மணிப்பூர், ஹரியானா என தொடரும் கலவரங்கள்!

துப்பாக்கி ஏந்தியப்படி வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தள் குண்டர்படையினரும், போலீஸ் மற்றும் துணை இராணுவப்படையும் கலவரத்தின் போது ஒன்றாக நிற்கின்றனர். போலிசும், துணை இராணுவப்படையும் வேடிக்கை பார்ப்பதற்கு என்ன பொருள்?

மணிப்பூர், ஹரியானா என தொடரும் கலவரங்கள்!
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச குண்டர்படைகளை தடை செய்!

ஆர்.எஸ்.எஸ் சார்பு மெய்தி இனவெறிக் கும்பல்களால் முன்னின்று நடத்தப்பட்ட மணிப்பூர் கலவரத்தில் 2 பெண்களை நிர்வாணமாக்கி இழுத்து செல்லும் வீடியோவால் நாடே அச்சத்தில் மூழ்கியுள்ள நிலையில் தற்போது ஹரியானா கலவரம் அரங்கேறியுள்ளது.

ஜூலை 31 திங்கள்கிழமை அன்று ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தளம் நடத்திய ஊர்வலம் கலவரமாக மாற்றப்பட்டது. ஊர்வலம் தொடங்க இருந்த சிவன் கோவிலில் மக்கள் சிறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், வன்முறை கும்பல் சூழ்ந்துள்ளதாகவும் செய்திகள் பரப்பப்பட்டதையடுத்து நூஹ் பகுதியில் வன்முறை மூண்டது.

கோவில் சேதப்படுத்தப்பட்டதாக வந்த தகவல் பொய் என கோவில் தலைமை பூசாரி மறுத்தது குறிப்பிடத்தக்கது. ஊர்வலத்திற்கு வந்த 2,000 பேர் கோவிலுக்குள் இருந்துள்ளனர். வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தள குண்டர்படைகள் திட்டமிட்டு பொய்ச் செய்திகளை பரவச் செய்து கோவிலில் இருந்த மக்களை அச்சமடையச் செய்து கலவரமாக மாற்றியுள்ளனர்.

நூஹ் மாவட்டத்தைத் தொடர்ந்து அன்று மாலையே குருகிராம், சோஹ்னாவில் கலவரம் வெடித்தது. குருகிராமில் 70 பேர் கொண்ட குண்டர்படை மசூதிக்குத் தீ வைத்தது. வெறிபிடித்த  இந்து மதவெறிக் கும்பல் மசூதியிலிருந்த 19 வயது இமாம்-ஐ கொன்றது.


படிக்க: ஹரியானா : பசு பயங்கரவாதிகளால் உயிருக்குப் போராடும் சிவம்


இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்; ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். ஒரே நாள் இரவில் இரண்டு மசூதிகளை எரித்துள்ளனர். பல இடங்களில் வழிபாட்டு தலங்கள், கார்கள், வாகனங்கள், கடைகள், கட்டிடங்கள், போன்றவை சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

***

ஹரியானா ‘பசுப் பாதுகாவலர்’ தலைவரும், பஜ்ரங்  தள் உறுப்பினருமான மோனு மானேசர் மூன்று நாட்களுக்கு முன் “நான் அங்கே வருகிறேன், உங்கள் அண்ணன் வருகிறார்” என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான். அப்போதிருந்தே அப்பகுதி பதட்டமடைந்துள்ளதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

மானேசரின் வீடியோ வைரலானவுடன் மேவாட் (மேவாட் மாவட்டம் 2016 இல் நூஹ் என பெயர் மாற்றப்பட்டது) முஸ்லீம் இளைஞர்கள் தங்களது சொந்த வீடியோக்களை வெளியிட்டு  “மானேசரை  மேவாட்டில் அனுமதிக்க கூடாது, அவரை கைது செய்ய வேண்டும்” என்று ஹரியானா அரசின் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். மேவாட் இளைஞர்கள் குழு மானேசருக்கு எதிராக போராடவும் அழைப்பு விடுத்துள்ளது. இப்பதிவுகளில் ஹரியானா அரசின் சமூக ஊடகப் பக்கங்களையும் டேக் (Tag) செய்ததாக இளைஞர்கள் குழு கூறியது. அரசு நிர்வாகமும், ஆளும் பாஜக அரசாங்கமும் இதைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டன.

மானேசர் தனது டிவிட்டர் பக்கத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான உள்ளடக்கங்களையே தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளான். மானேசர் கொலைக்காரப் பட்டியலில் தேடப்படுபவன். அவன் இந்த யாத்திரையில் இணையப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானதே ஹரியானாவில் கலவரம் ஏற்படுவதற்கான துவக்கப்புள்ளி.

இந்த ஊர்வலத்தை பாசிசக் குண்டர்படை “பிரஜ்மண்டல்” யாத்திரை (Brij Mandal Jalabhishek Yatra)  என்ற பெயரில் நடத்தியுள்ளது. இந்த யாத்திரை 2021 முதல் பெரிய அளவில் VHP-ஆல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

***

இப்பகுதியில் ‘பசுப் பாதுகாவலர்’ என்ற பெயரில் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் இந்து மதவெறி பாசிச அமைப்புகள் நீண்ட காலமாக இயங்கி வந்துள்ளன.

இந்தாண்டு, பிப்ரவரியில் பிவானி மாவட்டத்தில் இரண்டு முஸ்லீம் ஆண்களின் (நசீர் மற்றும் ஜூனைட்) எரிந்த எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்கள் பசுப் பாதுகவலர் என்ற பெயரில் மானேசரின் குண்டர்படையினரால் கொலை செய்யப்பட்டனர். இதற்கு முன்பு அதேப் பகுதியின், மெக்கானிக்கான வாரிஸ் கான் என்பவரின் மரணத்திலும் தொடர்புள்ளவனாக  மானேசர் இருந்துள்ளான்.

அதேபோல் 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் ஹரியானாவில் முஸ்லீம் ஆண்களை தாக்கி சித்திரவதை செய்யும் வீடியோக்கள் வெளியானது. ஜாமியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூட்டில் முன்னணியில் இருந்த  ராமபக்த் கோபால் மற்றும் மானேசர் ஆகிய இருவரும் இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இப்பகுதியில் மதக் கலவர பதட்டங்கள், ‘பசுப் பாதுக்காப்பு’ குண்டர்களுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ‘பசுப் பாதுகாவலர்’ கும்பலால் அடித்து கொலைச்செய்யப்பட்ட முஸ்லீம் குடும்பங்கள் மானேசரின் வன்முறை தாக்குதலுக்கு எதிராக ஹரியானா அரசு நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.

இவையனைத்தும் தான் அப்பகுதியில் உள்ள முஸ்லீம் இளைஞர்களை மானேசருக்கு எதிராக தனித்தனியாக வீடியோ பதிவிட்டு பேச வைத்துள்ளது. ஹரியானா அரசு நினைத்திருந்தால் இந்த கலவரத்தை தடுத்திருக்கலாம். ஆனால் இந்த அரசு தடுக்காமல் முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரத்தை நடக்கவிட்டு வேடிக்கைப் பார்த்துள்ளது.


படிக்க: ‘பசு பாதுகாப்பு’ எனும் ஆயுதத்தை சுழற்றும் பாசிஸ்டுகள்!


கலவரம் நடந்த பின்னரே 144 தடை, இணையசேவை முடக்கம், துணை ராணுவப்படையை இறக்குவது போன்ற  கண்துடைப்பு நடவடிக்கையை செய்கிறது.

கலவரம் பற்றிப் பேசிய துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா “ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் யாத்திரை குறித்து முழுமையான தகவலை அதிகாரிகளுக்கு கொடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

“ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் வாள்கள், லத்திகளை ஏந்திச்சென்றனர்” என்று குருகிராம் மாவட்ட பா.ஜ.க தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராவ் இந்தராஜித் சிங் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கி ஏந்தியப்படி வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தள் குண்டர்படையினரும், போலீஸ் மற்றும் துணை இராணுவப்படையும் கலவரத்தின் போது ஒன்றாக நிற்கின்றனர். போலிசும், துணை இராணுவப்படையும் வேடிக்கை பார்ப்பதற்கு என்ன பொருள்? குண்டர்படையினரும் போலிசும் துணை இராணுவப்படையும் இந்த கலவரத்தை இணைந்து நடத்துவதாக தான் பொருள். இதுதானே குஜராத்திலும் மணிப்பூரிலும்  நடந்தது; நடந்துவருகிறது.

***

ஹரியானாவில் 2014 முதல் பா.ஜ.க தான் ஆட்சியில் உள்ளது. அன்று முதல் இன்றுவரை முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார்.  முஸ்லீம் வெறுப்பைத் தனது அரசியலாக கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ஹரியானாவில் வி.எச்.பி, பஜ்ரங் தள் போன்ற மதவெறி அமைப்புகளை வளர்த்து வருகிறது.

ஹரியானாவில் அமைக்கப்பட்ட புலனாய்வு குழு 2000 வீடியோக்களை ஆய்வு செய்துள்ளது. அதனடிப்படையில் 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 93 பேர் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. பாசிசக் குண்டர்படை களத்தில் மட்டுமல்லாமல் ஊடகங்கள் மூலமும் மதவெறி அரசியலை புகுத்தி வருகின்றனர்.

2024 நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி இந்தியா தேர்தலை மட்டும் எதிர்கொள்வதாக இருக்கப்போவதில்லை, இதுபோன்ற ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி குண்டர்படையின் கலவரத்தையும் எதிர்கொள்ள வேண்டும். இந்த கும்பல் இருக்கும் வரை கலவரங்கள் ஓயப்போவதில்லை. அவர்கள் இருக்குமிடமெல்லாம் கலவரம் வெடிக்கும். இதற்கு ஒரே வழி ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-யை தடை செய்வது மட்டுமே.


குழலி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க