சீசிங் ராஜா, செந்தில் பாலாஜி: ஒரே ‘நீதி’யின் இரண்டு தண்டனைகள்

கொடிய ரவுடி என்பதால் ‘என்கவுண்டர்’ செய்யலாம் என்றால், பா.ஜ.க.வில் பாதி பேர் ‘என்கவுண்டரி’ல் கொல்லப்பட வேண்டியவர்கள். இதற்கு போலீசு தயாரா? ஊழல்வாதிகளையெல்லாம் சிறைவைப்பதென்றால், பா.ஜ.க.வின் முக்கால்வாசி தலைவர்களை சிறைவைக்க வேண்டியிருக்கும். இதற்கு அமலாக்கத்துறை தயாரா?

திங்கட்கிழமை சீசிங் ராஜா. வெள்ளிக்கிழமை செந்தில் பாலாஜி.

ஒன்று படுகொலை, இன்னொன்று விடுதலை.

ஒருவருக்கு பூமியில் இருந்து ‘விடுதலை’, இன்னொருவருக்கு சிறையில் இருந்து விடுதலை.

எனினும், சிறையும் படுகொலையும் ஒரே ‘நீதி’யின் இரண்டு பக்கங்கள்.

பா.ஜ.க.வின் அமலாக்கத்துறையும் தமிழ்நாடு போலீசும் இந்த ‘நீதி’யை நிலைநாட்டியவர்கள்.

000

விடுதலை செய்யப்பட்டதில் இருக்கும் நியாய உணர்வு, சிறை வைக்கப்பட்டது அநீதி என்ற உணர்விலிருந்து எழுகிறது.

அது என்ன அநீதி?

நிரூபிக்கப்படாத குற்றத்திற்காக, செந்தில்பாலாஜி 471 நாட்கள் சிறைவைக்கப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவர்களை சிறை வைத்து, தனது கட்சிக்கு தாவ வைப்பது அல்லது எதிர்க்கட்சியைப் பிளவுப்படுத்தி தனது கட்சியுடன் கூட்டணி வைக்கச் செய்வது என்ற சாணக்கிய சதிக் கோட்பாட்டை தனது நீதியாகக் கொண்டுள்ளது மோடி-அமித்ஷா பாசிசக் கும்பல்.

பார்ப்பனியத்தை ஏற்றுகொண்டால், சூத்திரனுக்கும் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும். இல்லையேல், நரகம்தான் என்பது பார்ப்பன நீதி.

பா.ஜ.க.வை ஏற்காத காரணத்தினால், 471 நாள் சிறைவாசம் என்ற நரகத்தை அனுபவித்த ‘சூத்திரனா’கிவிட்டார் செந்தில்பாலாஜி. செந்தில்பாலாஜியைவிட பல மடங்கு ஊழல் செய்தக் குற்றவாளிகள் பா.ஜ.க. என்னும் சொர்க்கத்தில் ‘தேவர்’களுடன் சேர்ந்து வாழ்கின்றனர்.

செந்தில்பாலாஜி ஊழல் செய்யாதவர் என்பதல்ல ஜனநாயக சக்திகள், நடுநிலையாளர்களின் வாதம்.

செந்தில்பாலாஜி, கேஜ்ரிவால், சிசோடியாகளுக்கு வழங்கும் நீதியை ஏன், பா.ஜ.க.விலும் அதன் கூட்டணி கட்சிகளிலும் இருக்கும் ஊழல்வாதிகளுக்கு வழங்கப்படுவதில்லை என்பதுதான்.

நாம் சொல்லும் இந்த அநீதிதான், பா.ஜ.க.வின் நீதி!

000

இந்த நீதிக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது.

அது, சீசிங் ராஜா, ‘என்கவுண்டர்’! இந்த ‘நீதி’யை நிலைநாட்டியது போலீசு.

சீசிங் ராஜா ரவுடிதான். பல கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்தான். போலீசு அவரை விசாரித்து தண்டனை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது, அநீதி.

000

கொடிய ரவுடி என்பதால் ‘என்கவுண்டர்’ செய்யலாம் என்றால், பா.ஜ.க.வில் பாதி பேர் ‘என்கவுண்டரி’ல் கொல்லப்பட வேண்டியவர்கள். இதற்கு போலீசு தயாரா?

ஊழல்வாதிகளையெல்லாம் சிறைவைப்பதென்றால், பா.ஜ.க.வின் முக்கால்வாசி தலைவர்களை சிறைவைக்க வேண்டியிருக்கும். இதற்கு அமலாக்கத்துறை தயாரா?

பா.ஜ.க என்பதே ஊழல்வாதிகள் கிரிமினல்களின் காவிக் கூடாரம் தான்.

கிரிமினல்களை வளர்க்கும் போலீசு கட்டமைப்பு இல்லாமல் சீசிங் ராஜாக்கள் இல்லை. ஊழல்களை வளர்க்கும் அரசுக் கட்டமைப்பு இல்லாமல் செந்தில்பாலாஜிகள் இல்லை.

போலீசுக்குக் கட்டுப்படாத சீசிங் ராஜாகளுக்கும் பா.ஜ.க.விற்கு பணியாத செந்தில்பாலாஜிகளுக்கும் வழங்கப்பட்ட தண்டனைகள் ஒரே ‘நீதி’யின் இரண்டு தீர்ப்புகள்.

செந்தில்பாலாஜிக்காகக் குரல் கொடுப்பவர்கள், சீசிங் ராஜா கொலைக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்.

செய்வார்களா?

செய்ய வேண்டும், அதுதான் அறம், ஜனநாயக உணர்வு!


மகேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



1 மறுமொழி

  1. கொடிய ரவுடி என்பதால் ‘என்கவுண்டர்’ செய்யலாம் என்றால், பா.ஜ.க.வில் பாதி பேர் ‘என்கவுண்டரி’ல் கொல்லப்பட வேண்டியவர்கள். இதற்கு போலீசு தயாரா?

    ஊழல்வாதிகளையெல்லாம் சிறைவைப்பதென்றால், பா.ஜ.க.வின் முக்கால்வாசி தலைவர்களை சிறைவைக்க வேண்டியிருக்கும். இதற்கு அமலாக்கத்துறை தயாரா?

    பா.ஜ.க என்பதே ஊழல்வாதிகள் கிரிமினல்களின் காவிக் கூடாரம் தான். ”

    – இதை விட ஆணித்தரமாக சொல்ல யாராலும் முடியாது.

    நல்ல தலையங்கம் இப்படித்தான் இருக்க வேண்டும் என நடு மண்டையில் அடித்து ‘ வினவு’ உண்மையை நிலைநாட்டி இருக்கிறது.

    – மருது பாண்டியன் –
    போடிநாயக்கனூர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க