இந்துராஷ்டிர தர்பார்!

நடப்பது நாடாளுமன்ற ஜனநாயகமல்ல, இந்துராஷ்டிர தர்பார். பேரரசரைப் புகழ்ந்து பாடுபவர்களுக்கும் இரந்துண்டு வாழ்பவர்களுக்கும் மட்டுமே இங்கு அனுமதி.

புதிய நாடாளுமன்றத்திற்கான கட்டட திறப்பு விழாவின் போது இந்தியாவின் ஜனாதிபதி அழைக்கப்படாதது; பிரதமருக்கு செங்கோல் வழங்கப்பட்டது; புதிய கட்டடத்தின் வளாகத்தில் புராணச் சின்னங்கள் வைக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட பார்ப்பனிய சனாதன தர்மத்தின்படி கடைப்பிடிக்கப்பட்ட நடவடிக்கைகள் அப்போதே அம்பலப்படுத்தப்பட்டன.

பல ஆயிரம் கோடி மக்கள் பணத்தில் ஆடம்பரமாக கட்டப்பட்ட புதிய கட்டடம் திறக்கப்பட்ட பின்னரும், சென்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடக்காமல், பழைய கட்டடத்திலேயே நடத்தி முடிக்கப்பட்டது. புதிய கட்டடத்தில் எப்போதிருந்து கூட்டங்கள் நடக்கத் தொடங்கும் என்பதையும் மோடி கும்பல் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், ஆகஸ்டு 31-ஆம் தேதி, எதிர்க்கட்சிகளின் “இந்தியா”கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நடக்கும் வேளையில், அதனை திசைத்திருப்பும் வகையில், திடீரென நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சிநிரல் அறிவிக்கப்படவில்லை.

பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படுமா, ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவரப்படுமா என ஊகங்களை ஊடக விவாதங்களுக்கு இழுத்துவிட்டதன் மூலம், தன்னைச் சுற்றி விவாதங்களை அமைத்துக் கொண்டது பாசிச மோடி-அமித்ஷா கும்பல்.


படிக்க: நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்: சிலந்திவலைகள் எச்சரிக்கை!


பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படாமை, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், வேலையின்மை, மோடி அரசின் 7.5 இலட்சம் கோடி ரூபாய் ஊழல் குறித்த சி.ஏ.ஜி. அறிக்கை, மணிப்பூர் கலவரம், சீனாவின் ஊடுருவல் என பல்வேறு பிரச்சினைகள் குறித்து எந்தக் கருத்தும் சொல்லாத பாசிச மோடி அரசு, தனது திட்டங்கள், நடவடிக்கைகளை மட்டும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. ஆனால், மேற்கண்ட மக்கள் பிரச்சினைகள் எவை குறித்தும் இந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரிலும் விவாதிக்கத் தயாராக இல்லை.

மாறாக, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே கருத்து சொல்லும் நிலைக்கு எதிர்க்கட்சிகள் தள்ளப்பட்ட சோகம்தான் நடந்தேறியது.

திடீரென அறிவிக்கப்பட்ட இந்த சிறப்புக் கூட்டத்தொடர் விநாயகர் சதுர்த்தி என்ற பார்ப்பன ‘நன்நாளில்’ தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சி நிரல் இந்தியில் மட்டும் கொடுத்திருந்ததைப் பார்த்து, திருச்சி சிவா, ஆத்திரத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்த நிகழ்ச்சிநிரல் பிரசுரத்தை அங்கேயே கிழித்துப் போட்டார்.

நாடாளுமன்றத்தின் இந்த சிறப்புக் கூட்டத்தொடரின் முதல்நாள் அவைத்தலைவரும் தலைமைச் செயலாளரும் (செக்ரட்டரி ஜெனரல்) வராத நிலையில், மோடி வந்ததும் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அதன் பின்னர், இருவரும் அவைக்குள் வந்த பின்னர் மீண்டும் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது.

அதாவது, பார்ப்பன தர்மப்படி, முதலில் தொடங்கியதுதான் கூட்டத்தின் தொடக்கமாகக் கொள்ளப்படும் என்பதால், அவைத்தலைவரும், தலைமைச் செயலாளரும் இல்லாமல் புதிய கட்டடத்தின் முதல் கூட்டம் தொடங்கியிருக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டங்களில் பேசும் போது, இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாறு குறித்துப் பேசாமல், இசுலாமியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த வரலாறு என்பதைக் குறிக்கும் வகையில் பேசி, எதிர்க்கட்சிகளை சாட்சியாக வைத்துக் கொண்டே மோடியும் பா.ஜ.க.வினரும் வரலாற்றை அப்பட்டமாக திரித்தனர். எதிர்க்கட்சிகளோ ஆங்கிலேயரிடம் இருந்து ‘விடுதலைப்’ பெற்ற கதைகளைக் கூறி விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

முதல் நாள் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் கூட்டத்தை நடத்தி, அதனை மூடுவதை அறிவித்தார்கள். இதில் எதிர்க்கட்சிகள் எல்லாம் கலந்து கொண்டு கருத்துகளைக் கூறினர். அடுத்த நாள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கூட்டத்தைத் தொடங்கினார்கள்.

இக்கூட்டத்தொடருக்கான அறிவிப்பின்போது, இது சிறப்புக் கூட்டத்தொடர் என்று அறிவித்தனர். நாடாளுமன்றத்திலோ, இது வழக்கமான கூட்டத்தொடர்தான் என்று அமைச்சர் கூறினார். இவ்வாறெல்லாம் விளக்கமளிப்பதற்கு விதிமுறைகள் இடமளிக்கின்றனவா என்பதைப் பற்றியெல்லாம் துளியும் கவலைப்படவில்லை.


படிக்க: சரிந்துவரும் மோடியின் பிம்பத்தைத் தூக்கி நிறுத்தவே மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு!


பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் இருந்து வெளியேறும் போது எம்.பி.க்களின் குழு புகைப்படம் (குரூப் ஃபோட்டோ) நிகழ்ச்சியை அறிவித்தனர். கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே, இவ்வாறு செய்வது மரபு மீறிய செயல் மட்டுமல்ல, நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை இழக்கச் செய்வதாகும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விமர்சித்தனர்.

அத்துடன் புதிய கட்டடத்தில் நுழையும் போது எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் சாசனம் நூல் ஒன்று வழங்கப்பட்டது. அந்த நூலின் முகப்புரையில், “சோசலிசம்”, “மதசார்பின்மை” போன்ற வார்த்தைகள் நீக்கப்பட்டிருந்தன. இப்படி அரசியல் சாசனத்தில் தாங்கள் விரும்பிய வகையில் திருத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியடைந்தனர்.

மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை அறிமுகப் படுத்தியதன் மூலம், பெண் உரிமைகளுக்காக பா.ஜ.க.தான் முன்முயற்சி எடுத்தது போன்ற தோற்றத்தை பா.ஜ.க.வினர் உருவாக்கினர். இதனால், எதிர்க்கட்சிகள் இந்த விசயத்தில் பா.ஜ.க.விற்கு முன்னரே தங்களது கட்சியினரும் மகளிருக்கு உரிமைகளை வழங்குவதில் முன்னோடிகளாக இருந்தோம் என்று தங்களது நிலையை விளக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். விவாதம் முழுவதும் இதனைச் சுற்றியே அமைந்தது. பா.ஜ.க.வின் 7.5 லட்சம் கோடி ரூபாய்  ஊழல் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை.

ஆனால், நிகழ்ச்சிநிரலில் அறிவித்தபடி பா.ஜ.க. நாடாளுமன்றத்தில் அறிவித்த தேர்தல் கமிசன் ஆணையர்களை நியமிக்கும் சட்ட மசோதா 2023 தாக்கல் செய்யப்படாமலேயே நான்காவது நாளில் கூட்டத்தை நிறைவு செய்வதாக கடைசி நேரத்தில் அறிவித்தனர். கூட்டத்திற்கான நேரம், நிகழ்ச்சி நிரலை அவர்களுக்கு ஏற்றபடி மாற்றிக்கொண்டே இருந்தனர். எந்த நிகழ்ச்சியும் உரிய வகையில் விவாதிக்கப்படவில்லை.

வழக்கமாக இரவு 7 மணியுடன் முடிக்க வேண்டிய கூட்டத்தை இரவு வரை தொடர்வது என, நான்காவது நாள் அன்று, சில மணி நேரங்களுக்கு முன்னதாக அறிவித்து கூட்டத்தை இரவு 11.30 மணி வரை நடத்தினர். இவ்வாறு தங்கள் விருப்பம் போல நேரம் எடுத்துக் கொண்டு, சந்திரயான் குறித்து புராணக் கதைகளுடன் இணைத்துப் பேசுவது, மோடியைப் புகழ்ந்து கொண்டே இருப்பது என நாடாளுமன்றத்தை பஜனைக் கூடமாக மாற்றிவிட்டனர்.

ஆளும் கட்சியின் ரமேஷ் பிதூரி, பி.எஸ்.பி.யைச் சேர்ந்த டேனிஸ் அலியை, “மாமா பயல்”, “சுன்னத் செய்தவனே”, “பயங்கரவாதி”, பயங்கரவாதி”, “முசுலீம் பயங்கரவாதி” என்று கூச்சலிட்டு கத்தினான். இதனைக் கேட்டு அதிர்ச்சியுற்ற எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பல நிமிடங்கள் அவனைக் கண்டித்து குரல் எழுப்பினர். அதுவரை வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்த ராஜ்நாத் சிங் எழுந்து வருத்தம் தெரிவிப்பது போல நாடகமாடினார். ஆனால், இந்த ரமேஷ் பிதூரியோ திமிராகவே நடந்து கொண்டான். கடைசிவரை தான் பேசியது தவறு என்றே சொல்லவில்லை.

இதுமட்டுமல்ல, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீது கருத்துரை வழங்க எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பேசத் தொடங்குவதற்குள்ளேயே ஆளுங்கட்சியினர் கத்தத் தொடங்கினர். அவர்கள் கத்துவதை அடக்குவதற்கு கூட அவைத்தலைவர் அக்கறைக் காட்டவில்லை.

பெண்களுக்கு ஆன்மா இல்லை என்று கூறி அவர்களை அடிமைப்படுத்துவதை நியாயப்படுத்தும் சித்தாந்தத்தைக் கொண்டதுதான் மோடி-அமித்ஷா கும்பல். மணிப்பூரில் குக்கி இனப் பெண்களை கும்பல் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிக் கொண்டும், நாடாளுமன்றத்தில் பிரிஜ் பூஷன் போன்ற பொறுக்கிகளை வைத்துக் கொண்டும்தான் இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்பதில் இருந்து, மோடி அரசுக்கு மகளிர் உரிமையில் இருக்கும் அக்கறையைப் புரிந்து கொள்ள முடியும். தங்களது தேர்தல் புகழுக்காக மோடி அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளை சாட்சியாக வைத்துக் கொண்டனர்.

000

எதிர்க்கட்சிகள் கருதிக் கொண்டிருக்கலாம், நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளைப் பேசினால், அது நாட்டு மக்களுக்குத் தெரியவரும் என்று. இப்போதே, எதிர்க்கட்சியினர் பேசுவது, நாடாளுமன்றத் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் வருகின்றன. எதிர்க்கட்சிகள் பேசும் போது, அவர்களது உரையை வெளியிடும் மிச்சமிருக்கும் ‘ஜனநாயகம்’ கூட இன்னும் சில கூட்டங்களுக்குப் பின்னர் பறிக்கப்படலாம் என்பதை எதிர்ப்பார்ப்பதே அறிவுடைமை.

மொத்தத்தில், பா.ஜ.க. முன்வைக்கும் நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே எதிர்க்கட்சிகளை விவாதிக்க வைப்பது, எதிர்க்கட்சிகளைப் பேசவைத்து அவமானப்படுத்துவது, இழிவுப்படுத்துவது; அப்பட்டமாக வரலாற்றைத் திரித்துப் பேசுவது; சம்பந்தமே இல்லாமல் மோடியைப் புகழ்வது; புராணக் கதைகளை அள்ளி விடுவது; ஏற்கெனவே இருந்த நாடாளுமன்ற மரபுகள் எல்லாவற்றையும் குழி தோண்டி புதைப்பது; அப்பட்டமாக விதிமுறைகளை மீறிக்கொண்டே இருப்பது; இவை குறித்தெல்லாம் விவாதிக்க வழியில்லாத அளவிற்கு பிரச்சினையை சிக்கலாக்குவது; பிரதமர் மோடி எந்த நிகழ்ச்சிகள் மீதும் கருத்து சொல்லாமல் வெளியேறுவது; பார்ப்பன புராண ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையில் நாடாளுமன்ற நடைமுறைகளை வகுத்துக் கொள்வது; நாடாளுமன்ற நிகழ்ச்சிநிரல்கள் குறித்து முறையாக அறிவிக்காமல் எல்லாவற்றையும் இரகசியமாக வைத்துக் கொள்வது; எப்போது என்ன நடக்கும், எப்போது என்ன பேசுவார்கள் என்றே சொல்லாமல், செல்லப் பிராணிகளை எஜமானர்கள் இழுத்துச் செல்வது போல எதிர்க்கட்சி எம்.பி.க்களை இழுத்துச் செல்வதுதான் மோடியின் புதிய நாடாளுமன்ற நடைமுறைகள்.

இதுதான், ‘ஜனநாயகம், விவாதச் சுதந்திரம், சட்ட திட்டங்களை வகுக்கும் நாடாளுமன்றத்தில் நமது நாட்டின்  “மாண்புமிக்க” மக்கள் பிரதிநிதிகளுக்கு’ பாசிச பா.ஜ.க.-வால் வழங்கப்படும் மரியாதையாகும்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறும் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களில் சுமார் 10 பேர் மட்டுமே இறுதி நாள் கூட்டத்தில் இருந்தனர். நாடாளுமன்ற ஜனநாகத்திற்குள் நின்று ‘போராடும்’ வலிமை இப்போதே இந்த அளவிற்கு குறைந்து போனால், அடுத்து வரப்போகின்ற காலங்களில், எதிர்க்கட்சிகள் தாங்களாகவே நாடாளுமன்றக் கூட்டங்களைப் புறக்கணித்துவிட்டு வீட்டிலேயே அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தாலும் வியப்படைய ஏதுமில்லை!

நடப்பது நாடாளுமன்ற ஜனநாயகமல்ல, இந்துராஷ்டிர தர்பார்.

பேரரசரைப் புகழ்ந்து பாடுபவர்களுக்கும் இரந்துண்டு வாழ்பவர்களுக்கும் மட்டுமே இங்கு அனுமதி. இந்த உண்மையை மக்களிடம் எடுத்துச் சொல்லி, மக்களுக்கான பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்கான மக்கள் எழுச்சியைக் கட்டியமைக்க வீதியில் இறங்கி அறைகூவுவதே தீர்வு.


தங்கம்

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க