சுக்குண்டர்களின் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர, பசுவதை தடுப்புச்சட்டத்தில் திருத்தங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது மத்தியப் பிரதேச அரசு.

மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், கடந்த புதன்கிழமை இந்த சட்டத் திருத்த முன்மொழிதலுக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்தச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தத்தின்படி வன்முறையில் ஈடுபடும் பசுக் குண்டர்களுக்கு ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ரூ.25,000 முதல் ரூ. 50,000 வரை அபராதமும் விதிக்க முடியும்.

மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்

தொடர்ச்சியான குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை இரட்டிப்பாக்குவதற்கான வாய்ப்பும் இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பசுக்குண்டர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சமீபத்தில் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இச்சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக அம்மாநில கூடுதல் தலைமைச் செயலர் மனோஜ் ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் உச்சநீதிமன்றம், சமூகத்தில் கும்பல் வன்முறைகளை அனுமதிக்க முடியாது என்றும், கும்பல் கொலைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பொருத்தமான சட்டப் பிரிவுகளை இயற்றும்படியும் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.

பசுப் பாதுகாப்பு எனும் பெயரில் வன்முறை நடத்தும் கும்பல் வன்முறையாளர்கள் மற்றும் உடைமைகளைச் சேதப்படுத்துபவர்களையும், இச்சட்டத் திருத்தத்தின் கீழ் தண்டிக்க முடியும்.

மேலும் இச்சட்டத் திருத்தத்தின்படி கால்நடைகளை எடுத்துச் செல்லும் நபர்கள், அருகில் உள்ள துணைப் பிரிவு மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி பெற்று அதற்கான ஆவணங்களை உடன் கொண்டு செல்லவேண்டும் என்றும் ஸ்ரீவத்சவா கூறினார்.

படிக்க:
♦ பகுத்தறிவாளர்களை சுட்டுக்கொல்ல சித்தாந்த பயிற்சியும் ஆயுத பயிற்சியும் அளித்தது சனாதன் சன்ஸ்தா !
♦ இராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் !

இது ஒருபுறமிருக்க, மத்தியப் பிரதேசத்தின் கால்நடைத்துறை அமைச்சர் லகான் சிங் யாதவ், “பெரும்பாலான கால்நடை வணிகர்கள் தங்களுடன் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வதில்லை. அவர்கள் விற்பனைக்கு எடுத்துச் செல்கிறார்களா அல்லது மாட்டை வெட்ட எடுத்துச் செல்கிறார்களா என்பது தெரியாததால்தான் பசுப் பாதுகாவலர்களால் தாக்கப்படுகின்றனர். மாஜிஸ்திரேட்டிடமிருந்து பெறப்படும் ஆவணங்கள் பசுப் பாதுகாவலர்களைத் திருப்திப்படுத்தும்” என்று கூறியிருக்கிறார்.

அதாவது, இவ்வளவு நாட்களாக இந்தியா முழுவதிலும் நடந்த பசுக்குண்டர்களின் வன்முறைக்கு முறையான ஆவணம் இல்லாததுதான் காரணம் என்பது போலவும், இப்போது ஆவணங்கள் இருந்தால் பசுக்குண்டர்கள் பிரச்சினை ஏதும் செய்யமாட்டார்கள் என்றும் கூறுகிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்த அமைச்சர்.

அரியானாவில் கடந்த 2017-ம் ஆண்டில் பசுக்களை தனது பால்பண்ணைக்கு வாங்கிக் கொண்டு வந்த முதியவர் பெஹ்லுகானை, அவரிடம் வாங்கி வந்ததற்கான ஆவணம் இருந்தும் அவரை அடித்தே கொன்றது.

இந்துத்துவக் கும்பலின் நோக்கம் பசுப் புனிதத்தை வைத்து நாட்டைக் கலவர பூமியாக்குவதுதானே ஒழிய, பசுவைப் பாதுகாப்பது அல்ல என்பது நன்கு தெரிந்துமே, மத்தியப் பிரதேசத்தின் காங்கிரசு அமைச்சர், பசுக் குண்டர்களை ஒன்றும் தெரியாத அப்பாவிகளாகவும் பசுப் பாதுகாவலர்களாகவும் சித்தரிக்கிறார்.

மத்தியப் பிரதேசத்தில் பதவியேற்று இரண்டே மாதத்தில் அதாவது கடந்த பிப்ரவரி மாதத்தில், பசுவைக் கொன்றதாகக் குற்றச்சாட்டப்பட்ட மூன்று முசுலீம்களை  “தேசியப் பாதுகாப்புச்சட்டத்தின்” கீழ் கைது செய்திருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசு.

கடந்த 2007 – முதல் 2016 வரையிலான பாஜக ஆட்சியின் போது பசுவதை தொடர்பான 22 வழக்குகளில் தேசிய பாதுகாப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டது.

இந்துத்துவ குண்டர்களால் தாக்கப்பட்ட பெஹ்லுகான்

மத்தியப் பிரதேசத்தின் கந்துவா பகுதியைச் சேர்ந்த நதீம் குரேஷி அவரது சகோதரர் ஷக்கீல் குரேஷி மற்றும் விவசாயி அசம் கான் ஆகியோர் மீது கடந்த பிப்ரவரி மாதம் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. அதன் பின்னர் மூன்று மாத சட்டப் போராட்டத்திற்குப் பின்னர், இந்த மூவரும் தே.பா.சட்டத்தை முறியடித்து வெளியே வந்தனர்.  ஆனால் அவர்கள் பசுவதைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர்.

“காங்கிரஸ் ஆட்சிக்குவந்ததும் எங்களுக்கு விடிவு காலம் என்று நினைத்தோம், ஆனால் அதேநிலைமைதான் நீடிக்கிறது” என்கிறார் நதீம் குரேஷி. குரேஷி சகோதரர்கள் முன்னாட்களில் கறி விற்பனையகம் நடத்தி வந்தனர். இவர்கள் வசிக்கும் பகுதியில், போலீசு அனுமதி பெற்ற கசாப்புக் கடைகளில் பசு மாட்டுக்கறிக்கான தேடுதல் வேட்டையை அவ்வப்போது நடத்தும்.

இத்தேடுதல்வேட்டை பயமுறுத்தக் கூடியதாக இருக்கும் என்கிறார் குரேஷி. “எங்கள் பகுதியான பஸ்தியை சுமார் 500 போலீசார் சுற்றி வளைத்திருப்பார்கள். உங்களால் கேள்விக் கூட கேட்கமுடியாது. ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் சுற்றி வளைத்திருப்பார்கள். இந்த அச்சுறுத்தல் காரணமாகவே நாங்கள் அத்தொழிலை விட்டுவிட்டு, எருமை மாடுகளை வாங்கி விற்கும் வேலையை செய்து வருகிறோம்” என்கிறார் குரேஷி.

கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி கந்துவா பகுதியின் மொகாட் போலீசு நிலையத்திலிருந்து வந்த போலீசார், நதீம் மற்றும் ஷக்கீல் குரேஷியைக் கைது செய்தனர். அருகில் உள்ள கர்களி கிராமத்திலுள்ள ஒரு நிலத்தில் நீளமான கத்தியும், இறந்த பசுவின் உடலும் இருந்ததை அடுத்து இவர்கள் இருவரையும் கைது செய்திருக்கிறது போலீசு. ஆனால் குரேஷி சகோதரர்கள் இருவரும் சம்பவம் நடந்த அன்று தாங்கள் கந்துவா பக்தியில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.

இவர்கள் மட்டுமல்லாமல், ஒரு விவசாயியையும் இதே வழக்கில் குற்றம்சாட்டி தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்திருக்கிறது, போலீசு.

ஆட்சிக்கு வந்ததும் இத்தோடு நிற்கவில்லை மத்தியப் பிரதேச காங்கிரசு அரசு. இரண்டாண்டுகளுக்கு முன்னர் பாஜக ஆட்சியில் பசுக்குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட பெஹ்லுகான் மீதும் அவரது இரண்டு மகன்கள் மீதும் தற்போது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது காங்கிரஸ் அரசு.

பெஹ்லுகான் கொலையில், கொலைக் குற்றம்சாட்டப்பட்ட கிரிமினல்கள் அனைவரும் ஆதாரமில்லை என்ற மோசடியாக காரணம் கூறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், பலியான பெஹ்லுகானின் மீதும் அவரது இருமகன்கள் மீதும் கால்நடைகளைக் கடத்தியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இரண்டாண்டுகள் பழமையான இந்த வழக்கில் அப்போதைய பாஜக அரசின் நிலைப்பாட்டை அப்படியே எடுத்துக் கொண்டு, குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறது காங்கிரஸ் அரசு. பசுக்களை இடம் மாற்றிக் கொண்டு செல்வதற்கான ஆவணம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை பசுவைக் கடத்துபவர்களாகச் சித்தரிக்கிறது, இந்த அரசு.

”பசுவை வெட்டுவதற்காக (கறிக்காக) யாராவது ரூ. 50,000 கொடுத்து பசுவை வாங்குவார்களா? நாங்கள் பசுவை வாங்கியதற்கான ரசீதைக் கையில் வைத்திருந்தோம். தற்போதைய (காங்கிரஸ்) அரசும் இவ்வாறு நடந்துகொள்வதைக் கண்டு எங்களது கடைசி நம்பிக்கையும் நாங்கள் இழந்துவிட்டோம்” என்கிறார் பெஹ்லுகானின் மகனான இர்ஷத் கான்.

தன்னை அழிக்கக் காத்திருக்கும், நயவஞ்சகக் காவிப் பாம்புகளை வாயில்லா ஜீவனாகச் சித்தரித்து பாலும், தேனும் வார்த்துக் கொடுக்கிறது காங்கிரஸ் கட்சி. இசுலாமியர்கள் மீது வெறுப்புணர்வைப் பரப்பி இந்துக்களை அணிதிரட்ட முயலும் இந்துத்துவக் கும்பலை அம்பலப்படுத்தாமல், அவர்களுக்கு வால்பிடித்துச் செல்கிறது காங்கிரசு. பசுப்புனிதத்தில் தான் பாஜக-வை விட ஒரு படிமேல் என்று காட்ட முயல்கிறது காங்கிரசுக் கட்சி.


நந்தன்

செய்தி ஆதாரம் :
♦ Madhya Pradesh cracks down on cow vigilantism, Cabinet approves amendment to anti-cow slaughter law
♦ Before crackdown on gau rakshaks, Congress government in MP charged cow slaughter-accused under NSA
♦ Congress Is a Silent Witness to Pehlu Khan’s Lynching