சரிந்துவரும் மோடியின் பிம்பத்தைத் தூக்கி நிறுத்தவே மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு!

மகளிர் இட ஒதுக்கீடு மூலம் தங்களுடைய அரசியல் நோக்கத்திற்காக பெண்களின் வாக்குவங்கியைப் பயன்படுத்திக் கொள்வதைத் தவிர, பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் என்ற சிந்தனையெல்லாம் பா.ஜ.க. கும்பலுக்கு துளியும் கிடையாது.

மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு:
சரிந்துவரும் மோடியின் பிம்பத்தைத் தூக்கி நிறுத்துவதற்கான துருப்புச் சீட்டு!

நாரி ஷக்தி வந்தன் அதினியம்” (பெண் சக்திக்கு வணக்கம்) என்று பெயரிடப்பட்டுள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் பெருவாரியான (ஓவைசியின் இரண்டு மக்களவை உறுப்பினர்களைத் தவிர) ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டம் என எல்லா இடங்களிலும் மகளிர் இட ஒதுக்கீட்டை பற்றிதான் பேசுகிறார், மோடி. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதை வைத்து எதிர்க்கட்சிகளை விமர்சித்தும் மோடியை பாராட்டியும் ஆரவாரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள், காவிகள்.

“காங்கிரசும் இந்தியா கூட்டணி கட்சிகளும் கட்டாயத்தின் பேரிலே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு வாக்களித்திருப்பதாகவும், மத்தியில் ஆட்சி புரியும் வாய்ப்பை அவர்களுக்கு அளித்தீர்கள் என்றால் மீண்டும் மசோதாவை கிடப்பில் போட்டுவிடுவார்கள்” என்றும் காங்கிரசையும் இந்தியா கூட்டணிக் கட்சிகளையும் இழிவுப்படுத்தி போபாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார், மோடி.

மறுபுறம், மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த முடியாத வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தியும், தற்போது மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதற்கான காரணம் மோடி – அமித்ஷா கும்பலின் “தோல்விபயம்”, “தேர்தல் துருப்புச் சீட்டு” ஆகியவை தான் என்று விமர்சித்தும் எதிர்க்கட்சிகள் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த மறுப்பது ஏன்?

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தொகுதி மறுவரையறைக்குப் பிறகு தான் அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மசோதாவில், “…அரசமைப்பு (128-வது திருத்தம்) சட்டம் 2023-க்கு பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிடைக்கும் புள்ளிவிவரங்களுக்குப் பிறகு, எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு நடைமுறைக்கு வரும்” என்று குறிப்பிட்டுள்ளது, மோடி அரசு.

மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் குரலெழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமித்ஷா, “எந்த இடங்களை ஒதுக்குவது என்பதை யார் முடிவு செய்வார்கள்? அதை நாங்கள் (அரசாங்கம்) செய்ய வேண்டுமா? மகளிருக்கு, வயநாடு தொகுதி ஒதுக்கப்பட்டாலோ அல்லது ஒவைசியின் ஹைதராபாத் ஒதுக்கப்பட்டாலோ, அரசியல் உள்நோக்கத்துடன் இது நடந்ததாக நீங்கள் புகார் கூறுவீர்கள். எனவே, இப்பணியை தொகுதி மறுவரையறை ஆணையத்திடம் ஒப்படைப்பதே சரியாக இருக்கும்” என திமிர்த்தனமாக பேசினார்.


படிக்க: பாசிஸ்டுகளின் துருப்புச் சீட்டாகும் இடஒதுக்கீடு: சங்கப்பரிவாரங்களும் தம்பிமார்களும்!


மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தினால் எதிர்க்கட்சிகளிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இருக்காது. மோடியின் பிம்பத்தை தூக்கி நிறுத்துவதற்கான பிரச்சாரங்களை இன்னும் தீவிரமாக மேற்கொள்ள முடியும். இருப்பினும், மோடி அரசு ஏன் அதனை செய்ய மறுக்கிறது?

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்தினால் வருகின்ற மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் மகளிருக்கான தொகுதிகளை புதியதாக ஒதுக்கவேண்டிய நிலைமை ஏற்படும். சான்றாக, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், மக்களவை தேர்தலில் 181 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இத்தொகுதிகள் மொத்த தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு என்பதால் அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

எந்தெந்தத் தொகுதிகளை மகளிருக்கான தொகுதிகள் என்று ஒதுக்கீடு செய்தால், பெரும்பான்மையான தொகுதிகளில் தங்களால் வெற்றி பெற முடியும் என்ற முடிவுக்கு மோடி-அமித்ஷா கும்பல் இன்னும் வரவில்லை. எனவே, மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தினால் அது தமக்கே எதிராகத் திரும்பிவிடும் என இக்கும்பல் அஞ்சுகிறது.

தொகுதி மறுவரையறைக்கு பிறகு, மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் மோடி – அமித்ஷா கும்பலுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனென்றால், தொகுதி மறுவரையறையே பெரும்பான்மையாக மகளிருக்காக ஒதுக்கப்படும் தொகுதிகளில் பா.ஜ.க. கும்பல் வெற்றி பெறும் வகையில் தான் செய்யப்படும். அண்மையில், அசாம் மாநிலத்தில் மோடி அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையம் பெரும்பான்மையான தொகுதிகளில் பா.ஜ.க கும்பல் வெற்றி பெறும் வகையில் தொகுதிகளை மறுவரையறை செய்துள்ளதே அதற்கு சான்றாகும்.

தற்போது, நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகள் தங்களுக்கு சாதகமான வகையில் மறுவரையறை செய்யப்பட்டு இருந்தால், மகளிர் இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்தி இருக்கும் மோடி- அமித்ஷா கும்பல். அதற்கு வாய்ப்பில்லை என்பதால்தான் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியும் அதனை அமல்படுத்தாமல் உள்ளது.

மகளிர் இட ஒதுக்கீடுபாசிஸ்டுகளின் துருப்புச் சீட்டு!

மகளிர் இட ஒதுக்கீடு மூலம் தங்களுடைய அரசியல் நோக்கத்திற்காக பெண்களின் வாக்குவங்கியைப் பயன்படுத்திக் கொள்வதைத் தவிர, பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் என்ற சிந்தனையெல்லாம் பா.ஜ.க. கும்பலுக்கு துளியும் கிடையாது. தொகுதி மறுவரையறைக்குப் பிறகு மகளிருக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டாலும் இட ஒதுக்கீட்டின் மூலம் பா.ஜ.க. கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள், எந்த உரிமைகளுமற்ற அதிகாரமற்ற ‘தலையாட்டி பொம்மைகளாகத்’ தான் இருக்க முடியும்.

பெண்ணடிமைத்தனத்தையும் பெண்கள் மீதான ஆணாதிக்கத்தையும், ஒடுக்குமுறையையும் கோட்பாடுகளாக கொண்ட பார்ப்பனிய சித்தாந்தத்தின் வழி நடக்கும் பா.ஜ.க. கும்பலிடம் இதைத்தவிர வேறெதையும் நாம் எதிர்பார்க்க முடியாது. நாடாளுமன்றத்தின் புதிய கட்டட திறப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்காமல் இழிவுப்படுத்தியதுதான் பெண்களை இக்கும்பல் நடத்தும் வழிமுறையாகும். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தின் இன்னொரு சாட்சியமாகும்.


படிக்க: முஸ்லீம் மக்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழித்துகட்ட துடிக்கும் பாசிச பாஜக!


கர்நாடக தேர்தல் தோல்வி, மணிப்பூர் கலவரம், சி.ஏ.ஜி அறிக்கை போன்றவற்றால் சரிந்துவரும் மோடியின் பிம்பத்தை தூக்கி நிறுத்துவதற்கு, 27 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மோடி அரசு தூசி தட்டி எடுத்துள்ளது. அவசர அவசரமாக சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டி, என்ன நிகழ்ச்சிநிரலுக்காக நாடாளுமன்றம் கூட்டப்பட்டது என்றே சொல்லாமல், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மட்டும் நிறைவேற்றியுள்ளது.

வருகின்ற ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஓட்டு வாங்குவதற்காக மேற்கொள்ளும் சந்திரயான் -3, ஜி20 மாநாடு வரிசையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் ஒரு துருப்புச் சீட்டாகத்தான் பார்க்கிறது, மோடி-அமித்ஷா கும்பல்!


அமீர்

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க