ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கார்ப்பரேட் கூலிப்படை கும்பலின் ராஜ்ஜியம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை என்பது கார்ப்பரேட் கூலிப்படை கும்பல், போலீசு, அதிகாரவர்க்கத்தின் ஒரு பிரிவினர், அரசியல்வாதிகள் ஆகியோர் உள்ளடங்கிய சிலந்தி வலையை அம்பலப்படுத்திக் காட்டுகிறது. சம்போ செந்தில், சீசிங் ராஜா, அஞ்சலை, மலர்கொடி போன்றோர் இந்த கார்ப்பரேட் கூலிப்படை கும்பலின் ராஜ்ஜியத்தின் அங்கம்.

டந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே கூலிப்படை கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சில மணிநேரங்களிலேயே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக எட்டுப் பேர் போலீசில் சரணடைந்தனர். ஆனால், சரணடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள் கிடையாது; இதற்குப் பின்னால் இருப்பவர்களை கண்டறிய வேண்டும்; இது திட்டமிட்ட அரசியல் கொலை; தலித் தலைவர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை என ஜனநாயக சக்திகள் உட்பட பலரும் கருத்து தெரிவித்தனர்.

மற்றொருபுறம் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி முதல் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே, அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என அனைவரும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை; இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று ஒரே குரலாக முழங்கினர். ஆர்.எஸ்.எஸ் ஏஜெண்டான தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று தனது உயிருக்கும் சீமான், கிருஷ்ணசாமி, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது என்று பேட்டிக்கொடுத்தார்.

ஒருபுறம் ஆம்ஸ்ட்ராங்கை சமூகப்போராளியாக முன்னிறுத்தி ஆதாயம் தேடும் முயற்சியில் ஒரு கும்பல் இறங்கியிருக்கிறது; மற்றொருபுறம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூவிவரும் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டுகள் இப்படுகொலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள விழைகின்றன.

தமிழ்நாட்டில் எத்தனையோ மக்கள் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் சூழலில், ஊடகங்களோ அவற்றையெல்லாம் இருட்டடிப்பு செய்யும் வகையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை செய்தியாக்கின. நொடிக்கு நொடி ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்களின் பின்னணியை வெளியிடுவது; “வட சென்னை”, “விக்ரம் வேதா” போன்ற திரைப்படங்களின் கதைகளை ஒப்பிட்டு யூடியூப் சேனல்களில் விவாதிப்பது; ஆம்ஸ்டிராங் படுகொலையில் கைதாகும் ரவுடிகளை கதாநாயகர்கள் போல சித்தரிப்பது என தரம் தாழ்ந்த வகையில் செயல்பட்டன.

ஆனால், தேசிய அளவில் விவாதப்பொருளாக மாற்றப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் அடுத்தடுத்து வெளிவரும் தகவல்களின் மூலம் அரசியல்வாதிகள், போலீசு, வக்கீல்கள், அதிகாரிகளின் துணையோடு கார்ப்பரேட் கூலிப்படை கும்பலின் சாம்ராஜ்ஜியம் உருவாகியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பதை நாம் அனைவரும் கவனிக்க வேண்டி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள குற்றவாளிகள்

அரசியல் கொலையா?

90-களில் குத்துச்சண்டை வீரராக திகழ்ந்த ஆம்ஸ்ட்ராங் பூவை மூர்த்தியின் சிஷ்யனாக அரசியலில் களமிறங்குகிறார். ஆரம்ப காலகட்டத்தில் சட்டப்படிப்பு படித்திருந்த இவர் அடிதடி, மோதல் உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்குகிறார்; அவர் மீது ஏழு குற்ற வழக்குகள் போடப்பட்டுள்ளது. பூவை மூர்த்தி மறைவிற்குப் பிறகு 2006-இல் “டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன்” என்ற அமைப்பை உருவாக்கி, அதே ஆண்டு சென்னை மாநகராட்சியின் 99-ஆவது வார்டில் போட்டியிட்டு மாமன்ற உறுப்பினராகிறார், ஆம்ஸ்ட்ராங்.

பிறகு 2007-இல் அப்போதைய உத்தரப்பிரதேச முதலமைச்சர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் இணைகிறார். பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த பிறகு தன் மீதிருந்த வழக்குகளிலிருந்து நீதிமன்றம் மூலம் விடுதலை பெறுகிறார். அவர் மீதிருந்த சரித்திரப் பதிவேடும் (History sheeter) நீக்கப்படுகிறது. ஆனால், அதன்பிறகும் பல குற்றச் சம்பவங்களில் ஆம்ஸ்ட்ராங்கின் பெயர் அடிப்பட்டே வந்துள்ளது.

17 ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை மீறி சென்னை நகரில் எந்த பெரிய கட்டடத்தையும் இடிக்கவோ கட்டவோ முடியாது என்று கூறுகிறார்கள். அந்தளவிற்கு ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய நபராக இருந்துள்ளார். அரசியல்வாதி என்பதைத்தாண்டி கட்டப்பஞ்சாயத்து மூலம் கூலிப்படை கும்பல்களின் ராஜ்ஜியத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு நபராக ஆம்ஸ்ட்ராங் இருந்துள்ளார் என்பதை அவரது வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலமே மெய்பிக்கிறது.

ஆனால், சில ஜனநாயக சக்திகள் ஆம்ஸ்ட்ராங் கொலையை ஓர் அரசியல் கொலை என்றே குறிப்பிட்டு வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டில் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, தலித் மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதன் தொடர்ச்சிதான் இப்படுகொலை என்று பேசி வருகின்றனர்.

தமிழ்நாட்டில், தலித் மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. அவ்வாறு அதிகரித்துவரும் சாதி தாக்குதல்களுக்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் உள்ளது என்பதை “புதிய ஜனநாயகம்” இதழ் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதை ஆம்ஸ்ட்ராங் கொலையுடன் தொடர்புப்படுத்துவது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் கதையாக உள்ளது.

“இல்லை…இல்லை… அவர் தலித் மக்களுக்காக பாடுபட்டுள்ளார். நிறைய மாணவர்களை வக்கீல் படிப்பு படிக்க வைத்துள்ளார்” என்றெல்லாம் சிலர் முன்வைக்கலாம்.

அப்படியெனில், கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் தலித் மக்கள் மீதான தாக்குதல்களில் எத்தனை சாதி வன்முறைகளுக்கு எதிராக ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் குரல் கொடுத்துள்ளார்; எத்தனை போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். உண்மையில், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படுவதற்கு முன்னர்வரை சென்னையின் ஒரு சில வாட்டாரங்களைத் தாண்டி ஆம்ஸ்ட்ராங்கை ஓர் அரசியல்வாதியாக மக்களுக்கு தெரியாது என்பதே உண்மை. அதுவும், ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி போன்ற பிழைப்புவாதிகள் கூட தங்களுடைய ஆளும் வர்க்க சேவையால் அரசியல் தளத்தில் அறியப்பட்ட நபர்களாக உள்ளனர். ஆனால், அரசியல் தளத்தில் ஆம்ஸ்ட்ராங் தன்னை அப்படி எந்தவிதத்திலும் முன்னிறுத்திக் கொண்டதில்லை என்பதே உண்மை.

மேலும், அவர் அங்கம் வகிக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அரசியல் அதிகாரத்திற்கு செல்வது மட்டுமே நோக்கம். அதிகாரத்தை பிடிப்பதற்காக பார்ப்பன-ஆதிக்கச்சாதிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு தலித் மக்களுக்கு துரோகமிழைத்த தேர்ந்தெடுத்த பிழைப்புவாதிதான் அக்கட்சியின் தலைவர் மாயாவதி. இன்றும் பா.ஜ.க-விற்கு மறைமுகமாக சேவை செய்துக்கொண்டிருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் பழைய வரலாற்றை தூசித் தட்டிப்பார்த்தால், தமிழ்நாட்டிலும் அக்கட்சி கிரிமினல்கள், சாதிவெறியர்கள், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள், அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள் அடங்கிய கும்பலாகத்தான் களமிறங்கியுள்ளது என்பது தெரியவரும்.

அதேபோல், ஏழை மக்களுக்கு உதவுவது, மாணவர்களைப் படிக்க வைப்பது போன்றவையெல்லாம் ஆம்ஸ்ட்ராங் மட்டுமின்றி தனக்கு செல்வாக்கை உருவாக்க வேண்டும் என்று நினைக்கும் அரசியல்வாதிகள், கார்ப்பரேட் முதலாளிகள், சாமியர்கள், ரவுடிகள் என அனைவரும் பின்பற்றும் வழிமுறைகள்தான். இப்படித்தான் இவர்கள் தமக்கான சமூக அடித்தளத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். ஆம்ஸ்ட்ராங் சில உள்ளூர் மற்றும் தலித் மாணவர்களை சட்டக்கல்வி படிப்பதற்கு ஏற்பாடு செய்து வழக்கறிஞராக உதவியதும் அந்தவகையில் சேர்ந்ததே. இத்துடன் சினிமாக்காரர்களுடன் கருப்புப் பணம் தொடர்பான உறவுகளை பராமரித்ததன் மூலம் சில பிரபலங்களின் ஆதரவும் இவருக்குள்ளது. புத்தருக்கு கோயில் கட்டுவது போன்ற நடவடிக்கைகளையும் ஆம்ஸ்ட்ராங் மேற்கொண்டு வந்துள்ளார்.

எனவே, இப்படுகொலையை அரசியல் கொலை என்றுக் கூறுவதற்கு எவ்வித அடிப்படையும் கிடையாது. அரசியல் கட்சியில் உள்ள ஒருவர் படுகொலை செய்யப்படுவதாலேயே அது அரசியல் கொலையாகாது, அரசியல் நோக்கத்திற்காக, அரசியல் நிலைப்பாட்டிற்காக செய்யப்படும் கொலைகள்தான் அரசியல் கொலை. ஆனால், ஆம்ஸ்ட்ராங் யாருக்காக குரல் கொடுத்தார்; யாரை எதிர்த்து அரசியல் செய்ததால் வெட்டிக் கொல்லப்பட்டார் என்பதை அவரை சமூகப்போராளியாக முன்னிறுத்துபவர்கள்தான் விளக்க வேண்டும்.

அம்பலமாகும், கூலிப்படை+ அரசியல்வாதிகள் + வக்கீல்கள் + போலீசின் சிலந்தி வலைப்பின்னல்

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, அருள், ரவுடிகள் திருவேங்கடம், திருமலை, கூலிப்படையைச் சேர்ந்த செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், கோகுல், விஜய், சிவசக்தி ஆகியோர் கூலிப்படைத் தலைவனான ஆற்காடு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு பழித்தீர்க்கவே இப்படுகொலையை நிகழ்த்தியதாகக் கூறினர். கைது செய்யப்பட்ட பொன்னை பாலு ஆற்காடு சுரேஷின் தம்பி, அதேபோல் அருள் என்பவன் பொன்னை பாலுவின் மைத்துனன்; இவன் தி.மு.க. கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அருள் அளித்த தகவலின் அடிப்படையில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த ரவுடி தோட்டம் சேகரின் மனைவியும் வழக்கறிஞருமான மலர்கொடி, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிகரன், தி.மு.க-வைச் சேர்ந்த சதீஷ் என மேலும் மூவர் போலீசால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அ.தி.மு.க-வைச் சேர்ந்த மலர்கொடி மீது கொலை வழக்கு உட்பட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மலர்கொடி இந்த கொலைக்கு பண உதவியும் நாட்டு வெடி குண்டுகளையும் வழங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

அடுத்ததாக, மலர்கொடியை விசாரிக்கும்போது, அவர் ‘கஞ்சா அஞ்சலை’ எனும் மற்றொரு பெண் தாதாவை கைக்காட்டுகிறார். கூலிப்படை தலைவனான ஆற்காடு சுரேஷின் பெயரை பயன்படுத்தி கஞ்சா, கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டு வந்த அஞ்சலை மீது 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. `பி’ பிரிவு ரௌடிகள் பட்டியிலிலுள்ள அஞ்சலை, சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க-வில் இணைந்து மாவட்ட மகளிரணி பதவிபெற்றுள்ளார்.

பொன்னை பாலு, அருள், மலர்கொடி, அஞ்சலை, ஹரிகரன் என அனைவரும் ஒன்றுக்கூடி ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்வதற்காக மூன்று மாதங்களுக்கும் மேலாக திட்டம் தீட்டியிருப்பது அம்பலமாகியுள்ளது. அதோடு மலர்கொடிக்குப் பின்னணியில் சம்போ (அ) சம்பவம் செந்தில் எனும் தாதா இருப்பதாக சமீபத்திய தகவலில் வெளிவந்துள்ளது. இவனுக்கும் ஆம்ஸ்ட்ராங்குக்கும் இடையே ரியல் எஸ்டேட் பஞ்சாயத்து மற்றும் ஸ்கிராப் தொழிலில் முன்விரோதமும் இருந்து வந்திருக்கிறது.

இப்படியாக, ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கூலிப்படை கும்பல்களின் வலைப்பின்னல் விரிவடைந்து கொண்டே செல்கிறது. ஆரம்பத்தில் கூலிப்படை தலைவனான ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிவாங்குவதற்காக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்ப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் கூறினர். ஆனால், அதன்பிறகு விசாரணையில் பல கூலிப்படை கும்பல்களும் தாதாக்களும் வக்கீல்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆற்காடு சுரேஷ் கொலைக்கான பழிவாங்கல்; ரியல் எஸ்டேட் போட்டி; ஆருத்ரா பண மோசடி; ஸ்கிராப் தொழில் போட்டி; பார் கவுன்சில் தேர்தல் என ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பல்வேறு காரணங்கள் அடுக்கப்படுகின்றன.

அதுவும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக தமிழ்நாடு முழுவதுமிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒருங்கிணைந்ததாக கூறப்படுகிறது. 4-5 கூலிப்படைக் கும்பலுக்கு இதில் தொடர்பு உள்ளது என்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., த.மா.க. என கட்சி பேதமின்றி அரசியல் கட்சிகளிலிருந்து கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை, ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது என்று கூச்சலிட்ட அ.தி.மு.க-பா.ஜ.க. மட்டுமல்ல, சட்டம்-ஒழுங்கு சிறப்பாகத்தான் இருக்கிறது முட்டுக்கொடுத்த ஆளும் தி.மு.க-வின் முகத்திரையும் கிழிந்து தொங்குகிறது.

அதேப்போல், இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் வக்கீல்கள் என்பதும் பல சட்டவிரோத நடவடிக்கைகளில் தொடர்புடைய ஆம்ஸ்ட்ராங்க் மீது எந்த கிரிமினல் வழக்குகளும் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இதன்மூல, இக்கூலிப்படைகளுடன் போலீசுக்கு இருக்கும் கள்ள உறவு எவ்வளவு நெருக்கமானது என்பது வெளிச்சத்திற்கு வருகிறது. எனவே, ஆம்ஸ்ட்ராங் படுகொலை என்பது கார்ப்பரேட் கூலிப்படை கும்பல், போலீசு, அதிகாரவர்க்கத்தின் ஒரு பிரிவினர், அரசியல்வாதிகள் ஆகியோர் உள்ளடங்கிய சிலந்தி வலையை அம்பலப்படுத்திக் காட்டுகிறது. சம்போ செந்தில், சீசிங் ராஜா, அஞ்சலை, மலர்கொடி போன்றோர் இந்த கார்ப்பரேட் கூலிப்படை கும்பலின் ராஜ்ஜியத்தின் அங்கம்.

கார்ப்பரேட் கூலிப்படை கும்பலின் ராஜ்ஜியம்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டுவரும் சம்பவ செந்தில் என்பவன் ஸ்கிராப் தொழிலின் முக்கிய புள்ளியாக உள்ளான். ஸ்கிராப் தொழில் என்பது சென்னையின் புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூவர் மாவட்டங்களில் உள்ள கார்ப்பரேட் தொழிற்சாலைகளிடமிருந்து இரும்பு முதலிய கழிவுகளை வாங்கி விற்கும் தொழிலாகும். அரசியல்வாதிகள்-கூலிப்படை கும்பல் கார்ப்பரேட்டுகளுடன் கூட்டுவைத்துக் கொண்டு நடத்தும் இத்தொழிலில் நாளொன்றுக்கு பலநூறு கோடி ரூபாய் வரை புழங்குகிறது.

இந்தக்கூட்டுக் கொள்ளைக்கான டீலிங்கில், போட்டாப்போட்டி காரணமாக அவ்வப்போது கொலைகளும் அரங்கேறும். ஸ்கிராப் தொழிலில் ஈடுபடும் இக்கும்பல்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கூலிப்படையாக செயல்பட்டுவருகிறது என்பது முக்கியமானது. இக்கூலிப்படைகளை கொண்டுதான் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது கம்பெனிகளின் கழிவுகளை மக்கள் வாழும் பகுதிகளில் சட்டவிரோதமாக குவிக்கின்றன, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களையும் அடக்கி ஒடுக்குகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினால், அவர்களை ஒடுக்குவதற்கும் தனிப்பட்ட ரீதியில் மிரட்டுவதற்கும் இந்த கூலிப்படைக் கும்பல்தான் பயன்படுத்தப்படுகிறது. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களில் வணிக ரீதியான போட்டப்போட்டிகளையும் தொழிலை கைப்பற்றுவதில் எழும் பிரச்சினைகளையும் மிரட்டல், ஆட்கடத்தல். கொலை மூலம் சட்டவிரோதமாக தீர்த்துக்கொள்ள இத்தகைய கூலிப்படைகளைதான் கார்ப்பரேட் நிறுவனங்கள் களமிறக்குகின்றன.

1990-களில் மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்படும்போது, திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் உருவாகி அரசியலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். கிராணைட் கொள்ளை, மணற்கொள்ளை போன்றவற்றின் மூலம் இந்த தீடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் வளர்ச்சியடைந்ததுடன் இக்கொள்ளைகளை தங்குதடையின்றி செய்வதற்கான கூலிப்படையையும் சேர்த்தே வளர்த்தெடுத்தனர். தற்போது, கார்ப்பரேட் நிறுவனங்களில் காண்ட்ராக்ட்மயமாக்கம் என்பதன் இன்னொரு அங்கமாக காண்டாக்ட்மயத்துடன் இணைந்த கார்ப்பரேட் கூலிப்படை கும்பல் உருவாகி இருக்கிறது. இந்த கார்ப்பரேட் கூலிப்படை கும்பல் பரந்தவிரிந்த அளவிலான வலைப்பின்னலை கொண்டிருக்கின்றன. இத்தகைய கார்ப்பரேட் கூலிப்படைகள் உருவாகியிருப்பதும் அந்த கூலிப்படைகளுக்குள் போட்டியும் கொலைகளும் நடப்பதும் தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களில் காண்ட்ராக்ட்மயமாக்கம் என்பதன் இன்னொரு அங்கமாக காண்டாக்ட்மயத்துடன் இணைந்த கார்ப்பரேட் கூலிப்படை கும்பல் உருவாகி இருக்கிறது.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆருத்ரா மோசடியும் அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பா.ஜ.க-வின் பெயரும் அடிப்பட்டுவருவது சாதாரணமாக கடந்துசெல்லக் கூடிய செய்தியல்ல. குற்ற கும்பல்களின் கூடாரமாக உள்ள பா.ஜ.க. தமிழ்நாட்டில் வளர்ந்து வருவதற்கு இணையாக கார்ப்பரேட் கூலிப்படை கும்பல்களும் கிரிமினல் கும்பல்களும் வளர்ச்சியடைகின்றன என்ற மிகப்பெரிய ஆபத்தை இச்செய்தி உணர்த்துகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை உட்பட பலரும் ஆம்ஸ்ட்ராங்-ஆருத்ரா வழக்கை தொடர்புப்படுத்தி விசாரிக்க வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே கோரிக்கை வைத்து வருகின்றனர். அதிலும், பா.ஜ.க. சி.பி.ஐ. விசாரணை கேட்பதே ஆருத்ரா விவகாரத்தை மூடிமறைப்பதற்காகத்தான் என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர்.

ஏனெனில், சென்னை, அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவந்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக ஐந்து கோடி மக்களிடமிருந்து சுமார் ரூ.2,438 கோடியை கொள்ளையடித்தது. இதற்காக இந்நிறுவனத்தின் இயக்குநர் பாஸ்கரன், மோகன்பாபு, உஷா, ஹரீஷ், ராஜசேகர், பட்டாபிராமன், ரூசோ, மைக்கேல்ராஜ், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் மீது வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றுவதற்காக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையுடன் இக்கும்பல் கூட்டு வைத்துக்கொண்டது என நக்கீரன் பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது. ஆருத்ரா நிறுவனத்தின் ராஜசேகர், ரூசோ, ஹரீஷ் ஆகியோருடன் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையிலான வினோஜ் பி.செல்வம், அமர்பிரசாத் ரெட்டி, ஆர்.கே.சுரேஷ் அடங்கிய கும்பல் கூட்டணி அமைத்து கொள்ளையடித்த பணத்தை பங்குபோட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதற்காகத்தான், பல்லாயிரக்கணக்கான மக்களிடம் மோசடி செய்து கைது செய்யப்பட்ட ஹரீஷை பா.ஜ.க. விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக நியமித்துள்ளார் அண்ணாமலை, பா.ஜ.க-வில் பதவிபெறுவதற்காக பல கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக பின்னர் ஹரீஷ் வாக்குமூலம் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், ரவுடிகள் மற்றும் கூலிப்படையை வைத்தும், பா.ஜ.க-விடம் சரணடைந்தும் மோசடி பணத்தை தக்கவைத்துக்கொள்ள அந்நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகர் முயற்சித்தாலும் தமிழ்நாட்டில் பிற ரவுடிகளின் மிரட்டல்கள் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆம்ஸ்டிராங் தலையிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, பிரபல ரவுடியான மோகன்ராம், பாயாசம் என்கிற பரமசிவம், நெட்டூர் கண்ணன், சீசிங் ராஜா, சைதை குரு, நாகேந்திரன் என தமிழ்நாட்டில் இருக்கும் பெரிய ரவுடிகள் அனைவரும் இந்த ஆருத்ரா விவகாரத்தில் ஒன்று சேர்ந்ததாக தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு இதுவும் முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.

இதன்மூலம், தமிழ்நாட்டில் கார்ப்பரேட் கூலிப்படை கும்பலின் ராஜ்ஜியம் வளர்ந்துவருவதும் அண்ணாமலை பா.ஜ.க. மாநிலத் தலைவரான பிறகு அதை கட்டிப் பாதுகாக்கும் கிரிமனல் கூடாரமாக பா.ஜ.க. விளங்குவதும் அம்பலமாகிறது. எனவே, அடுத்தடுத்து நடக்கும் கொலை, போதைப் பொருள் கடத்தல், மோசடி உள்ளிட்ட குற்ற செயல்களை தடுக்க வேண்டுமெனில், பா.ஜ.க. கும்பலை தடை செய்ய வேண்டும் என்பதும் முன்நிபந்தனையாக உள்ளது.


மதி

(புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க