Sunday, December 1, 2024
முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து - நேர்காணல்

அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து – நேர்காணல்

-

ருத்துவ உயர்கல்வியில் ஏற்கனவே வழங்கப்பட்டுவந்த 50% இடஒதுக்கீட்டை இரத்து செய்யக்கூடாது என தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் போராடி வருகின்றனர். சென்னை டி.எம்.எஸ் வளாகத்துக்குள் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. அவர்களுக்கு பல மருத்துவ சங்ககள், அரசு ஊழியர்களின் சங்கங்கள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். தற்போது இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது. எனினும் இந்தப் போராட்டம் முடிவதற்கு முன்பாக 04.05.2017 அன்று மாலை தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மண்டல ஒருங்கிணைப்பு செயலாளர் மருத்துவர் அகிலன் அவர்களைச் சந்தித்தோம். அவரிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் இது.

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மண்டல ஒருங்கிணைப்பு செயலாளர் மருத்துவர் திரு.அகிலன்

இந்த போராட்டத்தின் துவக்கத்தை பற்றி சொல்லுங்களேன்.

சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் மருத்துவ உயர்படிப்புகளில் மாநில அரசு ஏற்கனவே வழங்கிவந்த 50% இடஒதுக்கீட்டு முறைக்கு பதிலாக, மத்திய அரசின் அனைத்திந்திய கலந்தாய்வு முறையை பின் பற்றபட வேண்டும் என ஒரு தீர்ப்பு வெளியானது.அதனைத் தொடர்ந்து தான் எங்களுடைய போராட்டம் தொடங்கியது.

இந்த கல்வியாண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் தான் இனி மருத்துவ படிப்புகளுக்கு இடம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் அது கட்டாயமாக திணிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தமிழக அரசு மருத்துவ உயர் படிப்புகளில் பழைய முறையே தொடரும், என்று அறிவித்ததன் அடிப்படையில் தான் மருத்துவர்கள் தேர்வெழுதிவிட்டு உயர்படிப்புக்கான கலந்தாய்வுக்காக காத்திருந்தோம்.

இந்த நிலையில் தற்போது உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை காரணம்காட்டி 50% இடஒதுக்கீடானது இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பழைய முறையே பின்பற்ற வேண்டும் எனக் கோரி போராடிவருகிறோம். வரும் 7-ம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வு நடைபெற வேண்டும் ஆனால் இது வரை எங்கள் கோரிக்கைக்கு முறையான பதில் இல்லை.

இந்த 50% இடஒதுக்கீடு முறை ஏன் கொண்டுவரப்பட்டது ?

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்த முறை கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்புவரை அரசு ஆரம்ப சுகாதாரங்களில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் இருந்தனர். இன்னும் சொல்லப் போனால் கிராமப்புறங்களில் முறையான மருத்துவர்களே இல்லாமல் இருந்தனர்.

அப்போது பரவலாக மருத்துவ இளங்கலை படித்தவர்கள் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்துக் கொண்டே மருத்துவ உயர்படிப்புக்கு தன்னை தயார் செய்து கொள்வது; அதன் பின் மருத்துவ உயர் படிப்பு முடித்து தனியார் மருத்துவமனைகளில் வேலைக்கு சேருவது என்ற போக்கு தான் இருந்தது. இதனால் கிராமப் பகுதிகளில் சிறப்பு மருத்துவம் மட்டுமல்ல பொது மருத்துவமே கூட கிடைக்காத நிலை உருவானது. இதனை சரி செய்வதற்காகத் தான் இந்த 50% இடஒதுக்கீடு முறை கொண்டுவரப்பட்டது. அதிலும் தொலைதூரப் பிரதேசங்கள் பழங்குடிமக்கள் பகுதியில் வேலை செய்தவர்களுக்கு அவர்களின் அனுபவத்தை பொருத்து அதிகபட்சமாக் 10 மதிப்பெண்கள் வரை சிறப்பு மதிப்பெண்ணாக வழங்கப்பட்டது. இதன் மூலம் கணிசமான அளவு மருத்துவம் படித்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் வேலைக்கு சேர ஆரம்பித்தனர்.

தமிழ்நாட்டில் தற்போது எத்தனை அரசு மருத்துவர்கள் உள்ளனர்?

ஒன்பது கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் சுமார் 1800 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 50 ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகள், 330 அரசு மருத்துவமனைகள், 19 மருத்துவ கல்லூரிகள் உள்ளன இதில் சுமார் 16,000 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பாதி பேர் கிராமப்புறங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகைக்கேற்றவகையில் போதுமானதாக உள்ளதா?

மருத்துவர்கள் போதுமான அளவில் கிடையாது தான். பல மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளது. எனக்குத் தெரிந்தே பரமக்குடியில் அரசு மருத்துவ மனையில் ஒரே ஒரு மகப்பேறு மருத்துவர் மட்டுமே உள்ளார். குறைந்தபட்சம் 4-பேர் செய்ய வேண்டிய வேலையை ஒருவர் மட்டுமே செய்து கொண்டு இருக்கிறார். இவ்வாறான நிலை ஒரு புறம் இருந்தாலும் பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது சற்று பரவாயில்லை என்ற நிலையே தமிழகத்தில் உள்ளது. தொடர்ந்து சிறப்பு மருத்துவர்களின் பற்றக்குறையும் உள்ளது.

தமிழகத்தில் எத்தனை முதுகலை மருத்துவ இடங்கள் உள்ளன ? அவற்றில் எத்தனை இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு தரப்படுகின்றது ?

தமிழகத்தில் சுமார் 1500 முதுகலை மருத்துவ இடங்கள் உள்ளன. அதில் 50% மத்திய அரசின் அனைத்திந்திய கலந்தாய்வுக்கு கொடுக்க வேண்டும். மீதம் உள்ள 750 இடங்களில்தான் தமிழக அரசு 50% இட ஒதுக்கீடும் அதிகபட்சமாக 10 மதிப்பெண்கள் சிறப்பு மதிப்பெண்களாகவும் வழங்கப்படுகின்றன. இது தவிர தனியார் பல்கலைக் கழகங்களிலும் மருத்துவ முதுகலைப் படிப்புகள் உள்ளன. மொத்தத்தில் 2 முதல் 3 சதவீதம் வரையிலான அரசு மருத்துவர்கள் தான் மேற்படிப்பை நோக்கி செல்ல முடிகிறது.

தனியார் பல்கலைக் கழகங்களில் முதுகலை இடங்களில் இடஒதுக்கீடு உண்டா? அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காத பட்சத்தில் தனியார் கல்லூரிகளில் ஏன் சேருவதில்லை ?

உங்களுக்கே தெரிந்திருக்கும், தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணத் தொகையானது கோடிகளில் உள்ளது. அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர்கள் பெரும்பாலும் அவ்வளவு பணம் படைத்தவர்களாக இல்லை. அதே போல பல கோடி செலவு செய்து தனியார் கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் யாரும் கிராமப்புறங்களுக்குச் சென்று சேவையாற்றப் போவது கிடையாது. சமீபத்தில் கூட மருத்துவ படிப்புகளில் தனியார் கல்வி நிறுவனங்களில் 50% இடங்கள் அரசுக்கு ஒதுக்கப் பட வேண்டும். அவற்றை முறையாக தமிழக கோரிப் பெறாததை கண்டித்து அரசுக்கு 1 கோடி ரூபாய் அபரதம் விதித்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஆனாலும் அரசு மூலம் இடங்கள் நிரப்பப்பட்டாலும் தனியாரின் கல்விக்கட்டணத்தை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளும் நடைமுறை தான் உள்ளது.

அரசு மருத்துவர்களுக்கு ஏன் இந்த 50% இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும்? அவர்களும் நேரடிப் போட்டி மூலம் படிக்கலாமே?

அரசு மருத்துவர்களைப் பொருத்தவரை ஏழை மற்றும் கிராமப்புற மக்களுக்கு நேரடியாக தங்களது சேவையை வழங்கி வருகின்றனர். மேலும் ஒரு நாளில் 200 முதல் 300 நோயாளிககளை பார்க்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் பணிச்சுமையும் கடுமையான அளவில் உள்ளது.

இவற்றையெல்லாம் தாண்டி தான் நாங்கள் படிக்கிறோம் அந்த அடிப்படையில் தான் இந்த 50% இடஒதுக்கீடு தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இவ்வாறு அரசாங்கம் ஊக்குவித்ததால் தான் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகமானது இந்திய அளவில் அனைத்து சுகாதரக் குறியீட்டில் முன்னணியில் உள்ளது. மக்களுக்கு செய்யும் சேவைக்கு எங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு கைமாறாகத்தான் இதனை பார்கிறோம். மேலும் நாங்கள் பணி ஓய்வு பெரும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவோம் என்ற உத்திரவாத்தின் படி தான் இடஒதுக்கீட்டை பயன்படுத்துகிறோம்.

நீங்கள் உங்கள் சேவைக்கான வெகுமதியாக இடஒதுக்கீட்டை பார்த்தாலும், இடஒதுக்கீடுகளால் தான் மருத்துவர்களின் தரமும், மருத்துவத்தின் தரமும் குறைந்துவிடுகிறது என ‘உயர்சாதியினர்’ மற்றும் அவர்களை ஆதரிக்கும் ஊடகங்கள் கூறுவது குறித்து என்ன சொல்கிறீர்கள்?

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அரசு மருத்துவமனைகளில் அதிக அளவு பல்வேறு நுட்பமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் புகழ் பெற்றது நமது சென்னை மருத்துவ கல்லூரி. இது போன்ற அரசுக் கல்லூரிகளில் பயின்ற அரசு மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுதான் உள்ளனர். ஆக இட ஒதுக்கீட்டால் தரம் குறையும் என்பதை ஏற்கமுடியாது.

உங்கள் போராட்டம் உங்களுக்கான நலன் மட்டும்தானே?

எங்களுடைய போராட்டமானது மருத்துவர்களின் கோரிக்கை என்பதைத் தாண்டி இது மக்களின் பிரச்சினை. தமிழகத்தில் பிற மாநிலங்களைக் காட்டிலும் ஓரளவு மருத்துவத்தில் முன்னேறிய நிலையில் இருந்தாலும். இன்றளவும் அனைத்து கிராமங்களுக்கும் அரசின் மருத்துவ சேவை முழுமையாக சென்றடையவில்லை.

நகர்புறங்களிலும் ஏழை மக்கள் அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு இரத்து செய்தால் அரசு மருத்துவமனைகளுக்குப் போதிய சிறப்பு மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்படும். கிராமப்புற சேவைகள் இல்லாமல் போகும். அரசு மருத்துவமனைகளில் சேரும் மருத்துவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையலாம். இதனால் சாதாரண மக்களுக்கு நேரடியான பாதிப்பு இருக்கும். ஆக இவற்றை கருத்தில் கொண்டுதான் நாங்களும் போராடி வருகிறோம்.

எங்களின் கோரிக்கை முந்தைய ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறைகளை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்பதே ஆகும். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களின் போராட்டம் தொடரும்.

உங்களின் போராட்டத்தால் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை பாதிப்படையாதா?

நாங்கள் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள். இங்கு போராடிக் கொண்டிருந்தாலும் அவசர சிகிச்சைகள் தடைபடாத வகையில் சில மருத்துவர்களை வேலைக்கு என ஒதுக்கிவிட்டுத் தான் போராடுகிறோம்.

அதே போல தமிழகம் முழுக்கவும் கூட போராடும் மருத்துவர்கள் ஒரு நாள் பணிப் புறக்கணிப்பு, இரண்டு மணி நேர வேலைப் புறக்கணிப்பு போன்று தான் போராடி வருகிறோம். எங்களை போராடுமாறு இந்த அரசு தான் தள்ளியுள்ளது. அரசை கேட்பதை விட்டு எங்கள் போராட்டத்தால் மக்கள் பாதிப்படைகிறார்கள் எனக் கூறுவது தவறானது ஆகும்.

உங்கள் போராட்டத்தை அடுத்தகட்டமாக எப்படி எடுத்துச் செல்வீர்கள்?

அனைத்து மருத்துவ சங்கங்களையும் இணைத்து போராட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம். மேலும் கிராமப்புற சேவைகளுக்கு கல்லறை கட்டப்பட்டுவிட்டதை குறிக்கும் கல்லறை கட்டுதல், கடவுளுக்கு மனு அளித்தல். போன்ற பல்வேறு நூதன முறைகளோடு மக்களிடம் எங்கள் கோரிக்கையின் நியாயத்தை விளக்கும் வகையில் நேரடியாகப் பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக கிராமப்புற மக்களைப் போராட்டத்தில் பங்கு பெறச் செய்ய முயன்று வருகிறோம். இவற்றை எங்கள் சங்க உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும்.

வ்வாறு தங்களின் போராட்டத்தை அடுத்த கட்டமாக, பெரும்பான்மை மக்களிடம் பரவலாக எடுத்துச் செல்ல மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்த நேரத்தில் அவர்களின் போராட்டத்தின் நியாயத்தை ஊடகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டடிப்பு செய்ய ஆரம்பித்தன. மருத்துவர்கள் போரட்டத்தால் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் பாதிப்பு என்பது போன்ற செய்திகளை அதிகம் வெளியிட ஆரம்பித்தனர். நீதி மன்றமும் உடனடியாக தமிழக அரசு மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் என உத்தரவிட்டு தன்னை உத்தமன் போல காட்டிக் கொண்டது. அதே நேரத்தில் தமிழக அரசின் பேச்சுவார்த்தைக்கு மருத்துவர்கள் பணியாவிட்டால், ஜெயலலிதா ஒரே ஆணையில் ஒரு லட்சக் கணக்கான அரசு ஊழியர்களை தூக்கியடித்ததைப் போல இவர்களையும் செய்யலாம் என தனது உண்மை முகத்தை காட்டிவிட்டது. இவ்வாறு கீழறுப்பு செய்து மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது நீதி மன்றம்.

இந்த அரசையோ, நீதிமன்றத்தையோ நம்பிப்பயன் இல்லை என்பதை அரசு மருத்துவர்களின் போராட்டமும் நிரூபித்துள்ளது. நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் எவ்வாறு அவமதிக்கப்பட்டனர் என்பதை சமீபத்தில் பார்த்தோம். எனவே மருத்துவர்கள் மற்ற பிரிவு தமிழக மக்களோடு இணைந்து இந்தப் போராட்டத்தை இன்னும் வீச்சாக நடத்தினால்தான் மோடி அரசையும், மோடி அரசுக்கு கொடி பிடிக்கும் எடப்பாடி அரசையும் பணிய வைக்க முடியும்.

-வினவு செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க