அங்கோலா: தங்கமும் வெள்ளியும் பட்டினியும் வறுமையும்

கிராமப்புற வாழ்வே மொத்தமாகச் சீர்குலைக்கப்பட்டு கிராமப் பொருளாதாரமே அழிக்கப்பட்டு விட்டது. இப்போது உணவுப் பொருட்களுக்காக இறக்குமதியைச் சார்ந்திருக்கும் அவல நிலை தோன்றி நிலைப்பெற்று விட்டது.

ப்பிரிக்கக் கண்டத்தின் தென்மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலையொட்டி அமைந்திருக்கும் நாடு அங்கோலா. தங்கம், வைரம், தாமிரம் முதலிய கனிம வளங்களுடன் பெட்ரோலிய எண்ணெய் வளமும் நிறைந்த நாடு அங்கோலா. விலை உயர்ந்த வைரம் ஏற்றுமதியில் உலகில் நான்காவது இடத்தில் இருக்கிறது. ஆப்பிரிக்கா கண்டத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதுபோலவே அங்கோலாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 30% விழுக்காடு எண்ணெய் ஏற்றுமதியிலிருந்து கிடைக்கிறது. எனினும் இந்த கனிமவள வருமானங்களைக் கொண்டு தொழில் வளர்ந்து வேலை வாய்ப்புகள் பெருகி நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததா என்றால் அதுதான் இல்லை.

எதிர்மறையாக அங்கோலாவில் வறுமையும் பசியும் மக்களை அலைக்கழிக்கின்றன.

அது எப்படி? என்று நாம் புருவம் உயர்த்தும் வகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் இன்றைய நவீன காலத்தில் பசி பட்டினியால் பரிதவிக்கின்றனர். குழந்தைகள் சத்துணவின்றி ஊட்டச்சத்துக் குறைந்து தோல் போர்த்திய எலும்புக்கூடுகளாகக் காட்சியளிக்கின்றனர்.

ஒரு காலத்தில் எத்தியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளை உலகம் அப்படிக் காட்சிப்படுத்தியதை இன்று இன்னுமொரு ஆப்பிரிக்க நாடான அங்கோலா நினைவுபடுத்துகிறது. மொத்தம் 3.7 கோடி மக்கள் வாழும் நாட்டில் 75 லட்சம் மக்களுக்கு உணவில்லை. மக்கள் பட்டினியால் சாகின்றனர். ஐநா மன்றத்தின் மனித வளக் குறியீட்டு அட்டவணையில் மொத்தம் உள்ள 190 நாடுகளில் அங்கோலா 182வது இடத்தில் இருக்கிறது.

ஆனால், இன்னொரு பக்கம் பெரும் நகரங்களில் விமான நிலையங்களும் சொகுசு கார்களும் அகலச் சாலைகளும் ஆடம்பர விடுதிகளும் என்று சிறு கும்பலின் சொகுசு வாழ்க்கை முறையும் அங்கோலாவில் இல்லாமல் இல்லை. மற்ற நாடுகளைப் போலவே இங்கும் ஆடம்பரமும் ஏழ்மையும் அக்கம் பக்கமாகத் தான் நிலவுகிறது.

1975 வரை அங்கோலா போர்ச்சுக்கல் நாட்டின் காலனியாக இருந்தது. உள்நாட்டின் செல்வாதாரங்களான கனிம வளங்களைக் காலனியாதிக்க வாதிகள் கொள்ளையடித்துச் சென்றனர். அதனை எதிர்த்துத் தோன்றி வளர்ந்த சில விடுதலை இயக்கங்கள் ஆயுதம் தாங்கிப் போராடின.

அன்று ரஷ்யா மற்றும் கியூபா நாடுகளின் ஆதரவுடன் எம்.பி.எல்.ஏ. (Popular Movement for the Liberation of Angola – MPLA) என்கிற இடதுசாரி இயக்கம் காலனி எதிர்ப்பு போராட்டத்திற்குத் தலைமை ஏற்றது. அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஆதரவுடன் எம்.பி.எல்.ஏ. இயக்கத்துக்கு எதிராக யூனிட்டா (National Union for the Total Independence Of Angola – UNITA) என்கிற வலது சாரி இயக்கமும் காலனி அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது.


படிக்க: ஏகாதிபத்தியங்களால் வஞ்சிக்கப்படும் தெற்கு சூடான் | புகைப்படக் கட்டுரை


ஒரு கட்டத்தில் போர்ச்சுக்கல் அங்கோலாவை விட்டு வெளியேறியது. அங்கோலா ‘சுதந்திரம்’ பெற்றது. 1975 என்பது உலக மேலாதிக்கத்திற்காக அமெரிக்கா ரஷ்யாவுக்கு இடையில் பனிப்போர் நடந்து வந்த காலம் என்பது கவனத்திற்குரியது.

பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு எம்.பி.எல்.ஏ. இயக்கம் அரசியல் கட்சியாகித் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தது. ஐநாவும் அங்கோலாவில் எம்.பி.எல்.ஏ. கட்சியின் ஆட்சியை அங்கீகரித்தது. ஆனால் அமெரிக்கா அதை ரஷ்யக் கைக்கூலிகளின் ஆட்சி என்று முத்திரை குத்தி அங்கீகரிக்க மறுத்ததுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கோலா மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்தது.

அத்துடன் நில்லாமல் தமது ஆதரவு இயக்கமான யூனிட்டாவுக்கு ஆயுதங்களையும் நிதி உதவியையும் அளித்து அரசுக்கு எதிராகக் கலகம் நடத்தி நாச வேலைகளைச் செய்ய ஊக்குவித்தது. நாடு முழுவதிலும் விளை நிலங்களில் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்ததன் விளைவாக இன்றளவும் நிலத்தை உழுவதற்கு அஞ்சும் நிலைமை நீடிக்கிறது.

பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்த அந்த உள்நாட்டுப் போரில் 15 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். 40 லட்சம் மக்கள் உள்நாட்டில் சொந்த வாழ்விடங்களிலிருந்து இடம்பெயர்ந்து எங்கெங்கெல்லாமோ சிதறிப் போயினர். தவிரவும் 5 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். இந்த பேரழிவின் துணை விளைவாக உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்வாதார பாதுகாப்பு, விவசாயத்தின் வளர்ச்சி என்று எதுவுமே நடக்கவில்லை. மாறாக எல்லாமும் அழிந்து போயின. மக்களின் வாழ்க்கை நிலைமை காலனி ஆட்சிக் காலத்தை விடவும் சீரழிந்து போனது.

அங்கோலாவில் முக்கியப் பயிராக இருந்த காப்பி பெரிய அளவில் ஏற்றுமதியானது. பின்னர் அது 8% சதவீதமாகக் குறைந்து போனது. மக்காச்சோளம் மற்றும் உணவு தானிய உற்பத்தி அனைத்தும் பாதியாகக் குறைந்து போனது. மாடுகள், பன்றிகள், ஆடுகள் என்று கால்நடை வளர்ப்பு ஆறில் ஒரு பங்ககாகக் குறைந்து போயுள்ளது. எனில் கிராமப்புற வாழ்வே மொத்தமாகச் சீர்குலைக்கப்பட்டு கிராமப் பொருளாதாரமே அழிக்கப்பட்டு விட்டது. இப்போது உணவுப் பொருட்களுக்காக இறக்குமதியைச் சார்ந்திருக்கும் அவல நிலை தோன்றி நிலைப்பெற்று விட்டது.

எம்.பி.எல்.ஏ. கட்சியின் ஆட்சி உள்நாட்டுச் சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் காரணமாக்கிக் கொண்டு அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் பற்றி எந்த அக்கறையும் காட்டவில்லை. ஒரு சிறு மேட்டுக்குடி கும்பலின் நலனையே நாட்டு நலனாக உயர்த்திப் பிடித்தது. பராரிகளாகிப் போன மக்கள் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு எந்த புதிய கட்சியும் பெரிய அளவில் தோன்ற முடியவில்லை.


படிக்க: எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் : அமெரிக்காவின் மறைமுக ஆக்கிரமிப்புப் போரே !!


அதனைத் தொடர்ந்தும், 1975 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரையில் எம்.பி.எல்.ஏ. கட்சியின் சார்பில் ஜோஸ் எட்வர்டோ டாஸ் சாண்டோஸ் (José Eduardo dos Santos) என்பவர்தான் தொடர்ந்து 37ஆண்டுகள் அதிபராக இருந்தார். அதற்குப் பின்னரும் அதிபர் மிகப்பெரும் ஊழல்வாதி என்று அம்பலமாகி மக்களிடம் அதிருப்தி வலுத்திருந்த நிலையில் 2016ல் அதே கட்சியில் அடுத்த நிலையிலிருந்த ஜோஆவோ லவுரங்கோ (João Lourenço) என்பவர் தேர்தலில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று அதிபர் ஆனார்.

முன்பு ஆயுதம் தாங்கி கலவரங்கள் நடத்திய அதே யூனிட்டா இயக்கம் தான் அரசியல் கட்சியாக மாறி இப்போது தேர்தலில் நின்று தோல்வி அடைந்தது. வலுவான எதிர்க்கட்சி எதுவும் வளர்வதற்கான நிலைமைகளே இல்லை என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

கிராமப்புறங்களில் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வாழவும் இயலாமல் நகரங்களில் குடிபெயர்ந்து வேறு தொழில் துறைகளில் வேலை வாய்ப்புகளும் இல்லாத நிலைமையில் மக்கள் வெறுமனே நகர்ப்புறத்து நாடோடிகளாக வாழ்க்கை நடத்துகின்றனர். மூன்று வேளை உணவுக்கு அல்லாட வேண்டிய நிலைமை எனும் போது வாழ்விடம், சுற்றுப்புறச் சுகாதாரம், மருத்துவம், கல்வி என்கிற அத்தியாவசிய தேவைகள் எதுவும் இல்லாமல் மக்கள் பட்டினியிலும் பல வகை நோய் நொடிகளிலும் செத்து மடிகின்றனர். 45 சதவிகித சிறுவர்கள் கல்வியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மையாகும்.

ஏகாதிபத்தியங்களின் காலனி ஆட்சி காலம் முடிந்து போனது என்று கூறுகின்றனர். உலக நாடுகள் யாவும் சுதந்திரமாகச் சொந்த பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பி வருவதாகவும் பேசுகின்றனர். வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், விளிம்பு நிலை நாடுகள் என்றெல்லாம் கதை கட்டி அரசியல் பொருளாதார வல்லுநர்கள் மக்களுக்குப் பாடம் நடத்துகின்றனர். ஆனால் அங்கோலா உலகுக்கு எடுத்துச் சொல்லும் உண்மை என்ன?

ஏகாதிபத்தியங்கள் ஏழை நாடுகளைச் சுரண்டிக் கொள்ளையிடும் நேரடி காலனிய முறைகளில் அரைகாலனி, மறுகாலனி என்று காலனிய சுரண்டல் வடிவத்தில் மாற்றம் கொண்டு வந்திருக்கிறார்களேயன்றி ஏகாதிபத்தியங்கள் எப்பொழுதும் தங்களின் காலனியாதிக்கச் சுரண்டலை நிறுத்திக் கொண்டதில்லை. காலனி ஆதிக்கம் இல்லாமல் ஏகாதிபத்தியங்கள் ஒரு கணமும் வாழ முடியாது என்கிற வரலாற்று உண்மையைத் தான் அங்கோலா மக்களின் அவலமான வாழ்க்கை நிலைமை உலகுக்கு உணர்த்துகின்றது.


சுந்தரம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



2 மறுமொழிகள்

  1. In angola one bottle water is 4 dollars. And 1 banana smoked is 1 dollor.
    Also the people are lazy and don’t know to work 8 hers regularly. They have just killed among themselves and forgotten the Agriculture.
    I had been over there. The land is highly fertile. It’s Indians and Chinese at ground level and Portuguese and Europeans at higher level exploiting this poor people.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க