பாசிஸ்டுகளின் துருப்புச் சீட்டாகும் இடஒதுக்கீடு: சங்கப்பரிவாரங்களும் தம்பிமார்களும்!

பார்ப்பன-உயர்சாதி மேலாதிக்கத்திற்கு எங்கே பங்கம்வந்துவிடுமோ என்று ஒருகாலத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க, இன்று சமூகநீதி வேடம்போடுகிறது.

பெரும்பான்மை மக்களிடம் சிறுபான்மையினராக உள்ள ஒருதரப்பு மக்களை, அவர்களின் எதிரிகளாகக் காட்டுவதும், மொழி, இனம், மதம், பண்பாடு என பலவகைகளிலும் அச்சிறுபான்மை சமூகத்தினரை ‘அந்நியர்களாக’ச் சித்தரித்து பெரும்பான்மை மக்களிடம் வெறுப்புணர்வை உருவாக்குவதும் பாசிஸ்டுகளின் பொது வழிமுறையாகும்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் முன்வைக்கும் இந்துதேசியமும் சரி, சீமான் கும்பல் முன்வைக்கும் ‘தமிழ்தேசிய’மும் சரி, ஒருதரப்பு மக்களை எதிரிகளாகக் காட்டி கட்டமைக்கப்படும் பாசிச அரசியலே. தமது பாசிச அரசியலைக் கட்டமைக்க அவர்கள் பல்வேறு விவகாரங்களை, தமது அரசியல் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றில், இடஒதுக்கீடு இன்று முக்கியமானதாக மாறியிருக்கிறது.

1990-ல் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டபோது, இது ‘இந்துதேசத்தை பிளவுபடுத்தும்’ முயற்சி என்று கொதித்தது ஆர்.எஸ்.எஸ். மண்டல் கமிஷனுக்கு எதிராக வடமாநிலங்களை வன்முறைக்காடாக்கியது சங்கப்பரிவாரக் கும்பல். எந்த இடஒதுக்கீடு இந்துதேசத்தை பிளவுபடுத்தும் என்று நஞ்சைக் கக்கியதோ, இன்று அதே இடஒதுக்கீட்டை இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்கு தமது அரசியல் கருவியாக பயன்படுத்திக்கொள்ள விழைகிறது பாசிசக் கும்பல்.

இன்னொருபக்கம், தமிழினத்தின் ஒற்றுமைக்கு பெருந்தடையாக உள்ள சாதியை ஒழிப்பது பற்றி பேசாமல், சாதி அடையாளத்தை பெருமிதமாகக் கருத வேண்டும் என்கிற சீமான், ‘தமிழனை ஒன்றிணைப்பதற்கும்’ ‘வந்தேறிகளுக்கு எதிராக போர் புரியவும்’ இடஒதுக்கீட்டை கையிலெடுத்துள்ளார்.

சங்கிகளின் மதவெறி துருப்புச் சீட்டு!

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தமது வாக்குவங்கியை அதிகரிக்கும் நோக்கத்தில் எஸ்.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 15-லிருந்து 17 சதவிகிதமாகவும் எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 3-லிருந்து 7 சதவிகிதமாகவும் உயர்த்தியிருக்கிறது பா.ஜ.க. அரசு. மேலும், முஸ்லிம்களுக்கு இருந்த 4 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்துசெய்த பா.ஜ.க, அதை லிங்காயத்துக்கள் மற்றும் ஒக்கலிகா சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு தலா 2 சதவிகிதமாக பிரித்து வழங்கியுள்ளது.

இதன்மூலம் ஒரேநேரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியைக் கிளறிவிடுதோடு, கர்நாடகத்தில் மிகப்பெரிய வாக்குவங்கியைக் கொண்டுள்ள லிங்காயத்துக்கள் மற்றும் ஒக்கலிகர் சமூகத்தை தன் பக்கம் திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது பா.ஜ.க.


படிக்க: முஸ்லீம் மக்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழித்துகட்ட துடிக்கும் பாசிச பாஜக!


முஸ்லிம்களின் 4 சதவிகித இடஒதுக்கீடு ரத்துசெய்யப்பட்டதை கர்நாடக காங்கிரஸ் எதிர்த்துள்ளது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் 4 சதவிகித இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளார் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார்.

சாமராஜ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் டி.கே.சிவக்குமாரின் அறிவிப்பை சுட்டிக்காட்டி பேசிய அமித்ஷா, “அப்படியானால் யாருடைய இடஒதுக்கீட்டைக் குறைத்து முஸ்லிம்களுக்கு 4 சதவிகித இடஒதுக்கீட்டைத் தருவீர்கள்? லிங்காயத்துகள், ஒக்கலிகர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டு அளவைக் குறைப்பீர்களா” என மத மோதலைத் தூண்டும்வகையில் கேள்வியெழுப்பியுள்ளார்.

கர்நாடகாவில் கையாண்ட இதே உத்தியை பா.ஜ.க பிற மாநிலங்களுக்கு விரிவுபடுத்தும் திட்டத்தில் உள்ளது. அமித்ஷா தெலுங்கானாவில் தான் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், “கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும், அரசின் சமூக நலத்திட்டங்களிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. இதுபோன்ற இரட்டைச் சலுகைகளை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்யும்” என்று அறிவித்துள்ளார்.

கடந்த ஜனவரியில், காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில், ஆர்.எஸ்.எஸ்-ன் பழங்குடி அமைப்பான ஜன்ஜாதி சுரக்‌ஷா மஞ்ச் மிகப்பெரிய வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தது. நாராயண்பூர் மாவட்டத்தில், 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிறித்தவ மதத்திற்கு மாறிய பழங்குடிகளுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல்களில் 400-க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். “தாய்மதத்திற்கு திரும்ப வேண்டும் அல்லது வசிப்பிடத்தைவிட்டு வெளியேற வேண்டும்” என்பது வன்முறையில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் குண்டர் அமைப்பின் முழக்கம். மதம்மாறிய பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டும் என்பதும் அக்கும்பலின் முக்கிய பிரச்சாரமாக உள்ளது.

சங்கப்பரிவார அமைப்புகளுள் ஒன்றான விஷ்வ ஹிந்து பரிஷத், மதம் மாறிய எஸ்.சி, எஸ்.டி.க்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டுமென பல பிரச்சார இயக்கங்களை நடத்தியுள்ளது. அண்மையில்கூட, கடந்த மார்ச் 4-5 தேதிகளில் உத்தரப்பிரதேசத்தில், “இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய எஸ்.சி.க்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமா?” என்ற தலைப்பில் ஒரு மாநாட்டை நடத்தியுள்ளது.

பார்ப்பன-உயர்சாதி மேலாதிக்கத்திற்கு எங்கே பங்கம்வந்துவிடுமோ என்று ஒருகாலத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க, இன்று சமூகநீதி வேடம்போடுகிறது. ஆனால், வாக்குவங்கி அரசியலுக்காகக்கூட பா.ஜ.க. அறிவித்துள்ள இடஒதுக்கீட்டு பலன்கள் அம்மக்களை சென்றடையப் போவதில்லை. “எல்லாம் தனியார்மயம்” என்ற தாரக மந்திரத்தை உயிர்மூச்சாக அமல்படுத்திவரும் மோடி ஆட்சியில், அரசு வேலைவாய்ப்புக்கு எங்கே போய் நிற்பது? கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அரைகுறையாக அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த இடஒதுக்கீட்டுக்கும் குழிபறிப்பதற்கு உயர்சாதி ஏழைகளுக்கான (EWS) 10 சதவிகித இடஒதுக்கீடு என்ற அம்பை எய்துள்ளது பாசிசக் கும்பல். இதன்மூலம் மீண்டும் இந்திய சமூகத்தில் பார்ப்பன மேலாதிக்கம் முற்றுமுழுதாக நிலைநாட்டப்பட இருக்கிறது.

இவை எதுகுறித்தும் நாம் சிந்திக்கமுடியாதபடி மதவெறியை நம் மண்டைக்குள் திணித்துவருகிறது பாசிசக் கும்பல்.

தம்பிகளின் இனவெறி துருப்புச் சீட்டு!

உசிலம்பட்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய சீமான், தமிழ்நாட்டில் மட்டும்தான் கர்நாடகம், ஆந்திரா, கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்படுவதாகவும், ஆனால் அந்த மாநிலங்களில் வாழக்கூடிய தமிழர்களுக்கு அம்மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்குவதில்லை என்று பொருள்படும்படியும் பேசியிருந்தார்.

“நான் இங்கிருக்கிற ரெட்டியாருக்குக் கொடுப்பேன். தெலுங்குச் செட்டியாருக்குக் கொடுப்பேன். கன்னடச் செட்டியாருக்குக் கொடுப்பேன். நாயுடுக்கு கொடுப்பேன். ஆனால், ஆந்திராவுக்குப் போவேன். கர்நாடகாவுக்குப் போவேன். இங்கிருக்கிற கன்னடர்களுக்கு நான் இவ்வளவு கொடுத்திருக்கேன். இங்க ஒன்னேகால் கோடி என் தமிழன் இருக்கான். அவனை நீ ஓ.பி.சி.ல வச்சிருக்க. out of backward (அவுட் ஆஃப் பேக்வேர்ட் கிளாஸ்)ன்னு வச்சிருக்க. அதில்லாம நாங்க இடஒதுக்கீடு கொடுப்பத போல கொடு என்பேன்” என்று தனது உரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Other backward class (அதர் பேக்வேர்ட் கிளாஸ்) என்பதை out of backward caste (அவுட் ஆஃப் பேக்வேர்ட் கிளாஸ்) என்று சீமான் குறிப்பிட்டிருப்பதன் மூலம், அவருக்கு இடஒதுக்கீடு பற்றிய அடிப்படை அறிவே இல்லையென்பதை வெளிப்படுத்தியுள்ளார் என்றும், சீமானை உட்காரவைத்து ஓ.பி.சி (OBC) என்றால் other backward class என்று எழுதப் பயிற்றுவிக்க வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் பலரும் வருத்தெடுத்துவிட்டனர்.


படிக்க: அருந்ததியர் மக்களை வந்தேறி என்ற சீமான் | மக்கள் அதிகாரம் கண்டனம்


யூடர்ன் போன்ற சில வலைதளங்களை நடத்துவோர், பிற மாநிலங்களில் வாழும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்ற சீமானின் கூற்று அடிப்படையிலேயே பொய் என்பதை அம்பலப்படுத்தினர். எந்தெந்த சாதிப்பட்டியலில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்ற ஆதாரங்களையும் வெளியிட்டனர். மேலும் ஓ.பி.சி இடஒதுக்கீட்டுப் பிரிவானது ஒன்றிய அரசின் வகைப்படுத்தல் எனவும், மாநிலங்களின் இடஒதுக்கீட்டு வகைப்பாட்டின் கீழ் வருவதில்லை எனவும் அம்பலப்படுத்தியிருந்தனர்.

எப்படி இருந்தபோதிலும் சீமானின் பேச்சு, “தற்குறித்தனமாக உளருகிறார்” என்று நையாண்டி செய்து கடந்துசெல்லப்பட்டதே தவிர, சீமான் கையிலெடுத்துள்ள அபாயகரமான அரசியலைப் பற்றி எந்த ஒரு பொதுவிவாதமும் நடத்தப்படவில்லை.

சீமான் ஏதோ ஒன்றும் தெரியாமல் உளரவில்லை. கர்நாடகத்திலோ, ஆந்திரத்திலோ தமிழை பூர்விகமாகக் கொண்டவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்பது சீமானுக்கு தெரியாததல்ல. out of backward (அவுட் ஆஃப் பேக்வேர்ட் கிளாஸ்) என்ற சொல்லாடலை சீமான் தெரிந்து உதிர்த்திருந்தாலும் சரி, தெரியாமல் தற்குறித்தனமாகவே கூறினாலும் சரி, அதற்கு பின் ஒரு கேடான நோக்கம் உள்ளது.

கன்னடம், தெலுங்கு, மலையாளம் பேசும் சாதிகளுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதால்தான் இங்குள்ள ‘தமிழ்க் குடிகளுக்கு’ (சாதிகளுக்கு) வாய்ப்பு பறிக்கப்படுகிறது. ஆனால், நமது ‘தமிழ்க் குடிகளுக்கு’ அந்த மாநிலங்களில் இடஒதுக்கீடு கொடுக்கப்படுவதில்லை என்று இனவெறியைத் தூண்டிவிடுவதுதான் சீமான் உரையின் நோக்கம்.

இனவெறியைத் தூண்டிவிடுவதற்கு கூட சீமானால் எப்படி இவ்வளவு பெரிய அண்டப் புளுகுகளை அவிழ்த்துவிட முடிகிறது என்று சிலருக்கு கேள்வி எழலாம். தனது உரைக்கு கைதட்டி விசிலடிக்கும் கூட்டத்திற்கு நாம் சொல்வதைக் கண்மூடித்தனமாக நம்பும் அளவிற்குதான் ‘பொது அறிவு’ உள்ளது என்ற நம்பிக்கையே அவ்வாறு பேசுவதற்கு சீமானுக்கு தைரியம் கொடுத்தது. ஆனால், கேட்பவர்கள் தனது தம்பிமார்கள் மட்டுமில்லை என்பதை மறந்துபோனதுதான் சீமான் செய்த பிழை.

ஆகவே இடஒதுக்கீடு பற்றிய சீமானின் பேச்சை ஏதோ உளறலாகப் புரிந்துகொள்ளக்கூடாது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், அருந்ததியர்கள் விஜயநகரப் பேரரசு காலத்தில் தமிழ்நாட்டில் தூய்மைப் பணி செய்வதற்காக கொண்டுவரப்பட்ட ‘வந்தேறிகள்’ என்று பேசியது ஜனநாயக சக்திகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மக்கள் அதிகாரம் உள்ளிட்டு பல்வேறு அமைப்பினர் சார்பில் சீமானது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தபட்டது. ஆதித்தமிழர் பேரவை சார்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

அதன் பிறகும் அருந்ததியர் மக்களுக்கு எதிரான இனவெறி பிரச்சாரத்தை சீமானது தம்பிமார்கள் தொடர்ந்தார்கள். ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், பத்திரிகையாளர் சந்திப்பில் ஒன்றில் பேசிய சீமான் தெலுங்குக் குடியான அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கொடுத்ததால் ஆதித் தமிழ்க் குடிகளின் இடஒதுக்கீடு பறிபோனதாகப் பேசினார்.

“ஏற்கெனவே போராடித்தான் ஆதித்தமிழ்க் குடிகள் 18 சதவிகிதம் இடஒதுக்கீடு வைத்திருக்கிறோம். அதில் 3 சதவிகிதம் உள் இடஒதுக்கீடாக அருந்ததியினருக்கு ஏன் கொடுத்தீங்க? தனி இடஒதுக்கீட்டை உருவாக்கித் தர வேண்டியதுதானே. முழுவதும் வஞ்சகம், துரோகம், ஏமாற்று” என்று பேசினார்.

அருந்ததியின மக்களுக்கு எதிராக பிற ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூக மக்களைத் தூண்டிவிடுவது, இதன்மூலம் சாதியக் கலவரங்கள் மூண்டெழுந்தால், அதை ‘இன உரிமைப் போராக’ சித்தரித்து அதில் தனது தலைமையை நிறுவ முயற்சிப்பது ஆகியவைதான் சீமானின் சதித்திட்டம்.

சாதிகளையே, தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட சாதிகள், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளைப் பூர்வீகமாகக் கொண்ட சாதிகள் என இரண்டாகப் பிரித்து, தன்னை தமிழ் சாதிகளுக்கான பிரதிநிதியாகவும், தி.மு.க. மற்றும் திராவிட அமைப்புகளை பிற மொழியைப் பூர்விகமாகக் கொண்ட சாதிகளின் பிரதிநிதியாகவும் காட்டி அரசியல் செய்வதுதான் சீமானின் ‘குடிதேசிய அரசியல்’. இந்த மொழிவழி சாதிவெறி அரசியலைத்தான் ‘தமிழ்த்தேசிய அரசியல்’ என்று அழைத்துக் கொள்கின்றனர் சீமானின் தம்பிமார்கள்.

இதனால்தான், தமிழ்பேசும் வன்னியர்கள், கவுண்டர்கள், தேவர் ஆகிய ஆதிக்க சாதிவெறியர்கள் பறையர், பள்ளர் போன்ற தமிழ்பேசும் ஒடுக்கப்பட்ட சாதிகளைத் தாக்கும்போதெல்லாம் அண்ணன் பெரிதாக சவுண்டுவிடுவதில்லை; அதேநேரம் நாயுடு ஆதிக்க சாதிவெறியர்களால், பறையர் சமூக மக்களுக்கு கோவில்நுழைவு மறுக்கப்படும் காந்தாரியம்மன் கோவில் பிரச்சினையை இன உரிமைப் போராக மடைமாற்றத் துடிப்பார்கள்.

Out of backward (அவுட் ஆஃப் பேக்வேர்ட் கிளாஸ்) என்று சீமான் தன் தம்பிகளுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்த அதே கூட்டத்தில் தேவர் சாதியைச் சார்ந்த ஒரு தம்பி, வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பிய போது, “அதைப் பற்றி கேட்கக் கூடாது. உனக்கு 20.5 சதவிகிதம் வேணும்னு கேளு அண்ண உனக்காக வந்து நிக்குறேன்” என்று பேசினார். வன்னியருக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் தவறில்லை. ஆனால், அருந்ததியினர்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான் சீமானின் ‘தமிழ்த்தேசிய அரசியல்’.

ஆண்ட பெருமைபேசும் தமிழ்ச் சாதிகள் ஐக்கியப்படும்போது, சீமான் தான் கூறும் தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்க முடியும். அந்த பொன் நாளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் தம்பிமார்கள்.


பால்ராஜ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க