மிக்ஜாம் புயல் சென்னையை தாக்கிய ஒரு வாரத்திற்குள்ளாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழைபெய்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெருவெள்ளத்தால் புரட்டிபோடப்பட்டன.
அதிகபட்சம் 95 செ.மீ. வரை மழை கொட்டி தீர்த்ததால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறு, குளம், வாய்க்கால்கள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அறுபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக, தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டப் பகுதிகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின. தூத்துக்குடியில் ஏரல், சம்படி, இடையற்காடு, தலையாபுரம், கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளும் திருநெல்வேலியில் வண்ணாரப்பேட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம், சமாதானபுரம், பாளையங்கோட்டை மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளத்தால் சூழப்பட்டன.
தி.மு.க. அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தால், மூன்று நாட்களுக்கும் மேலாக உணவு, குடிநீரின்றி மக்கள் தவிக்கவிடப்பட்டனர். பல வீடுகளில் சீலிங் ஃபேன் அடித்துக்கொண்டு செல்லும் அளவிற்கு வீடு முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியது. பல இடங்களில் பயணிகளுடன் ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. வெள்ளத்திற்கு நடுவே நிறுத்தப்பட்ட ரயில்களுக்குள்ளிருந்த மக்கள் உயிரை கையில் பிடித்துகொண்டு ஒவ்வொரு நொடியையும் கடந்தனர். இந்த மழை வெள்ளத்தால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 55 பேர் பலியாகியுள்ளனர்.
இவ்வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மொத்தமாக இழந்து நிற்கின்றனர். ஆற்றங்கரையிலிருந்து அரை கி.மீ. தூரம்வரை தண்ணீர்வந்து ஒட்டுமொத்தமாக வீடுகளில் இருக்கக்கூடிய அனைத்துப் பொருட்களையும் அடித்து சென்றுள்ளது. வெள்ளத்திலிருந்து தப்பிச்சென்ற மக்கள் திரும்பவந்து கதவை திறந்து பார்த்தபோது, உள்ளே ஒரு பொருள் கூட கிடையாது. “வீட்டுக்கு வந்து பாத்தப்ப வீட்டுல ஒன்னுமே இல்ல. கொஞ்ச தூரம் தள்ளிப்போயி பாத்தேன். என்னோட ஒரே ஒரு தவள கிடச்சது. அத வெச்சுதான் வீட்ட கழுவிவிட்டுட்டு இருக்கன்” என்றார் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.
தங்கள் வாழ்நாளில் இவ்வளவு அதிக கனமழையை பார்த்திடாத தென்மாவட்ட மக்கள், “நாங்கள் எல்லாம் பிழைப்போமா, திருப்பி இருப்போமா என்று கடைசி நேரத்தில் நினைச்சுக்கிட்டோம், உயிர் பயத்தை பார்த்து இருக்கோம்” என்றனர்.
படிக்க: மழைவெள்ள பாதிப்பில் தூத்துக்குடி! | களத்தில் தோழர்கள்
இம்மக்கள் வாழ்க்கை நடத்துவதற்கு ஆதாரமாக இருந்த ஏராளமான ஆடு, மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கடற்கரையிலும் ஆற்றங்கரையிலும் மரங்களின் மீதும் இறந்துக் கிடந்தன. தங்களது பிள்ளைகளைப் போல வளர்த்த ஆடு மாடுகள், தங்கள் கண்முன்னே அடித்துசெல்லப்படும்போதும் அதனைக் காப்பாற்ற முடியாமல் மக்கள் கதறி அழுதனர். “ஆத்துல அடிச்சுட்டுப்போன ஆடுகள் கத்துவது எங்கள காப்பாதுங்கனு சொல்றது போலவே இருந்துச்சு” என்று புலம்புகின்றனர் மக்கள். களத்தில் சென்று பார்த்ததன் அடிப்படையில் ஏறக்குறைய 1000 மாடுகளாவது இறந்திருக்கும்.
தென்மாவட்டங்களில் பெய்த இந்த பெருமழை மக்களின் துயரங்களுக்கு காரணம் என்றாலும் முறையாக கால்வாய்கள், குளங்கள், ஆறுகள் ஆகியவை தூர்வாரப்பட்டு சீரமைக்காமல் இருந்தது; ஆற்றங்கரையோரம் இருந்த மக்களை முன்கூட்டியே வெளியேற்றாமல் இருந்தது; நீர் மேலாண்மை வசதி நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாதது; போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்தது உள்ளிட்ட அரசின் அலட்சிய நடவடிக்கைகளே மக்களை நிற்கதியாக்கியது.
தென்மாவட்ட வெள்ளப் பாதிப்புகளை பொறுத்தவரை, தி.மு.க. அரசால் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. வெள்ளம் வருவதற்கு முன்பு ஊருக்குள் வந்து மக்களுக்கு முறையாக எச்சரிக்கை விடுக்கப்படவுமில்லை. இதனால் பலரும் ஆறு, குளங்கள் உடையும்வரை ஆபத்தை அறியாமல் மழையைக் கண்டு ரசித்துகொண்டிருந்த பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சொல்லப்போனால், அரசுக்கே எவ்வளவு வெள்ளம் வரும், எந்தெந்த இடங்கள் பாதிக்கப்படும் என்பது குறித்த புரிதல் இல்லை. முறையான ஒரு குழு அமைத்து கணக்கெடுப்பு நடத்தி மக்களைப் பாதுகாக்கும் முயற்சியில் தி.மு.க. ஈடுபடவேயில்லை. பல இடங்களில் அரசு முகாம் அமைத்திருந்த மண்டபங்களிலேயே வெள்ளம் வந்தது. இதனால், மக்கள் முகாம்களின் மாடிகளில் தஞ்சம்புகும் அவலநிலை ஏற்பட்டது. முகாம்களில் அரசின் சார்பாக முறையாக உணவும் ஏற்பாடு செய்யவில்லை.
சில இடங்களில் அரிசி, பருப்பு, மளிகைப்பொருட்கள் போன்றவற்றை கொடுத்ததே ஒழிய அதனை சமைத்து சாப்பிடக்கூட மக்களிடம் அடுப்பு, பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் இல்லை என்பதைப் பற்றி கவலைப்படவில்லை. மக்கள் பொது சமையல்முறையில் சமைத்து சாப்பிட்டனர். ஆனால், அதனை அரசு செய்திருக்க வேண்டும்.
படிக்க: நெல்லை மழை வெள்ள பாதிப்பு | பாதிப்பில் மக்கள்
மீட்புப்பணியை பொறுத்தவரை, மீட்புப்படை, போலீசு, கிராம நிர்வாகம், கலெக்டர், தாசில்தார் என அரசு நிறுவனங்களுக்குள்ளேயே ஒருங்கிணைப்பு இல்லை. ஆனால், இதே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது மக்களை ஒடுக்குவதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்தன. மக்களை மீட்கும் விடயத்தில் எந்தவித அக்கறையும் இன்றி நடந்துகொண்டன.
தூத்துக்குடி மாவட்டம் சம்படியில் தோழர்கள் மீட்புப்பணிக்கு சென்றபோது, கர்ப்பிணியாக இருந்த ஒரு பெண்ணை மீட்பதற்கு தகவல் சொல்ல போலீசு நிலையத்திற்கு சென்றிருந்தோம். அப்போது அங்கிருந்த போலீசு அதிகாரி, கிராம நிர்வாக அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, “அந்த ஊரையே நாங்கள் மறந்துவிட்டோம்” என்று கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தோம்.
மேலும், மக்களை மீட்பதற்காக அமைக்கப்பட்ட மீட்புப்படையும் பயிற்சி எடுத்துக்கொண்ட வீரர்களால் அமைக்கப்பட்டதல்ல. இதனால் தண்ணீரில் தத்தளித்த மக்களை மீட்கமுடியாமல் போனது. மழை நின்று இரண்டு நாட்களுக்கு மேலாகியும் போலீசும் அரசு அதிகாரிகளும் எம்.பி., எம்.எல்.ஏ-க்களும் பகுதிகளுக்குள் செல்லவில்லை. படகுகள், வாகனங்கள் என ஊருக்குள் செல்வதற்கான எல்லா வசதி வாய்ப்புகளும் இருந்தும் மக்களைச் சென்று சந்திக்காமல் வஞ்சித்தனர். பல இடங்களில் மக்கள் போராட்டம் செய்த பின்னரே அரசு அவர்களை எட்டிப்பார்த்தது.
மக்களால் அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. அப்படி சென்ற ஒரு சில இடங்களிலும், அந்தந்த ஊர்களின் பாதிப்புகளை பற்றி அறிந்த ஊராட்சி தலைவர்கள், இளைஞர்கள் போன்றவர்களை பயன்படுத்தி மக்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்காமல் பார்வையாளர்களாக ஊரை வலம் வந்துகொண்டிருந்தனர்.
தன்னார்வலர்களும் இளைஞர்களும் சிறு சிறு அமைப்பை சேர்ந்தவர்களும்தான் ஊருக்குள் இறங்கி மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். வெள்ளம் வடியும் வரையில் எந்தக் கட்சியை சேர்ந்தவர்களும் ஊருக்குள் வந்து மக்களைப் பார்க்கவில்லை. பல ஊர்களுக்கு மக்கள் அதிகாரம் தோழர்கள்தான் முதலில் சென்றனர் என்பதனை மக்களே கூறினர்.
மேலும், தற்போதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சொற்பப் பணத்தை நிவாரணமாக வழங்கி அவர்களின் வாயை அடைப்பதில் மட்டும் தான் அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஆனால், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்ததில் மட்டும் 600 முதல் 700 வீடுகள் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன. 150 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகி இருக்கின்றன. வீடுகள், கோழிகள், ஆடு மாடுகள், விவசாய நிலங்கள் என மக்களின் வாழ்வாதாரமாக இருந்த அனைத்தும் பறிபோயுள்ளது. எனவே, வீடு கட்டி தர வேண்டும், நெல் பயிர்களுக்குரிய இழப்பீடு தர வேண்டும் போன்ற மக்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.
களச்செய்தியாளர்
(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube