அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் மற்றும் Down to Earth இதழ் வெளியிட்ட அறிக்கை, 71 சதவித இந்தியர்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை என்றும், ஒவ்வொரு ஆண்டும் 17 இலட்சம் பேர் சத்துக்குறைவான உணவு உட்கொள்வதால் ஏற்படும் நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கிறது.
உலக மக்கள் தொகையில் 42% பேர் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை என்று “இந்தியாவின் சுற்றுச்சூழல் நிலை 2022 : புள்ளிவிவரங்களில்” என்ற தலைப்பில் அறிக்கை கூறுகிறது.
ஒரு சராசரி இந்திய குடிமகனின் உணவில் போதுமான பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் இல்லை என்று அறிக்கை கூறுகிறது. ஊட்டச்சத்து குறைவான உணவு உட்கொள்ளப்படுவதால், உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, சுவாசக் கோளாறுகள், நீரிழிவு, புற்றுநோய், பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது.
20 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய இந்தியர் ஒரு நாளைக்கு 35.8 கிராம் பழங்களை மட்டுமே உட்கொள்கிறார். ஒவ்வொரு நாளும் 200 கிராம் பரிந்துரைக்கப்படுகிறது. பெரியவர்கள் ஒரு நாளைக்கு 168.7 கிராம் காய்கறிகளை சாப்பிடுகிறார்கள். ஆனால் குறைந்தபட்ச பரிந்துரை ஒரு நாளைக்கு 300 கிராம் ஆகும்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கூற்றுப்படி, ஆரோக்கியமான உணவின் விலை ஒரு நபரின் வருமானத்தில் 63 சதவிதத்தை விட அதிகமாக இருந்தால் அது கட்டுப்படியாகாது என்று கருதப்படுகிறது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் மற்றும் Down to Earth இதழின் அறிக்கை, நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டு எண் பணவீக்கம் கடந்த ஆண்டில் 327 சதவிதம் அதிகரித்துள்ளது. நுகர்வோர் விலைக் குறியீடு – நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டை உள்ளடக்கியது – அதே காலகட்டத்தில் 84 சதவிதம் உயர்வைக் கண்டது. இந்தியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு அல்லது சில்லறை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.79 சதவிதமாக உயர்ந்தது.
Down to Earth இதழின் நிர்வாக ஆசிரியர் ரிச்சர்ட் மஹாபத்ரா, “உற்பத்திச் செலவு அதிகரிப்பு, சர்வதேச பயிர்களின் விலை உயர்வு மற்றும் தீவிர வானிலை தொடர்பான இடையூறுகள் ஆகியவற்றால் உணவுப் பணவீக்கத்தின் தற்போதைய உயர் நிலைகள் உந்தப்பட்டிருக்கின்றன. உண்மையில், CRISIL (Capital market company) தரவுகளின் பகுப்பாய்வு 2022 மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிக விகிதத்தில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
குடிமக்களின் உணவுமுறை ஆரோக்கியமானதாக இல்லை என்றும், “ஏற்றுக்கொள்ள முடியாத ஊட்டச்சத்து குறைபாடு” நாட்டில் தொடர்வதாகவும் அறிக்கை குறிப்பிட்டது. நாட்டுமக்களின் ஊட்டச்சத்து நிறைந்த உணவு தேவையை பூர்த்தி செய்யவில்லை என்றால், மக்களின் உடல்நலம் ஊட்டச்சத்து குறைபாட்டினால் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகும்.
ஒருப்புறம், மக்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்க்க முடியாத இந்த பாசிச மோடி அரசு, பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்தி, விலைவாசி உயர்வை ஏற்படுத்தி, ஜி.எஸ்.டி வரியை விதித்து, மானியங்களை குறைத்து, மக்கள் மீது வரிக்குமேல் வரியை போட்டு சுரண்டி வருகிறது. மறுபுறம், கார்ப்பரேட் முதலாளிகள், மோடி அரசின் உதவியுடன் உழைக்கும் மக்களின் உழைப்பையும், நாட்டின் இயற்கை வளங்களையும் சூரையாடி தனது சொத்து மதிப்பை பெருக்கிக் கொள்கின்றன. கார்ப்பரேட் முதலாளிகளையும், காவி அரசையும் ஒழிக்காத வரை ஊட்டச்சத்து என்பதெல்லாம் உழைக்கும் மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை.