசு தொடர்கிறது என்பதையே இந்த நடவடிக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன.
”சட்ட ஒழுங்கு பிரச்சினை என்ற போர்வையில் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை அரசால் நடத்தப்படுகிறதா என்னும் கேள்வி எழுகிறது” என்று கூறி நான்கு நாட்களாக ஹரியானா அரசால் நடத்தப்பட்டு வந்த இடிப்பு நடவடிக்கைக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 7 அன்று தடைவிதித்தது.
ஹரியானாவில் எம்.எல்.கட்டார் அரசால் முஸ்லீம்களின் வீடுகளும் கடைகளும் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுவதற்கு முன்மாதிரிகள் உள்ளன. உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசும் மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சௌகான் அரசும் முஸ்லீம்களின் வீடுகளையும் கடைகளையும் அகற்றி மதவெறித் தாக்குதல்களை நடத்துவதில் முன்னுதாரணமாக இருந்துள்ளன.
படிக்க: ஹரியானா : பசு பயங்கரவாதிகளால் உயிருக்குப் போராடும் சிவம்
’புல்டோசர் பாபா’ என்று சங்கிகளால் அழைக்கப்படும் யோகி ஆதித்யநாத் ”ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பார்களா?” என்று கூறி முஸ்லீம்கள் மீதான தனது மதவெறித் தாக்குதலை நியாயப்படுத்தினார். அதேபோல் ‘புல்டோசர் மாமா’ என்று அழைக்கப்படும் சிவராஜ் சிங் சௌகான் “பேய்களுடன் சமரசம் செய்து கொள்ள நான் விரும்பவில்லை” என்று தனது முஸ்லீம் வெறுப்பைக் கக்கினார். உத்தரகாண்ட் ஒரு ‘தேவபூமி’என்று கூறி அங்குள்ள மசார்கள் (முஸ்லீம் கல்லறைகள்) புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் புல்டோசர் என்பது முஸ்லீம்களுக்கு எதிரான ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது. சங்கிகள் புல்டோசர் ஊர்வலம் நடத்தி சிலாகித்துக் கொள்ளும் அளவிற்கு புல்டோசர் என்பது முஸ்லீம் வெறுப்பின் சின்னமாக மாற்றப்பட்டுள்ளது.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவருவதால் ஹரியானாவில் மட்டுமல்ல பா.ஜ.க ஆளும் அனைத்து மாநிலங்களிலும் அரசின் துணைகொண்டு சங்க பரிவார கும்பலால் மதவெறிக் கலவரங்கள், தாக்குதல்கள் அதிக அளவில் நடத்தப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இச்சூழலை எதிர்கொள்ளும் பொருட்டு மக்களைக் களப் போராட்டத்திற்குத் தயார் செய்வதே பாசிச எதிர்ப்பு சக்திகளின் உடனடிக் கடமையாகும்.
பொம்மி