நிதி ஆயோக்-இன் மோசடி அறிக்கை: மோடியின் பாசிச ஆட்சியில் வறுமை ஒழிந்த வேடிக்கை!

நிதி ஆயோக்கின் அறிக்கையை காரணம்காட்டி அடித்தட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் பல நலத்திட்ட உதவிகளை வெட்டி அவர்களை பேரழிவுக்குள் தள்ளுவதற்கான பேரபாயம் உள்ளது.

ந்திய அரசாங்கத்தின் கொள்கை சிந்தனை குழுவான நிதி ஆயோக் கடந்த ஜனவரி 15-ஆம் தேதி இந்தியாவின் வறுமைநிலை சம்பந்தப்பட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகையில் 24.82 கோடி பேர் ‘‘பல பரிமாண வறுமையில்’‘ இருந்து மீண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அந்த அறிக்கையில், 2013 – 2014-இல் 29.17 சதவிகிதமாக இருந்த ‘‘பல பரிமாண வறுமை குறியீடு – எம்.பி.ஐ. (Multi-dimensional Poverty Index -MPI)’‘, 2022 – 2024-இல் 11.28 சதவிகிதமாக குறைந்துள்ளது என்றும் கடந்த ஒன்பது ஆண்டுகளில் சுமார் 24.82 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் வறுமை மிக அதிக அளவில் குறைந்துள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இதன்படி, உத்தரப்பிரதேசத்தில் 5.94 கோடி பேரும், பீகாரில் 3.77 கோடி பேரும், மத்தியப் பிரதேசத்தில் 2.30 கோடி பேரும் மற்றும் ராஜஸ்தானில் 1.87 கோடி பேரும் வறுமையில் இருந்து மீண்டதாக குறிப்பிட்டுள்ளது.

‘‘உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றான தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (National Food Security Act) பொது விநியோக முறையானது 81.35 கோடி பயனாளிகளை உள்ளடக்கி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு உணவு தானியங்களை வழங்கி வருகிறது. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானிய விநியோகத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பது போன்ற சமீபத்திய முடிவுகள் அரசாங்கத்தின் உறுதிபாட்டை எடுத்துக் காட்டுகின்றன’‘ என்கிறது நிதி ஆயோக் அறிக்கை.

இவ்வாறு, மோடி அரசாங்கம் ‘‘வறுமையை ஒழிப்பதற்கான முன்முயற்சிகளையும், உறுதியான அர்ப்பணிப்புகளையும் மேற்கொண்டு வருவதாக’‘ நிதி ஆயோக் அறிக்கை புகழ் பாடியுள்ளது. மேலும், 2030-க்கு முன் வறுமையை பாதியாக குறைக்கும் ‘‘நிலையான வளர்ச்சி இலக்கை’‘ (Sustainable Development Goal) இந்தியா அடையக்கூடும் என்றும் ‘பெருமிதம்’ கொள்கிறது.

மோடி தனது எக்ஸ் தளத்தில், ‘‘நிதி ஆயோக்கின் அறிக்கை, மிகவும் ஊக்கமளிக்கிறது, வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. நமது பொருளாதாரத்தில் மாற்றங்களை செய்வதில் கவனம் செலுத்துகிறது. அனைத்துத் துறை வளர்ச்சிக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்’‘ என ‘உறுதிமொழி’ பூண்டுள்ளார்.


படிக்க: பாசிச மோடி அரசை பணியவைத்த லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்


இப்படியாக, நிதி ஆயோக் மோடி அரசையும், மோடி நிதி ஆயோக்கையும் மாறி மாறி போற்றி புகழ்ந்து தள்ளியுள்ளனர்! சங்கிகளும் இந்த அறிக்கையை மோடி அரசின் சாதனையாக கொண்டாடி வருகின்றனர்.

மோடி ஆட்சியில் வறுமை ஒழிந்து வருகிறதா? நிதிஆயோக்கின் இந்தக் கட்டுக்கதையை கேட்பதற்கே வேடிக்கையாக இருக்கிறதல்லவா!

நிதி ஆயோக் இந்தக் கட்டுக்கதையை உருவாக்க எடுத்துக்கொண்ட தரவுகள், ஆய்வுமுறை என அனைத்துமே மோசடியானது என்பதனை தற்போது பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

தரவுகளை மூடி மறைத்துவிட்டு, வறுமை ஒழிந்துவிட்டதாம்!

கடந்த ஒன்பது ஆண்டுகளில், கிட்டத்தட்ட 24.82 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று நிதி ஆயோக் தனது அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால், இந்த முடிவிற்கு வந்தடைய நிதி ஆயோக் பயன்படுத்திய பல பரிமாண வறுமை குறியீடும், அதற்காக எடுத்துகொள்ளப்பட்ட அல்கிரே ஃபாஸ்டர் (Alkire Foster) என்ற ஆய்வுமுறையும் (Methodology) அடிப்படையிலேயே தவறானது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

‘‘இந்தியாவில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டமிடல்’‘ என்ற புத்தகத்தின் ஆசிரியரும், ஓய்வுபெற்ற இந்திய பொருளாதார சேவை அதிகாரியுமான கே.எல்.தத்தா, ‘‘இந்த எம்.பி.ஐ. முறையானது, இலக்குகளை நிர்ணயிக்க திட்டமிடுபவர்கள் அல்லது கொள்கை வகுப்பாளர்களால் பயன்படுத்தப்படுவதில்லை; வறுமை குறைப்புக்கான திட்டங்களை உருவாக்க உள்ளீடாகவும் பயன்படுத்தப்படுவதில்லை. சுருக்கமாக, எம்.பி.ஐ. வறுமையை பிரதிநிதித்துவப்படுத்தாது. வறுமை விகிதத்திற்கு மாற்றாக எம்.பி.ஐ. மதிப்பீட்டை காட்ட அரசாங்கம் முயற்சிக்கிறது. இது சரியல்ல’‘ என்கிறார்.

எம்.பி.ஐ. மூலம் வறுமையை கணக்கிட முடியாது என்று கூறும் பொருளாதார வல்லுநரான ஜீன் டிரேஸ், ‘‘குறுகிய கால வாங்கும் சக்தியை அளவிட எம்.பி.ஐ-யில் எந்த குறியீடும் இல்லை’‘ என்கிறார்.

பல பரிமாண வறுமை குறியீடு (எம்.பி.ஐ.) என்பது மக்களுக்கான சேவைகளை அளவிடக்கூடிய குறியீடு மட்டுமே. அதாவது, அரசாங்கத்தால் மக்களுக்கு வழங்கப்படக்கூடிய சலுகைகள் அல்லது மக்களுக்கு கிடைக்கக்கூடிய சில வசதிகளை அணுக முடியாதவர்களின் சதவிகிதத்தையே எம்.பி.ஐ. நமக்கு தெரிவிக்கும். ஆனால், வறுமையை அளவிட தனிநபரின் நுகர்வு செலவினங்களும் (வாங்கும் சக்தி) விலைவாசி உயர்வுக்கேற்ப ஊதியம் அளிக்கப்படுகிறதா என்பதையும் முதன்மையாக கணக்கிட வேண்டும்.

மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தப்பிறகு, 2014 முதல் 2022 வரையிலான எட்டு ஆண்டுகளில் நுகர்வு செலவினம் குறித்து எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை. அப்படியிருக்க மக்களின் வறுமையை கணக்கிட அடிப்படையான நுகர்வு செலவினங்களை பற்றிய தரவுகளே இல்லாமல், எம்.பி.ஐ. தரவுகளை கணக்குக்காட்டி இந்தியாவில் வறுமை ஒழிந்துவருகிறது என்று மோசடியான அறிக்கையை தயாரித்துள்ளது நிதி ஆயோக்.

மேலும், பல பரிமாண வறுமை குறியீட்டை கணக்கிட, தேசிய குடும்ப சுகாதார ஆய்வுகளின் (National Family Health Survey) தரவுகளைத்தான் நிதி ஆயோக் பயன்படுத்தியிருக்கிறது. இத்தரவுகளிலும் மிகப்பெரிய குளறுபடிகள் நடைபெற்றுள்ளது. பா.ஜ.க. 2014-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கடைசியாக 2005-06-இல் தான் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 3 (NFHS 3) எடுக்கப்பட்டிருந்தது. எனவே மோடி ஆட்சிக்கு வந்தப்பிறகு 2015-16-இல் எடுக்கப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 4-இல் 2006-2016 வரையிலான நிலைமைகளின் தரவுகள் இடம்பெற்றன, அதாவது, காங்கிரஸ் ஆட்சியின் தரவுகளும் இடம்பெற்றிருந்தன.

இதன்காரணமாக தங்களது கணக்கெடுப்பிற்கு தேவையான 2014-2016 வரை ஆண்டுவாரியான தரவுகள் இல்லாததால் மொத்தமாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 4-இல் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கான சராசரியை எடுத்து நிதி ஆயோக் பயன்படுத்தியுள்ளது. மேலும் எம்.பி.ஐ-யின் 12 அம்சங்களுக்கும் தேவையான ஆண்டுவாரி தரவுகள் இல்லாததால் ஆண்டுகளின் தொகுப்பான வளர்ச்சி விகிதத்தை கணக்கில் எடுத்துக் கணக்கிட்டுள்ளது, நிதி ஆயோக். அதாவது, காங்கிரஸ் ஆட்சிகாலத்தின் தரவுகளை எடுத்துக்கொண்டு மோடி ஆட்சியில் வறுமை ஒழிந்துவருகிறது என பொய் கணக்கு காட்டியுள்ளது நிதி ஆயோக்.

இதுபற்றி பேசியுள்ள இங்கிலாந்து பாத் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் சந்தோஷ் மெஹ்ரோத்ரா, ‘‘விலைவாசி உயர்வுக்கேற்ற ஊதியம் ஆறு ஆண்டுகளாக தேக்க நிலையில் இருந்தது. இது வாங்கும் சக்தியில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியது. காங்கிரஸ் அரசாங்கத்தில் 7.9 சதவிகிதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த ஒன்பது ஆண்டுகளில் (மோடி ஆட்சியில்) 5.7 சதவிகிதமாக குறைந்துள்ளது. இரண்டு ஆட்சிக் காலத்திலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவிகிதம் வெவ்வேறாக இருக்கும்பட்சத்தில் எப்படி இரண்டையும் தொகுத்து தரவுகள் எடுக்கமுடியும்’‘ என நிதி ஆயோக்கை கேள்வியெழுப்புகிறார்.

அடுத்ததாக, நிதி ஆயோக் ஆய்விற்கு எடுத்துக்கொண்ட  2019 மற்றும் 2021ஆண்டின் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 5 (NFHS 5)-இன் லட்சணத்தைப் பார்ப்போம்.  2020-இல் கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் 22 மாநிலங்களில் இந்த ஆய்வு நடத்தப்படவில்லை. இதன் காரணமாக, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 5-இல் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான தரவுகள் ஏதும் இடம்பெறவில்லை. கொரோனா காலத்தில் மக்கள் அடைந்த பாதிப்புகள் பற்றிய விவரங்களே இல்லாத ஆய்வின் தரவுகளைதான், நிதி ஆயோக் தனது எம்.பி.ஐ. ஆய்வறிக்கையை தயாரிக்க எடுத்துக்கொண்டுள்ளது. மேலும், கொரோனாவிற்கு பிறகும் தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் கணக்கெடுப்பு நடத்தப்படாமல் கைவிடப்பட்டதால்,வெறுமனே கொரோனாவிற்கு முந்தைய கால தரவுகளையே 2023 வரை நீட்டித்துக்கொண்டு ஆய்வை நடத்தியுள்ளது, நிதி ஆயோக்.


படிக்க: எது கேலிக்கூத்து? நிதிஷ்குமாரின் ‘பல்டி’யா,  இந்திய ‘ஜனநாயகமா’


மொத்தத்தில், கொரோனா பேரழிவாலும், அதனை கையாண்ட மோடி அரசின் பாசிச அணுகுமுறைகளாலும் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் எதிரொலிக்காத வகையில்தான் நிதி ஆயோக்கின் இந்த பல பரிமாண வறுமை குறியீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

உண்மையில், கொரோனா பெருந்தொற்றின்போது, எந்தவித திட்டமிடலும் இல்லாமல் மோடி அரசு பிறப்பித்த காலவரையற்ற ஊரடங்கு உத்தரவினால், லட்சக்கணக்கான மக்கள் நோய் தொற்றாலும், பசியாலும் மடிந்து போயினர். புலம்பெயர் தொழிலாளர்கள் நிர்கதியாக்கப்பட்டு பல மைல் தூரம் நடந்தே சொந்த ஊர்களுக்கு சென்றனர். எண்ணற்ற சிறு, குறு தொழில்கள் நலிவடைந்தன. பலர் வேலையிழந்து நிர்கதியாக்கப்பட்டனர்.  பல குடும்பங்கள் நஷ்டத்தில் இருந்து மீளமுடியாமல் இன்றளவும் தவித்து வருகின்றன. ஏழை-எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் கல்வியை தொடரமுடியாமல் இடைநிற்றலும் அதிகரித்தது. கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தில்தான் நமது நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பின் உண்மை நிலையும் வெளிச்சத்திற்கு வந்தது. உலகளவில் கொரோனா பெருந்தொற்றை மோசமாக கையாண்ட முதல் ஐந்து பேரில் மோடியும் ஒருவராக உள்ளார். மோடி அரசின் இந்த பேரழிவை பற்றிய தரவுகளை மறைத்துவிட்டு, வறுமை ஒழிந்துவருகிறது என்ற அப்பட்டமான பொய்யை தைரியமாக நிதி ஆயோக் கூறியுள்ளது.

உண்மையில், வறுமையில் இருந்து இத்தனை கோடி மக்கள் மீட்கப்பட்டுவிட்டார்கள் என்று நிதி ஆயோக் அறிக்கை கூறுவதற்கு நேர்மாறாக, மோடி அரசின் பொருளாதார பயங்கரவாத தாக்குதல்களால் இந்திய உழைக்கும் மக்களின் நிலைமை மேலும் மேலும் மோசமடைந்துதான் வருகிறது.

இந்தியாவின் உண்மை நிலைமை

தேசிய பல பரிமாண வறுமை குறியீடு என்பது சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கை தரம் ஆகிய மூன்று பரிமாணங்களின் அடிப்படையில் அளவிடப்படுகிறது. இந்த பரிமாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.ஐ-யின் 12 அம்சங்களான (Indicators) குழந்தைகளின் ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் இளம்பருவ இறப்பு, குழந்தை பிறப்பின்போது தாயின் ஆரோக்கியம், பள்ளிப் படிப்பு ஆண்டு, பள்ளி வருகை, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிநீர், மின்சாரம், வீடு, சொத்து மற்றும் வங்கிக் கணக்குகள் ஆகியவை வளர்ச்சி அடைந்துள்ளன என்று அப்பட்டமாக பொய் கூறுகிறது நிதி ஆயோக் அறிக்கை.

ஆனால், அண்மையில் வெளியான இந்தியாவின் வறுமை நிலை குறித்த பல அறிக்கைகளும் சம்பவங்களும் உண்மை நிலையை பளிச்சென்று எடுத்துக்காட்டுகின்றன.

கடந்தாண்டு அக்டோபர் 12-ஆம் தேதி இரண்டு ஐரோப்பிய நிறுவனங்களால் வெளியிடப்பட்ட உலகளாவிய பசி குறியீட்டு அறிக்கையில், 125 நாடுகளில் இந்தியா 111-வது இடத்தைப் பிடித்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஒரே ஆண்டில் நான்கு இடங்கள் பின்னுக்கு சென்றுள்ளது.

மற்றொரு ஆய்வறிக்கையின்படி, ஊட்டச்சத்து குறைபாடு கடுமையாக உள்ள நாடுகளின் பட்டியலிலும் இந்தியா இடம்பிடித்துள்ளது. ஒரு நாட்டில் உயரத்திற்கு ஏற்ப எடை இல்லாமல் இருக்கும் குழந்தைகளின் விகிதம் 15 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்குமானால் அது ‘‘மிக அதிக கவலைக்குரியது’‘ என வரையறுக்கப்படுகிறது. அவ்வாறு வரையறுக்கப்பட்ட ஒரே நாடு இந்தியா மட்டுமே. இந்தியாவில் 18.7 சதவிகித குழந்தைகள் உயரத்திற்கு ஏற்ப எடை இல்லாமல் இருக்கின்றனர்.

நிதி ஆயோக் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘‘பிரதமர் மோடியின் தலைமையில் நாடு கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. கிசான் சம்மன் நிதி விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றியுள்ளது’‘ என மோடி அரசின் ‘சாதனைகளை’ விவரிக்கிறார். ஆனால் உண்மையில், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி 2022 – 2023 ஆண்டுக்கான நிதியாண்டில் ரூ.68,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்தாலும், இந்த திட்டத்தால் நிலமற்ற கூலி தொழிலாளர்களுக்கு எந்த பயனும் கிடைப்பதில்லை, அவர்களின் தேவைகள் புறக்கணிக்கப்படுகிறது என தரவுகள் கூறுகின்றன.

அதைவிட, விவசாய மானியங்கள் குறைப்பு, விவசாயக் கடன் வழங்காமை, உரம் பூச்சிக்கொல்லி விலை உயர்வு, விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குதல் உள்ளிட்ட மோடி அரசின் விவசாய விரோத நடவடிக்கைகளால் மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் தற்கொலை 11,290 ஆக அதிகரித்திருக்கிறது. விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலை எண்ணிக்கையும் 6,083 ஆக அதாவது 41 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. மோடி ஆட்சியில் விவசாயிகளின் உண்மை நிலையை உணர்த்த டெல்லியில் அவர்கள் நடத்திய மாபெரும் போராட்டமே போதுமான சாட்சி.

இளைஞர்களின் வேலைவாய்ப்பு விகிதத்தை பொறுத்தவரை, கடந்தாண்டு ஜூலை மாத நிலவரப்படி, இந்தியாவில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.95 சதவிகிதமாக உள்ளது. இந்த கொடுமையில் இருந்து மீள எந்த துயரத்தை வேண்டுமானாலும் எதிர்கொள்ளலாம்  என்ற நிலைக்கு இந்திய இளைஞர்கள் வந்துவிட்டார்கள். இதற்கான அண்மைக்கால சான்றுதான், ஹரியானா மாநிலத்தில் நடந்த சம்பவம்.

கடந்த ஜனவரி மாதத்தில், ஹரியானா மாநிலம், ரோதக்கில் இஸ்ரேல் நாட்டில் வேலை செய்ய தச்சர்கள், கட்டுமானப் பணியாளர்கள் என 10,000 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் அரசு சார்பில் நடத்தப்பட்டது. இந்த வேலைகளில் சேர ஒடிசா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் குவிந்த அவலம் அரங்கேறியது.

இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது கொடூரமான இன அழிப்புப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. போர் சூழல் நிலவுகின்ற இஸ்ரேலுக்கு செல்வது உயிருக்கு உத்தரவாதமில்லை என்று தெரிந்தும், நம் நாட்டில் அதிகரித்து வரும் வேலையின்மையால் அவர்களுக்கு வேறுவழி தெரியவில்லை. ’‘இங்கே பட்டினியில் கிடந்து சாவதை விட, இஸ்ரேலில் வேலைபார்க்கும்போது சாவது எவ்வளவோ மேலானது’‘ என்கிறார் முதுகலை பட்டதாரியான ரோஹ்தேஷ்.

மேலும், மோடியின் ஆட்சியில் உழைக்கும் மக்கள் பலர் வீடற்ற அகதிகளாக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இந்த நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. இதனை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் காணொளி ஒன்று பரவியது. அதில், மும்பை உள்ளூர் ரயில் தண்டவாளங்களில் குடும்பத்துடன் அடுப்பு, பாத்திரங்கள் வைத்து உணவு சமைத்து கொண்டிருந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அருகில் சில சிறுமிகள் தண்டவாளங்களில் அமர்ந்து படித்து கொண்டிருந்தனர். எப்போது வேண்டுமானாலும் ரயில் வரலாம் என்ற ஆபத்தை உணராமல் குழந்தைகள் தண்டவாளங்களில் விளையாடி கொண்டும்; இன்னும் சிலர் தண்டவாளங்களில் தூங்கிக்கொண்டும் இருந்தனர். வறுமையின் கோரப்பிடியில் ஆபத்தான ரயில் தண்டவாளங்களில் தஞ்சம் புகுமளவிற்கு எண்ணற்ற உழைக்கும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நிலைமை இவ்வாறு இருக்கையில்,  2030-க்கு முன் வறுமையை பாதியாகக் குறைக்கும் ‘‘நிலையான வளர்ச்சி இலக்கை’‘ (Sustainable Development Goal) இந்தியா அடையக்கூடும் என்று கூசாமல் கதையளக்கிறது நிதி ஆயோக்.

‘வறுமை ஒழிப்பு’ அல்ல நலத்திட்ட ஒழிப்பு

மோடி அரசின் ஊதுகுழலாக இருக்கும் நிதி ஆயோக், தற்போது வறுமை ஒழிந்து வருவதாக மோசடியான அறிக்கை வெளியிட்டிருப்பது தனித்த நிகழ்வல்ல. இதனை எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் பிம்பத்தை ஊதிப் பெருக்குவதற்கான உத்தியாகவே நிதி ஆயோக் கையாண்டுள்ளது. மேலும், மோடி பிம்பத்தை காப்பாற்றுவதற்காக உண்மையான அறிக்கைகளை மறைக்கும் வேலைகளையும் நிதி ஆயோக் செய்து வருகிறது.

கிராமப்புற மற்றும் நகர்ப்புறக் குடும்பங்களின் வருமானம் மற்றும் செலவு விவரங்களை சேகரிப்பதற்காக நுகர்வோர் செலவின ஆய்வு (Customer Expenditure Survey) நடத்தப்படுகிறது. 2022-23 ஆம் ஆண்டுக்கான ஆய்வு முடிந்துள்ள நிலையில், அதன் முடிவுகளை கடந்த டிசம்பர் மாதமே வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு வெளியிடாமல், நிறுத்தி வைத்துள்ள நிதி ஆயோக், 2023-24 க்கான ஆய்வையும் முடித்துவிட்டு, இரண்டு ஆய்வுகளின் முடிவுகளையும் தொகுத்து ஒன்றாக வெளியிடுவோம் என்கிறது. இரண்டு ஆய்வு முடிவுகளையும் ஒரே நேரத்தில் வெளியிடுவதற்கு காரணமாக, ‘முடிவுகளின் நிலைத்தன்மையை’ ஆராயப்போவதாக பொய்சாக்கு சொல்கிறது நிதி ஆயோக்.

உண்மையில், இதில்தான் சூட்சமம் அடங்கியிருக்கிறது. ‘‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’‘-இன் தரவுகளின்படி இந்த ஆய்வு முடிவுகள் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகுதான் வெளியிடப்படும். அதாவது, நுகர்வோர் செலவின ஆய்வுக் குறித்தான அறிக்கை முடிவு வெளியிடுவதற்கு முன்பே நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துவிடும். இதன் மூலம், தேர்தல் முடியும்வரை இந்தியாவில் நிலவும் உண்மையான வறுமை விகிதத்தை திட்டமிட்டே மறைக்க முயற்சிக்கிறது மோடி கும்பல்.

இந்தியாவின் அவலநிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் ஆய்வறிக்கைகளை நிதி ஆயோக் முடக்கி வைப்பது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் 2017-18 க்கான நுகர்வோர் செலவின ஆய்வு நடத்தியபோது அதன் முடிவுகள் தரமற்றவையாக உள்ளன என காரணம் காட்டி முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தியது. ஆனால், பின்னர் அந்த ஆய்வு முடிவுகள் கசிந்த போதுதான் இந்தியாவில் வறுமைநிலை தீவிரமாகி இருப்பதை அந்த ஆய்வு அறிக்கை முடிவுகள் பட்டவர்த்தனமாக எடுத்துரைக்கிறது என்பது தெரியவந்தது. அப்போதும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காகத்தான் இந்த முடிவுகள் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்பட்டது.

இவற்றின்மூலம், தற்போது இந்த ஆய்வு வெளியாகியிருப்பது 2024 நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தியே என்பது தெளிவாகிறது. இதுமட்டுமின்றி வறுமை ஒழிந்துவருகிறது என்று நிதி ஆயோக் அறிக்கை கொடுத்திருப்பதற்கு பின்னாலும் அந்த அறிக்கையை பூரித்து மோடி கருத்து தெரிவித்ததற்கு பின்னாலும் மிகப்பெரிய பாசிச சதித்திட்டம் ஒளிந்துள்ளது.

தற்போது இந்தியாவில் 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நிதி ஆயோக்கின் ஆய்வறிக்கையில் 24.82 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த 25 கோடி பேருக்கான ரேஷன் பொருட்கள் வெட்டப்படுவதற்கான அபாயம் உள்ளது.

கார்ப்பரேட் திட்டங்களை மூர்க்கமாக அமல்படுத்திவரும் பாசிச மோடி அரசு அதற்கு ‘தொந்தரவாக’ உள்ள பல திட்டங்களை ஒழித்து வருகிறது. ஏற்கனவே மாநிலக் கட்சிகள் வழங்கிவரும் மக்கள் நலத் திட்டங்களை ‘‘ரேவ்டி கலாச்சாரம்’‘ என இழிவுப்படுத்தி அத்திட்டங்களை ஒழிப்பதற்கான வேலைகளை செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிதி ஆயோக்கின் இத்தரவுகளை காரணம்காட்டி அடித்தட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் பல நலத்திட்ட உதவிகளை வெட்டி அவர்களை பேரழிவுக்குள் தள்ளுவதற்கான பேரபாயம் உள்ளது.

ஆக மோடி ஆட்சியில் வறுமை ஒழிப்பு என்பதெல்லாம் வெறும் கற்பனை கதைகளாகத்தான் இருக்கும். நிலவுகின்ற அரசு கட்டமைப்பிற்குள் உழைக்கும் வர்க்கத்தைப் பீடித்திருக்கும் வறுமையை ஆளும்வர்க்கம் ஒருபோதும் ஒழிக்காது. அதுவும் மோடி போன்ற பாசிஸ்டுகளின் ஆட்சியில் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக உழைக்கும் மக்கள் மேலும் மேலும் கொடூரமாக சுரண்டப்பட்டு சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் என்பதுதான் எதார்த்தம்.


வெண்பா

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க