டெல்லி ஜஹாங்கீர்புரி முஸ்லிம் மக்களின் வீடுகள் இடிப்பு : இந்துராஷ்டிரத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது !

வீடுகளை இடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் வீடுகள் மற்றும் கடைகள் இடிப்பதை தொடர்ந்து செய்து வந்தது காவிக் கும்பலான முனிசிபல் கார்ப்பரேஷன்.

0
டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் முஸ்லீம் மக்களின் வீடுகள், கடைகள் கடந்த ஏப்ரல் 20 அன்று இடிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் வீடுகளை இடிக்கக் கூடாது என்று உத்தரவிட்டப் பிறகும் டெல்லி முனிசிபாலிட்டி கார்ப்பரேஷன் பல வீடுகள், கடைகளை சட்டவிரோதமாக இடித்துள்ளது.
காவிக்குண்டர் படை, கடந்த ஏப்ரல் 16 அன்று முஸ்லீம் மக்கள் அதிகம் வாழும் ஜஹாங்கீர்புரி பகுதியில் ராம நவமி ஊர்வலத்தை நடத்தியது. தங்கள் கையில் ஆயுதங்களைக் கொண்டுச் சென்ற அக்கும்பல் அங்கு இருக்கும் மசூதிக்குள் நுழைய முற்பட்டுள்ளது. ஊர்வலத்திற்கு இந்துமதவெறியர்கள் ஆயுதங்கள் எடுத்துவந்ததை போலீசு கண்டுக்கொள்ளவில்லை. இந்நிலையில் மீண்டும் மீண்டும் ஆயுதங்களுடன் ஊர்வலத்தை நடத்திய காவிக் குண்டர் படை முஸ்லிம் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளை சேதப்படுத்தியது மட்டுமல்லாமல், வாகனங்களையும் கொளுத்தியுள்ளது. இதற்கான காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவிவுள்ளது.
ஆனால், ஏப்ரல் 16 இரவு ஜஹாங்கீர்புரி பகுதிக்குள் நுழைந்த டெல்லி போலீசு, காவிகளின் ஊர்வலத்திற்கு எதிராக கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி, முஸ்லீம் மக்களை கலவரத்தில் ஈடுபட்டவர்களாக சித்தரிக்க முயற்சித்தது. பல வீடுகளுக்குள் அத்துமீறி உள்நுழைந்து சோதனை நடத்தியது மட்டுமல்லாமல் பெண்கள் உட்பட அனைவரையும் தாக்கியுள்ளது.

படிக்க :

உ. பி. தேர்தல் : முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரத்தை துவங்கிய யோகி ஆதித்யநாத் !

கோயிலை சுற்றியுள்ள முஸ்லிம் வீடுகளை அகற்ற முயற்சிக்கும் யோகி அரசு !

டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா, ஜஹாங்கீர்புரியில் “கலவரக்காரர்களின் சட்டவிரோத கட்டுமானங்களை” கண்டறிந்து புல்டோசர்களைப் பயன்படுத்தி அவற்றை இடித்துத் தள்ளுமாறு வடக்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு (என்டிஎம்சி) கடிதம் எழுதி உள்ளார். அதனைத் தொடர்ந்து வடமேற்கு டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வடக்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (என்டிஎம்சி) ஏப்ரல் 19 அன்று உத்தரவு பிறப்பித்தது.
ஏப்ரல் 20 அன்று காலை எந்தவித முன்னறிவிப்புமின்றி உடமைகளை, கடைகளில் இருந்த பொருட்களை கூட எடுக்க அனுமதிக்காமல் முஸ்லீம் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளை இடிக்க தொடங்கியது முனிசிபல் கார்ப்பரேஷன் புல்டோசர்கள். இடிப்பின்போது அப்பகுதி மக்களை கட்டுப்படுத்த 400-க்கும் மேற்பட்ட காக்கி குண்டர்களை இறக்கிவிட்டது டெல்லி போலீசு.
புல்டோசர்கள் காலையில் இடித்துக் கொண்டிருக்கும்போது வழக்கறிஞர் துஷ்யந்த் தவே உச்சநீதிமன்றத்தில் அவசரமாக இப்பிரச்சினைகளை முன்வைத்தார். அதில், தற்போது வழக்கு நடக்கும் தருணத்தில் வீடுகளை இடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் வீடுகள் மற்றும் கடைகள் இடிப்பதை தொடர்ந்து செய்துவந்தது காவிக் கும்பலான முனிசிபல் கார்ப்பரேஷன். முனிசிபல் அதிகாரிகள் தங்களுக்கு இடிப்பதை நிறுத்தும் படியான உத்தரவு ஏதும் வரவில்லை என்று கூறினர்.

சி.பி.எம் தலைவர் பிருந்தா காரத் மற்றும் ஹன்னன் மொல்லா ஆகியோர் முஸ்லீம் மக்களின் வீடுகள் இடிக்கப்படுவதை தடுத்து நிறுத்த முயன்றனர். உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் வீடுகளை இடிக்கக் கூடாது என்று புல்டோசர் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த இடிப்பு நிகழ்வில், 20-க்கும் மேற்பட்ட கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. உச்சநீதிமன்றம் தடை விதித்தபோதும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முனிசிபல் கார்ப்பரேஷன் முஸ்லீம் மக்களின் கடைகளை இடித்து சட்டவிரோதமாக நடந்துள்ளது.
ஜஹாங்கீர்புரியில் உள்ள ஜமா மஸ்ஜித் செல்லும் பிரதான சாலையில், இடிக்கப்பட்ட முதல் கடையின் உரிமையாளர் ஜாவேத், குளிர்பானம், தண்ணீர் விற்கும் சிறிய கடை வைத்திருந்தார். “நான் ஒரு கலகக்காரன் போல் இருக்கிறேனா? எங்களைப் பொறுத்தவரை இது எல்லாம் அரசியல். என்ன நடக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நாங்கள் குறிவைக்கப்படுகிறோம்.” என்றார்.
இந்து மதத்தைச் சேர்ந்த சுஷில், “நாங்கள் எப்போதும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வருகிறோம். தற்போது, ​​அப்பகுதியில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான சூழ்நிலை உருவாகியுள்ளது. இது அரசியல் ஆதாயத்துக்கான நடவடிக்கை” என்றார்.
000

படிக்க :

♦ காவிரிக்கு போராடிய மாணவர்களை இந்து – முஸ்லிம் என்று பிளவு படுத்த திருச்சி போலீசு சதி !

♦ கடத்தல்காரர்களெல்லாம் முஸ்லிம்களா?

அன்று ரதயாத்திரை என்ற பெயரில் மதவெறி ஊர்வலம் நடத்தி, பாபர் மசூதியை இடித்து கரசேவைப் புரிந்த காவிக்கும்பல் இன்று ராம நவமி என்ற பெயரில் முஸ்லீம் மக்களின் குடியிருப்புக்களை இடித்து நொறுக்குகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் ராம நவமி கலவரங்கள் அரங்கேற்றப்பட்டு முஸ்லீம் மக்கள் தாக்கப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிசக் கும்பல் ஏதோ முஸ்லீம் மக்களை மட்டும் தான் தாக்குகிறது, குற்றவாளிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கிறது; ஒடுக்குகிறது என்று நினைப்பது தவறு. நாடு முழுவதும் பார்ப்பனப் பயங்கரவாதிகளை எதிர்க்கும் அனைவரையும் ஈவிறக்கமின்றி ஒடுக்கும் பாசிச சக்திகள் இவர்கள். எனவே உழைக்கும் மக்கள் ஓர் படையாக திரண்டு காவி பாசிஸ்டுகளை எதிர்த்து போரிடாமல் அவர்களை ஒருபோதும் வீழ்த்த முடியாது.


சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க