முஸ்லீம் மக்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழித்துகட்ட துடிக்கும் பாசிச பாஜக!

“மிஷின் சவுத்” என்ற திட்டத்தை முன்வைத்து தென்மாநிலங்களில் தீவிரமாக வேலை செய்துவரும் பா.ஜ.க, தற்போது மேற்கொண்டிருக்கும் முக்கியமான நகர்வு இது.

ர்நாடக மாநிலத்தில் வரும் மே 10-ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக பா.ஜ.க., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் அரசியல் ரீதியான செல்வாக்குமிக்கவர்களாக பார்க்கப்படும் லிங்காயத்து மற்றும் ஒக்கலிகா சமூகத்தினரின் ஓட்டுகளை கவர்வதற்காக இம்மூன்று கட்சிகளும் முனைப்புக் காட்டி வருகின்றன.

இதற்கிடையே கா்நாடகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லீம்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து, முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு கடந்த மார்ச் 24-இல் ஆணை பிறப்பித்தது. இந்த 4 சதவீத இடஒதுக்கீடு, ஒக்கலிகா, லிங்காயத்து சமூகத்தினருக்கு கூடுதல் இடஒதுக்கீடாக பிரித்து வழங்கப்படும் என்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான பிரிவில் முஸ்லீம்கள் இடஒதுக்கீடு பெறலாம் என்றும் மாநில அரசு அறிவித்தது.

கா்நாடகாவில் மே 10-இல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட அரசின் இந்த நடவடிக்கை பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. இந்த குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ், “தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்குவோம்” என்று வாக்குறுதி அளித்தது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியோ, “தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர் ஒருவரே முதல்வராக அமர்த்தப்படுவார்” எனக் கூறியது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட பா.ஜ.க., இந்த கட்சிகள் லிங்காயத்து மற்றும் ஒக்கலிகா சமூகத்தினருக்கு எதிராக இருப்பதாக கூறியது.

படிக்க : கர்நாடகா: பள்ளி வகுப்பறைகளில் காவி நிறம் அடிக்கும் பாஜக அரசு!

இதனையடுத்து, ஏப்ரல் 25 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டிற்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முஸ்லீம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது சரியான நடவடிக்கை என்று பேசினார்.

“கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத அடிப்படையில் முஸ்லீம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. வாக்கு வங்கி அரசியலுக்கு இடம் கொடுக்காமல், முஸ்லீம்களின் இடஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு ரத்து செய்துள்ளது. மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எப்போதும் ஏற்க முடியாது” என்றார்.

மேலும், “முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ததன் மூலம் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், ஒக்கலிகர், லிங்காயத்து சமூகங்களுக்குக்கான இடஒதுக்கீட்டு அளவை பா.ஜ.க அரசு உயர்த்தியுள்ளது” என்று கூறினார்.

இதற்கிடையே, முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யபட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மே 9 வரை கர்நாடக மாநில அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, மே 9 ஆம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தனர்.

கர்நாடகாவில் மட்டுமல்லாமல் இதே யுக்தியை தெலுங்கானவிலும் பயன்படுத்தியது பா.ஜ.க. சமீபத்தில், இந்தாண்டு இறுதியில் சட்டபேரவை தேர்தலை சந்திக்கவுள்ள  தெலுங்கானாவில் அமித்ஷா உரையாற்றியபோது,  “இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு சட்டவிரோதமானது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும்” என்று நேரடியாகவே கூறினார்.

தேர்தல் நேரத்தில் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்தால் ஏதாவது பின்விளைவுகள் ஏற்படுமோ என்ற எந்தவித அச்சமுமின்றி முஸ்லீம்களுக்கு எதிரான இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது பா.ஜ.க.  இதனை, தேர்தல் பிரச்சாரம் குறித்து பா.ஜ.க தலைவர் ஈஸ்வரப்பா பேசுகையில், “சாலை, குடிநீர்,வடிகால் போன்ற வளர்ச்சி திட்டங்கள் குறித்துப் பேச வேண்டாம். இந்து – முஸ்லீம் பிரச்சனை குறித்தும், இந்து தர்மம் குறித்தும் பேசி தேர்தலை சந்திப்போம். இஸ்லாமியர்களிடமிருந்து ஒரு ஓட்டு கூட நமக்கு தேவையில்லை” என்று பேசியதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

படிக்க : கர்நாடக சட்டசபையில் சாவர்க்கர் படம் திறப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

ஆனால், இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ததன் மூலம் பகிரங்கமாக முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கையை பா.ஜ.க மேற்கொண்டிருப்பது ஏதோ வடமாநிலங்களில் அல்ல. கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களில்.

“மிஷின் சவுத்” என்ற திட்டத்தை முன்வைத்து தென்மாநிலங்களில் தீவிரமாக வேலை செய்துவரும் பா.ஜ.க, தற்போது மேற்கொண்டிருக்கும் முக்கியமான நகர்வு இது. தென்மாநிலங்களிலும் முஸ்லீம்களை தனிமைப்படுத்தும் வேலையில் பா.ஜ.க இறங்கியுள்ளது. முஸ்லீம் இடஒதுக்கீட்டை ரத்து செய்வதன்மூலம் முஸ்லீம் அல்லாதவர்களிடையே தனக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் வாக்குகளை அறுவடை செய்துகொள்வதற்கும் இந்த கீழ்த்தரமான யுக்தியை காவிக்கும்பல் கையாள்கிறது.

தூய்ஷன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க