‘கிரேட் பிரிட்டனில்’ உணவு பொட்டலத்திற்காக அலையும் உழைக்கும் மக்கள்

உலகமயம்-தனியார்மயம்-தாராளமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் தோல்வி அடைந்துவிட்ட நிலையில், இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் மக்கள் எந்த மாற்றத்தையும் எதிர்நோக்கி காத்திருக்க முடியாது.

லகின் ஆறாவது பெரிய பொருளாதாரம் என்று சொல்லப்படும் இங்கிலாந்து நாட்டில், மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடுகிறார்கள் என்று சொன்னால் நம்மில் பலரும் நம்ப மறுப்பார்கள். ‘தி கிரேட் பிரிட்டன்’ என்ற பெயரில் 200 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா உள்ளிட்ட பல ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளைக் காலனியப்படுத்தி, அந்நாடுகளின் வளங்களை கொள்ளையிட்டுச் சென்ற, தற்போதும் செல்வச்செழிப்பு தொழில் வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடாக பார்க்கப்படுகின்ற இங்கிலாந்தில் மக்களின் அடிப்படைத் தேவையான உணவுக்கே தட்டுப்பாடு நிலவுகிறது என்பதை எளிதில் ஏற்க முடியாதுதான்.

ஆனால், நம்ப முடியவில்லை என்றாலும் உண்மை நிலவரம் அதுவே. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய கிரேட் பிரிட்டனில் மக்களின் வறுமை நிலை குறித்து “டிரஸ்ஸல்” எனப்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நாடு தழுவிய அளவில் ஒரு ஆய்வை மேற்கொண்டு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

2024-ஆம் ஆண்டின் நிலவரப்படி இந்நாட்டில் 93 லட்சம் மக்கள் கடுமையான வறுமையில் உழல்கிறார்கள். இது மொத்த மக்கள்தொகையில் ஏழில் ஒரு பங்காகும். இதில் 30 லட்சம் குழந்தைகளும் அடங்குவர். இவர்கள் நாள்தோறும் கருணை இல்லங்கள் வழங்கும் உணவை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமைகளை மாற்ற அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால் 2027-இல் இன்னும் 1.7 லட்சம் குழந்தைகள் உட்பட 4.25 லட்சம் மக்கள் இந்த பட்டியலில் சேர்ந்துவிட நேரிடும் அபாயம் உள்ளதாக அந்த அறிக்கை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இந்த 93 லட்சம் பேரில் யாருமற்ற அனாதைகள், தனித்து விடப்பட்ட முதியோர்கள், வேலையில்லாதவர்கள் மட்டுமல்ல, இவர்களில் 40 சதவிகிதம் பேர் ஏதோ ஒரு வேலையில் உள்ளவர்கள். ஆனால், வாய்க்கும் வயிற்றுக்குமே போதாத அளவு ஊதியத்தைதான் பெறுகிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

இப்படிக் குறைந்த ஊதியம் பெறுபவர்கள் அல்லது வருமானம் போதாதவர்கள் வேறு எந்த சேமிப்பையும் பெற்றிருப்பதில்லை. திடீர் தேவைகள், உதாரணமாக ஒரு மாத மின் கட்டணம் உயர்ந்து போனாலோ பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கைப்பேசி போன்ற அத்தியாவசிய பொருட்களை மாற்ற நேரிட்டாலோ மக்கள் தடுமாறுகிறார்கள், கடனுக்காக அலைகிறார்கள். மேலும், கடன் என்றால் வங்கிகள்தான் தர முடியும் அல்லது அரசு தர வேண்டும். இந்த நிலைமைகளில்தான் கருணை இல்லங்கள் வழங்குகின்ற உணவு பொட்டலங்களை தேடி வர வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட இம்மக்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

டிரெஸ்ஸல் அமைப்பின் அறிக்கையின்படி, 2024-ஆம் ஆண்டில் இதுவரை 30 லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. இது 2019-ல் 16 லட்சம் பொட்டலங்கள் என்று இருந்தது. ஒரு உணவு பொட்டலம் என்பது மூன்று நாட்களுக்குத் தேவையான உணவாகும். இந்த உணவு பொட்டலத்தைப் பெறுவதற்கு முன்கூட்டியே பதிவு செய்து டோக்கன்களை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த டோக்கன்கள் பல்வேறு சமூக நல அமைப்புகள், அனைத்து போலீசு நிலையங்கள் மற்றும் மருத்துவர்கள், பொறியியலாளர் போன்ற பொறுப்புள்ள தனிநபர்கள் (Professional) மூலம் வழங்கப்படுகின்றன. தேவைப்படுவோருக்கு கிடைக்கும்படி பரவலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த ட்ரெஸ்ஸல் நிறுவனம் ஒரு கிறிஸ்துவ மதம் சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். இது நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டும் 28,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை கொண்டும் நாடுதழுவிய அளவில் இயங்குகிறது. இவ்வமைப்பு உணவு வங்கி என்றே பரவலாக அழைக்கப்படுகிறது. இதைத் தவிர “பசியை ஒழித்து கட்டு”, “எல்லா குழந்தைகளும் முக்கியம்” என்று இன்னும் வேறு பல நிறுவனங்களும் உணவு வங்கிகளை நடத்துகின்றன. எனினும் டிரெஸ்ஸல் நிறுவனம் மொத்தத்தில் மூன்றில் இரண்டு பங்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறது.

இந்த உணவு வங்கிகளை சார்ந்திருப்போரின் விகிதம் ஆண்டுக்கு 20 சதவிகிதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல என்று ட்ரெஸ்ஸல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான எம்மா ரெவி (Emma Revi) அச்சத்தை வெளிப்படுத்துகிறார். மேலும், மக்கள் உணவு பொட்டலங்களை நாடுவதை வாழ்வதற்கான ஒரு வழியாக அங்கீகரித்து அனுமதிக்க முடியாது; அரசு முன்வந்து மக்களின் வாழ்நிலையை மாற்ற திட்டங்களை வகுக்க வேண்டும்; குறைந்தபட்சமாக அரசின் “யுனிவர்சல் கிரெடிட்” எனப்படும் மாதாந்திர பண உதவித் திட்டத்தை இன்னும் விரிவுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


படிக்க: இங்கிலாந்து ‘அம்மா’ உணவகத்தில் 5 இலட்சம் ஏழைகள் !


மேலும், இங்கிலாந்தில் மூன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு அரசின் அனைத்து உதவித் திட்டங்களும் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வகை குடும்பங்களில் மூன்றில் ஒரு குடும்பம் இத்தகைய உணவு வங்கிகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கும் அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களில் உள்ள சில சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளன அல்லது குறைக்கப்பட்டுள்ளன. இந்தத் தடைகளை எல்லாம் நீக்கி அரசின் உதவி திட்டங்களை அனைத்து மக்களுக்கும் நீட்டித்தாலே கணிசமான மக்கள் கடுமையான வறுமை நிலையிலிருந்து மீண்டுவிடக்கூடும் என்று கூறுகிறார் எம்மா ரெவி.

பிரிட்டன் நாட்டில், 2022-ஆம் ஆண்டு நிலவரப்படி, 2000 பவுண்டுகள் இருந்தால் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து வாழ முடியும் என்ற நிலை இருந்தது. அதுவே 2023-இல் பணவீக்கம் போன்ற காரணங்களால் 2500 பவுண்டுகள் தேவை என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது. ஒரு குடும்பத்தில் இரண்டு பெற்றோர்கள் இரண்டு குழந்தைகள் எனக் கொண்டால் அவர்கள் ஒரு கௌரவமான வாழ்க்கை வாழ 4200 பவுண்டுகள் மாத ஊதியமாகப் பெற வேண்டும். அரசு கணக்கெடுப்பின்படியே கூட ஏழில் ஒரு குடும்பம் இப்படி வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கின்றது.

இந்த நிலைமைகள் 2008 பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கடுமையாகி கொண்டே வருகிறது. அதனால் 2010-ஆம் ஆண்டில் அரசு பண உதவித் திட்டமொன்றைக் (UC – Universal Credit) அந்நாட்டு அரசு கொண்டு வந்தது. குறிப்பாக குறைந்த வருவாய் பிரிவு மக்களுக்காக கொண்டுவரப்பட்டது. 2010-ஆம் ஆண்டு இந்த யுசி திட்டத்திற்காக பட்ஜெட்டில் 200 கோடி பவுண்டுகள் ஒதுக்கப்பட்டது. அதுவே 2023-இல், 1200 கோடி பவுண்டுகள் ஒதுக்கியிருந்த போதிலும், அது மக்களின் தேவைகளை ஈடு செய்வதாக அமையவில்லை. அந்த அளவுக்கு மக்களிடம் வறுமை நிலை அதிகரித்திருந்தது.

யுசி எனப்படும் இந்த மாதாந்திர பண உதவி திட்டம் என்பது குறைந்த வருவாய் பிரிவினர், தங்குவதற்கு வீடற்றவர்கள், வேலையற்றவர்கள், சுய வேலைவாய்ப்பில் உள்ளவர்கள் மற்றும் வேலை செய்ய இயலாத மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி திட்டங்களாகச் செயல்படுத்தப்படுகின்றது. இவர்களின் ஆவணங்களை பதிவு செய்து கொண்டு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் மக்கள் தொகையில் 40 சதவிகிதம் மக்கள் கடுமையான வறுமையில் இருந்து தற்காலிகமாக காப்பாற்றப்படுகிறார்கள். உழைக்கும் மக்கள் குடும்பங்கள் என்று மட்டும் கணக்கிட்டால் மூன்றில் இரண்டு குடும்பங்கள் இதன்மூலம் பயனடைகின்றன. மேலும், இத்திட்டத்தின் கீழ் உதவிகளைப் பெற 18 முதல் 66 வரை வயதுவரம்பு வைக்கப்பட்டுள்ளது. 66-க்கு பிறகு வாழ என்ன செய்வது என்ற கேள்விக்கு விடை ஏதுமில்லை. 17 வயது வரை பெற்றோர் பொறுப்பு ஏற்க வேண்டும்.

ஆனால், உணவு வங்கிகளின் செயல்பாடுகளோ அரசின் உதவித்திட்டங்களோ இவை எல்லாமும் விளைவுகளுக்கு பிந்தைய நடவடிக்கைகள் ஆகும். இவற்றால் ஒருபோதும் நிலைமைகளை மாற்ற முடியாது. அதற்கு அரசியல் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம் வேண்டும். ஆளும் வர்க்கத்தின் நலனை பாதிக்கும் எந்த திட்டங்களுக்கும் அரசு தயாரில்லை என்பதனால்தான் இங்கிலாந்து தொடர்ந்து அரசியல் நெருக்கடியை சந்தித்து வருகிறது. மிகச் சமீபத்தில் இங்கிலாந்து மூன்று ஆண்டுகளில் மூன்று பிரதமர்களை பெற்றிருக்கின்றது என்கிற அளவுக்கு அதன் நெருக்கடிகள் உலகத்தின் கவனத்தைக் கவர்ந்தது.

இவை அனைத்தும் ஏகாதிபத்தியம் எந்த அளவிற்கு நெருக்கடியை சந்தித்து வருகிறது என்பதையே காட்டுக்கிறது. உலகமயம்-தனியார்மயம்-தாராளமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் தோல்வி அடைந்துவிட்ட நிலையில், இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் மக்கள் எந்த மாற்றத்தையும் எதிர்நோக்கி காத்திருக்க முடியாது. ஆளும் வர்க்கங்களையும் ஆட்சியாளர்களையும் நெருக்கடிக்குத் தள்ளும் கட்டமைப்பை மாற்றும் கோரிக்கைகளுடன் மக்கள் தங்களை அமைப்பாக்கிக் கொண்டு வீதியில் இறங்கி போராடுவதுதான் தீர்வு காணும் வழிமுறையாகும்.


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க