உலகம் முழுவதும் 110 கோடிக்கும் அதிகமான மக்கள், மிக மோசமான வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் என ஐ.நா. வளர்ச்சித் திட்டம் அக்டோபர் 17 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் வறுமையால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்றும் கவலை தெரிவித்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 2023-இல் அதிகரித்த போர்கள்
ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முயற்சி (OPHI) அமைப்புடன் இணைந்து, இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள ஐ.நா. வளர்ச்சித் திட்டமானது, “இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு 2023-ஆம் ஆண்டு தான் அதிக போர்கள் உருவாகியுள்ளன,” எனவும்; “இந்த போர்களால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வறுமையின் அளவு மூன்று மடங்கு அதிகமாகி இருக்கிறது” என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. பல பரிமாண வறுமை என்பது வறுமையின் அளவீடு ஆகும். இது மனிதனின் நல்வாழ்விற்குத் தேவையான வீடு, சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, சுத்தமான குடிநீர், மின்சாரம், வேலையின் தரம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிக் கணக்கிடப்படுகிறது.
112 நாடுகளில் 110 கோடி பேர் பல பரிமாண வறுமை
ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முயற்சி (OPHI) அமைப்பும், ஐ.நா.வும் கடந்த 2010 முதல் ஒவ்வொரு ஆண்டும் 630 கோடி மக்களைக் கொண்ட 112 நாடுகளிலிருந்து தரவுகளைச் சேகரித்து தங்கள் பல பரிமாண வறுமைக் குறியீட்டு அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. அதில் தான், தற்போதைய ஆய்வின் படி 2024 ஆண்டு 110 கோடி மக்கள், பல பரிமாண வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது. “இந்த 110 கோடி மக்களில் 45.5 கோடி மக்கள் போர் ஏற்பட்டுள்ள நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்” என ஐ.நா. வளர்ச்சி அமைப்பின் தலைமைப் புள்ளியியல் நிபுணர் யான்சுன் ஜாங் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படைத் தேவைக்கு போராடும் இளைஞர்கள் – குழந்தைகள்
“போர்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் உள்ள ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான போராட்டம் மிகவும் கடுமையான போராட்டமாக உள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 18 வயதுக்கு உட்பட்ட சுமார் 58.4 கோடி மக்கள் தீவிர வறுமையை அனுபவித்து வருவதாகத் தெரிய வந்துள்ளது. இதில் 27.9 சதவிகிதம் பேர் குழந்தைகள். துணை-சஹாரா, ஆப்பிரிக்கா, தெற்காசிய நாடுகளில் தான் அதிக அளவில் மக்கள் பலபரிணாம வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 83.2 சதவிகிதம் மக்கள் இந்நாடுகளில் வறுமையில் உள்ளனர். இந்த வறுமையைக் குறைக்கும் நடவடிக்கையில் ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் ஈடுபடுவதற்கு, தற்போது நடைபெற்று வரும் போர் மிகப்பெரிய தடையாக இருப்பதாக ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முயற்சி அமைப்பின் சபீனா அல்கிரே குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் தீவிர வறுமையில் உழலுவோர் 23.4 கோடிப் பேர்! இந்தியாவைப் பொறுத்தவரை 140 கோடி மக்களில் 23.4 கோடி மக்கள் தீவிர வறுமையில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், எத்தியோப்பியா, நைஜீரியா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. அதாவது, உலகளவில் உள்ள 110 கோடி ஏழை மக்களில் ஏறக்குறைய 50 சதவிகித ஏழைகள், இந்த ஐந்து நாடுகளில் மட்டும் உள்ளனர்.
முதலாளித்துவம் இருக்கும் வரை ஏற்றத்தாழ்வுகள் கட்டாயம் இருந்தே தீரும். ஒரு சோசலிசத்தை நிறுவுவதன் மூலம் மட்டுமே ஏழ்மையை ஒழிக்க முடியும்; வறுமையை சுவடே தெரியாமல் ஒழித்துக்கட்ட முடியும்.
நன்றி: தீக்கதிர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram