2014-ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, மாநிலங்களுக்குரிய நிதிப் பங்கீட்டை 42 சதவிகிதத்திலிருந்து 33 சதவிகிதமாக குறைப்பதற்காக, நிதி ஆணையத் தலைவர் ஒய்.வி. ரெட்டியுடன் சதித்திட்டத்தில் ஈடுபட்டதையும், அதற்கு ஒய்.வி.ரெட்டி அடிபணிய மறுத்ததையும் நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் அம்பலப்படுத்தியிருக்கிறார். ஒய்.வி. ரெட்டியுடனான மோடியின் திரைமறைவு பேச்சுவார்த்தைக்குத் தொடர்பாளராக இருந்த இந்த சுப்ரமணியம், அப்போது பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளர் பொறுப்பு வகித்தவர்.
சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையம் அரசு சாரா சிந்தனைக் குழாம், கடந்த ஆண்டு நடத்திய கருத்தரங்கில் சுப்ரமணியம் கலந்துகொண்டு உரையாற்றிய காணொளி சமூக வலைதளத்தில் வெளியானது. இக்காணொளி வெளியான பிறகு மோடி அரசின் சதித்திட்டம் அம்பலமானது. இதையடுத்து, பிரதமர் அலுவலகத்தின் தொடர் மிரட்டல்களால், அந்தக் காணொளியானது சமூக வலைதளத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
2013-ஆம் ஆண்டு அக்டோபரில் ஒய்.வி.ரெட்டி தலைமையிலான நிதி ஆணையக் குழு குஜராத் சென்றிருந்த போது, அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடி மாநில நிதிப்பகிர்வு தொடர்பாக தற்போதைய கருத்திற்கு நேரெதிரான கருத்துகளை முன்வைத்தார்.
‘‘நிதி ஆணையத்தின் தற்போதைய அணுகுமுறை மோசமான நிதி ஒழுக்கம் கொண்ட மாநிலங்களுக்கு சாதகமாக உள்ளது. அதே நேரத்தில், அதிக வளர்ச்சி விகிதம் உள்ள மாநிலங்களை ஏமாற்றமடையச் செய்கிறது. ஆணையம் தனது அணுகுமுறையை மாற்றி, வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க உத்வேகம் அளிக்கும் நோக்கில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும்; ஒன்றிய அரசு மாநிலங்களுக்குரிய நிதிப்பங்கீட்டை 42 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்’‘ என்று நிதி ஆணையத்தின் விதிமுறைகளை திருத்த வேண்டுமென்றார் மோடி. ஆனால், பிரதமரான உடன் இதற்கு நேரெதிரான நிலையெடுத்தது மட்டுமின்றி, சட்டத்திற்குப் புறம்பான முறையில் சதித்திட்டத்திலும் ஈடுபட்டிருக்கிறார் மோடி.
பட்ஜெட் எனும் மோ(ச)டி வித்தை!
மாநிலங்களுக்கான நிதிப் பங்கீட்டைக் குறைப்பதற்கான திரைமறைவுப் பேச்சுவார்த்தையில் மூக்குடைபட்ட மோடி, நிதிக்குறைப்பை பட்ஜெட் மூலம் நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறார். இரண்டே நாள்களில் தயாரிக்கப்பட்டது என மோடி பெருமையாகக் கூறிய 2015-2016 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு கடுமையாகக் குறைக்கப்பட்டது என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறார் சுப்ரமணியம்.
‘‘ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கான நிதி ரூ.36,000 கோடியிலிருந்து ரூ.18,000 கோடியாக சரிபாதி அளவுக்குக் குறைக்கப்பட்டது. இந்தத் துறைதான் அங்கன்வாடிகள் மூலமாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உணவு வழங்கக்கூடிய திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. அதேபோல, முந்தைய பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட 18.4 சதவிகித நிதி குறைவாக ஒதுக்கப்பட்டது’‘ என்பதையும் சுப்ரமணியம் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
‘‘ஒன்றிய அரசின் பட்ஜெட்டுகளில் உண்மைத்தன்மையானது பல்வேறு அடுக்குகளால் மூடிமறைக்கப்பட்டிருக்கிறது, ஹிண்டன்பர்க் போன்ற ஒரு நிறுவனம் ஆய்வு செய்தால் மட்டுமே வெளிப்படையான பட்ஜெட் சாத்தியமாகும்’‘ என்றும் சுப்ரமணியம் அக்கருத்தரங்கில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செஸ் மற்றும் கூடுதல் வரிகள் – கொள்ளைக்கான புதிய வழிகள்!
செஸ் மற்றும் கூடுதல் வரிகள் என்பவை வரிக்கு மேல் விதிக்கப்படும் வரிகளாகும். இவை சிறப்புத் தேவைகளுக்காக ஒன்றிய அரசால் வசூலிக்கப்படுபவையாகும். இவ்வாறு வசூலிக்கப்படும் நிதியை ஒன்றிய அரசு மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 271-இல் வரையறுக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஒன்றிய மோடி அரசானது, தனது விருப்பத்திற்கு ஏற்ப செஸ் மற்றும் கூடுதல் வரிகளை விதித்து மக்களை ஒட்டச் சுரண்டிக் கொழுக்கிறது.
ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு சிகரெட், பான்மசாலா, பெட்ரோலியம், நிலக்கரி, கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நீர், மணமூட்டப்பட்ட-இனிப்புச் சுவையூட்டப்பட்ட குளிர்பானங்கள், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் ஆகியவற்றின் மீதும், வருமான வரி மீதும், சுகாதாரம் – கல்வி, சாலை மற்றும் உள்கட்டமைப்புகள், தேசிய பேரிடர் தற்செயல் வரி மற்றும் ஜி.எஸ்.டி. விதிப்பால் ஏற்பட்ட இழப்பீட்டை ஈடு செய்வது என்ற பெயரில் செஸ் மற்றும் கூடுதல் வரிகளை ஒன்றிய அரசு விதித்து வருகிறது.
படிக்க: நிதி ஆயோக்-இன் மோசடி அறிக்கை: மோடியின் பாசிச ஆட்சியில் வறுமை ஒழிந்த வேடிக்கை!
குறிப்பாக, ‘‘2017-18-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், ஐந்து இலட்ச ரூபாய் வரையிலான தனிநபர் வருமானத்திற்கான வரி 10 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. இதனால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்வதற்காக ரூ.50 லட்சம் ரூபாய்க்கு அதிகமான தனிநபர் வருமானத்தின் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டது; 2018-19 ஆம் நிதியாண்டில், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 9 என குறைத்தது. இந்த இழப்பை ஈடு செய்வதற்காக சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் வரி அதிகரிக்கப்பட்டது’‘ என்ற பட்ஜெட் மற்றும் நிர்வாகத்திற்கான பொறுப்பு மையம் என்ற சிந்தனைக் குழாமைச் சார்ந்த மாலினி சக்ரவர்த்தியின் புள்ளிவிவரத்தை சுப்ரமணியம் ஆதாரமாகக் காட்டியிருக்கிறார்.
இவ்வாறு விதிக்கப்படும் செஸ் மற்றும் கூடுதல் வரி ஆகியவற்றால் ஒன்றிய அரசின் வரி வருவாய் அதிகரித்திருப்பதும் அக்காணொளியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 2011-12 ஆம் நிதியாண்டில் காங்கிரஸ் ஆட்சியில் வசூலிக்கப்பட்ட மொத்த வரிவருவாயில் செஸ் மற்றும் கூடுதல் வரிகளின் பங்கானது 10.4 சதவிகிதமாகும். ஆனால், மோடி ஆட்சியில், செஸ் மற்றும் கூடுதல் வரிகளால், 2017-18 ஆம் நிதியாண்டில் ரூ. 2.66 லட்சம் கோடியாக இருந்த வருவாயானது 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.4.99 லட்சம் கோடியாக, மொத்த வரி வருவாயில்13.9 சதவிகிதத்திலிருந்து 18.4 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.
மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு மோடி அரசு பதவியேற்ற போது 9.48 சதவிகிதமாக இருந்த பெட்ரோல் மீதான கலால் வரி (மாநிலப் பகிர்வுக்கு உட்பட்டது), 2017-ஆம் ஆண்டு வரை அப்படியே மாற்றமில்லாமல் நீடித்தது, ஆனால் அதன்பிறகு படிப்படியாக 1.9 சதவிகிதமாக மோடி அரசால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசுக்கு வரவேண்டிய பகிர்வுத் தொகை பாதிக்கு மேலாகக் குறைந்து விட்டது.
அதே சமயத்தில், முழுமையாக ஒன்றிய அரசு மட்டுமே எடுத்துக் கொள்ளும் செஸ் வரி கடுமையாக அதிகரிக்கப்பட்டு வந்துள்ளது. 2014-இல் பெட்ரோல் மீது 12 சதவிகிதமாக இருந்த செஸ் வரியானது 2017-இல் 17.46 சதவிகிதமாகவும், 2020-இல் 22.98 சதவிகிதமாகவும், அதே ஆண்டு இறுதியில் 32.9 சதவிகிதமாகவும் மோடி அரசால் அதிகரிக்கப்பட்டது. தற்போது 27.9 சதவிகிதமாக வசூலிக்கப்படுகிறது. செஸ் வரி குறைக்கப்பட்டாலும் பெட்ரோல் மற்றும் டீசல் மீது, சாலை மற்றும் உள்கட்டமைப்புகள் என்ற வகையில் கூடுதலாக வரி விதிக்கப்படுகிறது.
அந்தவகையில், பெட்ரோல், டீசல் மீதான வரிகளைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்ததன் மூலம் ஒன்பதே ஆண்டுகளில் சுமார் 32 இலட்சம் கோடிகளுக்கும் அதிகமாக மக்களிடமிருந்து மோடி அரசு பிடுங்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியிருக்கிறார்.
அதிகரிக்கும் கடன் – நிதி ஆயோக்கே அறியாத ரகசியம்!
பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியை வெட்டுவது, செஸ் மற்றும் கூடுதல் வரிகள் விதிப்பது ஆகியவற்றின் மூலம் தனது கஜானாவை நிரப்பிக் கொள்ளும் ஒன்றிய அரசு, கூடுதல் நிதியாதாரங்கள் என்ற பெயரில் பல அரசுத்துறை நிறுவனங்களின் மூலம் வெளிநாட்டுக் கடன்களை வாங்கிக் குவித்திருப்பது சுப்ரமணியம் பேசிய காணொளி மூலம் அம்பலமாகியிருக்கிறது. இந்தக் கடன்கள் எதற்காக, எந்தக் காலத்தில், எந்தக் கால வரம்பிற்குள் திருப்பி செலுத்துவதாக வாங்கப்பட்டன, கடன்களுக்கான வட்டிவிகிதம் என்ன எதுவும் தெரியவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். நிதி ஆயோக் தலைவருக்கே இந்த நிலைமை என்றால், நாடு எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை உணர முடியும்.
கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 100 லட்சம் கோடிகளை கடனாகப் பெற்றிருக்கிறது மோடி அரசு. இதனால் இந்தியாவின் கடன் ரூ. 155 லட்சம் கோடியாக அதிகரித்து மூன்று மடங்கு உயர்வு கண்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் இது 174 இலட்சம் கோடியாக அதிகரித்து விடும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
இவைமட்டுமின்றி, பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்வது என்ற பெயரில் தேசியப் பணமாக்கல் திட்டத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு அம்பானி-அதானி மற்றும் டாடாவிற்கு தாரை வார்க்கிறது மோடி அரசு.
படிக்க: சி.ஏ.ஜி. அதிகாரிகள் இடமாற்றம்: ‘பரிசுத்த ஆவி’யாகிவிட்டது மோடி அரசு!
இத்தனை இலட்சம் கோடிகளை மோடி அரசு என்ன செய்தது? மக்களுக்கும் நாட்டுக்கும் பலனளிக்கக்கூடிய வகையில் எத்தனை தொழிற்துறை, கல்வி, சுகாதார, விவசாய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன? என்ற கேள்விகளுக்கு மதுரை எய்ம்ஸ் திட்டமே சிறந்த சான்று. ஆனால், இதற்கு நேர்மாறாக கடந்த 9 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட் முதலைகள் பெற்ற 25 லட்சம் கோடி வாராக்கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறது பாசிச மோடி அரசு.
மறுபுறத்திலோ, பேரிடர் நிவாரண நிதியாக தமிழக அரசு கோரிய ரூ 21,692 கோடியில், இரண்டாம் தவணையான ரூ 450 கோடியையும் சேர்த்து ரூ. 950 கோடி மட்டுமே ஒதுக்கியிருந்தது மோடி அரசு. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் சில ஆயிரம் கோடிகளே இருப்பதால் அவ்வளவுதான் ஒதுக்க முடியும் என்றும், மீதமுள்ள தொகையை மாநில அரசுதான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்கிறார் பா.ஜ.கவின் நாராயணன் திருப்பதி. கடந்த எட்டாண்டுகளில் தமிழக அரசு கோரிய பேரிட நிவாரண நிதியில் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.எஸ்.டி, செஸ் மற்றும் கூடுதல் வரிகள் என்ற பெயரில் மாநிலங்களுக்கான வரி வருவாயின் பெரும்பகுதியைக் கைப்பற்றிக் கொள்ளும் மோடி அரசு, பேரிடர் காலங்களிலும் கூட மாநிலங்களே சமாளித்துக் கொள்ள வேண்டும் என்று ஒதுங்கிக் கொள்வதன் மூலம், மாநிலங்களைக் கப்பம் கட்டும் சிற்றரசாக நடத்தி வருவதையே தெளிவாகக் காட்டுகிறது.
வெளிச்சமாகும் மோடி வேடம் – வேடிக்கை பார்க்கும் எதிர்க்கட்சிகள்!
ஒன்றிய அரசின் ஒடுக்குமுறைக் கருவிகளில் ஒன்றாக விளங்கும் நிதி ஆயோக்கின் தலைவரே மோடி அரசை இன்று அம்பலப்படுத்தி இருக்கிறார். ஆனாலும் கூட, மாநில உரிமைகள் பறிக்கப்படுவதையும், பா.ஜ.க.வையும் எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள், மோடியின் திரைமறைவு பேச்சுவார்த்தை அம்பலமானது குறித்து வழக்கம்போல வெறும் அறிக்கையோடு முடித்துக் கொண்டுள்ளன. மோடியின் தோல்வி முகத்தைத் தீவிரப்படுத்தும் வகையில் கிடைக்கின்ற எந்த வாய்ப்பையும் பயன்படுத்தவோ, மக்களிடம் அம்பலப்படுத்தவோ செய்யமாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் சபதம் எடுத்துக் கொண்டு இருப்பதைப் போல அவற்றின் செயலற்ற தன்மை இருந்து வருகிறது.
ஏனெனில், மோடியின் தீவிர கார்ப்பரேட் சேவைக்கும் பாசிசத்துக்கும் அடிப்படையான தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற அதே மறுகாலனியாக்கக் கொள்கையைத்தான் இக்கட்சிகளும் தாங்கள் ஆளும் மாநிலங்களில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதாவது மோடியின் வழியில் சென்றுகொண்டே, ஒன்றிய அரசிடம் மாநில உரிமைகளையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்ட முடியுமென எதிர்பார்ப்பது முரணானதும், மக்களை ஏமாற்றுவதுமாகும்.
ஆகவே, பாசிசத்தை எதிர்க்கின்ற ஜனநாயக சக்திகள், மோடி அரசின் ஜி.எஸ்.டி, ஒரே நாடு – ஒரே வரி – ஒரே தேர்தல், புதிய கல்விக் கொள்கை, புதிய குற்றவியல் சட்டம் போன்ற இந்துராஷ்டிர கட்டுமானங்களுக்கு மாற்றாக ஜனநாயகப்பூர்வமான, மக்கள் நலன் கொண்ட சமூக-அரசியல்-பொருளாதாரத் திட்டங்களை முன்வைத்து மக்களைத் திரட்ட வேண்டியிருக்கிறது.
அப்பு
(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube