நியோமேக்ஸ் மோசடி! இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாறுவீர்கள் நடுத்தர வர்க்கமே?

நியோமேக்ஸ் போன்ற நிறுவனங்கள் அந்தந்தக் காலகட்டத்திற்கேற்ப அரசியல் கட்சிகளின் துணையோடும், ஆளும் அதிகார வர்க்கத்தின் துணையோடும்தான்  குறிப்பிட்ட வர்க்கப் பிரிவினரை இலக்கு வைத்து கொள்ளையடிக்க புற்றீசல் போலக் கிளம்பி வருகின்றன.

நீங்க போடுற பணம் மூன்றிலிருந்து ஐந்து வருசத்துல டபுளாகிரும். மூணு வருசம், அஞ்சு வருசம்னு ஸ்கீம்ஸ் இருக்கு. அதுல மாசமாசம் 12% வட்டி வாங்கிக்கலாம். மாசமாசம் வட்டி வாங்காம குறைந்த வருச ஸ்கீம்ல இரட்டிப்பாவும் வாங்கிக்கலாம். திருச்சி ஏர்போர்ட் பக்கத்துல மொராய்ஸ் சிட்டி நம்ம ப்ராஜக்ட் தான்.

இன்னும் விருதுநகர், தஞ்சாவூர் பக்கத்துல வல்லம் உட்பட பல இடங்களில் நம்ம ப்ராஜக்ட் போட்டிருக்கோம்; இதோ இதுதான் விருதுநகர் ப்ராஜக்டோட வரைபடம்; இதுல நீங்க போடுற பணத்துக்கு தகுந்த மாதிரி பிளாட்ட உங்க பேருக்கு அக்ரீமெண்ட் போட்டுருவோம்; இந்த இடத்துல நாம ஒரு ஷாப்பிங் மால் கட்டப் போறோம். இந்த லே அவுட்ல இந்த இடத்துல ஹாஸ்பிடல் வருது; இங்க “விஸ்டம் வெல்த் இன்டர்நேஷனல் ஸ்கூல்” இருக்கு; கேட்டரிங் காலேஜ் இருக்கு; இன்னும் ரெண்டு, மூணு வருசத்துல இந்த இடத்தோட மதிப்பு பல லட்சங்கள்ல போயிரும்;

அப்போ உங்க பேர்ல இருக்கற பிளாட்ட திருப்பி எங்க கிட்ட குடுத்துட்டு, உங்க பணத்த ரெட்டிப்பா வாங்கிக்கலாம்; அல்லது பிளாட்டையே நீங்க வச்சுக்கலாம்;”

இவையெல்லாம் நியோமேக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட போது அள்ளி வீசப்பட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகள். அதில் ஆரம்பக் கட்டத்தில் இணைந்த நடுத்தர வர்க்கத்தினரும் இதே பிரச்சாரத்தை தமது நண்பர்கள் – உறவினர்கள் வட்டாரத்தில் முன்னெடுத்தனர். அடுத்தடுத்த கட்டங்களில் ஆட்களைச் சேர்க்கச் சேர்க்க, குறிப்பிட்ட சதவீத கமிஷனும் இந்த ஏஜெண்ட்டுகளுக்கு அள்ளி வீசப்படுவதால், தன்னையும் அறியாமல் தனது சொந்த சித்தப்பா, பெரியப்பா, மாமன், மச்சான் என அனைவரையும் சில லட்சங்களை இதில் முதலீடு செய்ய வைத்தனர் இந்த ஏஜெண்ட்டுகள்.

இதுவல்லாமல் இவர்களுக்கு தாய்லாந்து டூர், புதிய கார் என இன்னபிற சலுகைகளும் ஏராளம்.


படிக்க: ஆருத்ரா பண மோசடி: பா.ஜ.க நிர்வாகி ஹரீஸ் கைது! அண்ணாமலையை கைது செய்! | தோழர் மருது


நடுத்தர வர்க்கத்தினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தச் சதுரங்க வேட்டையில் அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், அரசு மற்றும் பொதுத்துறைகளிலிருந்து ஓய்வுபெற்ற ஊழியர்கள் என பல தரப்பு நடுத்தர மக்களும் சில லட்சங்கள் முதல் கோடி ரூபாய் முதலீடு செய்தனர்.

படுத்துக் கிடந்த ரியல் எஸ்டேட் துறையில் அற்புதங்கள் நிகழ்த்தி, பலமடங்கு லாபம் கொட்டுவது போன்ற பிம்பத்தை கட்டியமைத்து, அதனால் பலமடங்கு வட்டி கொடுப்பதாக தனது சதுரங்க வேட்டையைத் தொடர்ந்து நடத்தி வந்தது நியோமேக்ஸ் நிறுவனம்.

Tycoons, எல்பின், UTS, FINE FUTURE, செந்தூர் பைனான்ஸ், பஜாஜ் அல்லையன்ஸ் INSURANCE, ஆருத்ரா போன்ற நிறுவனங்களால் ஏற்கனவே மக்கள் ஏமாற்றப்பட்டு இருக்கும் நிலையில், நியோமேக்ஸ் அந்த பித்தலாட்டத்தையே வேறு விதமாக முன்னெடுத்தது. மேற்கண்ட நிறுவனங்களெல்லாம் முதலீடு செய்யும் பணத்திற்கு எந்த உத்திரவாதமும் தராத போது, நியோமேக்ஸ் நிறுவனம் வீட்டுமனையை பணத்திற்கு ஈடாக அக்ரிமென்ட் போட்டுத்தருவதாக நம்ப வைத்தது; ‘பணம் போனாலும் பிளாட் இருக்கே’ என்று நம்பினர் முதலீட்டாளர்கள். ஆனால் இவர்களால் போடப்படும் அக்ரிமென்ட், பதிவு அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்யப்படுவதில்லை. முதலீடு செய்யும் பணமும் அரசு சொல்லும் வரைமுறைகளுக்கு உட்பட்டு பரிவர்த்தனை செய்யப்படுவதில்லை.

முதலீட்டாளர்கள் கொடுத்த பணத்திற்கு வெறும் 20 ரூபாய் பத்திரத்தில் நிலத்தின் சர்வே எண்ணைக் குறிப்பிட்டு உத்திரவாத பத்திரம் அளித்துள்ளனர். அதில் சர்வே எண்ணின் உட்பிரிவு எண் கூட குறிப்பிடப்படவில்லை.

மாதாமாதம் பெரும் தொகையை  வட்டியாக கொடுப்பதால்,  பலரும் தான் முதலீடு செய்த பணத்திற்கு நியோமேக்ஸ் கொடுத்த இந்த அற்ப உத்திரவாதங்களையே பெரிதும் நம்பினர்.

இன்று மாதாமதம் வரும் வட்டியும் வரவில்லை; முதலீடு செய்த லட்சக்கணக்கான பணமும் வரவில்லை. இவர்கள் கொடுத்த பத்திரத்தின் மூலம், முதலீட்டை திரும்ப  கேட்பவர்களின் தலையில்  மதிப்பு குறைந்த இடங்களைத் தான் கட்டப் போகிறார்கள்.


படிக்க: DHFL மோசடி – ஊழலின் ஊற்றுக்கண் தனியார்மயம் | சு. விஜயபாஸ்கர்


இந்த நிறுவனம் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கினாலும், திருச்சி பகுதி மக்களும் பெருமளவில் முதலீடு செய்துள்ளார்கள். குறிப்பாக திருச்சி பகுதியில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான BHEL -இல் பணிபுரியும் ஊழியர்கள் பெல் ஊழியர்கள் கூட்டுறவு வங்கியில் லட்சக்கணக்கில் கடன் வாங்கி இதில் முதலீடு செய்துவிட்டு இப்போது கையைப் பிசைந்துகொண்டு நிற்கின்றனர்.  ஓய்வு பெற்ற BHEL ஊழியர்கள் பலரும் தங்களது PF மற்றும் பணி ஓய்வின்போது கிடைத்த இதர பணப்பலன்கள் என மொத்தமாக பல லட்சங்களை இதில் முதலீடு செய்துள்ளனர். திருச்சி BHEL-இன் முன்னாள், இன்னாள் ஊழியர்கள் மட்டுமே 100 கோடி ரூபாய்களுக்கு மேல் இதில் முதலீடு செய்து ஏமாந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.  இதுபோல இன்னும் பல ஆயிரம் பேரின் சேமிப்பையும் எதிர்காலத்தையும் சூறையாடியிருக்கிறது நியோமேக்ஸ்.

பல மோசடி நிறுவனங்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் அதிக வட்டி ஆசை காட்டி மக்களை ஏய்த்த பிறகும் இதுபோன்ற ஏமாற்று நிறுவனங்களின் வலையின் நடுத்தர மக்கள் எதனால் விழுகின்றனர் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

பண மதிப்பழிப்பு, வங்கிகள் திவால், தொழில்துறை நசிவு, GST போன்ற பொருளாதாரத் தாக்குதல்களால், நிலவுகின்ற உத்தரவாதமற்ற சூழலில் எதில் முதலீடு செய்வது என நடுத்தர, உயர்நடுத்தர வர்க்க மக்கள் இயல்பாகத் தடுமாறி வருகின்றனர். இவர்களை இலக்கு வைத்து  நன்கு தெரிந்த நண்பர்கள், சொந்தங்கள் மூலமாகவே நம்பிக்கை ஊட்டி பெருமளவில் முதலீடு செய்ய வைத்துள்ளனர் இந்த நியோமேக்ஸ் நிறுவனத்தினர்.

முதலீடு செய்து ஏமாந்தவர்கள் பெரிதாக போராடவில்லை ஏன்?

இன்று இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ள போதும், முதலீட்டாளர்களில் பலர் போட்ட பணம் திரும்ப வர வேண்டுமே என்று அமைதி காக்கின்றனர். இந்த அமைதியையே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அதிகார வர்க்கத்தோடு இணைந்து மேலும் பல தகிடுதத்தங்களை அரங்கேற்றி வருகிறது நியோமேக்ஸ்.

‘நிறுவனச் சொத்தில் ஐந்து சதவீதத்தை விற்றாலே மொத்த முதலீட்டாளர்களுக்கும் பணத்தை செட்டில் செய்துவிட முடியும்’

‘நீங்கள் முதலீடு செய்த பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் பியூச்சரில் கிடைக்க இருக்கும் இரண்டு மடங்கு முதிர்வு தொகையை இழக்க வேண்டி வரும்’

‘முதலீட்டைத் திரும்பப் பெறுவதாலும், நிறுவனத்தின் மீது புகாரளிப்பதாலும் மேலும் நெருக்கடி தான் முற்றும். கொஞ்ச காலம் பொறுத்து இருந்தால் மீண்டு விடுவோம்’

‘முதலீட்டை இப்போது திரும்பத்தர முடியாது, வட்டி வேண்டுமானால் வாங்கி கொள்ளுங்கள்’

‘அரசியல் கட்சியினருக்கும், அதிகாரிகளுக்கும் சில இடங்களை விட்டு கொடுத்து (அதாவது லஞ்சம் கொடுத்து) பிரச்சனையை விரைவில் சரிக்கட்டி விடுவோம்’

இவையெல்லாம் தனக்கு எதிராக புகார் அளிக்காமல் இருக்க,  முதலீட்டாளர்களுக்கு  நியோமேக்ஸ் நிறுவனம் சொல்லும் சமாதான வார்த்தைகளாகும். ஆருத்ரா உள்ளிட்ட நிதிநிறுவனங்கள் மக்களை ஏமாற்றியபோது அதில் ஏமார்ந்த மக்கள் அந்நிறுவனங்களை முற்றுகையிட்டு போராட்டங்களை முன்னெடுத்தனர். அதுபோன்ற போராட்டங்கள் நிகழாமல் தடுக்கவும் இதுபோன்ற போலி சமாதானங்களைச் சொல்லி எதிர்ப்புணர்வை நீர்த்துப்போகச் செய்து வருகிறது நியோமேக்ஸ்.

மேலும் இதில் பணம் போட்டு ஏமார்ந்தவர்கள் சமூகப் பிரச்சினைகளுக்கு போராடத்துணியாத ‘இருக்கற எடம் தெரியாமல் இருக்கும்’ வகையைச் சேர்ந்தவர்கள். தனது பணத்தை இழந்தாலும் அதற்கெதிராக போராடத் துணியாதவர்கள். இப்படியானவர்களைத் தான் இந்த மோசடி நிறுவனங்கள் இலக்கு வைத்துத் துறத்துகின்றன.

நியோமேக்ஸ் – பாஜக கள்ளக்கூட்டு:

ஊழல், கொள்ளை,  பாலியல் வல்லுறவு, கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் பாஜகவில் இணைந்த பின்னர் குற்ற வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டு புனிதர்களாக்கப்படுவர்.

நியோமேக்ஸ் நிறுவனத்தை சார்ந்த இயக்குனர்கள் பாஜகவின் அண்ணாமலை நடத்தும் ஊழல் எதிர்ப்பு ஸ்பெசல் “என் மண் என் மக்கள்” பாத யாத்திரைக்கு 15 கோடி நன்கொடை அளித்துள்ளனர். இயக்குனர் குழுவில் உள்ள வீரசக்தி ஏற்கனவே பாஜகவில் இணைந்துவிட்டார் என்பதும், நன்கொடை விவகாரம் மூலமும், இந்த மோசடிப் பேர்வழிகளும் புனிதர் பட்டம் வாங்கத் தயாராகி விட்டனர் என்பதை அறிவிக்கிறது. ஆருத்ரா மோசடி நிதி நிறுவனத்துடனான பாஜக-வின் கள்ளக்கூட்டு அம்பலப்பட்டு நாறிப்போன நிலையில், நியோமேக்ஸுடனும் பாஜக கூட்டு வைத்திருப்பது தற்போது அம்பலமாகி விட்டது.

நியோமேக்ஸ் போன்ற நிறுவனங்கள் அந்தந்தக் காலகட்டத்திற்கேற்ப அரசியல் கட்சிகளின் துணையோடும், ஆளும் அதிகார வர்க்கத்தின் துணையோடும்தான்  குறிப்பிட்ட வர்க்கப் பிரிவினரை இலக்கு வைத்து கொள்ளையடிக்க புற்றீசல் போலக் கிளம்பி வருகின்றன.

வெடித்துச் சிதறி மோசடி அம்பலமான பிறகு தான் அந்நிறுவனத்தைப் பற்றி தெரிந்தது போல், அதிகார வர்க்கம் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக நாடகமாடுகிறது. இந்த கள்ளக் கூட்டினால் எப்போதும் பாதிக்கப்படுபவர்கள் மக்கள் தான்.

ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் தனியொரு நிதிநிறுவனம்  மக்கள் பணத்தை முதலீடாக பயன்படுத்த முடியாது, அதிக வட்டி கொடுக்க முடியாது என பல சட்ட வரையறைகள் இருந்தாலும், துணிந்து இது போன்ற நிதி நிறுவனங்கள் வருவதற்கும் மக்களைக் கொள்ளையடிப்பதற்குமான அடிப்படை எங்கு உள்ளது?

000

தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்துகின்ற இந்த அரசுக்கட்டமைப்பு; அதற்கு சாதகமான அரசியல் அமைப்புச் சட்டம்; முதலாளிகளோடு கள்ளக்கூட்டு வைத்துக் கொண்டு மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்படாத அதிகார வர்க்கம் ஆகியவற்றைக் கொண்ட இந்த இரட்டை ஆட்சி முறையில் தான் இதுபோன்ற மோசடிகளுக்கான அடிப்படை உள்ளது. இது தனியார் கார்ப்பரேட் முதலாளிகள் மக்களை கட்டற்ற முறையில் சுரண்டவும், மக்கள் சொத்துகளைக் கொள்ளையடிக்கவும் வழிவகை செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு.

இந்த அடித்தளத்திலிருந்துதான் நியோமேக்ஸ் போன்ற மோசடி நிதி நிறுவனங்கள் உருவாகின்றன. அரசு சார்ந்த EPF, LIC, வங்கிகள் ஆகியவற்றிலேயே மக்கள் போட்ட பணத்தை கார்ப்பரேட்டுகள் சூறையாடும் இன்றைய பாசிசச் சூழலில், இதுபோன்ற மோசடி நிதி நிறுவனங்களை நம்புவது எவ்வளவு பெரிய மடைமை என்பதை நடுத்தர வர்க்கம் உணர வேண்டிய தருணம் இது.

மக்களுக்குக் கடமைப்படாத, கார்ப்பரேட் முதலாளிகளுக்கே சேவையாற்றுகிற இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பைத் தூக்கியெறிந்து, உண்மையான ஜனநாயகத்தை நிறுவுவதற்கான போராட்டத்தின் ஊடாகத்தான், உழைக்காமலேயே செல்வம் சேர்க்க முடியும் என்ற பேராசைக் கருத்திலிருந்து உழைக்கும் மக்களாகிய நம்மை விடுவித்துக்கொள்ளவும், இதுபோன்ற மோசடிகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளவும் முடியும்.  இல்லையேல், நியோமேக்ஸ் மட்டுமல்ல இன்னபிற கார்ப்பரேட் கும்பல்களும் நமது வங்கிச் சேமிப்பை நம் கண் முன்னரே சுருட்டிக்கொண்டு செல்லும். அந்தக் காலம் வெகு தொலைவில் இல்லை.


வாகைசூடி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க