பாகிஸ்தான் நிரம்பிவிட்டது நிலவுக்குச் செல்லுங்கள் ! – அடூர் கோபாலகிருஷ்ணனை மிரட்டும் கேரள பாஜக

விமர்சிக்கவே கூடாது; குறைந்தபட்சம் கருத்து சொல்லவும் கூடாது என்பதுதான் பாசிசம். காவிகள் நாட்டை மிக வேகமாக பாசிசமயமாக்கி வருகிறார்கள்.

0

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தின் பேரால் நடத்தப்படும் கும்பல் கொலைகளைக் கண்டித்து அண்மையில் 49 திரைக்கலைஞர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தனர். இவர்களுக்கு எதிராக நடிகை கங்கனா ரனாவத், இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட 61 பேர் சேர்ந்து நாட்டில் நடக்கும் கும்பல் கொலைகளை  பெரிதுபடுத்தி, நாட்டின் மானத்தை வாங்குவதாக பதில் கடிதம் எழுதினர். பிரதமர் அலுவலகம் செய்ய வேண்டிய வேலையை ‘பிரபல’ ட்ரோல்களாக முன்நின்று செய்தனர்.

இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன்.

பீகார் உயர்நீதிமன்றத்தில் மேற்கண்ட பிரபலங்களை சாட்சியாக வைத்து, கும்பல் வன்முறைகளை தடுத்து நிறுத்தக்கோரிய படைப்பாளர்கள் மீது வழக்கு ஒன்றும்கூட தொடுக்கப்பட்டுள்ளது. காவி கும்பல் வன்முறைக்கு எதிரான கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான கேரளத்தைச் சேர்ந்த பிரபல இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கும் காவி கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது.

கேரள பாஜகவைச் சேர்ந்த பி. கோபாலகிருஷ்ணன் தன்னுடைய முகநூல் பதிவில், “அடூர் கோபாலகிருஷ்ணனால் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை என்றால், அவர் தனது பெயரை மாற்றிக்கொண்டு, வேறொரு கிரகத்துக்குச் சென்று விடலாம்” என எழுதியிருந்தார்.

மேலும் அந்தப் பதிவில், “கிருஷ்ணனும் ராமனும் ஒன்றுதான். இது ராமாயண மாதம் (கேரள இல்லங்களில் ராமாயணம் படிக்கப்படும்). ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கம் இந்தியாவிலும் அண்டை மாநிலங்களிலும் ஒலிக்கும். இவற்றை இவர் கேட்க விரும்பாவிட்டால், அவர் ஸ்ரீஹரிகோட்டாவில் பதிவு செய்துகொண்டு, நிலவுக்குச் செல்லலாம்” எனவும் எழுதியுள்ளார்.

“மக்கள் பாஜகவுக்கு ஓட்டுப்போட்டது ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழங்கத்தான். நாங்கள் மீண்டும் இந்த முழக்கத்தை எழுப்புவோம், அடூரின் வீட்டின் முன்புகூட ’ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிடுவோம்” எனவும் மிரட்டுகிறார்.

இதற்கு , “பாகிஸ்தான் இப்போது நிரம்பிவிட்டதால், பாஜகவைச் சேர்ந்தவர் என்னை நிலவுக்குப் போகச் சொல்கிறார்” என பதிலளித்துள்ளார் அடூர்.

“பாஜக உள்ளிட்ட சங்கப் பரிவாரங்கள், விமர்சகர்களையும் நரேந்திர மோடி அரசை கேள்வி கேட்பவர்களையும் பாகிஸ்தானுக்குப் போ என்றுதான் சொல்வார்கள். ஆனால், இப்போது பாகிஸ்தான் நிரம்பி வழிகிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார் அடூர் கோபாலகிருஷ்ணன்.

“சந்திராயன் – 3 திட்டமிருந்து, எனக்கு பயணிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால், மகிழ்ச்சியாக நான் அதை ஏற்றுக்கொண்டு, நிலவைச் சுற்றிவருவேன்” என்கிற அவர், பாஜக தலைவர் கோபாலகிருஷ்ணன் கும்பல் வன்முறைகளை நியாயப்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தங்கள் கடிதம் எழுதியது சரிதான் என்பதை இவரின் செயல் சுட்டிக்காட்டிவிட்டதாகவும் அவர் மனோரமா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“ராமனின் பெயர் முழக்கமாகி வருவதை எதிர்த்து நாங்கள் கடிதம் எழுதினோம். மத சிறுபான்மையினரை அற்பமான விசயங்களுக்காக தாக்குவதும் அவர்களை ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிடச் சொல்வதும் இப்போது ஒரு வாடிக்கையாகிவிட்டது. கும்பலாக சேர்ந்து இத்தகைய குற்றங்களைச் செய்தால் தங்களை அடையாளம் காண முடியாது என தாக்குபவர்கள் நினைக்கிறார்கள்.  ஆனால், இத்தகைய குற்றங்களைச் செய்கிறவர்கள், மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டியவர்கள்” எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“பாஜக தலைவர் கடவுள் ராமனை நான் அவமதித்துவிட்டதாகச் சொல்கிறார்.  வக்கிரமான எண்ணம் கொண்டவரால் மட்டுமே அப்படி சொல்ல முடியும். எங்களில் எவரும் தனிப்பட்ட நபரை விமர்சிக்கவில்லை. அரசுக்கு எதிராகவும் பேசவில்லை. எங்களை எதிரியாகப் பார்க்க வேண்டியதும் இல்லை.

படிக்க:
‘சாஹேபுக்காக’ இளம் பெண்ணைக் கண்காணித்த அமித் ஷா பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழு தலைவராம் !
ராமனின் பெயர் சீர்குலைக்கப்படுவதை நிறுத்துங்கள் : மோடிக்கு கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள் கடிதம் !

ஆனால், அனைவருக்கும் இங்கே வாழ உரிமை உள்ளது. இதை மீறுவது தவறானது. இதைத் தடுக்க அரசு தவறினால், சமூகத்தில் அமைதியின்மை ஏற்படும். அதற்கான மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்” எனவும் அடூர் தெரிவித்துள்ளார்.

விமர்சிக்கவே கூடாது; குறைந்தபட்சமாக கருத்துக்கூட சொல்லக் கூடாது என்பதுதான் பாசிசம். காவிகள் நாட்டை மிக வேகமாக பாசிசமயமாக்கி வருகிறார்கள் என்பதை உணர்த்துகின்றன சமீபத்திய நிகழ்வுகள்.


கலைமதி
நன்றி: டெலிகிராப் இந்தியா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க