ஐரோப்பிய உணவு வங்கிகள்: ஏகாதிபத்திய உலகின் அவலம்

முதலாளித்துவத்தை மீட்பதற்கான இத்தகைய நடவடிக்கைகள், அழுகி நாறி வரும் முதலாளித்துவத்தின் முடை நாற்றத்தை மேலும் அதிகரிக்கவே செய்கின்றன. இதுதான் இந்த ஏகாதிபத்திய சொர்க்கபுரியின் அவலம்; ஏகாதிபத்திய மனிதாபிமானத்தின் கோர முகம். முதலாளித்துவம்தான் மனித நாகரீகத்தின் உச்சம் என்று கூச்சமின்றி மார்தட்டிக் கொள்ளும் முதலாளித்துவ அறிவு ஜீவிகளோ இதைப் பற்றி பேசுவதும் இல்லை, பேச விரும்புவதும் இல்லை.

டந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் (5-12-2022) Financial Times என்கிற ஆங்கில நாளிதழ், “ஐரோப்பிய மக்கள், வறுமையின் காரணமாக உணவு வங்கிகளுக்கு செல்வது அதிகரித்துள்ளது” (EU residents flock to food banks as poverty soars) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டை விட ஐரோப்பாவில் உணவு வங்கிகளுக்கான தேவை 20 – 30% அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக ஜெர்மனியில் 50% அதிகரித்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உணவு வங்கிகள் என்கிற முறை நமக்கு புதிதல்ல. தமிழ்நாட்டில், சென்னை, திருச்சி, மதுரை போன்ற ‘ஸ்மார்ட் சிட்டி’களில் (Helping Wall) என்ற பெயரில் நகரத்திற்கு ஒதுக்குப் புறமாக நகரத்தார் பயன்படுத்திய பழைய துணிகளைக் கொண்டு வந்து வைப்பதும் அதனை ஏழை எளிய மக்கள் எடுத்து பயன்படுத்திக் கொள்வதையும் நாம் பார்த்திருப்போம். அதன் அடுத்தகட்ட வடிவம்தான் இந்த உணவு வங்கிகள்.

உணவு வங்கிகள் என்பவை, வீடுகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் மீதமாகும் காய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் ரொட்டிகள் ஆகியவற்றை சேகரித்து இலவசமாக ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்யும் இலாப நோக்கற்ற தனியார் தொண்டு நிறுவனங்களாகும். ஐரோப்பா முழுவதும் கிட்டத்தட்ட 1100 உணவு வங்கிகள் செயல்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தங்களுக்கு கீழ் பல்வேறு கிளைகளைக் கொண்டு இயங்குகின்றன. இவை தேவைப்படும் குடும்பங்களுக்கு மூன்று, நான்கு நாட்களுக்கு அல்லது ஒரு வாரத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை தொடர்ச்சியாக வழங்குகின்றன.

படிக்க : ஆரோக்கியமற்ற உணவு – ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படும் இந்திய உழைக்கும் மக்கள் !

உதாரணமாக, ஜெர்மனியில் உள்ள ஒரு உணவு வங்கி டாஃபெல் (TAFEL). இது ஜெர்மனி முழுவதும் 962 கிளைகளைக் கொண்டுள்ளது. 8.9 கோடி மக்கள் தொகை கொண்ட ஜெர்மனியில் உணவு வங்கிகளுக்கு சுமார் 20 இலட்சம் மக்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். இதில் மூன்றில் ஒரு பகுதியினர் குழந்தைகள் மற்றும் இளைஞர்களாவர். மேலும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், புதிய வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கப்போவதில்லை என்று ஒரு உணவு வங்கி நிர்வாகி தெரிவித்துள்ளார். ‘புதிதாக கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதென்றால் எங்கள் சேவையை இரட்டிப்பாக்க வேண்டும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பாவில் விலைவாசி உயர்வுவானது விண்ணை முட்டிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வீட்டு வாடகை, எரிபொருள் செலவுகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஐரோப்பாவில் ஐந்தில் ஒரு பங்கு குடும்பங்கள் தங்கள் வீடுகளை சூடேற்றிக் கொள்ள முடியாமல் குளிர்காலத்தை எதிர்கொண்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. கொரோனா நெருக்கடி, உக்ரைன் ரஷ்யா போர், அதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் மீது ஐரோப்பா விதித்த பொருளாதாரத் தடைகள் இந்த நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த நெருக்கடியால் அன்றாடம் வறுமை, வேலையின்மை, பசி, பஞ்சம், பட்டினியால் மாண்டு வரும் உழைக்கும் மக்களுக்கு முதலாளித்துவம் ‘கருணையுள்ளத்தோடு’ வழங்கியிருக்கும் தீர்வுகளில் ஒன்றுதான் இந்த உணவு வங்கிகள். இதற்கு ‘உணவு உதவி: ஒன்று சேர்ப்பதற்கான நுழைவாயில்’ (Food Aid, a gateway to inclusion) என்று முழக்கங்களை வைத்துள்ளது பிரான்சில் உள்ள ஒரு உணவு வங்கி. இந்த ஒன்று சேர்த்தல் எப்படி நடக்கிறது என்பதுதான் கவனிக்க வேண்டியது. அதாவது, முதலாளித்துவ மேட்டுக் குடிகள், தங்களின் தேவைபோக வீசியெறியும் குப்பைகளைப் பொறுக்கி எடுத்து, சேகரித்து, பொட்டலம் போட்டு அதனை உழைக்கும் மக்களுக்கு விநியோகிக்கின்றனர். இதன் மூலமே இந்த ஒன்று சேர்ப்பு அதாவது, இந்த மாபெரும் ஏற்றத்தாழ்வு சீரமைக்கப்படுகிறது. இதற்கு ஐரோப்பா முழுவதும் மிகப்பெரிய வலைப்பின்னல் உருவாகி இருக்கிறது. அந்த அளவிற்கு உணவுப் பஞ்சமும் நெருக்கடியும் தீவிரமாகியுள்ளது. இந்த சேவையையும் ஏதோ முதலாளித்துவம் வேண்டி விரும்பி செய்வதல்ல. இதனையும் தடுத்துவிட்டால் முதலாளித்துவத்திற்கு எதிரான கிளர்ச்சிகளை தாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், தவிர்க்க முடியாமல் தனது குப்பைகளை கொண்டு இந்தக் ‘கீழ் மக்கள்’ உயிர்வாழ்வதை அனுமதிக்க வேண்டியிருக்கிறது.

முதலாளித்துவத்தை மீட்பதற்கான இத்தகைய நடவடிக்கைகள், அழுகி நாறிவரும் முதலாளித்துவத்தின் முடை நாற்றத்தை மேலும் அதிகரிக்கவே செய்கின்றன. இதுதான் இந்த ஏகாதிபத்திய சொர்க்கபுரியின் அவலம்; ஏகாதிபத்திய மனிதாபிமானத்தின் கோர முகம். முதலாளித்துவம் தான் மனித நாகரீகத்தின் உச்சம் என்று கூச்சமின்றி மார்தட்டிக் கொள்ளும் முதலாளித்துவ அறிவுஜீவிகளோ இதைப் பற்றி பேசுவதும் இல்லை, பேச விரும்புவதும் இல்லை.

படிக்க: உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி என்பது உழைக்கும் மக்களை சுரண்டவே!

தற்போது முதலாளித்துவத்தின் இந்த கட்டாய காருண்ய நடவடிக்கைக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒருபுறம், வணிக வளாகங்களும் பல்பொருள் அங்காடிகளும் உரிய தேதிக்குள் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதில் மும்முரமாக ஈடுபடுவதால் உணவு வங்கிகளுக்கு உணவு பொருட்களின் வரத்துகள் குறைந்துள்ளது. இதனால், தற்போதைய வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கூட அவர்களால் பூர்த்தி செய்ய முடிவதில்லை. இன்னொருபுறம், விலைவாசி உயர்வு, பசி பட்டினியால் உணவு வங்கிகளுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

முதலாளித்துவ மேட்டுக் குடிகளின் குப்பைகளால் இவ்வளவு மக்களை உயிர் வாழவைக்க முடியும் என்றால், அவர்கள் சாப்பிட்டு போடும் எச்சில் சோற்றில் இன்னும் பல கோடி பேரை உயிர் வாழ வைக்க முடியும் என்றுகூட முதலாளித்துவவாதிகளின் ‘கருணையுள்ளம்’ விரிவடையக் கூடும். இதன் அடுத்தகட்டமாக, அதற்கும் ஏதாவது மாற்றுவழி கண்டுபிடித்து இந்த மேட்டுக் குடியினர் தின்று போட்ட எச்சில் சோற்றையும் நவீன முறையில் பேக்கிங் செய்து நம்மை சாப்பிடவும் பழக்கி அதனை நாகரீகமாகவும் மாற்றி விடுவார்கள். அத்தகைய கேடு கெட்ட நிலையை நாம் கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்.

இசை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க