மாற்றுக்கான மக்கள் கோரிக்கைகளும் அரசியல் கட்சிகளின் கவர்ச்சி வாக்குறுதிகளும்!

பாசிசத்திற்கு எதிரான மாற்று அரசியல்-பொருளாதார கொள்கைகளை உள்ளடக்கிய ஒரு குறைந்தபட்ச செயல்திட்டம் இல்லாததே தேர்தல் அறிக்கைகள் பல வண்ணங்களில் காட்சியளிப்பதற்கான காரணம்.

2024 நாடாளுமன்றத் தேர்தல்:
மாற்று அரசுக்கட்டமைப்பைக் கோரும் மக்கள் கோரிக்கைகளும்
அரசியல் கட்சிகளின் கவர்ச்சி வாக்குறுதிகளும்!

த்தாண்டுகால மோடி ஆட்சியில் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கையால் இந்திய மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். அம்பானி-அதானி-அகர்வால் கார்ப்பரேட் கும்பல்களைத் தவிர்த்து இதர உழைக்கும் மக்களுக்கும் சிறு-குறு, நடுத்தரத் தொழில்முனைவோருக்கும் மோடி ஆட்சியே ஒரு பேரிடர் என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மூன்றாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தால் பாசிசம் நிலைநாட்டப்படும் என்ற அபாய சூழலில்தான் 18-வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலானது, எதிர்க்கட்சிகளுக்கு அவர்களது இருப்பைத் தீர்மானிக்கிற வாழ்வா? சாவா? போராட்டமாக இருக்கிறது; ஆளும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. காவி கும்பலுக்கு இந்துராஷ்டிரத்திற்கான நுழைவாயிலாக இருக்கிறது. எனவே, இத்தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் ஆளும் பா.ஜ.க-வும், எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணியும் தீவிரமாக உள்ளன.

இத்தேர்தலில் மோடி ஆட்சி நீக்கப்பட வேண்டும் என்பதோடு, நீட்-புதியக் கல்விக் கொள்கை ரத்து, குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட அங்கீகாரம், அரசு கொள்முதல் நிலையங்கள் உருவாக்கப்படுவது, விலைவாசி குறைப்பு,  நிரந்தர அரசு வேலைவாய்ப்பு, பழைய ஓய்வூதியம், தொழிலாளர் உரிமைகள் நிலைநாட்டப்படுவது, அரசு தொழிற்துறைகள் உருவாக்கப்படுவது,  தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்ட அரசு நிறுவனங்கள் மீட்கப்படுவது, சி.ஏ.ஏ., ஊபா, புதிய குற்றவியல் சட்டம் போன்ற கருப்புச் சட்டங்கள் ஒழிக்கப்படுவது, காஷ்மீர்-லடாக்கிற்கு மீண்டும் மாநில அந்தஸ்து, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்குவது, ஆளுநர் முறை ஒழிக்கப்படுவது, மாநிலங்களுக்கான நீர்ப் பங்கீட்டில் கழிமுகப்பகுதி மாநிலங்களின் நீர் உரிமையை உத்தரவாதம் செய்வது, எல்லாவற்றுக்கும் மேலாக சாதி-மதக் கலவரங்களைத் தூண்டுகிற ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. தடை செய்யப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மை மக்களின் உள்ளார்ந்த விருப்பமாகவும், கோரிக்கையாகவும் இருக்கிறது. மக்களின் இக்கோரிக்கைகள் குறித்து கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் கூறுவதென்ன?

இந்துராஷ்டிரத்திற்கான மோடியின் உத்தரவாதம்

“மீண்டும் மோடி வேண்டும் மோடி”  என்ற முழக்கத்தில் தேர்தலை எதிர்க்கொண்டு வரும் காவி கும்பல், “மோடியின் உத்தரவாதம் (Modi Ki Guarantee)” என்ற பெயரில் பா.ஜ.க-வின்தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. 69 பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்கை மோடி பிராண்டை பிரபலப்படுத்துவதற்கான அறிக்கையாகத்தான் இருக்கிறது. இது பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை அல்ல மோடியின் அறிக்கை என எதிர்க்கட்சிகளும் அம்பலப்படுத்தியுள்ளன.


படிக்க: நிதி ஆயோக்-இன் மோசடி அறிக்கை: மோடியின் பாசிச ஆட்சியில் வறுமை ஒழிந்த வேடிக்கை!


“ஆண்டிற்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்”, “விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்” என்று 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கும்பல் அறிவித்த வாக்குறுதிகளெல்லாம் பொய் என அம்பலப்பட்டு நாறிப்போயுள்ளது. எனவே, இம்முறை அதுபோன்ற டாம்பீகமான அறிவிப்புகள் எதுவும் பா.ஜ.க. அறிக்கையில் இடம்பெறவில்லை. இதையே மோடி ஊடகங்கள் “கவர்ச்சிவாத அறிவிப்புகள் இல்லை, நிலையான வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது” என மெச்சிப் புகழ்கின்றன.

இந்தத் தேர்தல் அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் செயல்படுத்திய அதே மக்கள் விரோதத் திட்டங்களைத்தான் மீண்டும் செயல்படுத்துவதாகவும் வலுப்படுத்துவதாகவும் அறிவித்திருக்கிறது, மோடிக் கும்பல். “மோடியின் உத்தரவாதம்” என்று அறிவிக்கப்பட்டுள்ள பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில், அக்னிபாத் திட்டம், வேளாண் சட்டங்கள் ரத்து போன்ற மக்களின் கோரிக்கைகள் குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.

“நிலமற்ற விவசாயிகள், கூலி ஏழை விவசாயத் தொழிலாளர்கள், ஆதிவாசிகள் மற்றும் தலித் விவசாயிகள், சிறு குறு மீனவர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களின் கோரிக்கைகள் குறித்து எந்த உத்தரவாதத்தையும் மோடி அளிக்கவில்லை. மோடியின் பத்தாண்டுகால ஆட்சியும், மோடியின் உத்தரவாதமும் இந்திய விவசாய வர்க்கத்திற்கு செய்த துரோகம்”  என்கின்றனர் தேசிய விவசாயிகள் கூட்டணி அமைப்பினர். பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்டு, காலி அரசுப் பணியிடங்களைத் தேர்வுகள் மூலம் நிரப்புவோம் என்ற பா.ஜ.க-வின் தேர்தல் வாக்குறுதியை முதலாளித்துவ ஊடகங்களே எள்ளி நகையாடுகின்றன.

மோடியின் பத்தாண்டுகால கார்ப்பரேட் நலத் திட்டங்களால் இந்திய மக்களிடம் மோடி எதிர்ப்பு மனநிலை உருவாகியிருக்கிறது. சொந்தக் கட்சியினரே மோடியை முன்னிறுத்த அஞ்சுமளவிற்கு மோடி எதிர்ப்பலை இருக்கிறது. விவசாயிகள் போராட்டம், லாரி ஓட்டுநர்கள் போராட்டம், அயோத்தியில் ராமர் கோயிலுக்காக மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டதற்கு எதிரான மக்கள் போராட்டம், இடஒதுக்கீட்டிற்கான மராத்தா சாதியினர் போராட்டம், ராஜபுத்திர சாதியினர் போராட்டம் ஆகியவற்றால் மோடி கும்பல் தோல்வி முகத்திலிருக்கிறது. இந்துராஷ்டிரத்  திட்டங்களாலும், இஸ்லாமிய வெறுப்புப் பேச்சுக்களாலும் மட்டுமே மக்களிடம் ஓட்டு வாங்க முடியாது என்பதை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. காவி கும்பல் நன்கு உணர்ந்திருக்கிறது.

ஆகையால்தான், இலவசங்களையும் மக்கள் நலத்திட்டங்களையும் வெறுக்கின்ற இக்கும்பல், தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக 5 ஆண்டுகளுக்கு இலவச ரேசன், 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்குதல், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களுக்கு 5 லட்சத்திற்கு மருத்துவம், பிரதம மந்திரி சூரிய வீடு திட்டத்தின் கீழ் கட்டணமில்லா மின்சாரம், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை தொடர்ந்து அதிகரிப்போம், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நிலையான வருமானத்தை வழங்குவோம் எனத் தேர்தல் அறிக்கையில் கவர்ச்சித் திட்டங்களைத் அள்ளி வீசியிருக்கிறது.

மேலும், 2025-ஆம் ஆண்டு பழங்குடிகள் ஆண்டாக கொண்டாடப்படும்; உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையும் அளித்துள்ளது. ஆனால், இந்த ஏமாற்று வாக்குறுதிகளால் பத்தாண்டு கால மோடி ஆட்சியில் பழங்குடி மக்கள் மீது தொடுக்கப்பட்ட அரசு பயங்கரவாதத்தையும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தையும் அநீதிகளையும் மறைக்க முடியாது என்பதே எதார்த்தம்.

அதேபோல், தமிழ்நாடு தேர்தலின் போது தி.மு.க. ஒப்புதலுடன் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துவிட்டார்கள் என்று அள்ளிவிட்ட மோடி, தமிழ்நாட்டு மீனவர் நலனுக்காகக் கச்சத்தீவை மீட்போம் என்ற உத்தரவாதத்தை அளிக்கவில்லை.  தமிழ் மொழியையும், தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு மரபையும் அழிப்பதற்காகவே, மோடி-அண்ணாமலை-வானதி கும்பல் தமிழ் மீதும் தமிழ்நாட்டு மக்கள் மீதும் அக்கறை இருப்பதுபோல் பாசாங்கு செய்கிறது. மேலும், தமிழ்நாட்டு வளங்களை அம்பானி -அதானி கும்பலுக்கு படையல் வைப்பதற்காகவும் இக்கும்பல் இத்தகைய நயவஞ்சக வேலைகளில் ஈடுபடுகிறது.

மொத்தத்தில், மோடியின் உத்தரவாதம் என்பது புதியக் கல்விக் கொள்கை, பொது சிவில் சட்டம்,  ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள அட்டை,  பாரதிய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் கல்வெட்டுகள் குறித்து ஆராய்ச்சி செய்வது, பாரதிய சமஸ்கிருதி கோஷ் என்ற பெயரில் ‘பழங்கால பாரத’ நாகரீகம், மொழிகள், பண்பாடு, மரபுகளை தொழில்நுட்ப உதவியுடன் பாதுகாப்பது, அயோத்தியை மேம்படுத்துவது, இந்தியாவின் ஆடம்பரத்தையும், பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டுகிறோம் என்ற பெயரில் “இந்தியாவில் திருமணம்”  திட்டம் உள்ளிட்ட இந்துராஷ்டிரத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கானது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை – செயல்திட்டமற்ற கவர்ச்சிவாதம்:-

“அரசியலமைப்பைப் பாதுகாப்போம்”  என்ற முழக்கத்துடன் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய காங்கிரஸ், “நீதிக்கான ஆவணம்”  (Nyay Patra) என்ற தனது தேர்தல் அறிக்கையில் கூட்டாட்சி, சமூக நீதி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற கூறுகளை முன்வைத்திருக்கிறது. எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில்  விவசாய விளைப்பொருட்களுக்கு 50 சதவிகித உத்தரவாதத்துடன் கூடிய குறைந்தபட்ச ஆதாரவிலை, 30 லட்சம் காலி அரசுப் பணியிடங்களை நிரப்புவது, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு ஆண்டிற்கு 1 லட்சம் நிதியுதவி, அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு, பொதுப் போக்குவரத்திலும், ரயில்களிலும் மோடி அரசால் மூத்தக் குடிமக்களுக்கு ரத்து செய்யப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்படும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், ஜி.எஸ்.டி. ரத்து செய்யப்படும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை ஒழிக்கப்படும் போன்ற காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகளை பெரும்பான்மை ஜனநாயக சக்திகள் வரவேற்றுள்ளனர். காங்கிரசின் அணுகுமுறை மாறியிருக்கிறது என பா.ஜ.க. எதிர்ப்பு ஊடகங்கள் பாராட்டுகின்றன. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை “நாடாளுமன்றத் தேர்தலின் கதாநாயகன்” என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற மக்கள் போராட்டங்களே காங்கிரசின் அணுகுமுறையை மாற்றியிருக்கிறது என்பதே உண்மை. மோடி அரசிற்கு எதிராக விவசாயிகளின் போராட்டம்,  மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம், அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான இளைஞர்களின் போராட்டம், நீட் தேர்வுக்கு எதிரான தமிழக மக்களின் போராட்டம், குக்கிகளின் போராட்டம்,  சி.ஏ.ஏ-க்கு எதிரான  இஸ்லாமியப் பெண்களின் ஷாகீன்பாக் போராட்டம் என கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு மக்கள் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த மக்கள் போராட்டங்கள்தான் பாசிச மோடியை தோல்வி முகத்திற்கு தள்ளியிருக்கின்றன என்பதை காங்கிரசும் உணர்ந்திருக்கிறது. ஆகவே, மக்களின் கோரிக்கைகளை குறைந்தபட்சமாவது வாக்குறுதிகளாகக் கொடுத்தால் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற சூழலில்தான் காங்கிரசு கட்சி இத்தகைய வாக்குறுதிகளை அளித்திருக்கிறது. இந்த வாக்குறுதிகள் பாசிச கும்பலுக்கு நெருக்கடியை எற்படுத்தியிருப்பதால்தான், மோடி தினந்தோறும் தேர்தல் பரப்புரைகளில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பொய்-வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்

ஆனால், காங்கிரசு மக்கள் கோரிக்கைகள் சிலவற்றை வாக்குறுதிகளாக அறிவித்திருப்பினும் அவை மக்களின் கோரிக்கைகளை முழுமையாக பிரதிபலிக்கவில்லை.

மோடி அரசால் கடந்த பத்தாண்டுகளில் கொண்டுவரப்பட்ட  புதிய கல்விக் கொள்கை, சி.ஏ.ஏ., சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம், புதிய குற்றவியல் சட்டம் உள்ளிட்டவற்றை ரத்து செய்வதாகக் காங்கிரஸ் அறிவிக்கவில்லை. மேலும், பழைய ஓய்வுதியத் திட்டம், ஆளுநர் முறை ரத்து, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்குவது குறித்தும் காங்கிரசு தனது ‘நீதி ஆவணத்தில்’ பேசவில்லை.


படிக்க: குறையும் வாக்குப்பதிவு: பா.ஜ.க – விற்கு மட்டும்தான் நெருக்கடியா?


மேலும், ‘சமூகநீதி’ குறித்து பேசுகிற இந்த ஆவணத்தில், உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சுக் கொண்டிருக்கும் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யாமல் அதற்கு மாற்றாக ஜி.எஸ்.டி. 2.0 கொண்டு வருவோம் என்று கூறியிருக்கிறது. ஏழை மாணவர்களின் கல்வியையும் உயிரையும் பறிக்கும் நீட், கியூட் போன்ற தேர்வுகளை ரத்து செய்யாமல் மாநிலங்கள் விருப்பப்பட்டால் நடத்திக்கொள்ளலாம் என்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை பறிப்பதற்காக கொண்டுவரப்பட்ட உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை, அனைத்து சாதியினருக்கும் விரிவுப்படுத்துவதாக அறிவித்திருக்கிறது.

உண்மையில் மக்கள் விரோதமான இச்சட்டங்களை ரத்து செய்வதுதானே சமூக நீதியாக இருக்க முடியும். மாறாக, இச்சட்டங்களில் திருத்தங்கள் செய்வதும், வேறு பெயரில் கொண்டு வருவதும்  காங்கிரசின், மக்களை ஏமாற்றும் முயற்சியாகத்தான் உள்ளது. ‘சமூகநீதி மாடல்’ ஆட்சியை நடத்துகிற தி.மு.க-வும் இதனை விமர்சிக்கவில்லை.

இதுதவிர, தி.மு.க. முன்வைத்துள்ள தேர்தல் வாக்குறுதிகளான, மாநில அரசுகளைக் கலைக்கும் சட்டப்பிரிவு 356 நீக்கம், மாநில அரசுகளின் ஆலோசனையின்படி ஆளுநர் நியமனம், கல்வியைப் பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், கச்சத்தீவை மீட்பது, புதியக் கல்விக் கொள்கை முற்றிலுமாக ரத்து, ஒன்றிய அரசால் மாநில அரசுகளின் மீது திணிக்கப்படும் அனைத்துத் நுழைவுத் தேர்வுகளும் ரத்து போன்றவை குறித்து காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

காங்கிரசின் தேர்தல் அறிக்கையில், அரசியல் சாசனத்தின் ஏழாவது அட்டவணையில் பொதுப்பட்டியலில் உள்ள சில துறைகளை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவது குறித்து கருத்தொற்றுமை ஏற்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளதே தவிர எந்தவித உத்தரவாதமும் கொடுக்கப்படவில்லை. எனவே தி.மு.க-வின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவது என்பது கேள்விக்குறியேயாகும்.

அதேபோல், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற காங்கிரசின் வாக்குறுதிக்கு சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்திருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று மூத்த காங்கிரஸ்காரர் ஆனந்த சர்மா அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கேவிற்கு கடிதம் எழுதியிருக்கிறார். சமீபத்தில், “சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய உதயநிதி நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும்” என தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதும் குறிப்பிடத்தக்கது. காங்கிரசுக்குள்ளேயே ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. சித்தாந்தத்தை பேசுபவர்கள் இருக்கும்போது, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வை தடைசெய்வது என்பது காங்கிரசால் நினைத்துப் பார்க்க முடியாததாகும்.

மேலும், வேலைவாய்ப்பை உருவாக்குவதுதான் தனது புதிய லட்சியக் கொள்கை என்று தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கூறியிருக்கிறது. அக்னிபாத் திட்டம் ரத்து மற்றும் 30 லட்சம் காலி அரசுப் பணியிடங்களை நிரப்புவதைத் தவிர, புதிதாக அரசு தொழிற்துறைகள்- வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவது குறித்து எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை. பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவதுபோல, இந்தியாவை உள்நாட்டிற்கும், உலகத்திற்குமான உற்பத்தி மையமாக மாற்றுவோமென்று காங்கிரசும் குறிப்பிட்டுள்ளது.

காங்கிரசு தனது அறிக்கையில், 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் நிதியுதவியுடன் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஒரு ஆண்டு தொழிற்பழகுநர் (Apprenticeship) பயிற்சி அளிக்கப்படும் என்பதையே மிகப்பெரிய வேலைவாய்ப்பாகக் குறிப்பிட்டுள்ளது. இத்திட்டமானது, நிரந்தர வேலைவாய்ப்பை ஒழித்துக்கட்டுவதோடு, இந்திய இளம் தொழிலாளி வர்க்கத்தை கார்ப்பரேட் முதலாளிகள் ஒட்டச் சுரண்டுவதற்கான ஏற்பாடுமாகும். இத்திட்டம், தொழிலாளர் நலச் சட்டத்தையே செல்லாக்காசாக்கிவிடும்.

அதுமட்டுமின்றி, விவசாய சங்கப் பிரதிநிதிகள், உழவர்-உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் தனிப்பட்ட முன்னணி விவசாயிகள் அடங்கிய தன்னாட்சிமிக்க இ-சந்தைகள் செயல்படுத்தப்படும்; வேளாண் விளைபொருட்களை விவசாய சந்தைகளிலோ, விற்பவர்-வாங்குபவர் ஒப்பந்தத்தை மின்னணு முறையில் பதிவேற்றம் செய்யக்கூடிய அவர்களுக்கு விருப்பமான வேறொரு இடத்திலோ விற்பனை செய்து கொள்ளலாம் என்று காங்கிரஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது வேளாண் விளைபொருட்களை அரசுக் கொள்முதல் செய்வதை கைகழுவுகிற சதித்திட்டமாகும். வேளாண் பொருட்களை அரசு கொள்முதல் செய்யாது என்றால், விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை என்பதும் கேள்விக்குறியாகிவிடும். காங்கிரசு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இத்தகைய முரண்பட்ட கூறுகள் பல இருக்கின்றன. நாம் குறிப்பிட்டிருப்பது சிலவே.

சி.பி.எம். கட்சியின் வெற்று வாக்குறுதிகள்:

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை அளிக்க வேண்டும், இந்தியாவின் பொருளாதார இறையாண்மைக்கு சி.பி.எம். உறுதியாகப் போராடும், பொதுத்துறைகள் தனியார்மயமாக்குவது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் மற்றும் மாற்றியமைக்கப்பட வேண்டும், சிறுகுறு தொழில் ஊக்குவிக்கப்பட்டு விரிவுப்படுத்தப்பட வேண்டும், தொழிலாளர்களுக்கான மாதாந்திர வருமானம் ரூ.26,000-க்கு குறையாமல் இருக்க வேண்டும், கல்வி தனியார்மயமாவது, காவிமயமாவது மற்றும் மையப்படுத்தப்படுவது ஆகியவற்றை மாற்றியமைக்க வேண்டும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவிகிதம் கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும், தேசிய பாதுகாப்புச் சட்டம், ஆயுதப்படை சிறப்புச் சட்டம், ஊபா போன்ற சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும், கார்ப்பரேட்டுகளிடம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவதைத் தடுத்து அரசே தேர்தலை நடத்த வேண்டும், திட்டக்கமிஷனை மீட்டமைக்க வேண்டும் உள்ளிட்டவற்றை சி.பி.எம். தனது வாக்குறுதிகளாக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கிறது. இவ்வாக்குறுதிகளெல்லாம் எவ்வாறு நிறைவேற்றப்படும், அதற்கான வழிமுறை என்ன என்பது எதுவுமே குறிப்பிடப்படாமல் வெற்று வாக்குறுதிகளாகவே அளித்திருக்கிறது.

பாசிச பா.ஜ.க-வுக்கு மாற்று என்று சொல்லும் எதிர்க் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பல வண்ணங்களிலும், ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவும் இருக்கின்றன. பாசிசத்திற்கு மாற்று என்று சொல்கிற இவர்களிடம் பாசிசத்திற்கு எதிரான மாற்று அரசியல்-பொருளாதார கொள்கைகளை உள்ளடக்கிய ஒரு குறைந்தபட்ச செயல்திட்டம் இல்லாததே தேர்தல் அறிக்கைகள் பல வண்ணங்களில் காட்சியளிப்பதற்கான காரணம். குறைந்தபட்ச செயல்திட்டம் இல்லாததன் விளைவாகவே இத்தகைய கொள்கை வேறுபாடுகளும், கூட்டணியில் விரிசல்களும், குழப்பங்களும் ஏற்படுகின்றன என்று நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம்.

முதலாளித்துவ கட்சிகளான ஆம் ஆத்மியும், தி.மு.க-வும் இந்தியா கூட்டணிக்கு குறைந்தபட்ச செயல்திட்டம் வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் முன்வைத்திருக்கின்றன. கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்கிற சி.பி.எம்., குறைந்தபட்ச செயல்திட்டத்திற்காகவும், நாடு முழுவதும் ஒரே கூட்டணிக்காகவும் போராடியிருக்க வேண்டும். ஆனால், அக்கட்சியோ, கேரளாவில் தனது வாக்கு வங்கியையும், ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒன்றுபட்ட கூட்டணிக்காகவும், குறைந்தபட்ச செயல்திட்டத்திற்காகவும் போராடவில்லை.


படிக்க: தோல்வி முகத்தில் மோடி-அமித்ஷா கும்பல்: மக்கள் போராட்டமே ஆயுதம்!


மாற்று அரசியல் பொருளதாரக் கட்டமைப்பே தேவை!

காங்கிரஸ், தி.மு.க. சி.பி.எம் கட்சிகள் தங்களது வாக்குறுதிகளை, ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுவரும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டே நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளன. ஆனால் மோடியின் இந்த பத்தாண்டுகால ஆட்சியில் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட இந்த மறுகாலனியாக்கக் கொள்கைகளைகளால்தான் இந்திய விவசாயம், தொழிற்துறை, சேவைத்துறை, சிறு-குறு தொழில்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு லட்சக்கணக்கான விவசாயிகள் மரண படுகுழிக்கு தள்ளப்பட்டுள்ளனர். பொதுத்துறைகள் நிறுவனங்கள் கார்ப்பரேட் கும்பலுக்கு தாரைவார்க்கப்பட்டு, அரசுத்துறை வேலைகள் அனைத்தும் ஒப்பந்தமயமாக்கப்பட்டுள்ளன, இந்திய நாட்டின் கோடான கோடி உழைக்கும் மக்கள் அனுபவிக்கும் விலைவாசி உயர்வு, வேலையின்மை, வாழ்வாதாரப் பிரச்சினைகள் அனைத்திற்கும் இந்த மக்கள் விரோத கொள்கைகள்தான் மூலகாரணமாக இருக்கும்போது, எதிர்க்கட்சிகள் இதற்கு மாற்றான ஒரு கொள்கையும் திட்டமும் முன்வைக்காமல் குறைந்தபட்ச ஆதார விலைக் கொடுப்போம், 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவோம் என்று வாக்குறுதி அளிப்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற போராடும் மக்களை ஈர்ப்பதற்கான கவர்ச்சி அறிவிப்புகளாகவே உள்ளன.

சான்றாக, எதிர்க்கட்சிகள் விசாயிகளுக்கு 50 சதவிகித உத்தரவாதத்துடன் குறைந்தப்பட்ச ஆதார விலை வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளன. ஆனால், விவசாயித்திற்கான மானியங்களை வழங்குதல், விவசாயக் கட்டமைப்பை சீரழிக்கும் வகையிலான கார்ப்பரேட் திட்டங்களை கைவிடுதல் போன்றவையும் விவிசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. எதிர்க்கட்சிகளோ விவசாயிகள் போராடும் ஒரு கோரிக்கையை மட்டும் நிறைவேற்றுவதாக சொல்கிறார்கள். ஆனால், அந்த கோரிக்கையைக்கூட மறுகாலனியாக்க கொள்கைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டே நிறைவேற்ற முடியாது என்பதே உண்மை. அதனால்தான், டெல்லி எல்லைகளில் குறைந்தப்பட்ச ஆதார விலைக்காக போராடும் விவசாயிகள் “இந்திய அரசே, உலக வர்த்தக கழகத்தில் இருந்து வெளியேறு” என்று டெல்லி எல்லைகளில் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, எதிர்க்கட்சிகளிடம் மாற்றுக்கொள்கை இல்லாமல் மக்கள் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்ற முடியாது என்பதே எதார்த்தநிலை.

மேலும், அரசுக்கட்டமைப்பில் ஊடுருவி ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்ற ஆர்.எஸ்.எஸ். கும்பல், இந்தக்கட்டமைப்பை இந்துராஷ்டிர சர்வாதிகாரத்தை நிறுவும் வகையில் மறுவார்ப்பு செய்துவருகிறது. இதற்காக ஜி.எஸ்.டி.,நீட்.,புதிய கல்விக்கொள்கை, ‘உயர்சாதி ஏழைகளுக்கு’ 10 சதவிகித இடஒதுக்கீடு போன்ற பல இந்துராஷ்டிர கட்டுமானங்களை உருவாக்கி வைத்துள்ளது. இந்த இந்துராஷ்டிர கட்டுமானங்களில் ஒன்று இரண்டைத்தவிர மற்ற எதையும் எதிர்கட்சிகள் ரத்துச் செய்வதாக அறிவிக்கவில்லை, பலவற்றைக் குறித்து வாயே திறக்கவில்லை. ஆனால், பாசிச பா.ஜ.க.-வை வீழ்த்த வேண்டுமெனில் இந்த இந்துராஷ்டிர கட்டுமானங்கள் தகர்க்கப்பட வேண்டும். இதற்கு மாற்றாக, உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுக்காக்கும் வகையிலான மாற்று அரசியல்-பொருளாதாரத் திட்டம் வைக்கப்பட வேண்டும்.

ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த அரசுக்கட்டமைப்பு பாசிசமயமாகி வருவதும், மறுகாலனியாக்கக் கொள்கைகளுமே மக்களின் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்ற உண்மையை மூடிமறைக்கும் விதமாக, பா.ஜ.க. கட்சி  மட்டும்தான் பிரச்சினை என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் கட்டமைக்கின்றன. ஆகவே,  மக்கள் விரோத -ஜனநாயக விரோத இந்த அரசுக் கட்டமைப்புக்கும், மறுகாலனியாக்கக் கொள்கைக்கும் மாற்றான சுயசார்பும் அரசியல்-பொருளாதார இறையாண்மையும்  கொண்ட ஒரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு  நிறுவப்படுவதை நோக்கில் மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். அதுதான் எதிர்கட்சிகள் மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் நிர்பந்திக்கும். அத்தகைய மாற்றுக் கட்டமைப்பில் மட்டுமே, பாசிசமும் வீழ்த்தப்படும்,  மக்களுக்கான கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.


அப்பு

(புதிய ஜனநாயகம் – மே 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க