நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT), தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பணி நியமன மற்றும் உயர்கல்விக்கான இட ஒதுக்கீட்டு உரிமையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு முடிவு செய்துள்ளது.

டெல்லி ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.ராம் கோபால்ராவ்.

மத்திய கல்வி அமைச்சகம் ஐஐடி நிறுவனங்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக பேராசிரியர் வி.ராம் கோபால்ராவ் (இயக்குனர், ஐஐடி டெல்லி), அவர்கள் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழு,  ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் பணி நியமனங்களின்போது பின்பற்றப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டு நடைமுறையை முற்றிலும் ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளது.

உலகில் உள்ள மற்ற முன்னணி உயர்கல்வி நிறுவனங்களுக்கு இணையாக சீர்மிகு செயல்பாடு தேவைப்படுவதாகவும்,  உலகத்தரம் வாய்ந்த கல்வி, ஆய்வுப்பணிகள், ஆசிரியப்பணி ஆகியவற்றை சிறப்பாக நிறைவேற்ற  இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது பொருத்தமில்லாதது என்கிறது கோபால்ராவ் அறிக்கை.

மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு) சட்டம் 2019 பிரிவு 4-ன்படி இட ஒதுக்கீடு இல்லாத உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலில்,  ஐஐடி- ஐஐஎம் ஆகியவற்றையும் சேர்த்து, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டில் இருந்து ஐஐடி நிறுவனத்திற்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்று  இக்குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தக் கமிட்டி எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு எதிராக தனது பரிந்துரையை கொடுத்திருக்கிறது.

இப்பரிந்துரையின் அறிக்கையில், திட்டம் இரண்டில் பேராசிரியர் அடுக்கு ஒன்று மற்றும் அடுக்கு இரண்டு பதவிகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்கிறது.  தொடர்ந்து வரும் குறிப்புகளில் மிக தந்திரமாக உதவிப் பேராசிரியர்,  பேராசிரியர் பதவிகளுக்கு ஒதுக்கீட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், ஒரு ஆண்டுக்குள் இட ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவிகள் நிரப்பப்படவில்லை என்றால்,  நிரப்பப்படாத காலியிடங்களை அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்வது,  (carry forward of backlog vacancies) என்ற நடைமுறையை ஒழித்துக்கட்டும் நோக்கத்தோடும் இந்தப் பரிந்துரை உருவாக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய இடங்களை பொதுப் பட்டியலுக்கு மாற்றுவதற்கு தாழ்த்தப்பட்ட பழங்குடி இன தேசிய ஆணையத்தின் ஆலோசனையைப் பெற வேண்டும். சம்மந்தப்பட்ட  அமைச்சகங்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற இப்போது உள்ள நடைமுறைகளை அப்பட்டமாக நிராகரிக்கும் வகையில் இந்த பரிந்துரை அமைந்துள்ளது.

பரிந்துரையின் மூன்றாவது பிரிவு தாழ்த்தப்பட்ட பழங்குடி இன மாணவர்கள் முனைவர் பட்டப் படிப்புகளில் அதிக எண்ணிக்கையில் இடம் பெறுவதை உறுதி செய்வதாகக் கூறினாலும், அவர்கள் முனைவர் பட்டம் பெறுவதை தடை செய்யும் மறைமுக நோக்கத்தோடு இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் முனைவர் படிப்புக்கு விண்ணப்பிக்கும்போது அவர்களின்  தகுதியின் அடிப்படையிலேயே மதிப்பீடு செய்யும் தேர்வு இருக்குமாம்.

தகுதி – தகுதி என்று இவர்கள் ஓலமிடுவதன் நோக்கம்  ஏகலைவன் கட்டை விரலை காவு வாங்கிய கதைதான்.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வர்ணாசிரமக் கொடுமைகளை அரங்கேற்றி,  அடித்தள உழைக்கும் மக்கள் கல்வியை கற்க விடாமல் தடுத்து நிறுத்திய பார்ப்பனியம் மீண்டும் புதிய வடிவம் எடுக்கிறது. போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டு உரிமைகளைப் பறித்தெடுக்கிறது.

பார்ப்பன உயர்சாதியினர் தவிர மற்றவர்கள் எவரும் படிக்கக் கூடாது என்ற மனுநீதி கோட்பாட்டை,  மீண்டும் தகுதி, திறமை என்ற மாய்மால வார்த்தைகளின் பின்னே  மிகவும் தந்திரமாக அரங்கேற்றும் சதித் திட்டத்தை உள்ளடக்கியதுதான் இந்த பரிந்துரை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டிலுள்ள 23 ஐஐடி-களில் முனைவர் பட்ட ஆய்வுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 9.2% தாழ்த்தப்பட்ட மாணவர்கள், 2.1% மலைவாழ் இன மாணவர்கள்; இந்திய அரசியல் சட்டம் அளித்துள்ள குறைந்தபட்ச இட ஒதுக்கீட்டின் அளவை கூட இது எட்டவில்லை. கான்பூர் ஐஐடியில் அனுமதிக்கப்பட்ட மலைவாழ் மாணவர்கள் 0.5%, பார்ப்பனர்களின் கோட்டையான சென்னையில் 4% விழுக்காடு (ஆதாரம்: இந்திய கல்வி அமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் அனுப்பிய கடிதம்).

படிக்க :
♦ 7.5 சதவீத இட ஒதுக்கீடு : புண்ணுக்குப் புனுகாகிவிடக் கூடாது
♦ அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து

இந்திய உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்பாட்டில் வைத்து உள்ளவர்கள் யார்? பலன் அடைபவர்கள் யார்? என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகிறது.

உலகில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் சோதனை செய்து லண்டன் டைம்ஸ் ஏடு ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. 290-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், பல்லாயிரக்கணக்கான கல்லூரிகள், ஒரு கோடிக்கும் மேலான மாணவர்கள் உள்ளடக்கிய உயர் கல்வி அமைப்பு கொண்ட இந்திய நாட்டில்,  உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி தரவரிசையில் ஒரே ஒரு ஐஐடி நிறுவனம் மட்டுமே  இடம் பெற்றுள்ளது. இதைவிட வெட்கக்கேடு வேறு எதுவுமில்லை

“தகுதி – திறமை” என்று கொக்கரிக்கும் மெத்தப் படித்த  பார்ப்பன அறிவுஜீவிகள், கல்வித்தரத்தை வளர்த்த இலட்சணத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து விட்டது லண்டன் ஏடு வெளியிட்ட ஆய்வறிக்கை.

ஐஐடி நிறுவனத்தில் ஒரு தொழில்நுட்பவியலாளரை உருவாக்க மக்கள் வரிப்பணம் பல லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்யப்படுகிறது. நுழைவுத் தேர்வில் முதல் வரிசையில் தேர்ச்சி பெற்று ஐஐடி நிறுவனத்தில் சிறப்பாக பட்டம் பெற்று, அமெரிக்க விசா கிடைத்து, சுக போகங்களில் திளைக்க சொர்க்கபுரி செல்லும் வண்ணக் கனவுகளோடு “தகுதி – திறமை படைத்த அம்பிகள்” பறந்து விடுகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி குண்டர்களால் தற்கொலைக்குத் தூண்டப்பட்ட உயர்கல்வி மாணவன் ரோஹித் வெமுலா.

சமூகத்தின் விளிம்பில் உள்ள ஒடுக்கப்பட்ட  பிரிவைச் சேர்ந்த ஒரு மாணவன் உயர்கல்வி வாய்ப்பை பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல. அரசு நடத்துகின்ற அத்தனை போட்டி தேர்வுகளிலும் வெற்றி பெற்றால்தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்.

பல்வேறு தடைக்கற்களை தாண்டி உயர்கல்வியில் இடம்பிடிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சந்திக்கும் அவமானங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல, ஐஐடி நிறுவனங்களில் கோலோச்சி வருகின்ற பார்ப்பன உயர்ஜாதி கும்பல் காட்டுகின்ற பாகுபாட்டின் காரணமாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

நமது நாட்டில் உள்ள ஐஐடி நிறுவனங்களில் காட்டப்படும் பாகுபாட்டின் காரணமாக, தலித் மாணவர்கள் மீது வெறுப்பை உமிழும் பார்ப்பனக் கும்பலின் சாதி வெறியின் விளைவாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 27 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் சென்னை ஐஐடி முதலிடம் வகிக்கிறது. அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்து, வர்ணாசிரம வெறிபிடித்த சனாதான கும்பல் சென்னை ஐஐடியில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கொடூரமாக பழிவாங்கியது.

சக மனிதர்களும் நம்மைப்போல் மனிதர்களே, அவர்களும் நம்மைப் போல் செயல்திறனும் வாழ்க்கை வாய்ப்புகளையும் பெற வேண்டும் என்ற சனநாயக உணர்வை இன்றைய கல்வி உருவாக்கவில்லை.

நாடெங்கிலும் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில்,  இட ஒதுக்கீட்டு சமூகநீதிக்கு வேட்டு வைக்கும் இந்த பரிந்துரை, கார்ப்பரேட் நலன் காக்கும் இந்துத்துவப் பாசிச மோடி அரசின் மிகப்பெரிய சதித் திட்டமாகும்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட,  ஒடுக்கப்பட்ட மலைவாழ் மக்களின் குறைந்தபட்ச முன்னேற்றத்தைக் கூட சகிக்காமல் அவர்களது கல்வி -வேலைவாய்ப்பு உரிமைகளில் மிகப்பெரிய தாக்குதலை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசு தொடுத்துள்ளது.


இரணியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க