லகம் முழுவதும் பருவ நிலை மாற்றத்தால் ஒரு சில இடங்களில் அதீத மழையும், மேற்குலக நாடுகளில் அதீத வெப்பமும், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையான வறட்சியும் ஏற்பட்டு வருகிறது. உள்நாட்டுப் போர் மற்றும் ஏகாதிபத்திய நாடுகளின் சுரண்டல் பிடியில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானும் இதற்குப் பலியாகி வருகிறது.

தெற்கு சூடான் நாட்டில் நிலவிவரும் அரசியல் ஸ்திரமின்மையால், எதிர்வரப்போகும் பஞ்சத்திலிருந்து தங்களின் கால்நடைகள்  மற்றும் தங்களின் உணவுப் பாதுகாப்பைக் குறைந்தபட்சமாவது உறுதிசெய்யும் நோக்கத்துடன் அரசாங்கத்தை எதிர்பாராமல் நீர்நிலைகளைத் தாங்களே தூர்வாரி வருகின்றனர் பொதுமக்கள்.

தெற்கு சூடானின் ஜோங்லே மாநிலத்தில் ருவார் லீக் எனும் கிராமம் தற்போது நிலவிவரும் கடும் வறட்சியின் பாதிப்பில் சிக்குண்டுள்ளது. தண்ணீர் இருந்த இடங்களெல்லாம் பாலம் பாலமாக வெடித்துக் காணப்படுகிறது. கால்நடைகளை வளர்த்து வருபவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் கால்நடைகளை ஓட்டிச்சென்றால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் என்ற நிலையில் இருக்கின்றனர்.

படிக்க:
ஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் ! | தாகத்தில் தமிழகம் – ஆவணப்படம் !
பாகிஸ்தான் நிரம்பிவிட்டது நிலவுக்குச் செல்லுங்கள் ! – அடூர் கோபாலகிருஷ்ணனை மிரட்டும் கேரள பாஜக

இப்போது அவர்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு, குளம், குட்டைகளைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தங்கள் கால்நடைகளுக்கு அருகாமையிலேயே தண்ணீர் கிடைக்கும் என்கிறார் ஜேம்ஸ் ஜாங்கு நியாங்.

தெற்கு சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரின் விளைவாக பாரிய அளவிலான மக்கள் கொல்லப்பட்டதோடன்றி, மருத்துவம், தண்ணீர், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் அனைத்துமே சீர்குலைந்துவிட்டன.

(முகப்புப் படம் : ஜோங்லே மாநிலத்தின் ருவார் லீக் கிராமத்தினர் கடுமையான பஞ்சத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள குளம் ஒன்றைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.)

ஜேம்ஸ் ஜாங்கு நியாங், வயது 55 சிறு குட்டையுடன் ஊடாக நடந்து வருகிறார். வறட்சி அதிகமாகி இந்தக் குட்டை வறண்டு போகும்போது, இதை நம்பி வாழும் மக்கள் அனைவரும் தண்ணீரைத் தேடி அலையும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

ஜேம்ஸ் ஜாங்கு நியாங் தன்னுடைய கால்நடைகளின் ஊடாகச் செல்கிறார். உள்ளூரிலேயே அவற்றிற்குத் தண்ணீர் கிடைக்கும்பட்சத்தில் அவை பாதுகாக்கப்பட்டுவிடும் என்கிறார். கடந்த வருடப் பஞ்சத்தில் நிறைய கால்நடைகள் தண்ணீரின்றி மடிந்து விட்டன. என்னிடம் எத்தனை கால்நடைகள் இருக்கின்றன என எண்ணுவதேயில்லை, அப்படி எண்ணும்போது அவற்றில் ஒன்று இறந்துவிடும் என்ற மூடநம்பிக்கை இங்கு நிலவுகிறது என்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இந்தக் குட்டையைத் தூர்வாரும் பணியைத் தொடங்கிவிட்டோம். இதனால் கூடுதல் தண்ணீர் சேர்ந்து என்னுடைய கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்போகிறது, மேலும் அவை காணாமல் போவதும் தடுக்கப்படுகிறது என்கிறார் ஜேம்ஸ் ஜாங்கு நியாங்.

மண்வெட்டி, கோடரிகளுடன் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 316 பேர் ஒன்றிணைந்து தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

கொத்தி எடுக்கப்பட்ட மண்ணை கையாலேயே வாளியில் அள்ளிப்போடும் பெண். 20 நாட்கள், 80 மணி நேர வேலை என இலக்கு நிர்ணயிக்கப்பட்ட இந்த வேலையை முடிக்கும் பட்சத்தில் 50 கிலோ சோளம், 5 கிலோ பட்டாணி மற்றும் 3 லிட்டர் எண்ணெய் கிடைக்கும்.

ஆன்யீத் காரங் (ஆரஞ்சு நிற உடையணிந்திருப்பவர்) குட்டையில் உள்ள காலி டப்பா ஒன்றை அப்புறப்படுத்துகிறார். 2013-ம் ஆண்டு நடந்த சண்டை ஒன்றில் தன் கணவரை இழந்த தன் போன்ற பெண்களுக்கு இந்தக் குட்டை தூர்வாரப்படுவது ஆறுதலைத் தரும் என்கிறார்.

கால்நடைகள் அடைக்கும் பட்டியில் பொருட்களைக் காய வைக்கிறார் காரங்.  “என்னுடைய மகன்கள் வீட்டைப் பழுதுபார்ப்பதிலும், புணரமைப்பதிலும் குறியாக உள்ளனர். இதனால் என்னுடைய கால்நடைகள் கவனிப்பாரின்றி கிடக்கின்றன.” என்கிறார்

சக கிராமவாசியுடன் உரையாடும் காரங். இந்தக் குட்டையைத் தூர்வாருவதால்   “என்னுடைய கால்நடைகளுக்கு வறட்சி காலத்தில் தண்ணீர் கிடைக்கும். எங்கள் குடும்பத் தேவைகளுக்கும் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்வோம்.”

தன்னுடைய பசுமாட்டின் மேல் சாம்பலைத் தடவும் ருவார் லீக் கிராமவாசி ஒருவர். கால்நடைகளை நீண்டதூரம் மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது என்பது இங்கு மிகவும் ஆபத்தான காரியமாகிறது. “திருடர்களால் நீங்கள் கொல்லப்படலாம் அல்லது உங்கள் கால்நடைகள் திருடப்படலாம் என்ற அசாத்திய சூழல் நிலவுகிறது” என்கிறார் சீமோன் அன்யாங் கொர்யோம்.

ஜேம்ஸ் ஜாங்கு நியாங் மாட்டுச் சாணத்தை எரிபொருள் தேவைக்காக வெயிலில் உலர்த்துகிறார். என் கிராமத்திலேயே வைத்துப் பராமரிப்பதையே நான் விரும்புகிறேன். தொற்று நோய் பரவலைத் தடுக்கலாம், ஒருவேளை கால்நடைகள் பாதிக்கப்பட்டாலும் மருத்துவச் செலவுக்குப் பணம் ஏது என்கிறார்.

ருவார் லீக் கிராமத்தில் பால் கறக்கும் பெண் ஒருவர். வங்கிப் பரிவர்த்தனை வசதியேயில்லாத அல்லது மிகக் குறைந்த வசதி கொண்ட கிராமங்களில் கால்நடைகள் தான் ஒருவரின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

மேரி நியாஞ்ஜாக் புயோச்  வயது 35 – ஆறு குழந்தைகளுக்குத் தாயான இவர் தான் வளர்க்கும் ஆடுகள்தான் தன்னுடைய சொத்து. பணப் பரிவர்த்தனைக்கான வங்கி போன்றிருப்பது என்னுடைய ஆடுகள். குழந்தைகளைப் பராமரிக்கப் பணம் தேவைப்படும்போது ஆடுகளை விற்றுத்தான் சமாளிக்கிறேன் என்கிறார்.

தண்ணீர் கேனை சுத்தம் செய்யும் சிறுவன், அருகில் சாக்கடை நீரைப் பருகும் பசு ஒன்று – இடம் தோனவாய் கிராமம், ஜோங்லே மாநிலம்.

தூர்வாரும் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பத் தயாராகும் பெண்கள். “இந்தத் திட்டம் எங்களுக்குப் பல்வேறு வகையில் உதவி புரிகின்றது.  எதிர்காலப் பிரச்சினைகளை சமாளிப்பதற்கான வேலைகளைச் செய்வது நிறைவைத் தருகிறது. மற்ற கிராமங்களும் இது போன்ற வேலைகளை முன்முயற்சியுடன் செய்கின்றனர்.”


தமிழாக்கம் : வரதன்
மேலும் படிக்க : aljazeera

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க