சமீபத்தில், இந்திய நாட்டின் கொள்கை சிந்தனைக் குழுவான (Policy think tank) நிதி ஆயோக் (Niti Aayog) வெளியிட்டுள்ள “நிலையான வளர்ச்சி இலக்குகளின் நிலை” (Status of Sustainable Development Goals) குறித்த அறிக்கையானது, குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதிலும் பசியை எதிர்த்துப் போராடுவதிலும், குஜராத் மிக மோசமாக செயல்படும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
குஜராத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட 39.7 சதவிகித குழந்தைகள் குறைந்த எடையுடனும் 39 சதவிகித குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவும் இருப்பதாக அறிக்கை கூறுகிறது. மேலும், 15-49 வயதுடைய கர்ப்பிணிப் பெண்களில் 62.5 சதவிகிதப் பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதே வயதுடையவர்களில் 25.2 சதவிகிதப் பெண்கள் 18.5 சதவிகிதத்திற்கும் கீழ் உடல் நிறை குறீயிட்டெண்ணை (Body Mass Index) கொண்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.
2023 – 2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஆயோக் அறிக்கையின்படி, மாநில வாரியான தரவரிசையில் குஜராத் பசி குறியீட்டில் 25-வது இடத்தில் உள்ளது. மத்தியப்பிரதேசம், ஒடிசா, அசாம் போன்ற பா.ஜ.க. கும்பல் ஆளும் பிற மாநிலங்களை விடவும் குஜராத் பின்தங்கியுள்ளது. மேலும் அறிக்கையின்படி, 2018-ஆம் ஆண்டில் 49 என இருந்த குறியீட்டெண், 2020-21-ஆம் ஆண்டில் 46 எனவும், 2023-24-ஆம் ஆண்டில் 41 எனவும் குறைந்துள்ளது. அதற்கேற்ப 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த எடை, வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் இரத்த சோகை பாதிப்புக்குள்ளான பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
படிக்க: என்.சி.ஆர்.பி-ன் தரவு: உண்மையான ‘’குஜராத் ஸ்டோரி’’
நிதி ஆயோக் அறிக்கை மட்டுமின்றி மேலும் பல அறிக்கைகளும் குஜராத் மக்களின் மோசமான நிலைமையை தங்களுடைய ஆய்வின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளன. சான்றாக, 2023-ஆம் ஆண்டின் உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீட்டின் (Global Multidimensional Poverty Index) அறிக்கையானது, ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குஜராத்தின் கிராமப்புறங்களில் வாழும் 44.45 சதவிகித மக்களும் நகர்ப்புறங்களில் வாழும் 28.97 சதவிகித மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இவ்வறிக்கைகள் ஆண்டுதோறும் குஜராத் மக்களின் நிலைமை மோசமடைவதையே எடுத்துக்காட்டுகின்றன. இனிவருங்காலங்களில் குஜராத்தில் வாழும் குழந்தைகள் மற்றும் பெண்களின் நிலைமை மேலும் மோசமாகும் என்பதை அறிக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன.
இதன்மூலம், மோடி-அமித்ஷா கும்பலால் “குஜராத் மாடல் வளர்ச்சி” என்று பெருமையாகப் பீற்றிக்கொள்ளப்படும் ‘வளர்ச்சி’ என்பது பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நலனுக்கானது அல்ல, அது உழைக்கும் மக்களுக்கு விரோதமானது; அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் கும்பல்களின் நலனுக்கானது என்பது நிதி ஆயோக் அறிக்கை மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
நன்றி: தி வயர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube