பாசிச பா.ஜ.க ஆளும் ஹரியானாவில் பசு குண்டர்களால் நடத்தப்படும் வன்முறை வெறியாட்டங்கள் தொடர் நிகழ்வுகளாகிவிட்டன.
கடந்த ஜனவரி 28-அன்று நூஹ் மாவட்டத்தில் வாரிஸ் (Waris) என்ற 22 வயது இளைஞர் பஜ்ரங் தள் அமைப்பினர் உள்ளிட்ட பசு குண்டர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். வாரிஸ்-இன் மனைவியும், 3 வயது மகளும் அனாதைகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், டெம்போ மீது அவரது கார் மோதி விபத்திற்கு உள்ளானதால் வாரிஸ் உயிரிழந்ததாக போலீசு கூறுகிறது. உண்மை என்னவென்றால், பசு குண்டர்கள் விரட்டிச் சென்றதால்தான் வாரிஸ்-இன் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு முன்னதாக, வாரிஸ் மற்றும் இரண்டு இஸ்லாமியர்களை பசு குண்டர்கள் தாக்கி, அதை வீடியோவும் எடுத்துள்ளனர். இந்த தாக்குதலானது ஹரியானா போலீசின் முன்னிலையில்தான் நடைபெற்றிருக்கிறது. ஆனால் போலீசு பசு குண்டர்களை கண்டுகொள்ளக்கூட இல்லை.
அதேபோல, ஹரியானாவின் பல்வாலில் (Palwal) மார்ச் 5-ஆம் தேதியன்று மாடுகளை ஏற்றிச் சென்ற முஸ்லிம் லாரி டிரைவர் பசு குண்டர்களால் தாக்கப்பட்டார்.
இவை சமீபத்தில் ஹரியானா மாநிலத்தில் பசுவதை – மாட்டிறைச்சியை வைத்து சங்க பரிவார கும்பல்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறை தாக்குதல்கள். 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் நாடு முழுவதும், அதிலும் குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில், வன்முறை சம்பவங்கள் அதீத அளவில் நடைபெற தொடங்கியுள்ளன. பாசிஸ்டுகள் ‘பசு பாதுகாப்பு’ என்பதை தங்களுக்கான இந்துத்துவ அடித்தளத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான விரிவுபடுத்திக் கொள்வதற்கான கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
அரசு எந்திரத்தை பயன்படுத்திக் கொள்ளும் பாசிஸ்டுகள்!
சங்க பரிவார் கும்பல் அரசு எந்திரத்தில் ஊடுருவி தனது பாசிச நோக்கங்களுக்கு ஏதுவாக அதைப் பயன்படுத்திக் கொள்கிறது. கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதியன்று ராஜஸ்தானின் பரத்பூர் (Bharatpur) மாவட்டம் காட்மிக்கா (Ghatmeeka) கிராமத்தைச் சேர்ந்த நசீர் மற்றும் ஜுனைத் எனும் இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த பசு குண்டர்களால் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்ட அவர்கள் இரண்டு நாட்கள் கழித்து ஹரியானாவின் பிவானி (Bhiwani) மாவட்டம் லோஹரு (Loharu) கிராமத்தில் கார் ஒன்றில் எரிந்த நிலையில் சடலங்களாகத்தான் மீட்கப்பட்டனர்.
முன்னதாக, பசுக்களை கடத்தியதாகக் கூறப்பட்டு தாக்கப்பட்ட நசீர் மற்றும் ஜுனைத் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் ‘பசு பாதுகாவலர்’களால் (gau rakshak) ஹரியானா பெரோஸ்பூர் ஜிர்கா (Firozpur Jhirka) போலீசு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தாக்கப்பட்ட இருவரின் நிலையைக் கண்ட போலீசோ, அவர்களை திரும்ப அழைத்துச் செல்லும்படி அந்தக் கும்பலிடமே கூறிவிட்டது. அக்கும்பல் காரில் வைத்தே 20 மணிநேரம் அவர்களை அலைக்கழித்தது. பிறகு அவர்களை பிப்ரவரி 16-ஆம் தேதி இரவில் காரில் வைத்தே பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டது.
படிக்க: அரியானா : பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் முஸ்லீம் இளைஞர்களை தாக்கும் காவி குண்டர்கள் !
பிவானியின் பஜ்ரங் தள் உறுப்பினரான மோனு மானேசர் (Monu Manesar) தலைமையிலான கும்பல்தான் இந்தப் படுகொலையை செய்துள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், 2019-ஆம் ஆண்டில் ஹரியானாவின் பாஜக அரசு பசுவதை தடுப்புச் சட்டத்தில் பசுக்களை கடத்தினால் பத்து ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தத்தை மேற்கொண்டது.
மேலும் 2021-ஆம் ஆண்டு ஜூலையில், பசுக்களைக் கடத்துவதையும் கொல்வதையும் தடுக்க, பல மூத்த அதிகாரிகளைக் கொண்ட மாநில அளவிலான சிறப்பு பசு பாதுகாப்பு பணிக்குழுவை (Special Cow Protection Task Force Committee) அமைப்பதாக அறிவித்தது. இந்த குழுவின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்பு பசு பாதுகாப்பு பணிக்குழுக்கள் (SCPTF) அமைக்கப்பட்டன. இக்குழுக்களில் பசு பாதுகாவலர்கள் (குண்டர்கள்) தங்களை இணைத்துக் கொண்டனர்.
கொலைகார கும்பலின் தலைவனான இந்த மோனு மானேசர் குருகிராம் நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட பணிக்குழுவின் உறுப்பினர். இவ்வாறு ஹரியானாவில் அரசே பசு குண்டர்களை சட்டரீதியாக அங்கீகரிக்கிறது. இந்த சட்ட ரீதியிலான பசு குண்டர்களுடன் சட்ட விரோதமாக இயங்கும் பசு குண்டர்களும் இணைந்து செயல்படுகிறார்கள். இம்மாநிலத்தில் 15,000-க்கும் மேற்பட்ட பசு குண்டர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இதில் கௌ ரக்ஷா தள் (Gau Raksha Dal), பஜ்ரங் தள் மற்றும் கௌபுத்ர சேனா (Gauputra Sena) ஆகிய இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.
இஸ்லாமியர்களையும் தலித்துகளையும் ‘பசு கடத்தல்காரர்கள்’ என்று கூறி தாக்கி வருகின்றனர். குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பசுவதை தடைச் சட்டத்தின் மூலம் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது காவி பாசிச குண்டர்கள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட ஏதுவாக உள்ளது.
அப்பாவி இஸ்லாமியர்களும் தலித்துகளும் பசு குண்டர்களால் தாக்கப்படுவது ஒரு புறமிருக்க, மறுபுறம் அரசோ பாதிக்கப்படும் இஸ்லாமியர்கள் மீதுதான் பசுவதை தடை சட்டத்தின் கீழ் பொய் வழக்குகளை புனைகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், ஹரியானாவின் நூஹ் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட 69 ‘பசுவதை’ தொடர்பான வழக்குகளில், 4 வழக்குகளில் மட்டுமே ‘பசுவதை’ நடந்ததாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றமும் பசுவதையும்
குஜராத்தில் பசு கடத்தல் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த தாபி (Tapi) மாவட்ட நீதிமன்ற நீதிபதி சமீர் வினோத்சந்திரா வியாஸ் குற்றம்சாட்டப்பட்ட முகமது அமீன் என்ற 22 வயது முஸ்லிம் இளைஞருக்கு ஆயுள் தண்டனையும் ₹ 5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பரில் வழங்கப்பட்டது. தீர்ப்பின் முழுவிவரம் தற்போது தான் வெளியானது. மகாராஷ்ட்ராவில் இருந்து 16 பசு மாடுகளை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் அமீன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த தீர்ப்பில் நீதிபதி “பசு நமது தாய் போன்றது; பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தினாலே உலகின் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். வீட்டில் பசு சாணம் பூசியிருந்தால் கதிர்வீச்சு பாதிப்பு கூட அண்டாது என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பசுவின் கோமியம் பல தீரா நோய்களை தீர்க்க வல்லது. பசு பாதுகாப்பு பற்றி நாம் நிறைய பேசுகிறோம்; ஆனால் அது முழுவீச்சில் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை” என்று கூறியுள்ளார்.
படிக்க: கோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் !
சட்டவாதிகள் திகைத்துவிட வேண்டாம். சுகாதார வல்லுநர்கள் பலரால் நிராகரிக்கப்பட்ட இக்கூற்றுகளைக் கூறியிருப்பது பாசிச காவி குண்டர்கள் அல்ல; குஜராத் மாநிலத்தில் உள்ள மாவட்ட நீதிபதி ஒருவர்தான்.
உத்தரபிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பிப்ரவரி 14-அன்று நீதிபதி ஷமிம் அகமது (Justice Shamim Ahmed) பசு வதையை தடை செய்து, பசுவை ‘பாதுகாக்கப்பட்ட தேசிய விலங்கு’ என அறிவிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். பாராபங்கி கிராமத்தை சேர்ந்த முகமது அப்துல் காலிக் (Mohd. Abdul Khaliq) என்பவர் தன்மீது பசுவதை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பசுவைப் பற்றி ஒரு ஆன்மீக சொற்பொழிவையே ஆற்றியுள்ளார்.
இந்து மத கடவுள்களான சிவன், விஷ்ணு, இந்திரன் போன்றோருடன் தொடர்புடைய பசு தெய்வீகத்தன்மை வாய்ந்தது என்றும்,
பசுவின் 4 கால்களும் 4 வேதங்களை குறிக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும், பசுக்களை கொலை செய்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என்றும், இந்தியாவில் வேத காலத்திலேயே பசுவதை தடை செய்யப்பட்டிருக்கிறது என்றும், மகாபாரதம் உள்ளிட்ட புராணங்களில் பசுவதை தடை தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே, 2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் அலகாபாத் உயர்நீதிமன்றம் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரி பாராளுமன்றத்திற்கு அறிவுரை வழங்கி இருந்தது. அதற்கும் முன்னதாக, 2017-ஆம் ஆண்டிலேயே ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இதே கருத்தை வெளிப்படுத்தி இருந்தது.
நீதிபதிகள் நியமனம் முழுமையாக பாசிச பாஜக அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத போதே இந்துத்துவா சித்தாந்தத்தின் குரல் நீதிமன்றங்களில் இவ்வாறு உரக்க ஒலிக்கிறது.
பசுவதையும் சட்ட வழிமுறைகளும்!
சமீபத்தில், மார்ச் 17 அன்று, மகாராஷ்டிரா அமைச்சரவை பசுவதை தடுப்புச் சட்டத்தை கராராக அமல்படுத்துவதற்காக பசு சேவை ஆணையம் (Maharashtra commission for Cow Services) அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ₹ 10 கோடி நிதி ஒதுக்குவதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளது. இதில் ஏக்நாத் ஷிண்டே அரசு பாஜக ஆளும் மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாதிரியை பின்பற்றியுள்ளது.
இஸ்லாமியர்களையும் தலித்துகளையும் ஒடுக்குவதற்காக திட்டமிட்டே பல்வேறு மாநிலங்களில் இயற்றப்படும் பசுவதை தடைச் சட்டத்தின் அச்சாணி இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் உள்ளது. அரசியலமைப்பின் பகுதி IV-ஆக உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகளில் (Directive Principles of State Policy) சரத்து 48 பசுவதையை (மாட்டிறைச்சியை) தடை செய்ய அரசுக்கு அதிகாரத்தை அளிக்கிறது.
எனவே, நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதன் மூலம் சட்ட ரீதியாக இந்த வன்முறை வெறியாட்டங்களை ஒழித்துக்கட்ட இயலாது. பசுவதை தடை சட்டத்திற்கு எதிராகவும், பசு குண்டர்களை பின்னணியில் இருந்து இயக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு எதிராகவும் களத்தில் மக்கள் திரள் போராட்டங்களை கட்டமைப்பதன் மூலமே தீர்வு காண முடியும்.
பொம்மி