கடந்த வெள்ளிக்கிழமை (16-08-2019) வடக்கு கோவாவின் வால்பொய் பகுதியைச் சேர்ந்த உஸ்மான் கான் என்பவரை பசுவதை தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தது கோவா அரசு.
நடந்து முடிந்த பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சுமார் 19 பசுக்களை வெட்டிக் கொன்று அதன் எலும்புகளை உஸ்மான் கான் புதைத்ததாகக் கூறி அவர் மீது கோவாவைச் சேர்ந்த “கவ்னாஷ் சுரக்ஷா அபியான்” என்ற பசுக்குண்டர் படை கொடுத்த புகாரின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தது போலீசு. மேலும் அவர்கள் முந்திரி ஆலைக்கு அருகே உள்ள இடத்தில் இருந்து பசுவின் எலும்புகளை எடுத்து வந்து அந்த புகாரை அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து உஸ்மான் கானைக் கைது செய்திருக்கிறது போலீசு. இவ்வழக்கில் பிணை கேட்டு உஸ்மான் விண்ணப்பித்ததையும் நிராகரித்துள்ளது நீதிமன்றம்.
கடந்த ஆண்டிலிருந்தே கோவாவில் மாட்டுக் கறிக்கு தட்டுப்பாடு நிலவி வந்தது. கோவாவின் சட்டப்பூர்வமான ஒரே மாடு வெட்டுமிடமான ”கோவா கறி அங்காடிவரிசை” என்ற நிறுவனத்திற்கு கர்நாடகாவில் இருந்து போதுமான மாட்டுக்கறி வரத்து இல்லாததுதான் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறுகின்றனர். ஏனெனில், கர்நாடகத்தில் இருந்து மாட்டுக்கறி வரவை எல்லையிலேயே தடுத்து இந்த பசுக் குண்டர்கள் பிரச்சினை செய்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக அங்கு பசுக்குண்டர் அமைப்புகள் அதிகரித்துள்ளன. கர்நாடகா – கோவா எல்லைப் பகுதியில் மாட்டுக்கறியைக் கொண்டு வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, கறியின் மீது பினாயில் போன்ற இரசாயனங்களை ஊற்றி அவற்றை உண்ணத் தகுதியற்றவையாக மாற்றிவிடுகின்றனர்.
சுற்றுலாத் தளமான கோவாவில் கணிசமானோர் மாட்டுக்கறி உண்பவர்களே. தற்போது புகாரளித்துள்ள “கவ்னாஷ் சுரக்ஷா அபியான்” எனப்படும் இந்துத்துவ அமைப்பை நடத்துபவர் வலதுசாரியான ஹனுமந்த் பராப். கால்நடைகள் கொல்லப்படுவதற்கு குறிப்பான சமூகத்தைச் சேர்ந்த நபர்களே காரணம் என்று கூறும் பராப், ”ஜெய்ஸ்ரீராம் கோசன்வர்தன் கேந்திரா” என்னும் அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார். இந்த அமைப்பின் பசுப் பராமரிப்பு மையத்திற்கு கடந்த 2014-ம் ஆண்டு வருகை புரிந்த கோவாவின் கவர்னர் மிருதுளா சின்ஹா அங்கிருந்து ஒரு பசுவை தனது கவர்னர் மாளிகைக்கு கொண்டு சென்று பராமரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனில் பராப்-ன் அரசியல் தொடர்பு மட்டத்தைப் புரிந்து கொள்ளலாம்.
ஒருமுறை ஸ்க்ரால் பத்திரிகையின் செய்தியாளர்களிடம் பேசிய பராப், இந்த அரசு இயந்திரத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்றும், வியாபாரிகளின் கையில் உள்ள ஆவணங்களைத் தாங்களே சரிபார்ப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் கால்நடைகள் கொல்லப்படுவதைத் தடுப்பதுதான் இந்துராஷ்டிரத்தைக் கட்டமைப்பதற்கான வழி என்கிறார், இவர். இவர்களால் தொடர்ச்சியாக கடும் நட்டத்தைச் சந்தித்த கால்நடை வியாபாரிகள் ஒருமுறை மிகப்பெரிய போராட்டமே நடத்தியிருக்கின்றனர்.
ஒரு சமயத்தில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மாடு வெட்டும் நிறுவனங்களே ஒருமுறை கோவாவிற்கு மாடு அனுப்ப முடியாது எனக் கூறி வேலைநிறுத்தம் செய்யும் அளவிற்கு இவர்களின் இம்சை அதிகரித்துள்ளது.
கோவாவின் வருமானமே சுற்றுலாத் துறையிலும், அதன் முக்கியமான தேவையாக மாட்டுக் கறியும் இருக்கும்பட்சத்தில் இது அரசாங்கத்துக்கும் மிகப்பெரிய குடைச்சலாக இருக்கிறது. இது குறித்து கோவாவில் உள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினரான மைக்கேல் லொபொ, பசுப் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களை அரசு கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. மாநிலத்தில் உள்ள மாட்டுக்கறி பிரியர்களையும் ஏமாற்றியிருக்கிறது. பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் எல்லைப்பகுதியில் குண்டர்கள் மாட்டுக்கறியை தடுத்துவிடுகின்றனர் என்று கூறியிருக்கிறார்.
”தி கேரவன்” இணைய இதழில் எழுதும் கோவாவைச் சேர்ந்த பத்திரிகையாளரான பமிலா இதுகுறித்து அவ்விதழில் எழுதுகையில், இந்த நிலைமை தற்போது திடீரெனத் தோன்றியதில்லை என்று குறிப்பிடுகிறார். பல ஆண்டுகளுக்கு முன்னரே பல்வேறு “கால்நடை நலனுக்கான” அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தொடர்ச்சியான பிரச்சாரம் மற்றும் அரசாங்கத்திடம் சட்டம் இயற்ற வலியுறுத்தல், அதில் தலையிடுதல் ஆகியவற்றின் மூலம் அடித்தளத்தை இட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் அரசின் உணவு அரசியல் எவ்வாறு இவ்வளவு காலமாக பற்றியெறிய விடப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். கோவா காவிகளுக்கான சோதனைக் களமாகவே பயன்படுத்தப்படுகிறது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார் பமீலா.
படிக்க:
♦ முசுலீம்களுக்கு விடிவைத் தருமா மத்தியப் பிரதேச அரசின் பசுவதை சட்டதிருத்தம் ?
♦ இந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது !
முசுலீம்களையும் தலித்துகளையும் குறிவைத்து இந்துத்துவக் கும்பல் நடத்தும் இந்த நடவடிக்கைகள் வெறுமனே சிறுபான்மையினரை மட்டும் பாதிப்பதில்லை. கால்நடைகளை வளர்க்கும் கோடிக்கணக்கான ‘இந்துக்களையும்’ பாதிக்கிறது. குறிப்பாக கோவா மாநிலத்தின் பொருளாதாரத்திலும் கூட தாக்கத்தைச் செலுத்துகிறது.
இன்றே இதுதான் நிலையெனில், நாளை ஒருவேளை இந்துராஷ்டிரம் அமைக்கப்பட்டால் ?
நந்தன்
நன்றி: the wire
This is similar to prohibition for PIG Meat in Arab nations, pakistan and many other muslim nations…. nothing to worry or concern about.
rgds