சாதிய படிநிலையை அமல்படுத்தும் ஹைதராபாத் பல்கலைக்கழகம்!

பட்டியல் சாதி விண்ணப்பதாரர்களின் சராசரி நுழைவுத் தேர்வு மதிப்பெண் 30.2 ஆக இருந்தது. ஆனால், அவர்களின் நேர்காணல் மதிப்பெண்களின் சராசரியோ வெறும் 12 மட்டுமே.

0

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு (பிஎச்டி) சேர்க்கையின் போது சாதி அடிப்படையில் நேர்காணல் மதிப்பெண்கள் வழங்கப்படுவதாக அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு (Ambedkar Students’ Association) குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அவ்வமைப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் துறை வாரியாகப் பெற்ற பி.எச்.டி விண்ணப்பதாரர்களின் நேர்காணல் மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் விவரங்களின் அடிப்படையில் இவ்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கணினி அறிவியல், உயிர்வேதியியல், இயற்பியல், தாவர அறிவியல், மின்னணுவியல், பயன்பாட்டுக் கணிதம் மற்றும் நுண்ணுயிரியல் ஆகிய ஏழு துறைகளில் சாதி அடிப்படையில் நேர்காணல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

‘உயர் சாதியினர்’ நுழைவதற்காக இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பட்டியல் சாதிகள் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் திட்டமிட்டே வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.

படிக்க : காஷ்மீரைப் பற்றி பேசாதே : மிரட்டும் திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் !

மாணவர்களின் நேர்காணல் மதிப்பெண்கள் சாதிப் படிநிலையின் அடிப்படையில் அமைந்துள்ளதாக அவ்வறிக்கை அதிர்ச்சியூட்டும் தகவல்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, கணினி அறிவியல் துறையில் முதல் ஐந்து ‘உயர் சாதி’ மாணவர்கள் பெற்ற சராசரி நுழைவுத் தேர்வு மதிப்பெண் 41.4; அதில் அவர்களின் நேர்காணல் மதிப்பெண்களின் சராசரி 24.6. ஆனால், சராசரி நுழைவுத் தேர்வு மதிப்பெண் 40 பெற்றிருந்த ஓ.பி.சி விண்ணப்பதாரர்களுக்கு, சராசரி நேர்காணல் மதிப்பெண்ணாக 17.2‌ என்ற குறைந்த மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

இதேபோல, பட்டியல் சாதி விண்ணப்பதாரர்களின் சராசரி நுழைவுத் தேர்வு மதிப்பெண் 30.2 ஆக இருந்தது. ஆனால், அவர்களின் நேர்காணல் மதிப்பெண்களின் சராசரியோ வெறும் 12 மட்டுமே. பட்டியல் பழங்குடியின விண்ணப்பதாரர்களின் சராசரி நுழைவுத் தேர்வு மதிப்பெண் 25.4; சராசரி நேர்காணல் மதிப்பெண் வெறும் 6.6 மட்டுமே. கணினி அறிவியல் துறை மட்டுமல்ல, மேலே குறிப்பிடப்பட்டிருந்த மற்ற ஆறு துறைகளிலும் இதே நிலைதான்.

மேற்குறிப்பிட்ட ஏழு துறைகளில் பொதுப் பிரிவின் கீழ்வரும் 28 பி.எச்.டி இடங்களில் 27 இடங்கள் ‘உயர் சாதி’ மாணவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன. ஒப்பீட்டளவில் பார்க்கும்போது, மீதமுள்ள துறைகளில், 79 இடங்களில் 45 இடங்கள் மட்டுமே ‘உயர் சாதி’ மாணவர்களால் நிரப்பப்பட்டுள்ளன.

மேலும், “இது சமூக நீதிக் கொள்கையை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும். இடஒதுக்கீட்டின் கீழ் வரும் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் குறைந்தபட்ச பங்கேற்பை உறுதி செய்வதற்காக நேர்மறையாக இடஒதுக்கீட்டு கொள்கையானது கொண்டுவரப்பட்டது. ஆனால், பல்கலைக்கழகமோ இடஒதுக்கீட்டின் கீழ் வரும் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களை அந்த குறைந்தபட்ச அளவோடு மட்டும் நிறுத்திக் கொள்ள எதிர்மறையாகப் பயன்படுத்துகிறது” என்று அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பின் அறிக்கை கூறுகிறது.

இந்த ஏழு துறைகளைத் தவிர, வேறு துறைகளிலும் தீவிர சாதிய பாகுபாடுகள் காட்டப்பட்டுள்ளதற்கான சில எடுத்துக்காட்டுகள் உள்ளன. மெட்டீரியல் இன்ஜினியரிங் (Material Engineering) துறையில் பி.எச்.டி நேர்காணலுக்குத் தோன்றிய நான்கு பட்டியல் சாதிப் பிரிவு மாணவர்களுக்கு 30-க்கு வெறும் 0.3, 1.9, 2.1 மற்றும் 8.4 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதே‌ துறையில், எழுத்துத் தேர்வில் 41.25 மதிப்பெண் பெற்ற ஓ.பி.சி மாணவருக்கு நேர்காணலில் வெறும் 2.4 மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

படிக்க : மோடி குறித்த பிபிசி ஆவணப்படம்: திரையிட்ட மாணவர்களை ஒடுக்கும் டெல்லி பல்கலை!

இடஒதுக்கீடு பெறும் பிரிவுகளைச் சேர்ந்த ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் பொதுப் பிரிவில் பி.எச்.டி இடங்களை பெறாமல் தடுப்பதற்காகவே பல்கலைக்கழகம் நேர்காணல் மதிப்பெண்களை குறைத்து வழங்குவதாக அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகிறது. மேலும், இந்த ஏழு துறைகளில் காட்டப்படும் அதீத சாதிய பாகுபாடுகளை விசாரிக்க ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரதிநிதிகளையும் மாணவர் அமைப்பு பிரதிநிதியையும் கொண்டு ஒரு குழுவை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

பார்ப்பன பாசிஸ்டுகளின் ஆணைக்கிணங்க அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த ரோஹித் வெமுலாவை கொலை செய்த பல்கலைக்கழகம் தான் ஹைதராபாத் பல்கலைக்கழகம். அங்கு தொடர்ந்து சாதிய பாகுபாடுகள் காட்டப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் மீது சாதிய பாகுபாடுகள் காட்டப்படுவது என்பதோடு, தற்போது ‘உயர் சாதி’ அல்லாத மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பு இடங்களை பெறுவதற்கே தடையை ஏற்படுத்துகிறது பல்கலைக்கழக நிர்வாகம்.

மனு (அ)நீதி போதிக்கும் சாதிய படிநிலைகளை அப்படியே அமல்படுத்தப்படுகிறது. பாசிச மோடி ஆட்சியின் கீழ், ஹைதராபாத் பல்கலைக்கழகம் உட்பட மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் இப்போக்கு அதிகரித்து வருகிறது.

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க