ஆதவ் அர்ஜுனாவும் செல்வப் பெருந்தகையும் ஒரே விசயத்தைத்தான் கூறினார்கள். கூட்டணி ஆட்சி வேண்டும், அமைச்சரவையில் இடமும் வேண்டும்.
ஒரே கூட்டணியின் இரண்டு முக்கியமான கட்சிகளின் தலைவர்கள்தான். ஆனால், இரண்டும் இரண்டு விதமான எதிர்வினைகளைப் பெறுகின்றன.
தி.மு.க.வினர் கூட எங்கும் இதற்கு எதிர் வினையாற்றவில்லை. ஆனால், தி.மு.க.விற்கு நேர்ந்துவிடப்பட்டதைப் போலச் செயல்படும் வாடகை வாய்கள்தான் அதிகம் கத்துகின்றன.
செல்வப் பெருந்தகை தாழ்த்தப்பட்டவராக இருந்தாலும் காங்கிரஸ் கட்சி தாழ்த்தப்பட்ட மக்களின் கட்சி அல்ல. ஆதவ் அர்ஜுனா ரெட்டியாக இருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் தாழ்த்தப்பட்ட மக்களின் கட்சி.
இதுதான், இந்த இரண்டு விதமான எதிர்வினைகளுக்குக் காரணம்.
லாட்டரி கொள்ளைக்கார மார்ட்டின் குடும்பத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா மீது எவ்விதமான தனிப்பட்ட விருப்பு வெறுப்பும் இல்லை. எனினும், ஆதவ் அர்ஜுனா கூறியதும் செல்வப் பெருந்தகை கூறியதும் வெவ்வேறானது அல்ல. ஆதவ் அர்ஜுனா வி.சி.க.வில் சேர்ந்ததை விமர்சிக்கும் வாடகை வாய்கள் மார்ட்டின் பல கோடி தி.மு.க.வுக்கு தேர்தல் நிதியாக வாரிக்கொடுத்ததைப் பேச மறுக்கின்றன.
யாரும் செல்வப் பெருந்தகையை பி.ஜே.பி-யின் பி டீம் என்று கூறவில்லை. சொல்லப்போனால், அது ஒரு பெரிய விவாதமாகவே ஆகவில்லை.
படிக்க: சீசிங் ராஜா, செந்தில் பாலாஜி: ஒரே ‘நீதி’யின் இரண்டு தண்டனைகள்
ஒன்றாகத் தேர்தலை எதிர்கொள்கிறார்கள். எல்லாரும் ஒரே கூட்டணி என்கிறார்கள். நாங்கள் எல்லாம் ஒன்று என்கிறார்கள். அப்படியிருக்க, கூட்டணிக் கட்சியினருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் என்ன கேடு வந்துவிடும், உங்களுக்கு?
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று கேட்பதில் என்ன ஜனநாயக விரோதம் இருக்கிறது? ஓட்டு வாங்கும் போது தேவைப்படும் கூட்டணி, அமைச்சர் அவையிலும் இருப்பதில் என்ன தவறு?
கேரளத்தில் தனிப்பெரும்பான்மையாக சி.பி.எம். கட்சி வென்றாலும் கூட கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையை ஒதுக்கியிருக்கிறது.
அந்தப் பெருந்தன்மை உங்களுக்கு இல்லையா என்ற கேள்வி உங்களை ஏன் குத்துகிறது? பெருந்தன்மை இல்லை என்பதால்தான் குத்துகிறது.
“உதயநிதிக்கு எந்த அடிப்படையில் துணை முதல்வர் பதவி கொடுக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பக்கூட உரிமை இல்லாத கூட்டணிக் கட்சிகள்.
போலி என்கவுண்டர், டாஸ்மாக், கஞ்சா போதை, அதிகார அத்துமீறல், ஆதிக்கச் சாதி படுகொலைகள், ஆணவப் படுகொலைகள், பிடுங்கப்படும் கொடிக்கம்பங்கள், போடப்படும் பொய் வழக்குகள், கூட்டணிக் கட்சிகளுக்கான உரிமைகள்… என கூட்டணிக் கட்சிகள் எதையும் பேசக்கூடாது.
பேசினால் கூட்டணி உடைந்து விடுமா? அய்யயோ… பாசிசம் நுழைந்து விடுமா?
பாசிசம் வராமல் தடுக்க வேண்டிய பொறுப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மட்டுமா இருக்கிறது? ஆளும் கட்சியான தி.மு.க-வுக்கு இல்லையா?
“அடுத்த தேர்தலில் இந்தக் கூட்டணி நீடிக்குமா என்று தெரியாது? நாங்கள் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்” என்று அமைச்சர்கள் கூறிய போதெல்லாம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வகுப்பெடுக்கும் வாடகை வாய்கள் எங்கே போயிருந்தன?
படிக்க: வி.சி.க கொடிக்கம்பங்கள் அகற்றம் உணர்த்துவது என்ன?
“என்னால் முதல்வராக முடியாது. அதற்கான சூழல் தமிழ்நாட்டில் இல்லை” என்று திருமாவளவன் கூறிவிட்டார்.
அதனால் என்ன… “என் தலைவன் முதலமைச்சராகக் கூடாதா?” என்று ஒரு தொண்டன் கேள்வி கேட்பதற்குக் கூட உரிமை இல்லையா?
நீங்கள் உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்று கேட்கிறீர்கள். அவர்கள் திருமாவளவனை முதல்வராக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.
உங்கள் கோரிக்கையில் அல்லது உங்கள் ஆசையில் நியாயம் இருக்கிறது என்றால் அவர்கள் ஆசையிலும் நியாயம் இருக்கத்தானே வேண்டும். அது நிறைவேறுமா, நிறைவேறாதா என்பதெல்லாம் இரண்டாவது பிரச்சனை.
“உங்களுக்கெல்லாம் நாங்கள் இவ்வளவு கொடுத்ததே பெருசு” என்ற ஆதிக்கச் சாதி திமிரே ஒரே கருத்துக்கு இரண்டு எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது.
ஆட்சியில் பங்கு வாங்குவதா, வாங்காமல் போவதா, கொடுப்பதா, கொடுக்காமல் போவதா போன்றவையெல்லாம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள். வாடகை வாய்கள் தங்களது சாதித்திமிரை அடக்கி வாசிக்கட்டும்.
ஓட்டுச்சீட்டு அரசியலின் சீரழிவுகள்தான். ஆனால், எதிர்வினைகள் சாதிப் பார்த்து வரும் போது, எதிர்க்காமல் இருக்கமுடியுமா?
தோழர் மருது
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
ஐயா மருது… அப்படி பதவி குடுக்க கூடிய கூட்டணி அமைத்து போட்டி போட சொல்லுங்க உங்க முதலாளிகளை. ஆதவ் அர்ஜீனா துணை பொது செயலாளராக முடியும் 8 மாநங்களில். அதே பதிவியில் விசிக வில் ஒரு அருந்ததியர் ஆக முடியுமா? ஏன் இதுவரை முடியவில்லை. பறையர் சாதி கட்சிக்கு வாயை வாடைக்கு விடாமல் நீங்கள் உங்கள் முன்னவர்கள் போல திருமா கட்சியின் சாதி வெறி அரசியலை சந்தையூரில் போல் அம்பலப்படுத்துங்க.விசிகவுக்கு வாயை வாடகைக்கு விட வேண்டாம். மக்கு மருதாக சுற்ற வேண்டாம்.