சில நாட்களுக்கு முன்பு தெற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் நமீபியா நாட்டைப் பற்றி ஒரு செய்தியை உலகின் எல்லா மொழி ஊடகங்களும் வெளியிட்டன. மக்களுக்கு உணவளிக்க காட்டு விலங்குகளைக் கொல்ல அந்நாட்டு அரசே திட்டமிட்டுள்ளது என்பது தான் அந்த செய்தி.
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத கடுமையான வறட்சியால் நமீபியா நாட்டு மக்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர், 25 லட்சம் பேர் உயிரைத் தக்க வைத்துக் கொள்ள ஒருவேளை உணவுக்காக பரிதவிக்கின்றனர். குழந்தைகள் சிறுவர்கள் நிலைமையோ விவரிக்க முடியாததாக உள்ளது; நெஞ்சத்தைக் கலங்கச் செய்வதாக உள்ளது. இரு மாதங்களுக்கும் மேலாக இந்த நிலைமை நீடித்து வருகிறது. இதன் காரணமாக அரசு அவசர நிலையை அறிவித்திருக்கிறது.
கையறு நிலையில் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாத நமீபியா அரசு, காட்டு விலங்குகளைக் கொன்று மக்களுக்கு உணவளிக்கப் போவதாக அறிவித்தது. அதாவது யானை- 83, நீர்யானை- 30, காட்டெருமை – 60, இம்பாலா எனப்படும் நீண்ட கொம்புள்ள மான்கள்- 50, வரிக்குதிரை – 300, காட்டு மாடுகள் – 100 என்று மொத்தம் 723 விலங்குகளைக் கொன்று மக்களுக்கு உணவளிக்கப் போவதாக நமீபியா அரசு அறிவித்தது.
கடும் வறட்சியினால் மழையின்றி விவசாயம் பொய்த்துப் போக மக்களுக்கு உண்ண உணவில்லை, குடிக்கவும் தண்ணீர் இல்லை என்கிற நிலை உள்ளது. காட்டு விலங்குகளுக்கும் தண்ணீரோ தாவரங்களோ புற்களோ இல்லாத நிலைமையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விலங்குகளை வேட்டையாடி மற்ற விலங்குகளைக் காப்பதுடன் மக்களையும் காக்கிறோம் என்று அரசு விளக்கம் அளித்தது. இது அரசின் கையாலாகாத நிலைமை.
ஆனால் கோடிக்கணக்கான ஆப்பிரிக்க மக்கள் பரிதவிப்பதைப் பற்றி இவ்வளவு காலமாக வாயைத் திறக்காத உலக நாடுகளும் அவற்றின் ஊது குழல்களான தேசிய ஊடகங்களும் “காட்டு விலங்குகளைக் கொல்வதா?” என்று அலறின. ஆப்பிரிக்க கருப்பு இன மக்களைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்க முயன்றன. அம்மக்களிடமிருந்து விலங்குகளைக் காக்க வேண்டும் என்று அறைகூவின. “சரணாலயம் அமைத்துப் பாதுகாக்க வேண்டிய விலங்குகளை அரசே எப்படிக் கொல்லலாம்?” என்று கேள்வி எழுப்பின.
படிக்க: உள்நாட்டுப் போர் : சூடானுக்கு அகதிகளாகச் செல்லும் எத்தியோப்பிய மக்கள்
மக்கள் பட்டினியால் சாகிறார்களே அதற்கான தீர்வு என்ன என்று கேட்டால் விடை இல்லை. இது அயோக்கியத்தனம் இல்லையா? மனிதநேயம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் இவர்கள் ஜீவகாருண்யவாதிகளா? நாம் முதலில் இவர்களைத்தான் இனம் கண்டு கொள்ள வேண்டும்.
காட்டு விலங்குகளுக்காக பரிந்து பேசும் உலக நாடுகளால் ஆப்பிரிக்க மக்களின் பசி பட்டினியைப் போக்கிட முடியாதா? அதில் எவருக்கும் அக்கறை இல்லை என்பதைத் தவிர வேறு காரணம் இல்லை.
ஆனாலும் இன்று வரையிலும் நமீபியா உள்ளிட்ட தெற்கு ஆப்பிரிக்காவின் ஏழு நாடுகளில் தான் உலகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் யானைகள் வாழ்ந்து வருகின்றன (2 லட்சம் யானைகள்)
ஆயினும் காட்டு வளமும் கனிம வளமும் கொழிக்கும் நமீபியாவில் ஏன் இந்த நிலை?
இதுதான் கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கிய விஷயமாகும். நமீபியா நாடு நூறாண்டுகளுக்கும் மேலாக காலனி ஆதிக்கத்தின்கீழ் அடிமைப்படுத்தப்பட்டிருந்த நாடு. 1915 ஆம் ஆண்டு வரை ஜெர்மனியின் காலனியாக இருந்தது. ஒரு குறுகிய காலத்திலேயே ஜெர்மானிய ராணுவத்தினர் இலட்சத்துக்கும் மேற்பட்ட நிராயுதபாணியாயிருந்த ஹெரீரோ மற்றும் நாமா என்ற இருவேறு பழங்குடியின மக்களை கொன்றொழித்தனர். அது வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் முதற்பெரும் இனப்படுகொலை என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 1915 ஆம் ஆண்டு முதல் உலகப்போரில் ஜெர்மன் தோற்றதைத் தொடர்ந்து பிரிட்டிசாரின் தென்னாப்பிரிக்கா நாட்டின் காலனியாக மாறியது நமீபியா. அப்போது வரை இந்தப் பகுதிக்குப் பெயர் தென்மேற்கு ஆப்பிரிக்கா (South West Africa) என்று இருந்தது.
1966 இல் தான் ஸ்வாப்போ (SWAPO – South West Africa People’s Organisation) என்கிற விடுதலைப் போராட்ட இயக்கம் தோன்றி 24 ஆண்டுகள் ஆயுதப் போராட்டம் நடத்தி 1990 இல் விடுதலையைச் சாதித்தது. எனினும் பல்லாண்டு கால ஏகாதிபத்திய சுரண்டலால் நமீபியா எல்லா வளங்களையும் இழந்திருந்தது. மக்கள் தொடர்ந்து பட்டினியால் சத்தான உணவின்றி வாடினர். 24 சதவீத குழந்தைகள் சத்துணவின்மையால் உயரம் குறைந்தன; எடை குறைந்து எலும்புக்கூடுகள் போல் ஆயின. இன்றும் நாட்டின் தேவையில் 80 சதவீதம் உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்தாக வேண்டிய நிலைமை.
படிக்க: அங்கோலா: தங்கமும் வெள்ளியும் பட்டினியும் வறுமையும்
முன்னேறிய விவசாயம் இல்லை, மரபுசார் விவசாய முறையே இன்றும் தொடர்கிறது. இயந்திரத் தொழில் வளர்ச்சியும் இல்லை தேசிய பொருளாதாரம் என்று எதுவும் கட்டியமைக்கப்பட்டிருக்கவில்லை. இருப்பினும் அரசியல் ரீதியாக முதலாளித்துவ ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டு ஸ்வாப்போ இயக்கம் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தது. ஆனால் ஏகாதிபத்திய நாடுகளுடன் சமரசமாக உறவாடி கனிம வளங்களைக் கொள்ளையிட அனுமதித்தது. சொந்த நாட்டின் இறையாண்மையைப் பேணி விவசாயத்தை முன்னேற்றி உள்நாட்டுத் தேசிய பொருளாதாரத்தைக் கட்டியமைக்கத் தவறியது, உழைக்கும் மக்களின் நலனை அடகு வைத்துச் சிறு மேட்டுக்குடி கும்பல் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தியது ஆகிய காரணங்களால் இன்று இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள முடியாமல் திறனற்று நிற்கிறது.
இருப்பினும், தற்போது தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக வறட்சி எனும் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டிருப்பதற்கு என்ன காரணம்? யார் காரணம்? இந்த நிலைமை என்பது நமீபியாவுக்கு மட்டுமா என்றால் அதுவும் இல்லை.
ஜாம்பியா, ஜிம்பாப்வே, அங்கோலா, லெசாத்தோ, மாலாவி, போட்சுவானா, மொசாம்பிக், தெற்கு சூடான் என்று தெற்கு ஆப்பிரிக்காவில் பூமத்திய ரேகையை ஒட்டியும் அதன் தெற்கிலும் உள்ள பல நாடுகளிலும் நிலைமை இதுவாகத்தான் உள்ளது. எங்கெங்கும் தொடர் வறட்சி; வறட்சியைத் தொடர்ந்துப் பெருமழை பெருவெள்ளம். இவற்றுக்கிடையில் பெரும் காட்டுத்தீ என்று இயற்கையின் பெருஞ்சீற்றத்தை இந்நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன.
இந்த எல்லா நாடுகளிலும் வறுமை தலைவிரித்து ஆடுகிறது. மக்கள் சத்தான உணவு இல்லாமல் நோய் நொடியில் சிக்கி, கொடும் துன்பத்தில் உழல்கின்றனர். இந்த எல்லா நாடுகளிலும் மொத்தமாக 2.4 கோடி மக்கள் இன்று நிற்கதியான நிலையில் பசி பட்டினியால் செத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நாடுகள் அனைத்தும் இதை இயற்கை பேரிடர் என்று அறிவித்துள்ளன. உலக நாடுகளிடம் உதவி கோரி இருக்கின்றன.
தெற்கு ஆப்பிரிக்காவின் இப்பகுதியில் தொடர் வறட்சியில் 9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் அதிகரித்திருக்கிறது. தாவரங்களின் விதைகள் தொடர்ந்து வறட்சியின் வெப்பத்தால் முளைக்கும் திறனை இழந்து உலர்ந்து கருகி விடுகின்றன. நிலங்கள் பொட்டலாக மாறிப் போகின்றன.
வெப்பநிலை உயர்வின் காரணமாக மண் அதிக ஆழத்திற்குச் சூடாகி உலர்ந்து போய் இருப்பதால் அடுத்து பெய்யும் மழையை உடனடியாக உறிஞ்சிக் கொள்ளும் தன்மையை மண் இழந்து விடுகிறது. எனவே பெய்யும் மழை நீர் தரையின் மேலாகவே உருண்டு ஓடுவதால் பெருவெள்ளமாக மாறி அழிவை ஏற்படுத்துகிறது. நிலமும் குளிர்வதில்லை வெப்பமும் குறைவதில்லை. தெற்கு ஆப்பிரிக்கா முழுமைக்கும் இதுவே பிரச்சனை.
படிக்க: ஜோகன்ஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவின் தங்கத் துயரம்
இப்படி பூமி சூடேறிப் போனதற்கு அதிக அளவிலான கார்பன் வெளியேற்றம் தான் காரணம் என்பது சூழலியலாளர்கள் கருத்து. கார்பன் வெளியேற்றத்திற்கு பெட்ரோலிய எண்ணெய், நிலக்கரி போன்ற படிம எரிபொருட்கள் அதிகம் எரிக்கப்படுவதே காரணம். எரிப்பவை தொழிலில் வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகளே. ஆனால் அதன் பெருமளவிலான விளைவுகளை அனுபவிப்பது பிற பின்தங்கிய நாடுகள் தான். குறிப்பாக தெற்கு ஆப்பிரிக்க நாடுகள் தான். இவை உமிழும் கார்பன் அளவு 0.2 சதவீதம் மட்டுமே.
மேலும் சுற்றுச்சூழலியலாளர்கள், எல்- நினோ விளைவின் காரணமாகவே உலகம் வறட்சி, வெள்ளம் என்கின்ற எதிரெதிர் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது என்கின்றனர். அதாவது கடல் நீரின் மேற்பரப்பு அதிகம் சூடு ஏறுவதால் அதற்கு மேல் உள்ள காற்று மண்டலத்தைப் பாதித்து அதன் இயக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. காற்றின் திசை வழியை மாற்றுகிறது. இதனால் மேகங்களின் ஓட்டம் திசை மாறுவதுடன் தரையின் அதிக வெப்பம் காரணமாகக் குளிர்ந்து மழையாகப் பொழிய முடியாமல் மறுசுழற்சியாக நீண்டு மேகங்கள் மீண்டும் கடற் பறப்பையே அடைகின்றன.
காற்று மண்டல இயக்கத்தில் ஏற்படும் இந்த அராஜகமான நிலைமைகள் எல் – நினோ எனப்படுகிறது. இந்த எல் – நினோ விளைவு (climate crisis) தட்பவெப்ப சூழலை மேலும் மோசமாக்குகிறது. இதன் விளைவாக ஆப்பிரிக்கா குறிப்பாக தெற்கு ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அதிக வறட்சியையும் வட அமெரிக்கக் கண்டத்தின் தெற்கு பகுதியும் தென் அமெரிக்க நாடுகளும் பெரும் வெள்ளங்களையும் அடிக்கடி எதிர்கொள்ளுகின்றன.
கார்பனை அதிகம் உமிழ்ந்து பூமியின் காற்று மண்டலத்தைச் சீர்குலைத்த மேற்குலகம் அதன் விளைவுகளுக்குப் பொறுப்பெடுக்காமல் விலகிக் கொண்டு ஐ.நா. அமைப்புகளின் மூலம் அற்ப நிவாரண பணிகளை ஆங்காங்கே செய்து கொண்டு இருக்கிறது. இதன் மூலம் உலக மக்களைக் காப்பவர்களாகக் காட்டிக்கொள்ள முயல்கிறது.
கார்பன் வெளியேற்றத்தின் விளைவுகளான இயற்கைச் சீற்றத்தை எதிர்கொள்ள இயற்கைக்கு எதிராக தெற்காப்பிரிக்க பழங்குடியின அப்பாவி மக்கள்தான் மனிதக் குலத்தின் சார்பாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
எனவே வளர்ந்த நாடுகள் அற்ப நிவாரணம் கொடுப்பது என்றில்லாமல் தமது தவறுகளுக்குப் பரிகாரமாகச் சுற்றுச்சூழல் நிதி என்ற ஒன்றைத் தனியே ஏற்படுத்தி ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவக் கடமைப்பட வேண்டும் என்று சூழலியலாளர்கள் முன்வைக்கின்றனர்.
ஆனால், வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகளோ வளரும் நாடுகள் எனப்படும் பின் தங்கிய நாடுகளைச் சுரண்டி மேலும் கொழுக்கும் பொருட்டே செயல்பட்டு வருகின்றன.
சுந்தரம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram