ர்நாடகாவின் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான அரசாங்கத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நாகேஷ், மாநிலத்தில் 7,500-க்கும் மேற்பட்ட புதிய வகுப்பறைகளுக்கு காவி வண்ணம் பூசப்படும் என்று கூறியுள்ளார்.

நவம்பர் 13 அன்று மாநிலத்தின் கடக் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நாகேஷ், ‘விவேகா’ திட்டத்தின் கீழ் கட்டப்படும் புதிய வகுப்பறைகளில் காவி வண்ணம் பூசப்படும் என்று கூறினார். காவி நிறம் கட்டிடக் கலைஞர்களால் பரிந்துரைக்கப்பட்டதாகவும், எந்த சித்தாந்தத்திற்கும் பொருந்தாது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், சுவாமி விவேகானந்தரின் பெயரிடப்பட்ட விவேகா திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 7,601 புதிய வகுப்பறைகள் கட்டவும், பழைய மற்றும் செயலிழந்த வகுப்பறைகளை மாற்றவும் மாநில அரசு இலக்கு வைத்துள்ளது. குழந்தைகள் தினத்தன்று (நவம்பர் 14) முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, கலபுர்கி மாவட்டம் மடியாலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிக்கல் நாட்டி இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

காவி நிறம் தொடர்பான பிரச்சினை குறித்து பொம்மையிடம் கேட்டபோது, ​​“காவி நிறம் வைத்திருப்பதில் என்ன தவறு? தேசிய கொடியின் மூவர்ணத்தில் காவி நிறம் இருக்கிறது. சுவாமி விவேகானந்தரே காவி அங்கி அணிந்திருந்தார்”என்று கூறியுள்ளார்.

படிக்க : கர்நாடகா: பள்ளி பாடத்திட்டத்தில் சாவர்க்கரை திணிக்கும் சங் பரிவார்!

மேலும், “பள்ளிகளுக்கு சுவாமி விவேகானந்தரின் பெயரைச் சூட்டுவது அவரிடமிருந்து உத்வேகத்தைப் பெறவும், பள்ளிகளில் நல்ல சூழ்நிலையை உருவாக்கவும் உதவும். விவேகா என்ற சொல் அனைவருக்கும் அறிவு என்று பொருள். அவர்கள் கற்றுக்கொள்ளட்டும்” என்று அவர் கூறினார்.

இந்த நடவடிக்கைக்கு கல்வி ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரியங்க் கார்கே, “மாநில பள்ளிகளில் மோசமான உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் உயர்கல்வியில் அதிகரிக்கும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதங்கள் போன்ற பிற பிரச்சினைகள் இருக்கும்போது பி.ஜே.பி அரசாங்கம் காவி நிறத்தில் கவனம் செலுத்துகிறது” என கேள்வி எழுப்பினார்.

சமீபகாலமாக கல்வியில் ‘காவிமயமாக்கல்’புகுத்தி வருகிறது கர்நாடக பாஜக அரசு. இதற்குமுன்பு கூட பள்ளி பாடநூல்களில் காவி சாயம் பூசியது. கடந்த மே மாதம், 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடப்புத்தகங்கள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான கன்னட மொழி பாடப்புத்தகங்கள் ஆகியவற்றில் மாநில-அரசாங்கக் குழுவால் பல்வேறு திருத்தங்கள் போடப்பட்டது.

அதன் விளைவாக ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி மாவீரன் பகத்சிங், மைசூர் மன்னன் திப்பு சுல்தான், லிங்காயத் சமூக சீர்திருத்தவாதி பசவண்ணா, திராவிட இயக்க முன்னோடியும் பகுத்தறிவாளருமான தந்தை பெரியார் மற்றும் சீர்திருத்தவாதி நாராயண குரு ஆகியோரின் வரலாற்றை கூறும் அத்தியாயங்கள் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டது. ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின்(ஆர்.எஸ்.எஸ்) நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் ஆற்றிய உரை 10 ஆம் வகுப்பு திருத்தப்பட்ட கன்னட பாடப்புத்தகத்தில் காவிக்கும்பலால் திணிக்கப்பட்டது.

வகுப்பறைக்கு காவி நிறம் அடிப்பது முதல் பாடத்திட்டத்தில் காவி தலைவர்களின் வரலாற்றை திணித்து, உண்மையான போராளிகள், பகுத்தறிவாளர்கள், சமூக சீர்த்திருத்தவாதிகளின் வரலாற்றை அகற்றுவது வரை, கர்நாடக மாநில கல்வியில் காவிமயமாக்களை தீவிரமாக அரங்கேற்றி வருகிறது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க உள்ளிட்ட சங் பரிவார கும்பல்.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க