அமெரிக்காவில் போயிங் விமானத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

போயிங் நிறுவனத்துக்காக தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு உழைத்து பில்லியன்களாக கொடுப்பதை அதிகார வர்க்கமோ தங்களுக்குள் மில்லியன்களில் பகிர்ந்து கொள்கின்றனர். தொழிலாளிக்கு கொடுக்க வேண்டும் எனும்போது மட்டும் கணக்கு வழக்குகளை முன்வைத்து கடன் என்று புலம்புகின்றனர் என்று அதிகார வர்க்கத்தைச் சாடுகின்றனர் தொழிலாளர்கள்.

லகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் போயிங் விமான தயாரிப்பு தொழிற்சாலையில் 33 ஆயிரம் தொழிலாளர்கள் மாபெரும் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். செப்டம்பர் 13 ஆம் தேதியில் தொடங்கிய இந்த வேலை நிறுத்தம் இப்போது மூன்றாவது வாரமாக தொடர்கிறது.

போயிங் விமான தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் சியாட்டில் நகரில் உள்ள தொழிற்சாலைகளில் தான் ஏறக்குறைய பாதிப்பேர் வேலை செய்கின்றனர். இங்கு 737 மேக்ஸ் மற்றும் 767, 777 ரகத்தைச் சேர்ந்த வர்த்தக மற்றும் பயணிகள் விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை தவிர இராணுவத்துக்கான அதிவேக ஜெட் விமானங்கள், ராக்கெட்டுகள் மற்றும் விண்கலன்கள் ஆகியனவும் போயிங் தயாரிப்புகளில் அடங்கும். இவற்றை விடவும் உலகின் அதி நவீன விமானமாக் கருதப்படுகின்ற முக்கியமாக அமெரிக்க ஜனாதிபதி பயணம் செய்கின்ற ஏர்ஃபோர்ஸ் ஒன் (Air force one) விமானமும் இங்கு தான் தயாரிக்கப்படுகிறது.

போயிங் நிறுவனம் அமெரிக்காவின் மொத்த ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல் அமெரிக்காவின் பொருளாதார கட்டமைப்பிலும் முக்கிய இடத்தில் இருக்கிறது. சியாட்டிலில் நடைபெறும் இந்த வேலை நிறுத்தம் பிற பகுதிகளில் நடக்கும் மொத்த உற்பத்தியையும் கடுமையாக பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த வேலை நிறுத்தத்தினால் ஒரு நாளைக்கு 50 மில்லியன்முதல் 100 மில்லியன் டாலர் வரை (ரூ.400 முதல் 800 கோடி) நட்டம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

படிக்க : அமெரிக்காவை ஸ்தம்பிக்க வைக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிந்து பத்தாண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமலேயே பல நெருக்கடிகளை காரணம் காட்டிக்கொண்டு நிர்வாகம் தள்ளிப் போட்டு வருகிறது. இறுதியில் இந்த செப்டம்பர் முதல் வாரத்தில் இயந்திர இயக்குனர்கள் மற்றும் விண்வெளிக்கலன் தொழிலாளர்களுக்கான சர்வதேச கழகம் (international association of machinists and  aerospace workers) எனப்படும் தொழிற்சங்கமும் நிர்வாகமும் சேர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் முடிவில் இருதரப்பும் ஏற்றுக்கொண்ட புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை வெளியிட்டன. ஆனால் தொழிற்சங்கம் ஏற்றுக் கொண்டிருந்த போதிலும் கூட தொழிற்சங்கத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின்படி 95% தொழிலாளர்கள் ஒப்பந்தத்தினை நிராகரித்தனர்.

தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள்

  • மூன்று ஆண்டுகளில் 40 சதவீதம் ஊதிய உயர்வு.
  • 10 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிடப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
  • சியாட்டிலில் இயங்கி வரும் முக்கிய விமான அசெம்பிளி பிரிவை இடம் மாற்றி தெற்கு கரோலினாவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழிற்சாலையுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

ஆகிய மூன்றுமே முக்கிய கோரிக்கைகள் ஆகும்.

தெற்கு கரோலினாவில் தொடங்கப்பட்டுள்ள புதிய தொழிற்சாலையில் பெரும்பாலான தொழிலாளர்கள் கான்ட்ராக்ட் முறையில் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. சங்கமில்லா தொழிற்சாலை(non unionised) என்ற வகையில் இயங்குகிறது. சியாட்டிலில் உள்ள முக்கிய அசம்பளி பிரிவை இங்கு மாற்றுவதை நிர்வாகத்தின் சதித்திட்டம் என்று சாடி தொழிலாளர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

ஆனால் நிர்வாகமும் தொழிற்சங்கமும் பேச்சுவார்த்தையின் முடிவில் அறிவித்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் நான்கு ஆண்டுகளில் 25% ஊதிய உயர்வு என்று கூறுகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டுக்கும் 6.25% என்ற விகிதத்தில் உயர்ந்து நான்காவது ஆண்டில் 25% உயர்வை எட்டும். ஆனால் தொழிலாளர்கள் கேட்டிருப்பதோ 3 ஆண்டுகளுக்கு 40% ஊதிய உயர்வு என்பதாகும். அதாவது ஆண்டுக்கு 13.3% உயர்ந்து மூன்றாவது ஆண்டில் 40% என உயரும் என்பதாகும்.

ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது உட்பட வேறு எந்த கோரிக்கைகள் பற்றியும் ஒப்பந்தம் எந்த முடிவையும் சொல்லவில்லை. மாறாக தொழிலாளர்கள் கேட்டிறாத ஊக்க போனஸ்  உயர்த்தியிருப்பது போன்ற வேறு சில கூறப்பட்டுள்ளன.

இதனால் கோபமுற்ற தொழிலாளர்கள் இந்த ஒப்பந்தத்தை சங்கமே ஏற்றுக் கொண்டிருந்த போதிலும் ஏற்க மறுத்து விட்டனர். அதற்காக தொழிற்சங்கம் நடத்திய வாக்கெடுப்பில் 95 சதவீத தொழிலாளர்கள் ஏற்க முடியாதன வாக்களித்துள்ளனர். அடுத்து உடனடி வேலை நிறுத்தமே முடிவு என்று 96 சதவீத தொழிலாளர்கள் வாக்களித்துள்ளனர். அந்த ஒருமித்த முடிவின்படி செப்டம்பர் 13 முதல் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இன்று வரை உறுதியுடன் நடந்து வருகிறது.

இங்கு தொழிற்சங்கம் தொழிலாளர் பிரதிநிதியாக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் தொழிலாளர் முன்வைத்த கோரிக்கைகளையே பேச வேண்டும். ஒருவேளை கோரிக்கைகளில் மாற்றம் நேர்ந்தால் அதை மீண்டும் தொழிலாளர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி மூன்றில் இரண்டு பங்கு ஒப்புதல் பெற்றால் மட்டுமே அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். இல்லையெனில் மாற்று குறித்தும் அதேபோன்று பொது முடிவு எடுக்கப்படும். இந்த ஜனநாயக வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதாக அந்த தொடர்ச்சங்கத்தின் தலைவர் ஜான் ஹோல்டன் கூறுகிறார்.

நாங்கள் போட்ட ஒப்பந்தத்தில் ஊதிய உயர்வு குறைவு தான் என்றாலும் போயிங் நிறுவன தொழிற்சங்க வரலாற்றில் இதுவே சிறந்த ஒப்பந்தமாகும். மேலும் வேலை நிறுத்தம் செய்வதன் மூலம் இதை விட அதிகம் பெற முடியும் என்று எங்களால் உறுதி கூற முடியவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார். ஆயினும் தொழிலாளர்களின் முடிவுப்படியே வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த போராட்டம் எங்களின் சுயமரியாதை பற்றியது. எங்களின் எதிர்காலத்தைப் பற்றியது. என்று போராட்டத்தில் ஊன்றி நிற்பதாக தொழிற்சங்க தலைவர் கூறியுள்ளார்.

ஆனால் நிர்வாகமோ போயிங் நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து நட்டத்தை சந்தித்து வருகிறது. இதுவரை 60 பில்லியன் டாலர் (ரூ 5 இலட்சம் கோடி) கடன் இருக்கிறது சமீப ஆண்டுகளில் நடந்த விபத்துக்கள் காரணமாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறோம். அதை மீட்டாக வேண்டி உற்பத்தியில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டதால் உற்பத்திக் குறைவும் தாமதமும் ஏற்பட்டுள்ளது. இப்போது கைவசம் இருக்கும் ஆர்டர்கள் 5490 விமானங்கள் மட்டுமே என்று பல வகையான காரணங்களை அடுக்குகிறது.

ஆனால் தொழிலாளர்கள் இவற்றை ஏற்கவில்லை. இவர்கள் முன்வைக்கும் இதே நிலைமைகள் இருக்கின்ற நேரத்தில் நிர்வாகத்தின் அதிகாரத் தரப்பின் ஊதியத்தில் எந்த குறைவும் ஏற்படவில்லை. உதாரணமாக இப்போது புதிதாக இரண்டு மாதங்களுக்கு முன் பொறுப்பேற்று இருக்கின்ற புதிய நிறுவனத் தலைவர் கெல்லி ஓர்ட் பெர்க் (Kelly ort berg ) 45% ஊதிய உயர்வுடன் ஆண்டுக்கு 33 மில்லியன் டாலர் பெறுகிறார். அதாவது ஆண்டுச்சம்பளம் ரூ. 275 கோடி மாதச் சம்பளம் 23 கோடி ரூபாய் ஆகும்.

அதேபோல் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த விமான விபத்துகளுக்கு தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்த முன்னாள் நிறுவனத் தலைவர் டேவ் காலௌன்(dev calhoun) அவர்களுக்கு  நட்ட ஈடாக ஒரு ஆண்டு சம்பளத்தை அதாவது 275 கோடி ரூபாய் கொடுத்து வழியனுப்பி இருக்கிறது நிர்வாகம். ஆனால் தொழிலாளர் ஊதியம் என்பது மட்டும் தான் கைக்கும் வாய்க்கும் எட்டாததாக மாறியிருக்கிறது என்று தொழிலாளர்கள் ஆதங்கப்படுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் வெறுமனே ஆண்டுக்கு 1.5% என்ற அளவில் மட்டும் ஊதியம் உயர்த்தப்பட்டு வந்திருக்கிறது.

போயிங் நிறுவனத்துக்காக தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு உழைத்து பில்லியன்களாக கொடுப்பதை அதிகார வர்க்கமோ தங்களுக்குள் மில்லியன்களில் பகிர்ந்து கொள்கின்றனர். தொழிலாளிக்கு கொடுக்க வேண்டும் எனும்போது மட்டும் கணக்கு வழக்குகளை முன்வைத்து கடன் என்று புலம்புகின்றனர் என்று அதிகார வர்க்கத்தைச் சாடுகின்றனர் தொழிலாளர்கள்.

இப்போது அதிநவீன தொழில்நுட்பத்துடன் போயிங் விமான உற்பத்தி தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் சராசரி மாதச் சம்பளம் 8000 டாலர் மட்டுமே. அதாவது ஒரு மணிக்கு 34 டாலர்கள். இதுவும் தெற்கு கரோலினாவில் ஒரு மணிக்கு 21 டாலர் மட்டுமே தரப்படுகிறது.

வாழ்க்கைச் செலவுகள் மருத்துவ செலவுகள் அதிகரித்துவிட்டன என்கின்றனர் தொழிலாளர்கள். உதாரணமாக நாங்கள் ஆண்டுக்கு 1.5%  என்று 15% ஊதிய உயர்வு பெற்றிருக்கும் இந்த 10 ஆண்டுகளில் வீட்டின் விலை 128% உயர்ந்து இருக்கிறது என்று கூறுகின்றனர் தொழிலாளர்கள்.

ஆகையினால் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் மிகவும் உணர்வுபூர்வமாக 33 ஆயிரம் தொழிலாளர்கள் கலந்து கொண்டு வீரியம் மிகுந்த வகையில் மூன்று வாரங்களாக நடத்தப் பட்டு வருகிறது. போயிங் நிறுவன தொழிலாளர்களுக்கு ஏற்கனவே இவ்வாறு போராட்டப் பாரம்பரியம் உண்டு. மொத்தமாக நிறுவனத்தின் நலனையும் கருதித்தான் இவ்வளவு காலமாக குறைந்த ஊதியத்தில் காலம் கழித்து வந்திருக்கின்றனர்.

படிக்க : வெனிசுலா: அமெரிக்காவின் சதிகளை முறியடித்து முன்னேறும் மதுரோ ஆட்சி

ஏற்கனவே 2008 ஆம் ஆண்டில் இதே போன்றதொரு வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து 50 நாட்கள் நடத்தி வெற்றி பெற்றிருக்கின்றனர். ஆகவே இப்பொழுது இந்தப் போராட்டத்தில் எந்த தொய்வும் இல்லாமல் தொழிலாளர்கள் முழு வர்க்க ஒற்றுமையுடன் போராடி வருகின்றனர். அமெரிக்க அரசின் ஜனாதிபதி அலுவலகம் கூட இதில் கவனம் செலுத்தி நிர்வாகத்தின் தரப்பிலும் தொழிலாளர்கள் தரப்பிலும் பிரச்சனை குறித்து நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று வெள்ளை மாளிகையின் அதிகாரி ராபின் பேட்டர்சன் (Robin patterson)அறிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

இதற்கிடையில் நிர்வாகம் மூன்றாம் வாரத் தொடக்கத்தில் தாமே முன்வந்து நான்காண்டுகளுக்கு 30% உயர்வு தருவதாக தன்னிச்சையாக அறிவித்திருக்கிறது. இதையும் தொழிலாளர்கள் கடுமையாக சாடி நிராகரித்திருக்கிறார்கள். இந்த தன்னிச்சையான போக்கை கண்டிப்பதாக எச்சரிக்கை விடுத்து முறையாக தொழிற்சங்கத்துடன் பேசி ஒப்பந்தம் போட வேண்டும் என்று கூறி இருக்கின்றனர்.

போயிங் விமானத் தொழிலாளர்கள் போராட்டம் வர்க்க உணர்வு கொண்டது. மிகவும் நியாயமானது. தொழிலாளி வர்க்க சுரண்டலுக்கு எதிராக நடக்கும் இந்த போராட்டத்தை உலகத் தொழிலாளி வர்க்கம் ஒற்றுமையுடன் ஆதரித்து நிற்க வேண்டும்.

சுந்தரம்
(புதிய ஜனநாயகம் அக்டோபர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க