கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி, பட்டியல் சாதி (SC) மற்றும் பட்டியல் பழங்குடியின (ST) சமூகத்தினரை துணைப் பிரிவுகளாக (Sub-Classification) வகைப்படுத்தி, அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என 7 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. நீதிபதி பேலா எம்.திரிவேதி தவிர மற்ற ஆறு நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பாக, பட்டியல் சாதியினர் ஒரே மாதிரியான குழு (Homogenous) இல்லை. எனவே, பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினருக்குள் துணைப் பிரிவுகளை உருவாக்கி, உள் இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் கிடையாது என்றும், அதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் தீர்ப்பளித்தனர். மேலும், தீர்ப்பு வழங்கிய ஆறு நீதிபதிகளில் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், பங்கஜ் மித்தல், சுபாஷ் சந்திர சர்மா ஆகிய நான்கு பேர், எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் ‘‘கிரீமிலேயர்’‘ (Creamy Layer) நடைமுறையை அமல்படுத்துவது அவசியம் என்றும் பரிந்துரைத்தனர்.
ஆதரவும் எதிர்ப்பும்:
இத்தீர்ப்பின் மூலம், பல்வேறு மாநில அரசுகள் பட்டியில் சாதிகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் அருந்தததியிருக்கான மூன்று சதவிகித உள் இடஒதுக்கீட்டிற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தி.மு.க. அரசு இதை வரவேற்றுள்ளது. தமிழ்நாட்டைப் போலவே, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர மாநில அரசுகளும் இத்தீர்ப்பை வரவேற்றுள்ளன.
ஆனால், உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான், ஆசாத் சமாஜ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி என பெரும்பான்மையான தலித் கட்சி தலைவர்களும், இயக்கங்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தேசிய தலித் மற்றும் பழங்குடி அமைப்புகளின் கூட்டமைப்பு (NACDAOR) உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்தது. பட்டியிலின மற்றும் பழங்குடியின மக்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பறிக்கக் கூடிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஒன்றிய அரசு நிராகரிக்க வேண்டும்; பட்டியல், பழங்குடி மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு குறித்து புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. அதேசமயம், உள் இடஒதுக்கீடு கேட்டு போராடிவரும் தலித் அமைப்புகள் இத்தீர்ப்பை வரவேற்றுள்ளன.
படிக்க : தமிழ்நாட்டில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத பெண்களின் கருவறை நுழைவுக்கனவு – நனவாகுமா?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க., சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய கட்சிகள் இத்தீர்ப்பை வரவேற்றிருந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசிய வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன்,
‘‘உள் ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் மாநில அரசுகளுக்கான உள் ஒதுக்கீடு உரிமையும், கிரீமிலேயர் ஆகிய இரண்டும்தான் இங்கே மிக முக்கியமான பிரச்சனைக்குரியவை என்பதை நாம் உணர வேண்டும். தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு மூன்று சதவிகித உள் ஒதுக்கீடு வழங்குவதற்கும் ஆந்திராவில் வழங்கப்படும் உள் ஒதுக்கீட்டிற்கும் வேறுபாடுகள் உண்டு. தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு வழங்கப்படுவது sub quota அதாவது… பட்டியல் சமூக இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை. ஆனால் ஆந்திராவில் வழங்கப்படுவது sub class. இது பட்டியல் சமூகத்தை தனி அங்கமாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்குவது. எனவே பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையையே நசுக்கும் விதமாக இத்தீர்ப்பு அமைகிறது’‘ என்றார்.
மேலும், ‘‘பட்டியல் சமூகத்தினரைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து இடஒதுக்கீட்டைப் பங்கீடு செய்வதற்கு மாநில அரசுகளிடம் அதிகாரம் அளிப்பதையும்; வருமான வரம்பு அடிப்படையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு கிரீமிலேயர் முறையைத் திணிக்க முயல்வதையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு செய்வதற்கு இந்திய ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும். மாநில அரசுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் வழங்குவதைத்தான் கடுமையாக எதிர்க்கிறோம். சாதி இந்துகளின் அரசுதான் இந்தியா முழுவதும் பல்வேறும் மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இந்த அதிகாரத்தை கொண்டு உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் தலித் மக்கள் சிதறடிக்கப்படுவார்கள்’‘ என்றார். ஆனால், வி.சி.க-வின் இந்த நிலைப்பாட்டிற்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
நீண்ட மௌனத்திற்குப் பிறகு வாய்திறந்த காங்கிரசின் தேசியத் தலைமை, பட்டியல் வகுப்பின் துணைப்பிரிவு குறித்தான தீர்ப்பு தலித் சமூகத்திற்கு பெரும் பின்னடைவு என்றும், இடஒதுக்கீட்டை மெதுவாக முடிவுக்குக் கொண்டுவரும் பா.ஜ.க-வின் மறைமுக நோக்கத்தை இது காட்டுகிறது என்றும் விமர்சித்திருந்தது. ஆனால், கீரிமி லேயர் அடிப்படையில் மட்டுமே காங்கிரசு இந்த விமர்சனத்தை முன்வத்துள்ளது. இவ்வாறு நாடு முழுவதும், எதிர்க்கட்சிகளும், அமைப்புகளும், இயக்கங்களும் ஆளுக்கொரு நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அபாயம் என்ன?
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து முக்கியமான மூன்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவதாக, பட்டியல் சாதியினரை துணைப்பிரிவாக வகைப்படுத்துவது அவர்களை பிளவுபடுத்தி தலித் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் என்ற வாதம் பெரும்பான்மையான தலித் தலைவர்களால் முன்வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில், இந்த வாதத்தை பெரும்பான்மையான ஜனநாயக சக்திகள் மறுக்கின்றனர். ஏனெனில், தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்டுள்ள உள் இடஒதுக்கீடு என்பது தலித் மக்களிடையே மிகவும் பின்தங்கியுள்ள, மற்ற பட்டியல் சாதி பிரிவினாராலும் ஒடுக்குமுறைக்கு ஆளாகக் கூடிய அருந்ததியின மக்களுக்குதான் மூன்று சதவிகித இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இதனால், மற்ற பட்டியல் சாதி மக்களின் இடஒதுக்கீடு உரிமைக்கு எந்த பாதிப்பும் வராது, மேலும் அவர்கள் தனிப்பிரிவாக பிரிக்கப்படவில்லை. மேலும், 2009 முதல் கொடுக்கப்பட்ட இந்த உள் ஒதுக்கீடு (முன்னுரிமை அடிப்படையில்) அருந்ததியினர் சாதிகளைச் சேர்ந்த மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறிது முன்னேறுவதற்கு உதவி செய்துள்ளது என்று வாதங்களை முன்வைக்கின்றன.
ஆனால், தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்டுள்ள உள் இட ஒதுக்கீடும் மற்ற மாநிலங்களில் கொடுக்கப்படும் உள் இட ஒதுக்கீடும் வெவ்வேறானவை. பஞ்சாப் மற்றும் ஆந்திர மாநிலங்களில் கொடுக்கப்பட்ட உள் இட ஒதுக்கீடு என்பது பட்டியல் சாதிகளை பல்வேறு பிரிவுகளாகப் பிரிவாக பிரித்து அவர்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதத்தை ஒதுக்குகிறது. சான்றாக, ஆந்திராவில் (ஒன்றுபட்ட ஆந்திரா) சந்திரபாபு நாயுடு அரசு ‘‘மாதிகா’‘ சமூக மக்களின் கோரிக்கையை ஏற்று, பட்டியல் சாதிகளை ஏ, பி, சி, டி நான்கு துணைப் பிரிவுகளாக பிரித்து 1997-இல் இட ஒதுக்கீடு வழங்கியது.
இதை எதிர்த்து ஆந்திராவைச் சேர்ந்த ஈ.வி சின்னையா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 341-ன் கீழ் பட்டியலிடப்பட்ட சாதிகள் (SCs) ஒரே மாதிரியான குழு; அதனுள் துணைப் பிரிவுகளை வகைப்படுத்த முடியாது; பட்டியல் சாதியினரைத் துணை பிரிவுகளாக பிரிப்பதற்கான அதிகாரம் மாநில அரசுக்குக் கிடையாது என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டில்தான் தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
பஞ்சாப் அரசும் பட்டியல் சாதியான வால்மிகி மற்றும் மசாபி-யை துணைப்பிரிவாக வகைப்படுத்தித்தான் இட ஒதுக்கீடு வழங்கியது. இதேபோல ஹரியானா, மகாராஷ்டிர என பல மாநிலங்களில் கொண்டுவரப்பட்ட உள் இடஒதுக்கீடு என்பது பட்டியல் சாதிகளை பல்வேறு துணைப்பிரிவுகளாக பிரிக்கும் விதமாகவே உள்ளது. இத்தகைய உள் இடஒதுக்கீட்டின் மூலம் ஒரு பிரிவில் உள்ள பற்றாக்குறையை இன்னொரு பிரிவு பூர்த்தி செய்ய ஒருபோதும் முடியாது. ஒரு பிரிவுக்குக் கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் அதற்கு ஏற்றபடி பிரிவில் ஆட்கள் இல்லை என்றால், அந்தப் பணியிடமானது மற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் செல்லாமல் பொதுப் பிரிவுக்குச் செல்லும். இதனால், பட்டியல் சாதியினரின் பிரதிநிதித்துவம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
துணைப் பிரிவுகளாக பிரித்து உள் இட ஒதுக்கீடு கொடுப்பதன் மூலம் தாழ்த்தப்பட்ட சாதிகள் தனித்தனியாகப் பிரித்து வைக்கப்படுகின்றன. ஏற்கனவே பண்பாடு, வாழிடம், மொழி ஆகியவற்றால் பிரிந்துள்ள தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள், நிரந்தரமாகவே தாழ்த்தப்பட்ட பட்டியலில் உள்ள மற்ற சாதியினருக்கும் நமக்கும் சம்பந்தம் கிடையாது என்ற நிலைக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே பட்டியலின ஓர்மையை ஒழித்துக் கட்டுவதற்கான சதியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
இரண்டாவது, அரசியலமைப்பின் 341-வது பிரிவின் படி, குடியரசுத் தலைவருக்குதான் குறிப்பிட்ட சாதி, இனம், பழங்குடி மக்களை பட்டியிலின சாதியாக அறிவிக்கும் அதிகாரம் உள்ளது. மேலும், ஒரு குறிப்பிட்ட பிரிவைச் பட்டியலில் சேர்க்கவும், நீக்கவும் உரிமையுள்ளது. ஆனால், தற்போது மாநிலங்களுக்கு அவ்வதிகாரம் வழங்கப்படுள்ளதன் மூலம், மாநில அரசுகள் தங்கள் விருப்பம் போல் செயல்பட்டு, பட்டியலின மக்களைக் கூறு போடுவது, பட்டியலில் இருந்து ஒரு சாதியை வெளியேற்றுவது ஆகிய செயல்களைத் தன்னிச்சையாக செய்வதற்கு வழிவகுக்கும். ஓட்டுக்கட்சிகள் தங்களது தேர்தல் ஆதாயத்திற்காகவும், பட்டியல் சாதி மக்களை அணிதிரட்டுவதற்கும் துணைப்பிரிவை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்வர். சான்றாக, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கானவில் பிரச்சாரம் செய்த மோடி, மாதிகா சாதியினரின் துணைப்பிரிவு கோரிக்கை நிறைவேற்றப்படும் என பேசினார். இதனால், மாதிகா சாதியைச் சேர்ந்த அமைப்பு பா.ஜ.க-விற்கு வாக்களிப்பதாகக் கூறியிருந்தது.
தற்போது ஒன்றியத்தில் பா.ஜ.க கும்பல் ஆட்சியில் இருப்பதால் இவ்வதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டிருப்பது நல்லதுதானே என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், பட்டியல் சாதிகளைத் துண்டாடுவதற்கான வாய்ப்பை, பா.ஜ.க கும்பலுக்கு முன்பை விட எளிமைப் படுத்துவதாகவே இத்தீர்ப்பு உள்ளது. பா.ஜ.க ஆளுகின்ற மாநிலங்களில் பட்டியலின மக்களுக்கு உரிமைகளைக் கொடுக்கிறோம் என்ற பெயரில் அச்சாதிகளை பிரித்து வைத்து உள் இட ஒதுக்கீடு அளித்தால் என்ன ஆகும்? தாழ்த்தப்பட்ட மக்கள் என்ற ஒரு பதத்தையே ஒழித்துக் கட்டி, அவர்களுக்குள் மேலும் ஒவ்வொருவரும் தனிப்பிரிவுகள் என்று சிந்திக்க வைப்பதற்கான தொடக்கம் இது.
இறுதியாக, துணைப்பிரிவு குறித்து தீர்ப்பு வழங்கும்போது எஸ்.சி., எஸ்.டி பிரிவினரின் இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் முறையை அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளார்கள். இந்த வழக்கின் மையப் பொருளுக்குச் சம்பந்தம் இல்லாமல் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளனர். இது பரிந்துரைதான், அதனால் பாதிப்பில்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இதற்குப் பின்னால் பட்டியல் சாதி மக்களின் இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுவதற்கான நோக்கமே உள்ளது. இதற்கு முன்னரும் உச்ச நீதிமன்றம் பட்டியல் பிரிவினரின் இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையைத் திணிப்பதற்கு முயற்சித்துள்ளது.
இட ஒதுக்கீட்டிற்கு வருமான வரம்பு நிர்ணயிப்பதைத்தான் கிரிமீ லேயர் என்கிறார்கள். நமது நாட்டின் அரசியல் அமைப்பு படி, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவுமே பின்தங்கி இருக்கிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மண்டல் குழு பரிந்துரைகள் பற்றிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணை நடந்தபோது, பெரும்பான்மையான நீதிபதிகள் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் ‘கிரீமிலேயர்’ என்ற பொருளாதார அளவுகோல் வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர்.
இதனால், 1993-ஆம் ஆண்டு முதல் ஓ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. ஓ.பி.சி பிரிவினருக்கே கிரீமி லேயர் என்பது பொருந்தாது என்று ஏற்கனவே கூறப்பட்டுவரும் நிலையில், திட்டமிட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே உச்சநீதிமன்றம் இக்கருத்தைக் கூறியுள்ளது.
காவி கும்பலின் நிகழ்ச்சி நிரலுக்குத் துணைபுரியும் உச்ச நீதிமன்றம்:
ஒருபுறம், ‘மதரீதியாக இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது’ என்று சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்து வருகிறது காவி கும்பல். கடந்த ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமது வாக்குவங்கியை அதிகரிக்கும் நோக்கத்தில் எஸ்.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 15-லிருந்து 17 சதவிகிதமாகவும் எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை மூன்றிலிருந்து ஏழு சதவிகிதமாகவும் உயர்த்தியது பா.ஜ.க. அரசு. மேலும், முஸ்லிம்களுக்கு இருந்த நான்கு சதவிகித இடஒதுக்கீட்டை ரத்துசெய்த பா.ஜ.க, அதை லிங்காயத்துக்கள் மற்றும் ஒக்கலிகா சாதிகளைச் சார்ந்தவர்களுக்கு தலா இரண்டு சதவிகிதமாக பிரித்து வழங்கியது. இதன்மூலம் ஒரேநேரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியைக் கிளறிவிடுவதோடு, கர்நாடகத்தில் மிகப்பெரிய வாக்குவங்கியைக் கொண்டுள்ள லிங்காயத்துக்கள் மற்றும் ஒக்கலிகர்களை தன் பக்கம் திரட்ட முயற்சித்தது.
படிக்க : அமெரிக்காவில் போயிங் விமானத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!
தற்போது ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலத்தில் கணிசமான மக்கள் தொகை கொண்ட மாதிகா சாதியினருக்கு துணைப் பிரிவாக அங்கீகாரம் வழங்குவதாக பா.ஜ.க கூறுவதும், அம்மக்களை தனக்கான அடித்தளமாக மாற்றிக் கொள்வதற்குதான். இதன் மூலம், இதர பட்டியல் சாதியினரான மாலா போன்றோரிடம் வெறுப்பு அரசியலை மேற்கொள்ள முடியும்.
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலின் உண்மையான நோக்கம் இட ஒதுக்கீட்டை முழுமையாக ஒழித்துக் கட்டுவதுதான். 1990-ல் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட போது, இது ‘இந்துதேசத்தை பிளவுபடுத்தும்’ முயற்சி என்று கொதித்தது ஆர்.எஸ்.எஸ்,. மண்டல் கமிஷனுக்கு எதிராக வட மாநிலங்களை வன்முறைக் காடாக்கியது சங்கப்பரிவாரக் கும்பல். எந்த இட ஒதுக்கீடு இந்துதேசத்தை பிளவுபடுத்தும் என்று நஞ்சைக் கக்கியதோ, இன்று அதே இடஒதுக்கீட்டை இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது.
எனவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பு தற்செயலான நிகழ்வு அல்ல, இந்துராஷ்டிரக் கனவை அடைவதற்கு மத-சாதி பிளவுவாத அரசியலை மேற்கொண்டு வரும் காவி கும்பலின் நிகழ்ச்சி நிரலுக்குத் துணை புரிவதற்காகவே உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை அளித்துள்ளது என்று பார்க்க வேண்டியுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவு அருந்ததியருக்கே ஆபத்தானது!
பொதுவாக, இந்தியாவில் சுமார் 3,000 முதன்மை சாதிகளும் 25,000 துணைச் சாதிகளும் இருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பட்டியலினத்தோர் என 72 சாதிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் ஆதி திராவிடர் – பறையர், தேவேந்திரர்-பள்ளர், அருந்ததியர் என்னும் மூன்று பெரும் பிரிவுகளுக்குள் அடங்குவர். இவர்களில், அருந்ததியர் பிரிவுக்குள் ஏழு சாதிகள் உள்ளனர். 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கீட்டின் அடிப்படையில், இந்த ஏழு சாதிகளுக்கும் சேர்த்து மூன்று சதவிகித உள் இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. பிற பட்டியலினத்தோருக்கு அதாவது, சுமார் 65 சாதிகளுக்கும் சேர்த்து 15 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளது.
தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் அருந்ததியருக்கு மூன்று சதவிகித உள் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பலரும் வரவேற்கின்றனர். ஆனால், உச்ச நீதிமன்றக் கருத்தின்படி பார்த்தால், அருந்ததியர் பிரிவுக்குள்ளேயே இட ஒதுக்கீட்டின் பலனை ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு சாதியினர் தான் அதிகமாக அனுபவித்து வருவோராக இருப்பர்; அப்பிரிவில் உள்ள ஏழு சாதிகளையும் பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு அடிப்படையில் வகைப்படுத்தினால் சிலர் ஏ மற்றும் பி பிரிவிலும், பலர் டி பிரிவிலும் வருவர். இவ்வாறு வகைப்படுத்தி உள் இட ஒதுக்கீடு வழங்குவதாக இருந்தால், பறையர் – பள்ளர் ஆகிய சாதிகளில் உள்ளவர்களை ஒட்டுமொத்தமாக ஏ பிரிவில் வைக்க நேரிடும். அவ்வாறு செய்தால், பெருந்தொகையான – இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்திராத ஏழைகளையும், இட ஒதுக்கீட்டின் நன்மைகளை அனுபவித்தவர்களுடன் சேர்த்தே பாதிக்கும் வகையிலானதாக அமையும். இது கிரீமி லேயர் கோட்பாட்டை விட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு, இதுநாள் வரை ஒருகுறிப்பிட்ட பெரும்பிரிவின் கீழ் தங்களை அணிதிரட்டி வந்த இவர்களை நான்கைந்து குழுக்களாக கூறுபோடுவதாகவும் மாறிவிடும். இத்தகைய அபாயத்தைத்தான் வி.சி.க உள்ளிட்ட பலரும் முன்வைக்கிறார்கள்.
இது மட்டுமின்றி, சமூக – பொருளாதாரக் கணக்கெடுப்புகள், சாதிவாரிக் கணக்கெடுப்புகள் ஏதுமின்றி திடுமென இத்தகைய நடைமுறையைப் பின்பற்றச் சொல்லி உத்தரவிடுவதன் நோக்கத்தைப் பலரும் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். இதேபோலத்தான் இட ஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில், எந்த வகையான ஆய்வுமின்றி பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய சாதியினருக்கான(EWS) 10 சதவிகித இட ஒதுக்கீடு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக இதுபோன்ற வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதன் மூலம் படிப்படியாக இட ஒதுக்கீட்டை இல்லாதொழிப்பதையே சங்கப்பரவாரக் கும்பல் இலக்காக வைத்துள்ளது. அதற்குத் துணைபுரியும் வகையிலேயே உச்ச நீதிமன்றத்தின் துணை வகைப்பாடு – உள் இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பு அமைந்துள்ளது என்பதே நமது குற்றச்சாட்டு.
சர்வரோக நிவாரணியா இட ஒதுக்கீடு?
பட்டியல் – பழங்குடிகளாக இருந்தாலும் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அவர்கள் எல்லாம் ஒரே தகுதி கொண்டவர்கள் அல்ல என்கிறது உச்சநீதிமன்றம். இது குறித்த பருண்மையான ஆய்வுகளின் மூலம் துணை வகைப்படுத்தலைச் செய்து, உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிறது. இதன் மூலம் பின்தங்கிய மக்களை முன்னேற்றும் கருவியாக இட ஒதுக்கீட்டை முன்னிறுத்த முடியுமென நினைக்கின்றனர் நீதிபதிகள்.
இன்னொருபுறத்தில், இட ஒதுக்கீட்டின் மூலம் ஒரு தலைமுறையச் சேர்ந்தவர் அரசு அதிகாரியாகவோ, பணக்காரராகவோ மாறுவதால் அவரது பொருளாதார நிலைமையில்தான் மாற்றம் ஏற்படுகிறதே ஒழிய, சாதிய நிலைமையில் அல்ல என்கின்றனர் கிரீமி லேயர் எதிர்ப்பாளர்கள்.
ஆனால், மேற்சொன்ன பிரிவினரது பிள்ளைகளும், இன்னும் இட ஒதுக்கீட்டை அனுபவிக்காத ஏழைகளின் பிள்ளைகளும் எப்படி ஒரே மாதிரியான போட்டியில் ஈடுபட முடியும்? எத்தனை தலைமுறைக்கு இட ஒதுக்கீடு கொடுத்தாலும் சாதிய நிலைமையில் மாற்றம் வந்துவிடுமா? சாதியின் காரணமாகவே, தன் சாதியிலேயே கீழ்நிலையில் உள்ளவர்களின் வாய்ப்புகளைப் பறிக்கிறார்களே இது நியாயமா? இதுவரை வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு என்ன தீர்வு? முன்னேறிய சாதிகளில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு எல்லாம் இட ஒதுக்கீடு வழங்கும் போது எங்களுக்கு என்ன நீதி? எனவே இட ஒதுக்கீட்டால் அடைந்துள்ள பொருளாதார முன்னேறத்தையும் கணக்கில் கொள்வது அவசியம் என்ற கருத்தை பிற்படுத்தப்பட்டவர்கள் முதல் பட்டியலினத்தவர்கள் வரையிலும் சிலர் முன்வைக்கிறார்கள்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது இவையெல்லாம் நியாயமானவை என்றே தோன்றும். ஏனெனில், ஒவ்வொரு தரப்புக்கும் பொருந்தக் கூடிய நியாயங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால், இந்த வாதங்கள் எல்லாம், இட ஒதுக்கீட்டை வேலை வாய்ப்புக்கான தீர்வாகவும், சாதி ஒழிப்புக்கான வழிமுறைகளில் ஒன்றாகவும், சமூக சமத்துவத்தைக் கொண்டு வரும் கருவியாகவும் கருதிக் கொள்வது என்ற அடிப்படைகளில் இருந்து எழுபவையே.
ஆனால், சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பை உறுதிசெய்வது இட ஒதுக்கீட்டின் நோக்கம் அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதிய அடிப்படையில் ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்கள் பிரிவினருக்கு, ஏற்கெனெவே இருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட அளவுக்கு சலுகை கொடுக்கவே இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. சாதிய ஆதிக்கத்தின் விளைவாக சமூகத்தில் நிலவும் குமுறல்களுக்கு தற்காலிக மருந்து; பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடி மக்களில் கணிசமானோரை முன்னுக்குக் கொண்டு வருதல் என்ற வகையில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமே இட ஒதுக்கீடு.
பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தளமும் களமும் எவை?
இட ஒதுக்கீட்டின் மூலமாக, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடி மக்கள் அனைவருக்குமான கல்வி – வேலைவாய்ப்பு எக்காலத்திலும் உருவாகாது. அவற்றை உருவாக்க வேண்டியது அரசின் கடமை. மக்கள் நல அரசு, ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டாலும் அனைவருக்குமான கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்குவதில் அரசுகளுக்கு எந்தவித அக்கறையும் இருந்ததில்லை. கல்வி உள்ளிட்ட அனைத்தும் கார்ப்பரேட்மயமாவதும், தொழில்கள் – பொதுத்துறைகளை நடத்துவதில் இருந்து அரசு விலகிக் கொள்வதுமான மறுகாலனியாக்கக் காலகட்டம் இது. அரசு உயர்கல்வி நிறுவனங்களை எல்லாம் தன்னாட்சி மயமாக்கி, கார்ப்பரேட்டுகள் வசம் ஒப்படைக்கும் திசையில் அரசின் திட்டங்கள் போடப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட்டுகளின் தேவைக்கேற்பவே தொழிற்துறை வேலைவாய்ப்பு என்றாகிவிட்ட நிலையில், அரசு ஊழியர்கள், அதிகாரிகளைக் கூட ஒப்பந்த முறையில் நியமித்துக் கொள்ளத் தொடங்கி விட்டன அரசுகள். இந்தச் சூழலில், இட ஒதுக்கீடு என்பதே பொருளற்றதாகி வருகிறது. இதையும் படிப்படியாக ஒழித்துக் கட்டும் நோக்கில் தான் 10 சதவிகித EWS ஒதுக்கீடு, பட்டியல் – பழங்குடிகளை துணை வகைப்படுத்தி உள் இட ஒதுக்கீடு என அடுத்தடுத்து காய் நகர்த்துகிறது ஒன்றிய அரசு.
படிக்க : லெபனான், காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம் | புகைப்படக் கட்டுரை
மாறிய இன்றைய சூழலுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு சாதியிலும், பிரிவிலும் உள்ள சிலருக்கு மட்டும் சலுகைகள் கிடைக்கின்றன, வேலைவாய்ப்பு கிடைக்கிறது என மற்ற அனைவரும் அங்கலாய்த்துக் கொள்வதால் என்ன பயன்? அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்ற இலக்கை நோக்கி நமது ஒன்றுபட்ட போராட்டங்களைக் கட்டியமைக்கா விட்டால் எதிர்கால சந்ததிக்கு நாம் விட்டுச்செல்ல என்ன மிச்சமிருக்கப் போகிறது? எதிரிகள் நமது ஒற்றுமையை, போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் எதையும், எந்த வகையான இனிப்பைத் தடவிக் கொடுத்தாலும் அதை இனங்கண்டு முறியடிப்பது அவசியம். இருக்கும் உரிமைகளைக் காக்கும் போராட்டமும், சமத்துவ சமூகத்தை உருவாக்குவதற்கான போராட்டமும் இணைந்தே பயணிக்க வேண்டும். வர்க்கப்போராட்டத்திற்கு மாற்று இட ஒதுக்கீடு என்று பேசிய காலங்கள் மலையேறி விட்டன; இட ஒதுக்கீட்டைக் காக்கவும் கூட வர்க்கங்களாக இணைந்து போராடிய வேண்டிய காலமே இது…
மதி
மாவீர்ர் மருதுவால் பொரும்பான்மை தலித் சாதி வெறி கட்சியான விசிகவின் ஊதுகுழலாக மாறியுள்ள மக இக. வெளங்கும்… விரைவில் விளக்கமாறாக மாறப் போகும் புரட்சி மார்க்சியம்.🤦🏽🤦🏽