அன்று அதிகாலை எழும்போது, வழக்கம் போன்ற ஒரு நாளாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அது வழக்கம் போன்றது ஒரு நாளல்ல. ஆனாலும் அதை வழக்கமாக்குவதற்கான வேலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி என்று போலீசால் கூறப்பட்ட சீசிங் ராஜா 23-09-2024 அன்று அதிகாலை பள்ளிக்கரணை அருகே அக்கரை என்ற பகுதியில் போலீசால் ‘என்கவுண்டர்’ செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளியும் பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட ரவுடியுமான சீசிங் ராஜா அதற்கு முந்திய தினம் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார் என்ற தகவல்கள் வந்தன.
அன்றைய தினம், அதிகாலையில் அவர் போலீசால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். மறைத்து வைக்கப்பட்டிருக்கிற ஆயுதங்களை எடுத்துக் கொடுப்பதாக சொல்லி போலீசை அழைத்துச் சென்ற சீசிங் ராஜா, திடீரென்று மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வேளச்சேரி உதவி ஆய்வாளரை சுட்டதாகவும் உதவி ஆய்வாளர் வேறு வழியின்றி சீசிங் ராஜாவை திருப்பிச் சுட்டதாகவும் அதில் சீசிங் ராஜாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் போலீசால் படுகொலை செய்யப்பட்ட அதே பாணியிலான படுகொலை இது.
போலீசால் கைது செய்யப்பட்ட ஒரு நபர் மறைத்து வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்துக் கொடுப்பதாக கூறி போலீசை அழைத்துச் செல்வார், அதனை நம்பி போலீசு செல்லும், மறைவான இடத்திற்கு சென்ற பிறகு அவர் தப்ப முயற்சி செய்வார், மறைத்து வைத்திருக்கும் ஆயுதங்களைக் கொண்டு போலீசை நோக்கிச் சுடுவார், போலீசு தன்னைத் ‘தற்காத்துக்கொள்ள’ ரவுடியை ‘என்கவுண்டர்’ செய்யும்.
இந்த வழக்கமான டெம்ப்ளேட் காட்சிதான் மீண்டும் அரங்கேற்றப்பட்டுள்ளது.
உ.பி.யுடன் போட்டி ‘என்கவுண்டர்’ மாநிலமாகும் தமிழ்நாடு
2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, குறிப்பாக, கடந்த ஓராண்டில் மட்டும் தொடர்ந்து பல ‘என்கவுண்டர்’கள் இவ்வாறு அரங்கேற்றப்பட்டுள்ளன.
2023 செப்டம்பரில் ஸ்ரீபெரும்புதூர் விஷ்வா என்ற ரவுடி இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதத்தில், ஸ்ரீபெரும்புதூர் போலீசு ஆய்வாளர் பரந்தாமன், உதவி போலீசு ஆய்வாளர் தயாளன் தன்னை என்கவுண்டர் செய்துவிடுதாக மிரட்டியதாகக் கூறியிருந்தார். அக்டோபரில் சென்னை அடுத்த சோழவரத்தில் முத்து சரவணன், சண்டே சதீஷ் என்ற இரண்டு ரவுடிகள் போலீசால் கொலை செய்யப்பட்டனர். நவம்பரில் திருச்சி பனையக்குறிச்சியைச் சேர்ந்த கொம்பன் ஜெகன் போலீசால் கொலைச் செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று போலீசு குறிப்பிட்ட திருவேங்கடம் இந்த ஆண்டு ஜூலையிலும், காக்கா தோப்பு பாலாஜி செப்டம்பரிலும் போலீசால் கொல்லப்பட்டுள்ளனர். ஜூலை மாதத்தில் திருச்சியில் பிரபல ரவுடி துரை என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்பட்டார்.
மொத்தத்தில், உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசுக்கு போட்டியாக தமிழ்நாட்டில் ‘என்கவுண்டர்’கள் அரங்கேற்றப்படுகிறது.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த போலீசு
கொல்லப்பட்டவர்கள் அத்தனை பேரும் பெரும் ரவுடிகள், கூலிப்படைத் தலைவர்கள் என்பதாலேயே போலீஸ் தன் செயலை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.
போலீசால் படுகொலை செய்யப்பட்ட இந்த ரவுடிகள், உத்தமர் இல்லை. ஆனால், பிரச்சனை அதுவல்ல. இவ்விசயங்களில் போலீசு சட்டப்படி, யோக்கியமாக நடந்து கொண்டதா, இல்லையா என்பதுதான்.
இது தொடர்பாக புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த எவிடன்ஸ் கதிர், “போலீசின் பணி என்பது தண்டனை வழங்குவது அல்ல. குற்றம் செய்தவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுப்பதுதான் போலீசின் பணி. மேலும், குற்றங்களை ஒழிப்பது போலீஸ் பணியாக இருக்க வேண்டுமே தவிர குற்றவாளிகளை ஒழிப்பது அல்ல” என்று கூறினார்.
மேலும், சீசிங் ராஜாவை ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடையவர் என்றுதான் முதலில் போலீசு கூறிவந்தது. ஆனால், இரண்டு நாட்கள் கழித்து சீசிங் ராஜா ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொடர்புடையவரல்ல என்று மாற்றிக்கூறுகிறது.
இதன் மூலம், சீசிங் ராஜா படுகொலை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் தெளிவு, அதற்காக காரணம் கற்பிப்பதில் இல்லாமல் போவது புதிதல்ல. இன்னும் கொஞ்சம் நெருக்கமாக சென்று பரிசீலித்தால், இதுபோல பல ஓட்டைகளைக் கண்டுபிடிக்க முடியும்.
காக்கா தோப்பு பாலாஜியை கைது செய்யும் பொழுதும் சுட்டுக்கொன்ற போதும் கூட சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளருக்கு இவர் காக்கா தோப்பு பாலாஜி என்றே தெரியாதாம். காக்கா தோப்பு பாலாஜி உடலை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பிறகுதான் அந்த விஷயமே அவருக்கு தெரியுமாம். அடடா என்ன ஒரு கதை!
சட்டமும் நீதியும் எதற்கு
போலீசு ரவுடிகளை போலி மோதல் கொலைகள் செய்வதை எதிர்க்கும் போது, ரவுடிகளுக்கு நாம் ஆதரவு கொடுப்பதாகப் பலரும் கூறுகின்றனர். இது பிரச்சினையைத் திருப்பிப் போடுவதாகும்.
போலீசு சட்டப்படி நடப்பதன் அவசியத்தை மறுப்பது ஆபத்தானதுமாகும்.
ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன்ஆட்சியில் பெண் மருத்துவரை பாலில் வன்முறை செய்து படுகொலை செய்தார்கள் என்று ஐந்து பேர் போலிசால் ‘என்கவுண்டர்’ செய்யப்பட்டார்கள். ‘என்கவுண்டர்’ செய்த போலீசுக்கு மக்கள் மாலையிட்டார்கள்; மலர் தூவி வரவேற்றார்கள்.
ஆனால், ‘என்கவுண்டர்’ நடந்து சில ஆண்டுகளுக்கு கழித்து ‘என்கவுண்டர்’ செய்யப்பட்டவர்களுக்கும் அந்த பாலியல் வன்கொடுமை – படுகொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற உண்மை வெளியே வந்தது.
யாரைக் காப்பாற்றுவதற்கு ‘என்கவுண்டர்’கள் நடைபெறுகின்றன? உண்மைக் குற்றவாளிகள் யார்? கொல்லப்பட்டவர்கள் யார்? படுகொலை செய்யப்படும் அளவிற்கு அவர்கள் கொடூரமானவர்களா, அல்லது பொய்வழக்கில் போலிசால் கைது செய்யப்பட்டவர்களா? போலீசு இவ்வாறு செய்வதன் மூலம், பாலியல் வன்முறைகளும் குற்றங்களும் எப்படி குறையும்?
ஆகையால், போலி மோதல் கொலைகளை எதிர்ப்பது என்பது, ஏதோ நாம் மனிதநேயம் என்ற அடிப்படையில் மட்டும் கூறுவது அல்ல. மாறாக, போலீஸ் துறைக்கு கட்டற்ற அதிகாரத்தை கொடுத்து யாரையும் எப்போதும் எங்கேயும் சுட்டுக் கொல்லலாம். நீதித்துறைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை, என்றால் சட்டமும் நீதியும் எதற்கு?
எல்லா கொடிய ரவுடிகளும் என்கவுண்டர் செய்யப்படுவதில்லை
முக்கியமாக, இந்த ‘என்கவுண்டர்’களில் கொல்லப்பட்ட ரவுடிகள் யார்? அவர்களின் வர்க்கப் பின்னணி என்ன? அரசியல் பின்னணி என்பதை பார்க்க வேண்டும்.
படப்பை குணா, கல்வெட்டு ரவி , கருப்பு முருகானந்தம், மிளகாய் பொடி வெங்கடேசன் இவர்களெல்லாம் கூலிப்படைத்தலைவர்களாகவும் ரவுடிகளாகவும் இருப்பவர்கள்.
இவர்கள் மீது ஏன் ‘என்கவுண்டர்’கள் நடத்தப்படுவதில்லை? இந்தக் கேள்விக்கு நாம் பதில் தேட வேண்டும்.
போலீஸ் எப்பொழுதும் எல்லா ரவுடிகளையும் ‘என்கவுண்டர்’ செய்து விடுவதில்லை. தங்களுக்குத் தேவையான ரவுடிகளை விட்டுவிட்டு மற்றவர்களை மட்டுமே ‘என்கவுண்டர்’ செய்கிறது.
இந்தத் தேவை என்பதில்தான் ரவுடிகளின் வர்க்கப் பின்னணியும் அரசியல் பின்னணியும் அடங்கியுள்ளது.
செம்மரக் கடத்தல் மன்னனாக இருந்த பாடிய நல்லூர் பார்த்திபன் அ.தி.மு.க. பிரமுகர். இவரைக் கொன்ற முத்து சரவணன் இன்னொரு ரவுடியுடன் பேசிய ஒரு செல்போன் உரையாடல் கசிந்தததை நாம் அறிவோம்.
அதில் பாடிய நல்லூர் பார்த்திபன், போலீஸ் அதிகாரிகளுக்கு பல லட்சம் பணம் கொடுத்து முத்து சரவணனை ‘என்கவுண்டர்’ செய்ய வேண்டும் என்று முயன்று கொண்டிருப்பதாகவும் அதற்கு முன் பார்த்திபனை கொன்று விட வேண்டும் என்றும் முத்து சரவணன் குறிப்பிட்டார்.
பாடியநல்லூர் பார்த்திபன் கொலை செய்யப்பட்ட பின்னர், முத்து கிருஷ்ணன் போலீசாஅல் போலி மோதல் கொலை செய்யப்பாட்டார்.
தனக்குப் பிடிக்காத, தனக்கு வேண்டாத ரவுடிகளை பணம் கொடுத்து கூலிப்படை மூலம் கொல்வது என்பது பழைய மாடல். புதிய மாடலோ தனக்கு பிடிக்காத ரவுடிகளை பணம் கொடுத்து போலீஸ் ‘என்கவுண்டர்’ செய்வதான்.
பாடியநல்லூர் பார்த்திபனுக்கு தொழில் கூட்டாளியாக இருந்த மிளகாய் பொடி வெங்கடேசன் பாரதிய ஜனதா கட்சியின் ஓ.பி.சி. பிரிவு மாநில நிர்வாகியாக உள்ளார். அவர் தன்னுடைய பேட்டியில், பார்த்திபனை கொலை செய்வதற்கு தொடர்ச்சியாக பலரும் முயற்சி செய்கிறார்கள் என்று தனக்கு வேண்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து கூறியதாகவும் அதை நான் பார்த்திபன் அவர்களின் அண்ணனிடம் தெரிவித்ததாகவும் தற்பொழுது அக்குடும்பம் தன்னையே சந்தேகம் கொள்வதாகவும் தெரிவிக்கிறார்.
செம்மரம் கடத்தல் குற்றவாளியும் பலமுறை போலீசால் கைது செய்யப்பட்டவரும் ஆன ஒரு ரவுடியோடு போலீஸ் உயரதிகாரிகள் தொடர்பிலும் நட்பாகவும் இருக்கிறார்கள் என்பதை அந்த நபரே கூறுகிறார். இதுதான் போலீசின் யோக்கியதை.
இதற்கிடையில் பாடியநல்லூர் பார்த்திபன் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை பழிவாங்குவேன் என்று முகநூலில் பதிவிட்டதற்காக பார்த்திபனின் அண்ணன் நடராஜன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுகிறார். யாரைக் காப்பாற்றுவதற்காக?
போலீசு இல்லாமல், ரவுடிகள் இல்லை
சட்டத்தை மதிக்க வேண்டிய போலிசே சட்டத்தை மீறலாமா என்று சிலர் கேட்கின்றனர். ஒருவகையில் இது சரிதான் என்றாலும் சட்டத்தை மதிப்பதற்காக உருவாக்கப்பட்டதல்ல போலீசு.
சமூகத்தைத் திருத்துவதற்கோ, சட்டத்தை நிலைநாட்டுவதற்கோ போலீசு உருவாக்கப்படவில்லை. போலீசு என்பது பெரும் பணக்காரர்கள், கார்ப்பரேட் முதலாளிகள், ஆதிக்கச் சாதி வெறியர்கள், ஆணாதிக்கவாதிகளின் கைப்பாவையாகும். சட்டமும் நீதியும் அதற்கு என்றைக்குமே ஒரு பொருட்டல்ல.
இலஞ்ச ஊழலில் ஈடுபடவில்லையென்றாலும் ‘நியாயமான’ போலீசு என்பது இவ்வாறுதான் வளர்க்கப்படுகிறது.
பெரிய ரவுடிகள் அத்தனை பேரும் தனியாக உருவாவதில்லை. போலீசின் துணையோடு போலீசோடு சேர்ந்து அவர்களும் வளர்கிறார்கள். போலீசுக்கு தேவையான வேலைகளை செய்வது, போலீசுக்கு மாமூல் கொடுப்பது, தன்னைப் போன்ற சக ரவுடிகளை ஒழித்து கட்டுவது… இப்படி அனைத்தும் போலீசுக்குத் துணையாக அவர்களோடு இணைந்து செய்கின்றனர். போலீசுக்கு தெரியாமல், போலீசின் ஆதரவில்லாமல் எந்த ரவுடியாக வளரவும் முடியாது; பணம் சேர்க்கவும் முடியாது; கூலிப்படை தலைவனாகவும் முடியாது.
காவி குண்டர்களாக்கப்படும் ரவுடிகள்
கூலிப்படை தலைவர்கள் ரவுடிகளில் பலவகை உண்டு. காக்கா தோப்பு பாலாஜி, சீசிங் ராஜா, முத்து சரவணன் போன்று கூலிப்படை தலைவராக இருப்பதே பெருமையாக வைத்துக் கொண்டு, அதைத் தக்க வைப்பதற்காக அவர்கள் படுகொலைகளை செய்து கொண்டே இருப்பார்கள்.
கருப்பு முருகானந்தம், மிளகாய் பொடி வெங்கடேசன், படப்பை குணா போன்றோர் இன்னொரு ரகம். தங்களுடைய செயல்பாடுகளை மெருகேற்றிக் கொள்ளவும் நியாயப்படுத்திக் கொள்ளவும் அவர்கள் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொள்கிறார்கள், பல நூறு கோடிகளை குவிக்கிறார்கள்.
சொல்லப்போனால் இப்படிப்பட்ட கார்ப்பரேட் கிரிமினல்களுக்கு முன்பு சீசிங் ராஜாவும் காக்காத்தோப்பு பாலாஜியும் ஒன்றுமில்லை.
இரண்டு ரகத்தினரும் கொடிய கிரிமினல்கள்தான். ஆனால், ஒரு ரகத்தினரை போலீசு ஒருபோதும் கைது செய்யாது, அவ்வாறு கைது செய்தாலும் அவர்கள் மீது ‘என்கவுண்டர்’ நடக்காது.
இன்னொரு ரகத்தினர் மீதுதான், கைது, குண்டாஸ், ‘என்கவுண்டர்’ என அத்தனையும் நடைபெறும்.
ஆக மொத்தத்தில், பல நூறு கோடிகளுக்கு அதிபதியாக இருப்பவர்களும் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கக்கூடிய ரவுடிகளும் கூலிப்படை தலைவர்களும் மட்டும் காப்பாற்றப்படுகிறார்கள். பா.ஜ.க.வைச் சேராத ரவுடிகள், பெரும் பணக்கார ரவுடிகளுக்கு எதிரியாக இருக்கக்கூடிய ரவுடிகள்தான் போலீசால் படுகொலை செய்யப்படுகிறார்கள்.
சென்னை மாநகர போலீசு ஆணையராக பொறுப்பேற்ற அருண், ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பேசுவோம் என்றார். ஆமாம், போலீசு இரண்டு ரக ரவுடிகளிடம் இரண்டு மொழிகளில் பேசுகிறது.
போலி என்கவுண்டர்கள் காவி +போலீசு கும்பலாட்சிக்கான தயாரிப்பு
குஜராத்தில் மோடி ஆட்யில் இருந்த போது 75-க்கும் மேற்பட்ட போலி என்கவுண்டர்கள் அரங்கேற்றப்பட்டன. உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் முதல் ஆட்சிக்காலம் முழுவதும் போலி என்கவுண்டர்களின் காலமாகும்.
இந்த இரண்டு ஆட்சிகளிலும் இசுலாமிய பின்னணி கொண்ட ரவுடிகள், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வுக்கு கட்டுப்படாத ரவுடிகள் அத்தனை பேரையும் போலீசு ‘என்கவுண்டர்’ என்ற பெயரில் கொன்றுள்ளது. இந்துராஷ்டிரத்தை நிறுவதற்கு ரவுடிகளை பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது அதன் தொடக்கப் பணியாகும். இந்தப் பணியை, தி.மு.க. ஆட்சியைப் பயன்படுத்தி, போலீசு செய்து கொண்டிருக்கிறது.
போலீசை இப்படி நீங்கள் குற்றம்சாட்டுவது சரியா? ஒட்டுமொத்த போலீசையே களங்கப்படுத்தி விட்டீர்கள் என்று யாராவது கூறினால், கோகுல்ராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய யுவராஜ் இப்போது வரை ‘என்கவுண்டர்’ செய்யப்படவில்லையே ஏன் என்பதற்கு அவர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும்.
தலித் மக்கள் மீதான வன்முறைகள் பின்னணியில் பெரும்பாலானவற்றில் ஆதிக்கச் சாதிச் சங்கக் கிரிமினல்கள், காவிக் குண்டர்கள் இருக்கின்றனர். இவர்கள் யாரும் இதுவரை போலி மோதல் கொலையில் கொலைசெய்யப்படவில்லையே ஏன்?
விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட் திட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு சிறை. உரிமைக்காகப் போராடுகின்ற தொழிலாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறை. சமூக செயல்பாட்டாளர்கள் மீது ஊபா போன்ற கொடிய சட்டங்களை ஏவி சிறை. இவ்வாறு உழைக்கும் மக்களின் உரிமைகளை நசுக்கும் போலீசு, ரவுடிகளை அழிப்பது என்ற பெயரிலும் இந்துராஷ்டிரத்திற்கான தயாரிப்புகளையே செய்கிறது.
எனவே, போலி மோதல் கொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பது மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலையும் எதிர்க்க வேண்டும். இல்லையேல், தி.மு.க.வின் ஆட்சியைப் பயன்படுத்தி இந்துராஷ்டிரத்திற்கான அஸ்திவாரங்கள் அமைக்கப்படுவதைத் தடுக்க முடியாது.
தோழர் மருது
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram