ஆப்பிரிக்கா கண்டம் முழுவதிலும் 3.5 கோடி மக்கள் சொந்த ஊர்களிலிருந்து இடம் பெயர்ந்து பக்கத்து மாநிலங்களிலும் அண்டை நாடுகளிலும் அகதிகளாக வாழ்கிறார்கள் என்கிற செய்தி அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. ஆப்பிரிக்க மக்களின் இடப்பெயர்வைக் கண்காணிக்கும் மையம் (IDMC – Internal Displacement Monitoring Centre) என்கிற ஆப்பிரிக்கக் கண்டத்து நாடுகளின் அரசுகள் சார்ந்த சமூக நல அமைப்பு இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.
2009 ஆம் ஆண்டில் 1.16 கோடி என்றிருந்த இந்த எண்ணிக்கை இன்று 2024 ஆம் ஆண்டில் 3.5 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 15 ஆண்டுகளில் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காகி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இயற்கை பேரிடர்களும் உள்நாட்டுப் போர்களும் தான் என்கிறது அறிக்கை.
இயற்கை பேரிடர்களிலும் மழைவெள்ளம் தான் 75 சதவீதம் மக்களின் இடப்பெயர்ச்சிக்குக் காரணமாகிறது. நீண்ட வறட்சி காரணமாக 11 சதவீதம் மக்கள் இடம் பெயர்கின்றனர். அடுத்து
14 சதவீத மக்களின் இடப் பெயர்வுக்கு போக்கோ ஹராம் போன்ற சில தீவிரவாத இயக்கங்கள் நடத்தும் உள்நாட்டுக் கலவரங்கள் மற்றும் அவ்வமைப்புகளுக்கு எதிராக அந்நாட்டு அரசுகள் நடத்துகின்ற அடக்குமுறைகள் காரணமாகின்றன.
இதில் 80 சதவீதம் பேர் குறிப்பாக காங்கோ,எத்தியோப்பியா, சோமாலியா, நைஜீரியா, மற்றும் சூடான் ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த மக்களாவர்.
மேலும் இந்த 15 ஆண்டுகளில் இயற்கை பேரிடர்களும் ஆறு மடங்கு அதிகமாகி இருக்கிறது என்பதையும் அறிக்கை பதிவு செய்துள்ளது.
ஆப்பிரிக்கக் கண்டத்து நாடுகளிடையே ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தம் ஒரு நாட்டிலிருந்து இடம் பெயரும் மக்களைப் பிற நாட்டு அரசுகள் ஏற்று ஆதரவளிக்க வகை செய்கிறது என்கிறார் இந்த அமைப்பின் இயக்குநர் அலெக்சாண்ட்ரியா பிலாக்.
படிக்க: ஆப்பிரிக்கா முழங்குகிறது: “ஜிம்பாப்வே மீதான பொருளாதார பயங்கரவாதத்தை நிறுத்து”
அறிவியல் ரீதியான புள்ளியியல் கணக்கெடுப்பு இதை வெறுமனே மக்களின் இடப்பெயர்ச்சி என்று குறிப்பிடுகிறது. ஆனால் மக்கள் சொந்த குடியிருப்பை விட்டு வெளியேறி வேறொரு உரிமையில்லாத இடத்தில் தங்கி வாழ நேரும் நிலைமை என்பது விவரிக்க முடியாத பல இன்னல்கள் நிறைந்ததாகும்.
இயற்கை பேரிடர்களுக்கு மனிதர்கள் நாம் என்ன செய்ய முடியும் என்று பேசிய காலம் முடிந்துவிட்டது. இயற்கை பேரழிவுகளுக்கு மனிதர்கள்தான், அதிலும் வளர்ந்த நாட்டு அரசுகள் தான் காரணம் என்று அறிவியல் எடுத்துரைத்து சில பத்தாண்டுகள் முடிந்து விட்டன.
ஆனாலும் காப் 29 மாநாட்டில் இயற்கை பேரழிவுகளுக்கு முக்கியமாகப் பொறுப்பேற்க வேண்டிய மேற்குலக வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகளோ நாங்கள் மட்டும் பெரிதாய் என்ன செய்து விட முடியும் என்கிற ரீதியில் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டன. ஆனால் விளைவுகளை இன்றும் பல கோடிக்கணக்கான ஏழை நாட்டு மக்கள்தான் எதிர்கொள்ளுகிறார்கள்.
உழைக்கும் மக்களாகிய நமக்கு மட்டுமல்ல இந்த இயற்கைக்கும் எதிராக இயங்கும் சக்திகளை துடைத்தொழிக்க அனைத்து நாட்டு மக்களும் அமைப்பாக வேண்டும். ஆங்காங்கே பகுதி அளவிலும், நாடளவிலும், உலக அளவிலும் ஒருங்கிணைய வேண்டும் என்பதே இன்றைய உடனடித் தேவையாக உள்ளது.
சுந்தரம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram